என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐ.சி.சி Hall of Fame கௌரவத்தை பெற்ற தோனி.. லிஸ்ட் வெளியீடு!
- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
- சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு இந்த மரியாதையைப் பெற்ற முதல் இந்தியர்கள் ஆவர்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இந்த வருட ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் தோனி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று (ஜூன் 9) ICC அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு இந்த மரியாதையைப் பெற்ற முதல் இந்தியர்கள் ஆவர். இந்த அறிவிப்பு தோனியின் 44வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்துள்ளது மேலும் சிறப்பு பெறுகிறது.
இதன்படி தற்போது, ICC ஹால் ஆஃப் ஃபேமில், எம்.எஸ். தோனி, நீது டேவிட், வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி, வினூ மங்கட், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கபில் தேவ், பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர் ஆகிய இந்திய வீரர்கள் இதுவரை இடம்பெற்றுள்ளனர்.
இந்த கௌரவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தோனி, "உலகம் முழுவதிலுமிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் பெயர் இடம்பெற்றிருப்பது ஒரு மரியாதை.
இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரையும் நினைவுகூருவது ஒரு அற்புதமான உணர்வு. இது நான் என்றென்றும் போற்றும் ஒரு கௌரவம்" என்று கூறியுள்ளார்.






