search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு டி20 தொடர் - ஸ்காட்லாந்து, அயர்லாந்து இடையிலான போட்டி டிராவில் முடிந்தது
    X

    முத்தரப்பு டி20 தொடர் - ஸ்காட்லாந்து, அயர்லாந்து இடையிலான போட்டி டிராவில் முடிந்தது

    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் ஸ்காட்லாந்து, அயர்லாந்து இடையிலான லீக் போட்டி டிராவில் முடிந்தது. #SCOvIRE #IREvSCO

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. 

    முதல் இரண்டு போட்டியிலும் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்சர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்சே 25 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொயிட்சர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 

    கொயிட்சர் 41 பந்தில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேலம் மேக்லியாட் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். மைக்கெல் லீஸ்க் 4 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அதன்பின் வந்த மேத்தீவ் கிராஸ் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்களை இலக்காக கொண்டு அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.



    அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷனான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஆண்ட்ரூ பால்பிர்னி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஸ்டிர்லிங் உடன் சிமி சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். 

    சிமி சிங் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்டிர்லிங் 41 பந்தில் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேரி வில்சன் - கெவின் ஓ பிரெயின் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். கேரி வில்சன் 20 ரன்களில் வெளியேறினார். 



    கடைசி ஓவரில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் கெவின் ஓ பிரெயின் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் சப்யான் ஷரிப், ஸ்டு ஒயிட்டிங்காம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வருகிற 19-ம் தேதி நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #SCOvIRE #IREvSCO
    Next Story
    ×