என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஷஸ் கடைசி டெஸ்ட்: பெத்தேல் சதம்- 4-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து
    X

    ஆஷஸ் கடைசி டெஸ்ட்: பெத்தேல் சதம்- 4-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து

    • இங்கிலாந்து வீரர் பெத்தேல் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் குவித்தது. இதற்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் (160 ரன்), கேப்டன் ஸ்டீவ் சுமித் ஆகியோர் சதம் அடித்தனர். நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன் எடுத்து இருந்தது. சுமித் 129 ரன்னிலும், வெப்ஸ்டர் 42 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 138 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    அந்த அணி மேலும் 49 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலியா 133.5 ஓவரில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரை விட 183 ரன் கூடுதலாகும்.

    ஸ்டீவ் சுமித் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்தார். 8-வது டெஸ்டில் விளையாடும் வெப்ஸ்டர் 5-வது அரை சதத்தை பதிவு செய்தார். 9-வது வீரராக களம் இறங்கிய அவர் 71 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கார்ஸ், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.தொடக்க வீரர் கிராவ்லி 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டான டக்கெட்-ஜேக்கப் பெத்தேல் ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    டக்கெட் 42 ரன்னிலும், அடுத்து வந்த ஜோரூட் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இங்கிலாந்து 117 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து ஹாரி புரூக்களம் வந்தார். மறுமுனையில் இருந்த ஜேக்கப் பெத்தேல் பொறுப்புடன் ஆடி அரைசதம் எடுத்தார்.

    ஹாரி ப்ரூக்- பெத்தேல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அரைசதம் விளாசுவார் என எதிர்பார்த்த ப்ரூக் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 26 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    ஒருமுனை விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பெத்தேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னிலும் கிராஸ் 16 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெத்தேல் 142 ரன்களுடனும் மேத்யூ பாட்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. உணவு இடைவேளை வரை விளையாடினால் போட்டியை டிரா செய்ய இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி தோல்வியடையும்.

    Next Story
    ×