என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அவரை பார்த்து ஆடாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடுங்கள்- சாம்சனுக்கு ரகானே அறிவுரை
    X

    அவரை பார்த்து ஆடாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடுங்கள்- சாம்சனுக்கு ரகானே அறிவுரை

    • சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும்.
    • களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், துவக்க வீரர் சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டம் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மாவைப் பார்த்து அதே வேகத்தில் ஆட முயற்சிக்கக் கூடாது என்றும் மூத்த வீரர் ரகானே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எதிர்முனையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுவதைப் பார்த்து, சஞ்சு சாம்சன் தானும் அவரைப் போலவே வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார். தயவு செய்து அபிஷேக் சர்மா செய்வதை நீங்களும் செய்ய முயற்சிக்காதீர்கள். சஞ்சு சாம்சனுக்கு என்று தனித்திறமை உள்ளது.

    அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அவர் தனது பாணியில் விளையாடி ரன்களைக் குவித்தார். அதைத் தான் இங்கேயும் செய்ய வேண்டும். அபிஷேக் சர்மாவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளாமல், தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும்.

    இந்த நேரத்தில் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும். இந்தத் தொடர் முழுவதும் மற்றும் உலகக்கோப்பையிலும் நீங்கள்தான் துவக்க வீரர், உங்கள் இடத்திற்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

    இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், சஞ்சு சாம்சனுக்குப் பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவரது பாணியில் விளையாட அனுமதித்தால் அவர் நிச்சயம் ஒரு மேட்ச் வின்னராக மாறுவார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் எப்படி ஆடுவார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எடுத்த உடனே அதிரடியாக ஆடாமல், முதல் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் களத்தில் நிலைத்து நிற்க வேண்டும். களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.

    என்று ரகானே கூறினார்.

    Next Story
    ×