என் மலர்
கிரிக்கெட் (Cricket)

#AUSWvsINDW ஆஸ்திரேலியா அசத்தல் பந்து வீச்சு: 2-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய மகளிர் அணி
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 323 ரன்களைக் குவித்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலியா தரப்பில் அன்னபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 323 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் அன்னபெல் சதர்லேண்ட் அபாரமாக விளையாடி 129 ரன்களும் எலிஸ் பெர்ரி 76 ரன்களும் குவித்தனர். இந்தியாவின் பந்துவீச்சில் சாயலி சத்கரே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 10 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து சீரனா இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதனால் இந்திய அணி 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து பிரதிகா ராவல்- சினே ராணா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது. பிரதிகா ராவல் 43 ரன்களிலும் சினே ராணா 14 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 20 ரன்கள் இந்தியா பின்தங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய தரப்பில் இளம் வேகப்பந்து வீச்சாளர் லூசி ஹாமில்டன் இரண்டாம் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






