என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

229 ரன்கள் இலக்கு.. மும்பை அணியின் சாதனை இலக்கை தகர்க்குமா குஜராத்?
- மும்பை தரப்பில் ரோகித் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. 47 ரன்கள் எடுத்த போது பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரோகித் - சூர்யகுமார் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் அடித்து அசத்தினார். 20 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்த போது சூர்யகுமார் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து ரோகித்துடன் திலக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 81 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த திலக் 11 பந்தில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் நமன் மற்றும் பாண்ட்யா ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் தோல்வியடைந்ததே இல்லை. அந்த வகையில் மும்பையின் சாதனை இலக்கை குஜராத் அணி தகர்த்து குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






