என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மொத்தமே 17 ரன்கள் தான்.. ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் மீது உரிமையாளர் அதிருப்தி
- பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
- இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 17 ரன்களே எடுத்து உள்ளார்.
லக்னோ:
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையில் ரிஷப்பண்ட் உள்ளார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்தது. கடந்த காலங்களில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.
ஆனால் ரிஷப்பண்டின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. ரூ.27 கோடிக்கான மதிப்பில் அவர் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து அவர் 17 ரன்களே எடுத்து உள்ளார். சராசரி 5.66 ஆகும். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமலும், ஐதராபாத்துக்கு எதிராக 15 ரன்னும் எடுத்து வெளியேறி இருந்தார். நேற்றைய பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் ரிஷப்பண்டுடன் உரையாற்றுவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. தோல்வி தொடர்பாக அவர் ரிஷப்பண்டை கேள்வி கேட்பது போல் உள்ளது. மேலும் ரிஷப் பண்டை நோக்கி விரலை நீட்டியது கூட காணப்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் சஞ்சீவ் கோயங்கா விமர்சிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனின் போது அவர் கேப்டனாக பணியாற்றிய கே.எல். ராகுல் மீதும் தோல்வி தொடர்பாக கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ராகுல் அந்த அணியில் இருந்து இந்த சீசனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அதே நிலைமை ரிஷப்பண்டுக்கு உருவாகிறது.






