search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கரூரில் பா.ஜனதா-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்: 7 பேர் கைது
    X

    கரூரில் பா.ஜனதா-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்: 7 பேர் கைது

    கரூரில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர்- பா.ஜ.க.வினர் நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர்:

    மெர்சல் பட விவகாரத்தில் பா. ஜனதாவின் எதிர்ப்பு பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவிக்கும் போது, நடிகர்களை வளைத்து போட்டு தமிழகத்தில் பா. ஜனதா காலூன்ற பார்ப்பதாக கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த பா. ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் அனுபவம் தான் இப்படி பேச வைக்கிறது. அவர்தான் ஒரு இடத்தை வளைத்து போட சம்பந்தப்பட்டவரை முதலில் மிரட்டுவார். கட்டப்பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பார். அவரது அலுவலகம் உள்ள இடத்தில் இருந்து எல்லா இடங்களையும் வளைத்து தான் போட்டுள்ளார். எங்களுக்கு நடிகர் விஜய்யை வளைத்து போட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.


    இந்த விவகாரத்தை தொடர்ந்து திருமாவளவனுக்கும், தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினர், தமிழிசை சவுந்திரராஜனை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று கரூர் கோவை ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பல தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதையொட்டி மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதனிடையே கூட்டம் தொடங்க இருந்த நிலையில் அங்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ராஜா, விஸ்வநாதன், பிரகலாதன் உள்ளிட்ட 7 பேர் கைகளில் கட்சி கொடியை ஏந்திய வாறும், தமிழிசைசவுந்திர ராஜனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியபடியும் திருமண மண்டபத்தை நோக்கி வந்தனர். மண்டபம் அருகே வந்ததும் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கலைந்து போகுமாறு கூறியும் அதற்கு மறுத்து விட்டனர். இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பா.ஜ. க.வை சேர்ந்த சிலர், மண்டபத்தில் இருந்து ஆவேசத்துடன் வெளியே வந்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினரை நோக்கி சென்ற அவர்கள், எப்படி எங்கள் இடத்திலேயே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று கூறி, 7 பேரையும் போலீஸ் வாகனத்தில் இருந்து இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.

    பதிலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினரும் பா.ஜ.க.வினரை தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியினர் கொண்டு வந்த கட்சி கொடி கம்பத்துடன் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.


    தொடர்ந்து போலீசார் கைதான 7 பேரையும் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். இதனிடையே விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் திடீரென மண்டபம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட் டது.

    பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில், நடு ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க கரூர் டி.எஸ்.பி. கும்ம ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×