என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உங்களது லட்சியங்களில், டெஸ்ட் கேப்டன் பதவியும் ஒன்றா? அஸ்வின் கேள்விக்கு ஜடேஜா விளக்கம்
- டி20, ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருப்பது கடினமானது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவது குழப்பமான விஷயம் கிடையாது.
டெஸ்ட் கேப்டன் பதவி உங்களது லட்சியங்களில் ஒன்றாக இருந்ததா என்று அஸ்வின் யூடியூப் அரட்டையில் ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:-
ஆம், நிச்சயமாக! பல ஆண்டுகளாக, நான் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன். நான் விளையாடிய ஒவ்வொரு கேப்டனின் மனநிலையையும் நான் அறிவேன். மேலும் வீரர்களுக்கு என்ன தேவை, அவர்களின் மனநிலையையும் நான் புரிந்துகொள்கிறேன்.
நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, இவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. வெள்ளை பந்து கிரிக்கெட்தான் எனது பலம் என்று நான் எப்போதும் நினைத்தேன். அங்கு நிலைநிறுத்த விரும்பினேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் பவுலருக்கு தகுந்தார் போல் 2 - 3 பீல்டர்களை மாற்றினால் போதும். பேட்ஸ்மேனுக்கு தகுந்தார் போல் மாற்ற வேண்டியதில்லை. அதனாலேயே டெஸ்ட் பார்மெட்டில் கேப்டனாக செயல்படுவது வித்தியாசமான விஷயம் என்று நான் சொல்கிறேன்.
டெஸ்ட் போட்டிகளில் பவுலர் நல்ல ரிதத்தில் இருக்கிறாரா என்பதைப் பார்த்து பவுலிங் செய்ய வைக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும். எப்போது உங்களுடைய முதன்மை பவுலரை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியம். அது கொஞ்சம் கணக்கீடுகளைப் பொறுத்தது. ஆனால் அது ஐபிஎல் போன்ற டி20 பார்மட்டில் கேப்டனுக்கு தேவைப்படாது. ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திலும் வித்தியாசமான நிகழ்வு காத்திருக்கும். ஒரு பந்து பவுண்டரி அல்லது சிக்சர் சென்றால் அதற்காக நீங்கள் மாற்றத்தை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவது குழப்பமான விஷயம் கிடையாது. நான் நிறைய கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் சவாலாக இருந்ததைப் பார்த்ததில்லை. அழுத்தமே இல்லாதது போல் இருக்கும்.
டெஸ்ட் போட்டியில் திடீரென நீங்கள் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் அல்லது புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கும் ஒரே சவால் என்னவெனில் பவுலரை எப்படி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் ஜடேஜா கூறினார்.






