என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் ஒன்றும் ரோபோ இல்லை, எனக்கும் ஓய்வு வேண்டும் - விராட் கோலி
    X

    நான் ஒன்றும் ரோபோ இல்லை, எனக்கும் ஓய்வு வேண்டும் - விராட் கோலி

    வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி நான் ஒன்றும் ரோபோ இல்லை, எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என பதிலளித்துள்ளார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய பிரிமீயர் லீக்கின் 10-வது சீசனிலும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி ஆவார்.

    தற்போது இந்திய அணி இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கலந்துகொண்டு பேசினார். 

    அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ‘நான் ஒன்றும் ரோபோ இல்லை எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது’ என கூறினார். இது குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    பணிச்சுமை பற்றி பேசவேண்டியுள்ளது. வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி நிறைய பேச்சுகள் உள்ளது. விளையாட்டு வீரர்கள் ஏன் ஓய்வு கேட்கிறார்கள் என மக்கள் வெளியில் இருந்து கேட்பது தெரிகிறது. ஒவ்வொரு வீரர்களும் ஆண்டுக்கு சுமார் 40 போட்டிகளில் விளையாடுகின்றனர்.

    அதில் அனைவரும் 45 ஓவர்கள் பேட்டிங் பிடிப்பதோ, 30 ஓவர்கள் பந்து வீசுவதோ இல்லை. சிலரே அவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வு அளிக்கவேண்டியது அவசியம். குறிப்பாக புஜாராவுக்கு அதிக பணிச்சுமை இருக்கிறது அவர் அனைத்து போட்டிகளிலும் அதிக நேரம் களத்தில் விளையாடுகிறார்.

    வீரர்கள் விளையாடுகிற ஒவ்வொரு போட்டியிலும் அனைவருக்கும் ஒரேவிதமான பணிச்சுமை இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது 20-25 வீரர்களை கொண்ட ஒரு வலுவான அணியை கொண்டுள்ளோம், முக்கியமான வீரர்கள் சரியான நேரங்களில் இறக்கப்பட வேண்டும். அந்த நிலை பராமரிக்கப்பட வேண்டும். 

    மூன்று விதமான போட்டிகளில் விளையாடுபவர்கள் ஒரேவிதமான தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இயலாது. நிச்சயமாக, எனக்கும் ஓய்வு தேவை. என் உடல் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது, நான் அதை கேட்பேன். நான் ஒன்றும் ரோபா இல்லை, என் சதையை கிழித்து பார்த்தால் எனக்கும் இரத்தம் தான் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×