search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    விராட் கோலிக்கு சிறந்த மனிதர் விருது - பீட்டா அமைப்பு அறிவிப்பு

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு, பீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. 

    இதுகுறித்து பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    விலங்குகள் மீது அதிகமான பாசமும், நேசமும் விராட் கோலி வைத்துள்ளார். சமீபத்தில் அமர் கோட்டையில் ஒரு யானையை 8 பேர் கொண்ட குழு துன்புறுத்தியதைப் பார்த்த விராட் கோலி உடனடியாக பீட்டா அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதுதொடர்பாக கடிதமும் எழுதி விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கக் கோரினார். இதையடுத்து மால்டி நகர போலீசார் உதவியுடன் அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பெங்களூருவில் சாலையில் அனாதையாகக் காயத்துடன் இருக்கும் நாய்களுக்கு வசிப்பிடம் அமைக்கக் கோலி உதவினார். மேலும், தனது ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து, நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கவும் அறிவுறுத்தினார்.

    விலங்குகள் நலனின் மீது ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, பீட்டா அமைப்பின் சார்பில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பனிக்கர் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், சோனம் கபூர், கபில் சர்மா, ஹேமமாலினி, ஆர்.மாதவன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×