என் மலர்
கிரிக்கெட் (Cricket)

திலக் வர்மா அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்தியா
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 150 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது.
துபாய்:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பர்ஹான் 57 ரன்னிலும், பகர் சமான் 47 ரன்னிலும் வெளியேறினர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 20 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 57 ரன்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. திலக் வர்மா 69 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






