search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரிய தேரில் கலசம் ஏற்றப்பட்ட போது எடுத்த படம்.
    X
    பெரிய தேரில் கலசம் ஏற்றப்பட்ட போது எடுத்த படம்.

    கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நாளை தேரோட்டம்- போலீசார் குவிப்பு

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் நாளை மகா தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

    6-வது நாளான இன்று காலை 63 நாயன்மார்கள் வீதிஉலா நடந்தது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வந்தனர். தொடர்ந்து வெள்ளியானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா நடந்தது.

    இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் அண்ணாமலையார் வீதிஉலா நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும்.

    இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களில் குதிரைகள், குடைகள் கட்டும் பணியும், தேரின் உச்சியில் கலசங்கள் பொருத்தும் பணியும் நடந்தது. தொடர்ந்து தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தேரோட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். 147 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன்மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மருத்துவ குழுக்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×