search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிட்செல் ஸ்டார்க்
    X
    மிட்செல் ஸ்டார்க்

    வாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான்: பிரிஸ்பேன் டெஸ்டில் 240 ரன்னில் சுருண்டது

    பிரிஸ்பேன் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 240 ரன்களில் சுருண்டது.
    • பாபர் அசாம், ஹாரிஸ் சோஹல் 1 ரன்னில் அவுட்
    • ஆசாத் ஷபிக் அரைசதம்
    • மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் 16 வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார்.

    அந்த அணியின் ஷான் மசூத், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் பொறுமையாக விளையாடினர். ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது.

    அந்த அணியில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம் போன்றோர் உள்ளதால் அதிக அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    ஆசாத் ஷபிக்

    அசார் அலி 39 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷான் மசூத் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹாரிஸ் சோஹைல், பாபர் அசாம் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததால் 78 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து ஆசாத் ஷபிக் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் ஸ்கோர் 200 ரன்னை தாண்டியது. ஷபிக் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    பேட் கம்மின்ஸ்

    இஃப்திகார் அகமது 37 ரன்களும், யாசிர் ஷா 26 ரன்களும் அடித்தனர். மிட்செல் ஸ்டார்க் கடைநிலை வீரர்களை வீழ்த்த பாகிஸ்தான் 86.2 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுக்களும், பேட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து 75 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்து, அதன்பின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×