என் மலர்
செய்திகள்

மாமல்லபுரத்தில் காரில் தீ பிடித்ததால் கணவர்-மனைவி-குழந்தை பலி
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த மணமை, வி.எஸ்.பி.நகர், சாலையோரத்தில் வீட்டு மனை பிரிவு காலி இடம் உள்ளது. நேற்று இரவு அங்கு கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பார்த்தபோது காருக்குள் ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தையின் உடல் கருகிய நிலையில் இருந்தது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் எரிந்து கரிக்கட்டையாக காணப்பட்டது.
மாமல்லபுரம் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார் முழுவதும் எரிந்து விட்டதால் பலியானவர்கள் பற்றிய விபரம் உடனடியாக தெரியாமல் இருந்தது. இதையடுத்து காரின் என்ஜின் நம்பரை வைத்து விபத்துள்ளான வண்டியின் எண் டி.என்.22 ஏ.கியூ.3597 என்பது தெரியவந்தது.
அந்த கார் குரோம்பேட்டை கமலா நகரை சேர்ந்த ரமாதேவி என்பவரது பெயரில் பதிவாகி இருந்தது. அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா சென்று இருந்ததும் தெரிந்தது. அவர்களது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. வீடும் பூட்டி கிடக்கிறது.
இதனை வைத்து பலியானவர்கள் ரமாதேவி மற்றும் அவரது கணவர், குழந்தை என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.
இது தொடர்பாக பெங்களூரில் உள்ள ரமாதேவியின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். அவர் வந்த பின்னரே இறந்து போனார்கள் பற்றிய முழு விபரம் தெரியவரும்.
கார் தீப்பிடித்து எரிந்த இடமான தனியார் மனைப் பிரிவு சாலையோரத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ளது. மனைப் பிரிவின் இரும்பு கதவுகளை திறந்து கார் உள்ளே சென்று இருக்கிறது.
சாலையில் கார் வந்த போது தீப்பிடித்து இருந்தால் மனைப்பிரிவின் கதவில் மோதியதற்கான அடையாளம் இருக்கும். ஆனால் அங்கு எந்த தடயமும் இல்லை.
மேலும் மனைப் பிரிவின் உள்ளே சில நிமிடங்கள் அந்த கார் சுற்றிவந்ததை சிலர் பார்த்து உள்ளனர். இரவு நேரத்தில் மனை பிரிவுக்குள் கார் வந்தது எதற்காக? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்து உள்ளது.
எனவே சுற்றுலா சென்ற போது அவர்களை மர்ம கும்பல் நகை-பணத்துக்காக கடத்தி கொன்று எரித்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சுற்றுலாவுக்காக தனியாக கார் டிரைவர் யாரையேனும் அவர்கள் அழைத்து சென்றனரா? என்றும் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக பலியானவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து கடைசியாக பேசியவர்கள் விபரத்தை சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






