என் மலர்
கிரிக்கெட் (Cricket)

திடீரென டிரெண்டான ருதுராஜ் கெய்க்வாட்- காரணம் இதுதான்
- முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து நான்கு ரன்கள் அடித்திருந்த நிலையில் கழுத்து வலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் எஞ்சியுள்ள நாட்களில் இருந்து வெளியேறிய சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஒருவேளை சுப்மன் கில் இரண்டாவது போட்டியை தவறவிடும் பட்சத்தில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார்.
அதோடு சுப்மன் கில் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது 4-வது இடத்தில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் மிரட்டி வரும் ருதுராஜ் அணியில் இடம் பெற வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ருதுராஜ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரசிகர்களும் ருதுராஜ்-க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களி ருதுராஜ் டிரெண்ட் ஆனார்.






