என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் கருண் நாயரை விளையாட வைக்கலாம் - அனில் கும்ப்ளே
- விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
- விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விராட் கோலிக்கு மாற்று வீரராக கருண் நாயரை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "முதல் தர கிரிக்கெட்டில் ரன்களை குவித்திருக்கும் கருண் நாயர், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியானவர். அவரால் விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் கருண் நாயர் தான் அதிக ரன்கள் குவித்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.






