என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father and daughter"

    நெல்லை பாளையங்கோட்டை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை சீனிவாச நகர் அருகே உள்ள ஆதித்தனார் நகரை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (வயது34). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தமிழரசி. இவர்களது மகள் ‌ஷகா (வயது6). இவள் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். சத்திய நாராயணன் தினமும் காலையில் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு பள்ளிக்கூடத்தில் விட்டு, மாலையில் அழைத்து வருவார்.

    இன்று காலை வழக்கம் போல் சத்தியநாராயணன் தனது மோட்டார் சைக்கிளில் மகள் ‌ஷகாவை அமர வைத்து கொண்டு ஓட்டி வந்தார். பாளையில் உள்ள மாவட்ட மைய நூலகம் எதிரே உள்ள வளைவில் திரும்பி வலது புறமாக ரோட்டின் ஓரமாக சென்றார்.

    அப்போது எதிரே நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் கண்டக்டர் இல்லாத பாயிண்ட் டூ பாயிண்ட் அரசு பஸ் வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன் சக்கரம் மோட்டார் சைக்கிள் மீது ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 1-ம் வகுப்பு மாணவி ‌ஷகா ரத்த வெள்ளத்தில் பலியானார். பலத்த காயத்துடன் சத்திய நாராயணன் உயிருக்கு போராடினார்.

    அவரை அந்த வழியாக வந்தவர்களும், அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். ஆனால் வழியிலேயே சத்திய நாராயணனும் பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலை அந்த பகுதியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்ற வண்ணம் இருந்தனர். பல பெற்றோர்கள் அந்த வழியாக தங்களது வாகனங்களில் பிள்ளைகளை பள்ளிக்கு விட சென்று கொண்டிருந்தனர்.

    அந்த பரபரப்பான நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அந்த பகுதியில் மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    சம்பவ இடத்திற்கு உடனடியாக பாளை போலீசார் மற்றும நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த பழனிக்குமார் (40) என்பவரை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான சத்தியநாராயணன் மற்றும் அவரது மனைவி தமிழரசிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகும். அங்கு தமிழரசி வீட்டருகே சத்தியநாராயணன் வேலை செய்து வந்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இருவரது வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு நெல்லைக்கு வந்து குடியேறினர்.

    நெல்லையில் சத்திய நாராயணன் எலக்ட்ரிக்கல் காண்டிராக்ட் எடுத்து பணி செய்தும் வந்தார். இதைத்தொடர்ந்து சத்தியநாராயணின் தாயார் மற்றும் உடன் பிறந்த தம்பியும் நெல்லை வந்து அவர்களுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை நடந்த விபத்தை கேள்விப்பட்டதும் சத்திய நாராயணனின் மனைவி தமிழரசி மற்றும் அவரது தாயார், தம்பி மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    தமிழரசி நான் அனாதையாகி விட்டேனே. இனி என்ன செய்வேன் என்று கதறி அழுதது அங்கு நின்றவர்களின் அனைவரது கண்களையும் குளமாக்கியது. உடனடியாக மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அனைவரது மனதையும் உருக்கியது. #tamilnews
    ×