என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாலோ ஆனை தவிர்த்த ஆகாஷ் தீப், பும்ரா ஜோடி: 4-ம் நாள் முடிவில் இந்தியா 252/9
- இந்திய தரப்பில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் விளாசினர்.
- ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேஎல் ராகுல் 33 ரன்களுடனும் ரோகித் 0 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் 16 ரன்னில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய ஜடேஜா அரை சதம் கடந்தார். சிராஜ் 1 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 77 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
இந்நிலையில் பாலோ ஆனை தவிர்க்க 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இதற்காக பும்ரா- ஆகாஷ் தீப் ஜோடி போராடினர். இவர்களது போராட்டம் வீண் போகவில்லை. இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.
இதனையடுத்து போதிய வெளிச்சம் இல்லாததால் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பும்ரா 10 ரன்களுடனும் ஆகாஷ் 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.






