என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எனது கையில் எதுவும் இல்லை.. சிஎஸ்கே அணியில் இருந்து விலகலா? அஸ்வின் விளக்கம்
- கடந்த ஐ.பி.எல். தொடரில் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
- ஐபிஎல் தொடரில் குறைவான ஆட்டங்களில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரூ.9¾ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய அவர் 9 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் அவர் 19-வது ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக சென்னை அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக 38 வயதான அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அளித்த விளக்கம் வருமாறு:-
கடந்த ஐ.பி.எல். தொடரில் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவரை நான் எந்த ஐ.பி.எல். அணியிலும் இருந்தாலும், அந்த அணிக்காக எல்லா ஆட்டங்களிலும் ஆடியிருக்கிறேன். குறைவான ஆட்டங்களில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். அதனால் அணியில் எனது பங்களிப்பு என்ன? என்னை வைத்து உங்களது எதிர்கால திட்டமிடல் என்ன? என்பது குறித்து தெளிவுப்படுத்தும்படி ஐ.பி.எல். தொடரின் போதே அணி நிர்வாகத்திடம் கேட்டு விட்டேன்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு பரஸ்பர வர்த்தகம் அடிப்படையில் மாற வேண்டும் என்றால் சென்னையிடம் ரூ.18 கோடி கையிருப்பு இருக்க வேண்டும். அதன் பிறகு யாரை விடுவித்தால், அவரை எடுக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். நான் சென்னை அணியில் இருந்து விலகினால், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் நான் வெளியேறினால் மட்டும் அது நடந்துவிடும் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வீரர் தனது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு ஆர்வம் உள்ளதா இல்லையா என்பதை அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க உரிமை உள்ளது. அது தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்துமாறு கேட்கலாம். தற்போது நானும் அந்த நிலையில் தான் இருக்கிறேன். அணியில் எனது நிலை குறித்து தெளிவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
மற்றபடி எனது கையில் எதுவும் இல்லை. நானும், சஞ்சு சாம்சனும் அணி மாறுகிறோம் என்று கூறவில்லை. இது சில இடங்களில் இருந்து கிளப்பிவிடப்பட்ட வதந்தி.
இவ்வாறு அவர் கூறினார்.






