என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?: 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?: 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

    • சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
    • இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.

    'பொதுவாக நான் டாப்-3 வரிசையில் ஆடுவேன். ஆனால் இப்போது எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த இடத்தில் களம் காணுவேன்' என பவுமா குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுப்ராயனுக்கு இடமிருக்காது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு, ஒரு நாள் ஆட்டம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×