என் மலர்
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலி
சங்கரன்கோவில்:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது 4 வயது மகள் வீரலெட்சுமியை அழைத்து கொண்டு சைக்கிளில் சண்முகநல்லூரில் இருந்து சொந்த ஊரான குருக்கள்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது நெல்லையிலிருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற கார் லட்சுமணனின் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை- மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமி வீரலட்சுமி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
இது குறித்து தகவலறிந்த சின்னக்கோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமி வீரலெட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லட்சுமணனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து காரை ஓட்டி வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பெருமாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்து வந்த சிறுமி வீரலெட்சுமி சிகிச்சை பலனின்றி இன்றுகாலை பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் விபத்தில் சிக்கிய 2 பேரும் பலியாகிவிட்டனர்.






