என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரோகித், கோலி உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும்- பிசிசிஐ
- ரோகித், விராட் கோலி டெஸ்ட், டி20-யில் ஓய்வு பெற்று விட்டனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி தேர்வு பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இந்த தொடரோடு இருவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தகவல் வெளியானது. 2027 உலககோப்பை (ஒருநாள் போட்டி) அணியில் அவர்கள் இடம் பெறுவதை தேர்வு குழு விரும்பவில்லை. இதன் காரணமாகவே ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ரோகித், கோலி ஆகியோர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இருந்ததால் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் ஆட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) புதிய திட்டத்தை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்துடன் தலா 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடர்களுக்கு இடையே விஜய் ஹசாரே டிராபி நடைபெறுகிறது. பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்ற வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை அணித் தேர்வுக் குழுத் தலைவர் அகர்கரும் வலியுறுத்தி இருந்தார்.
தென்ஆப்பிரிக்ககாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6- ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 - ந் தேதி வதோதராவில் நடைபெறுகிறது. இதற்கு இடையே 5 வாரங்கள் உள்ளன.
விஜய் ஹசாரே டிராபி டிசம்பர் 24 -ந் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி வரை இடைவெளியில் 6 சுற்றுப் போட்டிகள் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட ரோகித் சர்மா குறைந்தது 3 சுற்று போட்டிகளிலாவது விளையாட வேண்டும். விராட் கோலிக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா, விராட் கோலி விஜய் ஹசாரே டிராபியில் ஆடி 2027 உலக கோப்பையில் விளையாட இலக்கை நோக்கி செல்வார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.






