என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம்:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபன மாஸ்ட்ரே அரை சதம் கடந்து 66 ரன்னும், ரூபியா ஹெய்டர் 44 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட், ஆலனா கிங், ஜார்ஜியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் அலீசா ஹீலி, லிட்ச்பீல்டு ஆகியோர் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அலீசா ஹீலி சதம் கடந்தார். லிட்ச்பீல்டு அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.






