என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இருக்கும் போது தனுஷ் கோட்யான் எடுக்க இதுதான் காரணம்- ரோகித் சர்மா
- அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர் தனுஷ் கோட்யான் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- தனுஷ் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் மோதி வருகின்றனர். முதல் 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் பாதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக மும்பையை சேர்ந்த ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்யான் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு இளம் வீரரை அணியில் சேர்ந்துள்ளது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தனுஷ் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார். சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு விசா இல்லை. அவர் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் ரெடியாக இருப்பார்களா என்பது கேள்வி குறிதான். ஆனால் தனுஷ் ரெடியாக இருந்தார். அவர் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அடுத்த 2 டெஸ்ட் போட்டியிலும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கலாம். இதனால் பேக் அப் வீரராக இவரை அணியின் சேர்த்துள்ளோம்.
இவ்வாறு ரோகித் கூறினார்.






