search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்: டீ.எல். விதிப்படி இங்கிலாந்து வெற்றி
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்: டீ.எல். விதிப்படி இங்கிலாந்து வெற்றி

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் டீ.எல். விதிப்படி இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும், டி-20-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், 4-வது ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் கெயிலும், எவின் லெவிசும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 11 ரன்களிலும், மார்லன் சாமுவேல்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, 6.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் எவின் லெவிசுடன் ஜேசன் முகமது ஜோடி சேர்ந்தார். ஜேசன் முகமது 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து எவின் லெவிஸ் - ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடியில் இறங்கியது. சிறப்பாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய எவின் லெவிஸ் 130 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார். இதில் 17 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். அவர் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. ரோவ்மன் பவல் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ராய் 84 ரன்கள் எடுத்து அல்ஸாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து தொடக்க நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோ 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 14 ரன்களிலும், இயான் மார்கன் 19 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 2 ரன்களுலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோஸ் பட்லருடன், மோயின் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது.

    இங்கிலாந்து அணியின் 35.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் நடுவர்கள் ஆட்டத்தை முடித்துவைத்தனர். இங்கிலாந்து அணி டீ.எல். விதிப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஐந்து விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் விழ்த்தினார். 176 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் எவின் லெவிஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மூன்று போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை (29-ம் தேதி) நடைபெறுகிறது.
    Next Story
    ×