என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

அசுதோஷ்- விப்ராஜ் ஜோடி வெற்றியை பறித்து விட்டது- கேப்டன் ரிஷப்பண்ட் ஆதங்கம்
- டெல்லி அணியில் முதலில் ஸ்டப்சும், அசுதோசும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
- கடைசி ஓவரில் டெல்லியின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது.
விசாகப்பட்டினம்:
ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.
நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்னும் (6 பவுண்டரி, 7 சிக்சர்), மிச்சேல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். ஸ்டார்க் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 210 ரன் இலக்கை 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன் எடுத்து (5 பவுண்டரி, 5 சிக்சர்) வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். விப்ராஜ் 15 பந்தில் 39 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டப்ஸ் 22 பந்தில் 34 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
201 ரன் குவித்தும் தோற்றதால் லக்னோ அணி கேப்டன் ரிஷப்பண்ட் ஏமாற்றம் அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-
எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. போதுமான ரன்களை குவித்தோம். நடுவில் நாங்கள் எங்கள் ரன் வேகத்தை இழந்து இருக்கலாம். ஆனாலும் இந்த ஆடுகளத்தில் 209 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். இந்த தோல்வி மூலம் நாங்கள் அடிப்படைகளை சரி செய்ய வேண்டும். இதில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.
டெல்லி அணியில் முதலில் ஸ்டப்சும், அசுதோசும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் விப்ராஜ்- அசுதோஷ் ஜோடி தங்கள் பணியை சிறப்பாக செய்தது. இந்த ஜோடி எங்கள் வெற்றியை பறித்து விட்டது. கடைசி ஓவரில் டெல்லியின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. பேடில் பட்டதால் ஸ்டம்பிங் செய்ய வாய்ப்பு தவறியது.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்ட ரிஷப்பண்ட் நேற்று டக் அவுட் ஆனார். 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்கவில்லை.
லக்னோ அணி 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 27-ந்தேதி எதிர்கொள்கிறது. டெல்லி அணி அடுத்த போட்டியில் ஐதராபாத்தை 30-ந்தேதி சந்திக்கிறது.






