என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தடுப்பாட்டம் வேண்டாம்.. அதிரடியாக விளையாடுங்கள்.. ரோகித்துக்கு ரவி சாஸ்திரி அறிவுரை
- தடுப்பாட்ட மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும்.
- இதை செய்தால் அவர் பார்முக்கு திரும்புவதற்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுக்கும்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இணைந்து விளையாடுகிறார்கள். மனைவிக்கு குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டை தவற விட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2-வது டெஸ்டுக்கு தான் திரும்பினார். வழக்கமான தொடக்க வரிசைக்கு பதிலாக தற்போது 6-வது பேட்டிங் வரிசையில் ஆடுகிறார். ஆனால் எதிர்பார்த்தபடி அவர் ெஜாலிக்கவில்லை. இரு டெஸ்டில் வெறும் 19 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு சில யோசனையை வழங்கியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், 'ரோகித் சர்மா தனது யுக்திகளை சிறிது மாற்றிக்கொண்டு விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.
ஏனெனில் 6-வது வரிசையிலும் அவரால் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேனாக செயல்பட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும். கடந்த முறை அவர் களம் இறங்கிய போது தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதா? அல்லது தாக்குதல் பாணியை கடைபிடிப்பதா? என்ற குழப்பத்தில் இருந்தார்.
தடுப்பாட்ட மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். இதை செய்தால் அவர் பார்முக்கு திரும்புவதற்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுக்கும்' என்றார்.






