search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு,சர்க்கரை விலை, பிரதமர் பெயர்: அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு
    X

    டெங்கு,சர்க்கரை விலை, பிரதமர் பெயர்: அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு

    டெங்கு, சர்க்கரை விலை, பிரதமர் பெயர் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர்கள் பேசும் சர்ச்சையான கருத்துக்கள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    சமீபகாலமாக தமிழகத்தில் அமைச்சர்கள் பேசும் சர்ச்சையான கருத்துக்கள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சர்களுடைய பேச்சுக்கள் சமூக வலைத் தளங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகி வருகிறது.

    அமைச்சரவையில் 3-வது இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது இட்லி சாப்பிட்டார், பேசினார் என்றெல்லாம் நாங்கள் சொன்னது பொய். நாங்கள் யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை. சொல்ல சொன்னதை நாங்கள் சொன்னோம் என்று அவர் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேற்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய போது ‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார் என்றார்.

    அவரது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் ‘மோடிதானே பிரதமர். ஒரு வேளை மன்மோகன் சிங் என்று சொல்ல சொல்லி இருப்பார்களோ...’ என்று கிண்டல் செய்து சிரித்து விட்டனர்.

    உடனே மேடையில் இருந்த நிர்வாகிகள் பிரதமர் பெயரை மாற்றி சொல்லி விட்டதை திண்டுக்கல் சீனிவாசனிடம் கூறினார்கள். உடனே பேச்சை மாற்றி துணை முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து வைத்த கோரிக்கையால்தான் எய்ம்ஸ் மருத்துவ குழு வந்து ஆய்வு செய்தது என்றார்.

    தற்போதைய அமைச்சர்களில் மறக்க முடியாத அமைச்சர் செல்லூர் ராஜூ. யார் மறந்தாலும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கும் இளைய சமுதாயம் இவரை என்றும் மறக்காது.

    மழை பொய்த்து போனது. நீர்நிலைகளில் இருக்கும் நீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயம். நீர் ஆவியாதலை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ கொண்டு வந்த தெர்மாகோல் திட்டம் இன்று வரை எங்கும் பேசப்படுகிறது.

    50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அரசுகார்கள் புடை சூழ வைகை அணைக்கு புறப்பட்டு சென்றார் செல்லூர் ராஜூ, வைகை அணை தண்ணீரை தெர்மா கோல் மூலம் மூடுவதுதான் அவரது திட்டம்.

    வேட்டியை மடித்து கட்டி கொண்டு கரையில் நின்று அவர் ஒரு தெர்மாகோலை தண்ணீரில் மிதக்க விட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அடுத்து பரிசலில் தெர்மாகோல்களை எடுத்து சென்று அணையில் நடுப்பகுதியில் இருந்து மிதக்க விடப்பட்டது. பரிசல் திரும்பி வருவதற்குள் அந்த தெர்மோகோல்கள் திரும்பி வந்தது மட்டுமல்ல அமைச்சரின் இந்த விஞ்ஞான பூர்வமான நடவடிக்கைக்கு ‘நாசா அழைத்து விருது கொடுக்க தவறிவிட்டது. தமிழர் என்பதால் புறக்கணித்துவிட்டார்கள்’ என்று வலைத்தளங்களில் கலாய்த்து எடுத்து விட்டார்கள்.


    இந்த நிலையில் ரேசன் சர்க்கரை விலை கிலோ ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில் இது பற்றி செல்லூர் ராஜூ கூறும்போது, வெளிமார் கெட்டில் சர்க்கரை விலை ரூ.40 ஆக உள்ளது. எனவே ரூ.25 என்பது சாதாரணமான உயர்வுதான் என்று சர்வசாதாரணமாக சொல்லி விமர்சனத்துக்கு ஆளானார்.

    டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இது நாடு முழுவதும் பேசப்படுகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் கருப்பண்ணன் திருப்பதிக்கு சாமிகும்பிட சென்றார். பத்திரிகையாளர்கள் அவரிடம் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு எப்படி? என்று கேட்க ‘டெங்குவா? தமிழ் நாட்டில் டெங்கு பாதிப்பு எதுவும் கிடையாது’ என்று சொன்ன பதிலை கேட்டு அசந்து போனார்கள்.


    இவர் ஏற்கனவே திருப்பூர் பகுதியில் சாய ஆலை கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்த போது குளிக்கும் போது வெளிவரும் சோப்பு நுரை என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தியவர். இத்தனைக்கும் இவர் சுற்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக கூறினார். இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று அவருக்கு கோர்ட்டு வாய்ப் பூட்டு போட்டது.

    திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, வறட்சியால் விவசாயிகள் யாரும் இறக்க வில்லை என்றார். இதனால் அவரது அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் போராட்டமே நடத்தினார்கள்.

    இதே போல் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோரும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இது அவர்களது தனிப்பட்ட கருத்து என்றாலும் அவர்கள் ஆட்சியை சார்ந்து இருப்பதால் ஆட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×