என் மலர்
விளையாட்டு

சென்னை- பெங்களூரு அணிகள் இன்று மோதல்: வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 7-8 வெற்றி தேவையாகும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை அணி தனது முதலாவது லீக்கில் இதே மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. இதில் மும்பையை 155 ரன்னில் கட்டுப்படுத்திய சென்னை அணியினர் அந்த இலக்கை 5 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தனர். சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவின் 4 விக்கெட் அறுவடையும், ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும் வெற்றியை எளிதாக்கின. அதே உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் டோனி முதலாவது ஆட்டத்தில் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை சுழற்றுவதை பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழல் ஜாலம் தூக்கலாகவே இருக்கும். அதனால் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித்தள்ளியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட்டும், விராட் கோலியும் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா (3 விக்கெட்), ஹேசில்வுட் (2 விக்கெட்) கலக்கினர். ஆனால் சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு உகந்தது என்பதால் நூர் அகமது, ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்வதை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் வேகம் அமையும். மும்பைக்கு எதிராக இவர்கள் 3 பேரும் கூட்டாக 12 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினர். அதனால் இந்த விஷயத்தில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் அதிக விழிப்போடு இருப்பார்கள். குருணல் பாண்ட்யா, சுயாஷ் ஷர்மா ஆகியோருடன் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக மொகித் ரதீயை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. காயத்தால் முதல் ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் உடல்தகுதியை பெற்றால் அது பெங்களூருவின் பந்து வீச்சை வலுப்படுத்தும்.
பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் நேநற்று நிருபர்களிடம் கூறுகையில், 'விராட் கோலி, சமீபத்தில் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். சுழற்பந்து வீச்சில் ஆடாமல் எப்படி அதிக ரன் எடுத்திருக்க முடியும். அவர் நல்ல நிலையில் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். இப்போது கூட தனது பேட்டிங் நுணுக்கத்தில் மேலும் ஒரு ஷாட்டை சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதை பார்த்தேன்.
அவர் தொடர்ந்து தனது ஆட்டத்திறனை மேம்படுத்த விரும்புகிறார். எப்போதும் போலவே சாதிக்கும் வேட்கையுடன் உள்ளார். உண்மையிலேயே அவர் சிறப்பு வாய்ந்த ஒரு வீரர்' என்று குறிப்பிட்டார்.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. கடந்த சீசனில் சென்னை அணி பெங்களூருவில் நடந்த லீக்கில் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்றதால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அதற்கு பழிதீர்க்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.
மொத்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி, விராட் கோலி நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. அதனால் மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பும், விசில் சத்தமும் சென்னை வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், நாதன் எலிஸ் அல்லது பதிரானா, நூர் அகமது, கலீல் அகமது.
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் அல்லது மொகித் ரதீ, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ராசிக் சலாம் அல்லது புவனேஷ்வர்குமார் அல்லது ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ரசிகர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பஸ்களை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.