என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: சாய் சுதர்சன் அரைசதம்- ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்
- சாய் சுதர்சன் 53 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
- பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்கள் சேர்த்தனர்.
ஐபிஎல் 2025 சீசனின் 23ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 2 ரன் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அடுத்து சாய் சுதர்சன் உடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் ஓவருக்கு தலா 10 ரன்கள் என்ற அடிப்படையில் ரன்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 96 ரன்களாக இருக்கும்போது பட்லர் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11 ஓவரின் 100 ரன்னைத் தொட்டது. பட்லர் ஆட்டமிழந்ததும் ஷாருக்கான் களம் இறங்கினார். இவர் 20 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரூதர்போர்டு 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் 18.2 ஓவரில் 187 ரன்கள் குவித்திருந்தது.
அதன்பின் ராகுல் டெவாட்டியா உடன் ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். இவர் 19ஆவது ஓவரின் 3 பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குஜராத் அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைக்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது.