என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் கவுதம் கம்பீர்
- கான்பெர்ராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தின்போது அணியுடன் இருக்கமாட்டார்.
- அடிலெய்டு டெஸ்டின்போது இந்திய அணியுடன் இணைந்து கொள்வார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன்னதாக இரண்டு நாட்கள் கொண்ட பிங்க் பால் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டி வருகிற 30-ந்தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அவசரமாக இந்தியா திரும்புகிறார். குடும்பம் தொடர்பான தனிப்பட்ட எமர்ஜென்சி காரணமாக நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் டிசம்பர் 30-ந்தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தின்போது அவர் அணியுடன் இருக்கமாட்டார். அதேவேளையில் டிசம்பர் 6-ந்தேதி நடைபெற இருக்கும் பிங்க் பால் போடடியின்போது அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா புறப்பட்டுள்ளார். இந்திய அணி புதன்கிழமை கான்பெர்ரா புறப்படுகிறது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்திய அணிக்கு விருந்து அளிக்கிறார். இதில் அனைத்து வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பிரதமர் லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பிரதமர் லெவன் அண முற்றிலும் இளைஞர்களை கொண்டதாகும். இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு அடிலெய்டு டெஸ்டிற்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.