என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பாசத்தால் கட்டிப் போட்ட ரெஜினா வின்சென்ட்!
- ரெஜினா வின்சென்ட் பேச... பேச... ரஜினி அப்படியே தலைகுனிந்தார்.
- ரஜினி கொஞ்சம் கூட சலனம் ஆகவில்லை.
ரெஜினா வின்சென்ட் பதறிப் போனார். மிகப்பெரிய நடிகர் தனது காலில் விழுந்ததைக் கண்டதும் அவருக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
"என்னப்பா... இது?" என்றார். அவரிடம் ரஜினி, "அம்மா என்னை ஆசீர்வதியுங்கள்" என்றார். ரெஜினா வின்சென்ட்டுக்கு மிகவும் நெகிழ்ச்சியாகி விட்டது. வாழ்நாளில் யாரும் இப்படி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றது இல்லை என்பதால் ரஜினியை கருணையோடு பார்த்து ஆசி வழங்கி எழுந்திருக்கும்படி சொன்னார்.
ரஜினி எழுந்ததும் அவரிடம், "உனக்கு என்ன ஆச்சு.... என்ன வேண்டும்?" என்று கேட்டார். அவரை ரஜினி கண்ணீர் மல்க பார்த்தார். அவருக்கு தனது தாயார் ஜிஜிபாயின் நினைவு வந்தது.
சிறு வயதிலேயே தாயை இழந்த ரஜினிக்கு முழுமையான தாய் பாசம் கிடைக்காமலேயே போய் விட்டது. தாய் மடியில் தூங்கினாலும் அவர் காட்டிய அன்பை உணரும் வயது வந்த போது தாயார் உயிருடன் இல்லை.
அவரது தந்தை ரனோஜி ராவ் உடம்பு முழுக்க பாசத்தைக் கொண்டவர். ரஜினி மீது உயிரையே வைத்திருந்தார். ஆனால் அவர் அதையும் மீறி ரஜினியிடம் கடுமையான கட்டுப்பாடுகள் காட்டியது தான் அதிகம். தாய் பாசம் கிடைக்காமல் போனதாலேயே ரஜினி சிறு வயதில் இருந்தே பிடிவாதமும், மற்றவர்களை கைநீட்டி அடிக்கும் குணத்துடனும் வளர்ந்து இருந்தார். குறிப்பாக 9 வயதுக்குப் பிறகு முரடனாகவே மாறி இருந்தார்.
அம்மா என்ற பாசத்தை அறியாத அவருக்கு ரெஜினா வின்சென்ட்டை பார்த்ததும் தனது தாயார் போன்ற நினைவு அவருக்குள் வந்து விட்டது. தனது அம்மா போலவே ரெஜினா வின்சென்ட்டை நினைத்து உருகினார். அதனால்தான் "என்ன வேண்டும்?" என்று ரெஜினா வின்சென்ட் கேட்டதும் கண்ணீர் மல்க ரஜினி நின்றார்.
அவர், "அம்மா... எனக்கு நீங்கள் நிறைய அறிவுரை சொல்ல வேண்டும் என்று அன்றைக்கு சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்" என்றார். அதற்கு ரெஜினா வின்சென்ட், "என்னிடம் நீ ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாய் அல்லவா? முதலில் அதை சொல். பிறகு நான் அறிவுரை சொல்கிறேன்" என்றார்.
அதை ரஜினி ஏற்கவில்லை. "இல்லை அம்மா முதலில் நீங்கள்தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு என் விருப்பத்தை நான் சொல்கிறேன்" என்றார். இதை கேட்டதும் ரெஜினா வின்சென்ட் பேசத் தொடங்கினார்...
"உன்னை பார்த்தால் எனக்கு அளவு கடந்த பாசம் வருகிறது. நீ வளர்ந்து வரும் நடிகர். இந்த நேரத்தில் சுயக்கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியமான ஒன்று. ஆனால் நீ எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறாய்?
அடிக்கடி இடைவிடாமல் சிகரெட் புகைக்கிறாய்? அது மட்டுமல்ல நீ தொடர்ந்து இரவும்-பகலும் மது குடிப்பதாகவும் நான் அறிந்தேன். மது குடிப்பது நீ சின்ன வயதில் இருந்து பழகிவிட்ட ஒரு பழக்கமாக இருக்கலாம். அதை என்னால் தடுக்க முடியாது.
ஆனால் ஒரு தொழில் என்று வந்து விட்டால் அதில் முழுமையான நேர்த்தியும் ஈடுபாடும் இருக்க வேண்டும். அன்று 3-வது நாள் படப்பிடிப்புக்கு நீ மது குடித்து வந்ததால் எந்த வேலையும் நடக்கவில்லை. உன்னால் அன்று எத்தனை தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்று உனக்குத் தெரியுமா?
வேலை நேரத்தில் குடிப்பதால் உன்னை நீயே கெடுத்துக் கொள்கிறாய் என்றுதான் அர்த்தம். உனது எதிர்கால வாழ்க்கைக்கு இது நல்லது அல்ல. படப்பிடிப்பு நாட்களில் மது குடிப்பதை தவிர்ப்பது நல்லது" என்றார்.
ரெஜினா வின்சென்ட் பேச... பேச... ரஜினி அப்படியே தலைகுனிந்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் தாரை... தாரையாக ஓடியது. கையை முன்பக்கம் கட்டிக் கொண்டு ஒரு மாணவனைப் போல பவ்யமாக நின்றுக் கொண்டிருந்தார். ரஜினி நடிக்க வந்து இந்த 4 ஆண்டுகளில் யார் முன்பும் அவர் இப்படி தலைகுனிந்து கைக்கட்டி நின்றது இல்லை.
அவரை சகஜநிலைக்கு கொண்டு வந்த ரெஜினா வின்சென்ட் அன்போடு, "உன் எதிர்கால நல்லதுக்குத்தான் சொல்கிறேன்" என்றார். இதை கேட்டதும் ரஜினி, "அம்மா.... இனி நான் படப்பிடிப்பு நேரத்தில் குடிக்க மாட்டேன். இதை நான் உங்களுக்கு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "இதுவரை என் மது பழக்கத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். நீங்கள் சொன்னப் பிறகு தான் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறேன் என்பது தெரிகிறது. எத்தனையோ பேர் மது அருந்தாதீர்கள் என்று எனக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் யார் பேச்சையும் நான் கேட்டதே கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் எனக்கு அறிவுரை சொல்பவர்களை நான் கண்டு கொண்டதும் இல்லை. அலட்சியமாக கடந்து சென்று விடுவேன். ஆனால் இன்று நீங்கள் என் தாய் இடத்தில் இருந்து சொல்லும் வார்த்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன. வேலை நேரத்தில் மது குடிக்கக் கூடாது என்ற உறுதி என் மனதில் வந்து இருக்கிறது" என்றார்.
அவரது பேச்சைக் கேட்ட ரெஜினா வின்சென்ட்டுக்கு மேலும் நெகிழ்ச்சியாக இருந்தது. ரஜினியை மீண்டும் ஆசுவாசப்படுத்திய அவர் அங்கிருந்த பெஞ்சில் அமர செய்தார். பிறகு ரஜினியிடம் அவரைப் பற்றிய தகவல்களை கேட்டார்.
ரஜினி பெங்களூரில் காவல் துறையில் பணிபுரிந்த ரனோஜிராவ்-ஜிஜிபாய் தம்பதிக்கு மகனாக பிறந்தது முதல் சிறு வயதில் படித்தது, தற்கொலைக்கு முயற்சி செய்தது, பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் வீட்டில் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்தது, மூட்டை தூக்கியது, பிறகு கண்டக்டர் பணிக்கு சென்றது, ராகவேந்திர சுவாமிகள் ஆசி கிடைத்தது, அதன் பிறகு சென்னை நடிப்புக் கல்லூரியில் சேர்ந்தது, டைரக்டர் பாலச்சந்தர் ஆசியால் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று அனைத்தையும் சொல்லி முடித்தார்.
அதோடு தனது குடும்ப சூழ்நிலைகளை ரெஜினா வின்சென்ட்டிடம் ஒளிவுமறைவின்றி அனைத்தையும் தெரிவித்தார். சிறு வயதில் தாயார் இறந்து போன பிறகு உறவினர்கள் அனைவரும் தன்னிடம் அன்பு காட்டாமல் உதாசீனம் செய்ததை சொல்லி... சொல்லி அழுத்தார். நட்பு வட்டாரத்திலும் தன்னை ஏமாற்றியவர்களைப் பற்றி சொன்னார்.
அதுபோல சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் தன்னை பலர் தொடர்ந்து ஏமாற்றுவதாக வருத்தப்பட்டார். வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அவர் சொல்ல... சொல்ல... ரெஜினா வின்சென்ட் உருகிப்போனார்.
தமிழ் திரையுலகில் புகழ் பெற்று உச்சத்துக்கு வந்துக் கொண்டு இருக்கும் ஒரு நடிகனின் மறுபக்கத்தில் இவ்வளவு ஏமாற்றங்கள், காயங்கள், ஏக்கங்கள் இருக்கிறதா? என்பதை உணர்ந்த போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்த கண்ணீர்தான் ரஜினி மீது அவருக்கு அசைக்க முடியாத பரிவையும், ஆழ்ந்த பாசத்தையும் உருவாக்கியது.
"கவலைப்படாதே ரஜினி, நாங்கள் இருக்கிறோம்" என்றார். அதைக் கேட்டதும் ரஜினி முகம் மலர்ந்தது. தனக்கு உண்மையிேலயே ஒரு அம்மா கிடைத்து விட்டார்கள் என்று அவரது மனம் ஆனந்தம் அடைந்தது. தாய் பாசம் அறியாத அவர் ரெஜினா வின்சென்ட்டை தாயாக தத்து எடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஜினியின் கண்களில் இருந்து பெருகிய கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே அவர் ரெஜினா வின்சென்ட்டுக்கு நன்றி சொன்னார். "அம்மா.... நான் அடிக்கடி வருவேன். தினமும் எனக்கு நல்ல அறிவுரைகளை சொல்லி திருத்த வேண்டும்" என்றார்.
ரெஜினா வின்சென்ட் அதை ஏற்றுக் கொண்டார். அவரிடம் மீண்டும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு ரஜினி ஒரு புது மனிதன் போல அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்ற ரெஜினா வின்சென்ட்டுக்கு ரஜினி மீது நம்பிக்கை வரவில்லை.
ரஜினி எப்போதும் மது போதையில் இருப்பவர். இந்த வீட்டை விட்டு வெளியில் சென்றதும் எல்லாவற்றையும் மறந்து விடுவார் என்றுதான் நினைத்தார். ஆனால் ரஜினி அப்படி இருக்கவில்லை. மறுநாளே ரெஜினா வின்சென்ட் வீட்டுக்கு வந்து விட்டார். சாப்பாடு கொடுங்கள் என்று உரிமையோடு கேட்டு வீட்டுக்குள் போய் உட்கார்ந்து வாங்கி சாப்பிட்டார்.
அடுத்த நாளும் வந்தார்.... அதற்கு அடுத்த நாளும் வந்தார்... அடிக்கடி வர ஆரம்பித்தார். வரும் போதெல்லாம் ரெஜினா வின்சென்ட் கையால் சாப்பிடாமல் போகவே மாட்டார். இது மருத்துவத்திலும், சமூக சேவை துறையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த ரெஜினா வின்சென்ட்டுக்கு ஒரு கட்டத்தில் சற்று இடையூறு ஏற்படுத்தியது.
ஒரு நாள் அவர் ரஜினியை பார்த்து, "ஆமா... நீ ஏன் தினமும் என் வீட்டுக்கு வருகிறாய்? உன்னை யார் இங்கு வரச்சொன்னது?" என்று ஈட்டி முனைக்குத்துவது போல கேட்டார். ரஜினி கொஞ்சம் கூட சலனம் ஆகவில்லை. அவர் சிரித்துக் கொண்டே, "ராகவேந்திர சுவாமிகள் தான் இங்கு வரச்சொன்னார்" என்றார். கிறிஸ்தவரான ரெஜினா வின்சென்ட்டுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. சிலைப் போல் நின்று விட்டார். அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை மறுநாள் 3-ந்தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.






