என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நாளை இறுதிப்போட்டி: உலக கோப்பையுடன் போட்டோஷூட் நடத்திய இந்தியா- தென்ஆப்பிரிக்கா கேப்டன்கள்
    X

    நாளை இறுதிப்போட்டி: உலக கோப்பையுடன் போட்டோஷூட் நடத்திய இந்தியா- தென்ஆப்பிரிக்கா கேப்டன்கள்

    • 2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.
    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளனர்.

    நவிமும்பை:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தொடங்கியது.

    இந்தியா, இலங்கையில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றன. கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

    29-ந்தேதி கவுகாத்தியில் நடந்த முதல் அரை இறுதியில் தென்ஆப்பிரிக்கா 125 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற 2-வது அரை இறுதியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்தன.

    2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவிமும் பையில் உள்ள டி.ஓய். படேல் ஸ்டேடியத்தில் நாளை (2-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இறுதிப்போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணி கேப்டனும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி கேப்டனும் கோப்பையுடன் போட்டோஷூட் எடுத்துக் கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஐசிசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று நாடே ஆவலுடன் எதிா்பார்க்கிறது.

    3-வது தடவையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.இதற்கு முன்பு 2005-ல் ஆஸ்திரேலியாவிடமும் (98 ரன்), 2017-ல் இங்கிலாந்திடமும் (9 ரன்) தோற்று கோப்பையை இழந்தது.

    இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 339 ரன் இலக்கை எடுத்து சாதனை படைத்ததால் இறுதிப் போட்டியில் இந்தியா நம்பிக்கையுடன் விளையாடும்.

    பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா (1 சதம், 2 அரை சதத்துடன் 389 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1 சதம், 1 அரை சதத்துடன் 268 ரன்), கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் (2 அரை சதத்துடன் 240 ரன்), ரிச்சா கோஷ் (1 அரை சதத்துடன் 201 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் தீப்தி சர்மா (17 விக்கெட்), ஸ்ரீசரணி (13 விக்கெட்) , கிராந்தி கவூட் (9 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் தடவையாக உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.

    இந்தியாவை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் 34 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    Next Story
    ×