என் மலர்

  செய்திகள்

  மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  X

  மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  சென்னை:

  தமிழ்நாட்டில் தினமும் கட்டுமானப் பணிகளுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் லாரிகள் லோடு மணல் தேவைப்படுகிறது.

  ஆனால் தினமும் அந்த அளவுக்கு மணல் கிடைப்பது இல்லை. இதனால் கட்டு மானப்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு மணல் விலையும் உயர்ந்தபடி உள்ளது.

  ஆற்றில் இருந்து எடுத்து விற்கப்படும் மணல் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்ததால் தற்போது அரசே மணல் குவாரிகளை அமைத்து மணல் விற்பனையை செய்து வருகிறது. சமீபத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மணல் பெறும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

  இந்த நிலையில் கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடப்பதற்கு கிரானைட் கல் மூலம் தயாரிக்கப்படும் ‘‘எம்சாண்ட்’’ மணலை விற்பதற்கு அரசு உதவ வேண்டும் என்றும், மேலும் பல மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், ‘‘தமிழ்நாட்டில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறப்பது’’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

  மணல் விற்பனையை அரசே ஏற்ற பிறகும் மணல் தட்டுப்பாடு நீடிக்கிறது. மேலும் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மணல் விலை தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது.

  இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து மணலை இறக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், வெளிநாட்டில் இருந்து மணலை இறக்கும் அனுமதி பெற்றுள்ளது.

  சமீபத்தில் இந்த நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் ஆற்று மணலை வாங்கி வந்தது. அன்னடோரோதியா எனும் கப்பல் மூலம் அந்த மணல் அக்டோபர் 23-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது.

  ஆனால் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்து வினியோகிக்க அரசு அதிகாரிகள் திடீரென தடை விதித்துள்ளனர்.

  இதையடுத்து அந்த தனியார் நிறுவனம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமையா வழக்கை தொடர்ந்தார். அவர் தனது மனுவில் கூறி இருப்பதாவது:-

  ‘‘எங்களது நிறுவனம் இந்திய வர்த்தக அமைச்சகத்தின் 2014 நவம்பர் 7-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை எண். 97-ன் படி மணலை இறக்குமதி செய்து விற்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மலேசியாவில் இருந்து 53 ஆயிரத்து 334 மெட்ரிக் டன் மதிப்பிலான மணலை இறக்குமதி செய்து தூத்துக் குடி உள்ள புதிய துறை முகத்தில் வைத்துள்ளோம்.

  இதற்காக ஜி.எஸ்.டி. வரி உள்பட 38 லட்சத்து 39 ஆயிரத்து 347 ரூபாயை வரியாக செலுத்தியுள்ளோம்.

  ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் தடுப்பதால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் பல்வேறு கட்டங்களில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி மகாதேவன் வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  தமிழக மக்களின் நலன் கருதியும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்திலும் ஆற்றுப்படுகைகள், நீர்நிலைகள், விவசாயம், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நலன் கருதி இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.

  1. தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதத்துக்குள் மூட வேண்டும். எதிர்காலத்தில் புதிய மணல் குவாரிகளை திறக்கக்கூடாது.

  2. ஜல்லி குவாரிகளை தவிர்த்து பிற கிரானைட் குவாரிகள், கனிம வள குவாரிகளை சுற்றுச்சூழலை சமன்படுத்தும் நோக்கத்தில் அவ்வப்போது மூட வேண்டும்.

  3. மணல் இறக்குமதி, ஆற்று மணல் இறக்குமதி, அவற்றை விற்பனைக்கு கொண்டு செல்லுதல், குடோனில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

  4. வெளிநாடுகளில் இருந்து மணலை அரசே இறக்குமதி செய்வதை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  5. சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்.

  6. இறக்குமதி செய்யப்படும் மணலை தரமானது என்று சான்றிதழ் பெற்றுத்தான் விற்க அனுமதிக்க வேண்டும்.

  7. இறக்குமதி செய்யப்படும் மணலுக்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.

  8. இறக்குமதி மணலை வரைமுறைப்படுத்த அது தொடர்பான ஆவணங்களை பராமரிக்க மாநில அரசு சட்டம் இயற்றுவதற்கு உரிமை வழங்கப்படுகிறது.

  9. வெளிநாட்டு மணலின் தரத்தை பரிசோதித்த பின்னரே இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.

  10. சட்ட விரோத மணல் கடத்தலால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை கணக்கிடுவதற்கு குழு அமைக்க வேண்டும். அந்த இழப்பையும் கடத்தலில் தொடர்புடைய தனி நபர், தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும்.

  11. சட்ட விரோத கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

  12. இந்த உத்தரவை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அரசு உடனடியாக அமல்படுத்தும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது.

  மேற்கண்டவாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×