search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    ஐ.பி.எல். திட்டமிட்டபடி நடைபெறும்- கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

    ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது ஒரே நோக்கம் ஐ.பி.எல். போட்டியை நடத்தி முடிப்பது தான்.
    மும்பை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய 31 ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

    ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

    ஐபிஎல் கோப்பை

    கரிபீயன் லீக் போட்டி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம். ஆஸ்திரேலிய வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐ.பி.எல்.லில் ஆடுவதை விரும்பவில்லை. வீரர்கள் ஆடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    வங்காள தேசத்தை சேர்ந்த ‌ஷகிப்-அல்-ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் பங்கேற்க அந்நாடு அனுமதிக்கவில்லை.

    இந்தநிலையில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காவிட்டாலும் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

    ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது ஒரே நோக்கம் ஐ.பி.எல். போட்டியை நடத்தி முடிப்பது தான். வெளிநாட்டு வீரர்கள் முழுமையாக பங்கேற்காவிட்டாலும் போட்டியை நிறுத்த மாட்டோம். திட்டமிட்டப்படி நடைபெறும்.

    விளையாடக்கூடிய இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்களை வைத்து போட்டியை நடத்துவோம். இதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருக்கும். ஐ.பி.எல். போட்டிகளை நடத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று விட்டனர்.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
    Next Story
    ×