search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசிம் அக்ரம், ஷாஹித் அப்ரிடி
    X
    வாசிம் அக்ரம், ஷாஹித் அப்ரிடி

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த விஷயத்தை கொண்டு வந்தது சேவாக் அல்ல, அப்ரிடிதான் என்கிறார் வாசிம் அக்ரம்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் மனநிலையை உருவாக்கியவர் சேவாக் அல்ல, அப்ரிடிதான் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் வித்தியாசமானது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் ரெட் பால் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.

    இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தால் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும். அப்படி நின்றாலும் அதிக ரன்கள் அடிப்பதில்லை. இந்த மனநிலையை மாற்றி தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்கும் மனநிலைக்கு போட்டியை மாற்றியதில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்குக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

    இந்த யுக்தியை பயன்படுத்தி தொடக்க பந்து வீச்சாளர்களின் எண்ணத்தை சிதறடித்துவிடுவார். இந்த யுக்தியை பயன்படுத்திதான் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார்.

    ஆனால் தொடக்க பேட்ஸ்மேன்களின் மனநிலையை மாற்றியவர் சேவாக் அல்ல, அப்ரிடிதான் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் தாமதமாக வந்தார். ஆனால், 1999 - 2000-த்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேன்களின் மனநிலையை மாற்றியவர் ஷாகித் அப்ரிடி.

    நான் கூட அவருக்கு பந்து வீசினால் கூட, என்னால் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். அதேவேளையில் என்னுடைய பந்தை பவுண்டரிக்கும் விரட்டுவார் என்பதும் தெரியும்.

    1999 - 2000 இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வதற்கு முன் இம்ரான் கானுக்கு போன் செய்து, அவரிடம் ஒரு கேப்டனாக ஷாஹித் அப்ரிடியை இந்திய தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்க விரும்புகிறேன் என்றேன். ஆனால், சில தேர்வுக்குழு உறுப்பினர்கள் அதற்கு எதிராக இருந்தனர்.

    அவர் என்னிடம், அப்ரிடியை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். அவரை தொடக்க வீரராக களம் இறக்கினால் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றியைத் தேடித்தர முடியும் என்று கூறினார். நான் பொதுவாக இம்ரான் கானுடன் ஆலோசிப்பது உண்டு, அது தொடருக்கு முன்னதாகவும் இருக்கும். அல்லது தொடர் நடந்து கொண்டிக்கும்போதும் இருக்கும். அவருடைய ஆலோசனை எப்போதும் கைக்கொடுக்கும். சென்னை போட்டியில் அனில் கும்ப்ளே மற்றும் ஜோஷி ஆகியோரின் பந்து வீச்சை துவம்சம் செய்து 141 ரன்கள் விளாசினார்’’ என்றார்.

    சென்னை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதோடு தொடரை 2-1 என வென்றது. இருந்தாலும் ஷாஹித் அப்ரிடியால் தொடர்ந்து டெஸ்ட் அணியில் விளையாட முடியவில்லை. 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சுமார் 500 ரன்களே அடித்துள்ளார். ஆனால் சேவாக் இந்திய அணிக்காக 104 போட்டிகளில் விளையாடி 23 சதங்கள் விளாசியுள்ளார்.
    Next Story
    ×