என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

குஜராத் - டெல்லி அணிகள் இன்று மோதல்: மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான்-லக்னோ பலப்பரீட்சை
- பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், முகமது சிராஜ், ரஷித் கான் கலக்குகிறார்கள்.
- தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிராசர் மெக்குர்க் இடத்தை, காயத்தில் இருந்து மீண்டும் இருக்கும் பாப் டு பிளிஸ்சிஸ் பிடிக்கிறார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்தது. முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் நிர்ணயித்த 181 ரன் இலக்கை 3 பந்துகள் மீதம் வைத்து லக்னோ எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன்- சுப்மன் கில் அமைத்து கொடுத்த வலுவான அடித்தளத்தை (12 ஓவரில் 120 ரன்), அதன் பிறகு வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி ரன் விகிதத்தை அதிகரிக்க தவறியது சறுக்கலுக்கு வழிவகுத்தது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (329 ரன்), ஜோஸ் பட்லர், கேப்டன் சுப்மன் கில், ரூதர்போர்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ராகுல் திவேதியா இன்னும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், முகமது சிராஜ், ரஷித் கான் கலக்குகிறார்கள்.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி 6 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றியை (லக்னோ, ஜதராபாத், சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) ருசித்து வலுவான நிலையில் உள்ளது. 5-வது ஆட்டத்தில் மட்டும் மும்பையிடம் தோல்வியை தழுவியது முந்தைய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை சாய்த்தது. சூப்பர் ஓவரில் யார்க்கர்களாக போட்டு அமர்க்களப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கருண் நாயரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், விப்ராஜ் நிகம், முகேஷ் குமாரும் நல்ல பார்மில் உள்ளனர். தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிராசர் மெக்குர்க் இடத்தை, காயத்தில் இருந்து மீண்டும் இருக்கும் பாப் டு பிளிஸ்சிஸ் பிடிக்கிறார்.
மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப குஜராத் அணியும், 6-வது வெற்றியை தனதாக்கி முதலிடத்தில் நீடிக்க டெல்லி அணியும் முழு பலத்துடன் கோதாவில் குதிப்பதால், விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3-ல் டெல்லியும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
டெல்லி: பிளிஸ்சிஸ் அல்லது மெக்குர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மொகித் ஷர்மா, முகேஷ் குமார்.
ராஜஸ்தான்-லக்னோ மோதல்
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.
ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப் அணிக்கு எதிராக), 5 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக உதை வாங்கியுள்ளது.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ரியான் பராக், நிதிஷ் ராணா, ஹெட்மயர் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. தொடக்கத்தில் தடுமாறிய ஜெய்ஸ்வால் இப்போது அரைசதங்களாக நொறுக்குகிறார். இதே போல் மற்றவர்களும் ஒருசேர கைகொடுத்தால் எழுச்சி பெற முடியும். பந்து வீச்சில் ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா நம்பிக்கை அளிக்கின்றனர்.
கடந்த ஆட்டத்தின்போது வயிற்று பகுதியில் காயம் அடைந்து பாதியில் வெளியேறிய கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாகி இருகிறது. அவர் ஆடமுடியாமல் போனால் முதல் 3 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பை கவனித்த ரியான் பராக் அணியை வழிநடத்துவார். சாம்சன் காயம் குறித்து ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று கூறுகையில், 'சாம்சனுக்கு வயிற்று பகுதியில் லேசான வலி உள்ளது. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்கேன் அறிக்கையின் அடிப்படையில் அவர் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
லக்னோ அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியை (டெல்லி, பஞ்சாப், சென்னை அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (357 ரன்), மிட்செல் மார்ஷ், மார்க்ரம் நல்ல நிலையில் உள்ளனர். டேவிட் மில்லர், அப்துல் சமத் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் மிரட்டுகிறார்கள். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு புதிய தெம்பை கொடுக்கும்.
சொந்த மைதானத்தில் முதலாவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சாதிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் லக்னோ அணி வெற்றி வழியில் பயணிக்க வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியதில் ராஜஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்) அல்லது வைபவ் சூர்யவன்ஷி அல்லது சுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா.
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய்.
போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






