என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம் - ரஜினியின் 'ஹாட்ரிக்' சாதனை!
- தம்பிகள், தங்கை அனைவரும் தன்னை மதிக்காத நிலையில் அவர் ஒரு அச்சகத்தில் பிழை திருத்தும் பணிக்கு சேருகிறார்.
- படப்பிடிப்புக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர் தனது சந்தேகத்தை பஞ்சு அருணாசலத்திடமும், டைரக்டர் முத்துராமனிடமும் கேட்பது உண்டு.
அன்னை ஓர் ஆலயம் படத்தில் நடித்து முடித்ததும் ரஜினிக்கு மற்றொரு சவால் காத்து இருந்தது. அவரை தனது புதிய படத்தில் நடிக்க வைக்க பஞ்சு அருணாசலம் ஒப்பந்தம் செய்து இருந்தார்.
அந்த சமயத்தில்தான் கமல்ஹாசனும், ரஜினியும் இனி சேர்ந்து நடிப்பது இல்லை என்ற முடிவு எடுத்து இருந்தனர். இதனால் அவர்கள் இருவரையும் தனித்தனியாக நடிக்க வைத்து பஞ்சு அருணாசலம் 2 படங்களை தயாரித்தார். கமல்ஹாசன் படத்துக்கு "கல்யாண ராமன்" என்றும் ரஜினி படத்துக்கு "ஆறிலிருந்து அறுபது வரை" என்றும் பெயர் சூட்டி இருந்தார்.
கல்யாண ராமன் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திரை உலகில் பேச்சு எழுந்தது. அதே சமயத்தில் ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை படம் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம்தான் அனைவரிடமும் இருந்தது.
ரஜினிக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது. ரஜினி நன்றாக குணம் அடைந்து இருந்தாலும் அந்த படத்தில் அவரால் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்த இயலவில்லை. அதற்கு காரணம் அந்த படத்தின் கதையும் அவருக்கு அமைந்திருந்த வேடமும் ஆகும்.
கதைப்படி தந்தையை இழந்த ரஜினி சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்கிறார். அவருக்கு 2 தம்பிகள், ஒரு தங்கை. தந்தை பணிபுரிந்த நிறுவனத்தில் ரஜினிக்கு வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்த்துக் கொண்டே 2 தம்பிகளையும், தங்கையையும் படிக்க வைக்கிறார்.
அவருக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது நண்பர்கள் உதவுகிறார்கள். இதற்கிடையே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் (சங்கீதா) ரஜினிக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் ரஜினி தம்பிகள், தங்கைக்காக அதிக பணம் செலவிடுவதை பார்த்து அந்த பெண் ரஜினியுடனான காதலை முறித்துக்கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.
அப்போது சுருளிராஜன் ரஜினியிடம் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்கிறார். அதற்கு ஆசைப்பட்டு ரஜினி திருமணத்துக்கு சம்மதிக்கிறார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டது பிறகு தெரிய வருகிறது.
இந்த நிலையில் அவரது தம்பி படித்து பெரிய ஆளாகிறார். நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேருகிறார். ஆனால் குடும்பத்தை நடத்த அண்ணனுக்கு (ரஜினிக்கு) எந்த உதவியும் செய்யவில்லை. அவர் அண்ணனிடம் சண்டை போட்டு விட்டு வெளியேறுகிறார். சிறிது நாளில் அடுத்த தம்பியும் ரஜினியை விட்டுப் பிரிந்து வெளியேறுகிறார்.
தம்பிகள், தங்கை அனைவரும் தன்னை மதிக்காத நிலையில் அவர் ஒரு அச்சகத்தில் பிழை திருத்தும் பணிக்கு சேருகிறார். அங்கு கதைகள் எழுதி வெளியிட்டு புகழ் பெறுகிறார். அதன் பிறகு அவரை தம்பிகளும், தங்கையும் தேடி வருகிறார்கள்.
இந்த கதையில் சந்தானம் என்ற கேரக்டரில் ரஜினி அண்ணனாக நடித்து இருந்தார். ஆனால் படப்பிடிப்பு நாட்களில் ரஜினிக்கு அந்த வேடத்தில் நடிக்க கொஞ்சமும் பிடிக்கவில்லை. வழக்கமான ஸ்டைல்கள் இல்லை. சண்டைகள் உள்ளிட்ட அதிரடி எதுவும் இல்லாததால் இந்த கதை தனக்கு சரியாக பொருந்தாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். சிவாஜி சாருக்கு சரியாக இருக்கும் என்று தினமும் புலம்பி வந்தார்.
படப்பிடிப்புக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர் தனது சந்தேகத்தை பஞ்சு அருணாசலத்திடமும், டைரக்டர் முத்துராமனிடமும் கேட்பது உண்டு. இதனால் அவர்கள் இருவரும் பொறுமை இழந்து போனார்கள். ஒருநாள் அந்த படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அவர்கள் ரஜினிக்கு போட்டு காட்டினார்கள்.
அதை பார்த்த பிறகுதான் ரஜினிக்கு நம்பிக்கை வந்தது. அவர் முழு மனதுடன் நடித்து கொடுத்தார். இந்த அனுபவத்தை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.......
ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினி தொடர்பான ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் போதும், அது பற்றிய முழு விவரத்தையும் அவர் கேட்டு அறிந்து, கதையை உள்வாங்கிக் கொள்வார். பிறகு நடிக்க வேண்டிய காட்சியை நன்கு சிந்தித்து புரிந்துக் கொண்டு நடிப்பார்.
என்றாலும் அடிக்கடி அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. "குடும்பத்துக்கே தன்னை தியாகம் செய்யும் அண்ணனிடம், உடன் பிறந்தவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்வார்களா? அது எப்படி சார்" என்று அப்பாவியாக கேட்டார். "பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதுதான் யதார்த்தம்" என்று கதாசிரியர் பஞ்சு அருணாசலமும், நானும் விளக்கினோம். இருப்பினும் ரஜினி முழுவதுமாக திருப்தி அடையவில்லை.
இதன் காரணமாக பஞ்சு அருணாசலம் ஒரு முடிவுக்கு வந்தார். 5 ஆயிரம் அடி வரை படத்தை எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டினார். அது ரஜினிக்குப் பிடித்து இருந்தது. அவர் சம்மதம் தெரிவித்ததும் தற்போதுள்ள கதையை தொடர்ந்து படமாக்க முடிவு செய்யப்பட்டது.
அதே போல் படத்தை எடுத்து முடித்தோம். விநியோஸ்தர்களிடம் "படத்தின் முதல் 3 நாள் வசூல் பற்றி கவலைப்படாதீர்கள். அதுபற்றி எங்களுக்குத் தகவலும் தெரிவிக்காதீர்கள். 4-வது நாள் முதல் வசூலைப் பாருங்கள். பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறதா என்று கவனியுங்கள். அதை எங்களுக்கு தெரிவியுங்கள்" என்றோம்.
நாங்கள் எண்ணியபடி நான்காவது நாள் முதல் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தார்கள். வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது. படம் பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் அந்த படம் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.
இவ்வாறு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
1979-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி வெளியான ஆறிலிருந்து அறுபது வரை படம் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு அனைத்து தியேட்டர்களிலும் வசூலை வாரிக் குவித்தது. 100 நாட்கள் ஓடி வெற்றி படமாக மாறியது. இதன் மூலம் தர்மயுத்தம், நான் வாழ வைப்பேன், ஆறிலிருந்து அறுபது வரை என்று தொடர்ச்சியாக 3 படங்களை 100 நாட்கள் வெற்றி படங்களாக நடித்து கொடுத்த ஹாட்ரிக் சாதனையை ரஜினி செய்து இருந்தார்.
குமுதம் பத்திரிகை தனது விமர்சனத்தில் ரஜினியின் நடிப்பு பழைய சிவாஜியை பார்ப்பது போல இருப்பதாக பாராட்டி இருந்தது. இதே மனநிலைதான், தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. இதனால் திரையுலகில் ரஜினி புதிய அவதாரத்துடன் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து இருந்தார்.
நடிக்க வந்த முதல் 5 ஆண்டுகளில் வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும், ஸ்டைல் மன்னனாகவும், அதிரடி கதாநாயகனாகவும் மட்டுமே நடித்து வந்த ரஜினியை ஆறிலிருந்து அறுபது வரை படம் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அந்தஸ்துக்கு மாற்றி இருந்தது.
ஆனால் ரஜினியிடம் ஏற்பட்டு இருந்த உடல்நல, மனநல பாதிப்பு ஜூன் மாதம் வரை நீடித்தது. ஏப்ரல், மே மாதங்களில் ரஜினி அடுத்தடுத்து சில தவறுகளை செய்து கொண்டே இருந்தார். மே மாதம் 23-ந்தேதி சென்னையில் ஒரு தியேட்டருக்கு சென்று ரஜினி செய்த கலாட்டா மறுநாள் பத்திரிகைகளில் பெரிய செய்தியாக வெளியாகி இருந்தது.
ஜூன் மாதம் 2-ந்தேதி ஒரு நட்சத்திர ஓட்டலில் ரஜினி தன்நிலை மறந்து அடிதடியில் இறங்கி விட்டார். அந்த ரகளைக்காக அவருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவும் அவரை பற்றி பரபரப்பாக பேச வைத்தது. ஜூன் மாதம் 22-ந்தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் ரஜினி மது போதையில் செய்த கலாட்டா ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான நிலையத்துக்குள் அமைதியை சீர் குலைத்ததாக ரஜினியை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் விமானத்துக்கு வருகிறார் என்றாலே விமான நிறுவனங்கள் அலர்ஜியாக பார்க்கும் நிலைகூட ஏற்பட்டது.
ஜூலை 1-ந்தேதி ரஜினியின் வழக்கு ஒன்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தியேட்டரில் டிக்கெட் கேட்டு ரகளை செய்ததற்காக தொடுக்கப்பட்ட வழக்கு ஆகும். இந்த வழக்கில் ரஜினிக்கு கோர்ட்டு 200 ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த சம்பவங்களால் ரஜினி சரியில்லை என்ற எண்ணம் பலரது மனதில் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. பத்திரிகைகளுக்கு அவரது பேட்டிகளும் பரபரப்பாக மாறியது. சிறு வயதில் பெண்களிடம் செய்த தவறுகளை கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் 7 வயதிலேயே கெட்டு போய் விட்டேன். அப்போதே என்னை விட வயதில் பெரியவர்களுக்கு சவால் விட்டு தப்பு செய்தேன். என்ன தப்பு செய்கிறேன் என்பது கூட தெரியாது. என்றாலும் சவால் விட்டவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்றேன். இளைஞர்கள் பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்ட நானும் சவால் விட்டு பெண்கள் மீது படுத்து, உருண்டு, எழுந்து ஓடி வந்து விடுவேன்...." என்ற ரீதியில் ரஜினி அளித்த பேட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
டைரக்டர் பாலச்சந்தர், ரெஜினா வின்சென்ட் உள்பட பலரும் ரஜினிக்கு அறிவுரை கூறினார்கள். இப்படியெல்லாம் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்காதே, உன் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் இமேஜ் போய் விடும் என்றனர்.
ஆனால் ரஜினி எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 1979-ம் ஆண்டு மே மாதம் ரெஜினா வின்சென்ட் 1 மாதம் வெளிநாடு பயணம் சென்றார். சென்னையில் இருந்து புறப்படும் முன்பு அவர் ரஜினியிடம் நீண்ட நேரம் அறிவுரை கூறினார்.
"மது குடிக்காதே... யாரையும் அடிக்காதே.... நேரத்துக்கு சாப்பிட வேண்டும்" அம்மா சீக்கீரமாக திரும்பி வந்து விடுவேன் என்றார். தொடர்ச்சியாக வந்த இத்தகைய அறிவுரைகளும், உரிய சிகிச்சை களும் ரஜினிகாந்தை திருந்த வைத்தன. கொஞ்சம், கொஞ்சமாக அவர் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தார்.
1979-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ரெஜினா வின்சென்ட் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பினார். ரஜினி முழுமையாக குணம் அடைந்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
1979-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரை அதாவது அந்த 5 மாதங்கள் ரஜினி வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறி விட்டன. ஆனால் அதற்காக தமிழக ரசிகர்கள் ஒரு போதும் ரஜினியை வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக மேலும் மேலும் ரஜினியை ஆதரித்துக் கொண்டாடினார்கள். இது தமிழ்த் திரை உலகில் எந்த ஒரு கதாநாயகனுக்கும் கிடைக்காத ஒரு சிறப்பாகும். ரஜினிக்கு மட்டுமே அந்த சிறப்பான இடம் கிடைத்தது. இதன் பின்னணியில் இறைஅருள் இருப்பதாக பலரும் சொன்னார்கள்.
இதை பிரதிபலிக்கும் வகையில் பாரதிராஜா கொடுத்த பேட்டி அமைந்தது. அது பற்றி நாளை காணலாம்.






