search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவும் பல்வேறு இடங்களில் சாரல் மழை தூறியது. மலையோர பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்றிரவும் பல்வேறு இடங்களில் சாரல் மழை தூறியது. அணையோர பகுதிகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

    சிற்றாறு-1-ல் அதிகபட்சமாக 36.2 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. சுசீந்திரம், வழுக்கம்பாறை, சாமித்தோப்பு, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்க்காற்று வீசுகிறது.

    திற்பரப்பு அருவியில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 9.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 65 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 19.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 96 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையின் காரணமாக வறண்டு காணப்பட்ட குளங்களிலும் தண்ணீர் நிரம்ப தொடங்கி உள்ளது. சுசீந்திரம் பெரியகுளம் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. வெளிநாட்டு பறவைகள் இங்கிருந்து வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்தன.

    சாரல் மழையின் காரணமாக குளத்துக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு குளங்களிலும் தண்ணீர் நிரம்ப தொடங்கி உள்ளது. சாரல் மழையினால் செடி, கொடிகள் மட்டுமின்றி தென்னை மரங்களும் புத்துயிர் பெற்றுள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-31, பெருஞ்சாணி-25, சிற்றாறு-1-36.2, சிற்றாறு-2-6.2, ஆணைக் கிடங்கு-4, கோழிப்போர் விளை-6.4, முள்ளங்கினா விளை-6, புத்தன் அணை- 24.8.
    Next Story
    ×