என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • தந்தைக்கு ‘ஓம்’ என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்று பல பொருள் உண்டு.

    முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

    மருகனே ஈசன்மகனே ஒருகைமுகன் தம்பியே

    நின்னுடைய தண்டை கால் எப்பொழுதும்

    நம்பியே கைதொழுவேன் நான்

    கடவுள் ஒருவரே. ஆனால்

    அவதாரங்கள் பல.

    ஒவ்வொரு கடவுளுக்கும் அவதார சிறப்பு மற்றும் தனித்துவம் இருக்கிறது. அதர்மம் தலை தூக்கும்போது அதை அழிக்கவே அனைத்து கடவுள்களின் அவதாரங்களும் நிகழ்ந்துள்ளன. முருகப்பெருமானின் அவதார நோக்கமும் இதுதான்.

    ஆனால் முருகனின் அவதாரம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் முருகனின் அவதாரம் தமிழர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும் பின்னி பிணைந்தது. முருக வழிப்பாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் இதை உணர முடியும். இதன் மூலம் தமிழர்களுக்காகவே அவதரித்த தெய்வமாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.

    இதனால்தான் சங்க காலத்துக்கும் முன்பே நம் ஆதி தமிழர்கள் முருகப்பெருமானை தமிழ்க் கடவுள் என்று போற்றி இருக்கிறார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் முருகனை வணங்குவதில் பல புதுமைகள் சேர்ந்தன.

    என்றாலும் பழமைக்கு பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான். முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம். எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

    முருகன் 'ஓம்' எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பிரணவம் என்றால், 'சிறந்த புதிய ஆற்றலைத் தருவது' என்று பொருள். முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

    தந்தைக்கு 'ஓம்' என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ. ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கை யால் உண்டானது. அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். எனவே முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும். அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப் பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திரு வருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும். கவலைகள் விலகும். வினைகளும், பயமும் விலகும்.

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக 'குன்று தோறாடும் குமரன்' என்று முருகனை சொல்வார்கள்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்று பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்ததாகும். தமிழ்மொழியில் மெய்யெ ழுத்துகள் கண்களாகவும், வில்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் இன எழுத்துக்கள் ஆறுமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துக்கள் பன்னிரண்டும் தோள்க ளாகவும், தனிநிலை எனப்படும் ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் உருவம் சிவந்த மேனியும், அபய வரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்தி லும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய் வானை இடது பக்கத்திலும் அமைய பெற்றதாகும்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள். அந்த அளவுக்கு முருகனின் அவதாரம் சிறப்பிக்கப்படுகிறது.

     

    இந்த அவதாரத்துக்கு மூலமாக இருந்தவர் சிவபெருமான். சிவபெருமானின் நெற்றிக் கண் தீப்பொறியில் இருந்து 6 குழந்தைகளாக சரவண பொய்கையில் முருகன் அவதரித்தார். அன்னை பார்வதி தேவி அந்த 6 குழந்தைகளையும் சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்தாள். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீரவாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன், சிங்கமுகன், சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத பாதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்கள் ஆனது என்பார்கள்.

    எப்போதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போது முருகனை நினைத்தால் போதும்..... ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள் பலராலும் போற்றப்பட்டுள்ளன.

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்,

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒரு முகம்,

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்,

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிர்படர்வது ஒருமுகம்,

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம் என்று ஆறுமுகங்களின் பண்புகளை அருணகிரிநாதர் பாடுகிறார்.

    வீடு பேற்றைப் பெற இயலாதபடி தடுப்பவர்களாக நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், ஆநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பவை அந்த ஆறு ஆதாரங்கள்.

    மனிதனின் உடலும், மனமும் சர்வ சக்தியான குண்டலினியை இயக்கிட மேற்குறிப்பிட்டபடி ஆறு ஆதார சக்கரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயக்கம் உள்ளது. இந்த ஆறு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போதுதான் மனமும், உடலும் ஒருங்கிணைந்து சர்வசக்தியின் மீது ஒருநிலையில் லயிக்கிறது. ஆனால் இதற்குத் தடை யாகத்தான் மேற்குறிப்பிட்ட ஆறு பகைவர்களும் உள்ளனர்.

    எனவே ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான 'சரவணபவ' என்பதை கூறி வந்து ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடனும் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.

    முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும். ஒவ்வொரு படை வீடும், நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு சக்கர ஆதாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

    மூலாதாரம் - திருப்பரங்குன்றம், சுவாதிஷ்டானம்- திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்). மணிபூரகம்- திருவாவினன்குடி (பழநி). அநாகதம் - திருவேரகம் (சுவாமிமலை), விசுத்தி- குன்றுதோன்றாடல் (திருத்தணி), ஆக்ஞை - பழமுதிர்ச்சோலை. இந்த ஆறு ஆதாரங்களிலும் உள்ள அசுர சக்தியை ஆறுபடை வீடுகளில் ஒவ்வொரு தலத்திலும் இருக்கும் முருகப் பெருமானின் அருட்சக்தி அழித்து உய்வு பெறலாம்.

    பல கோடி பிறவிகளில் செய்த புண்ணி யங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் பலவித விரதங்கள் இருந்தாலும், அதில் முதன்மையாக சஷ்டி விரதம் உள்ளது.

    திருசெந்தூரில் சூரனுடன் முருகன் 6 நாட்கள் சண்டையிட்டபோது, அவரது அன்பர்கள் விரதம் இருந்த தியானித்தனர். அன்று தொடங்கிய இந்த பாரம்பரிய சக்திமிகு விரதத்தை இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடை பிடிக்கிறார்கள்.

    திருச்செந்தூர் கந்த தலத்தில் சஷ்டி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். வேலை வணங்குவதே வேலை என்று முருகனுடன் மனம் ஒன்றுபவர்களை முருகன் நிச்சயம் ஆட்கொள்வார்.

    எனவேதான் திருச்செந்தூர் தலத்து முருகனை, நினைத்ததை நடத்தி தரும் முருகன் என்கிறார்கள். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள், தனித்துவத்தை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

    • பானுப்பிரியாவை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.
    • ‘மீனா, நீ நல்லா பாடுவாய் என்று கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாடு’ என்றார்.

    கன்னட ஸ்டார் விஷ்ணு வர்தனோடு நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் அதிக அளவில் கைவசம் இருந்ததால் அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போதெல்லாம் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில் தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக வெளிவந்த 'நாட்டாமை' படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணுவதற்கு தயாராகி கொண்டிருந்தார்கள். ஹீரோ விஷ்ணுவர்தன் என்றார்கள். தயாரிப்பாளர் விஜயகுமார். எப்படியாவது இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டேன்.

    கன்னடத்தில் 'சிம்ஹத்ரிய சிம்ஹா' என்ற பெயரில் தயாரித்தார்கள். இந்த படத்தில் விஷ்ணுவர்தனுக்கு 3 வேடங்கள். சிங்கம் எப்படி தனது ராஜ்ஜியத்தை கட்டி ஆள்கிறதோ அதேபோல் 48 கிராமங்களின் குழுக்களுக்கு தலைவராக இவரும் நரசிம்ஹகடா (விஷ்ணு வர்தன்) அந்த கிராமங்களை கட்டி ஆள்வார். கதை முழுவதும் அவரை சுற்றியே சுழலும்.

    பானுப்பிரியாவும் ஒரு ஜோடி. பானுப்பிரியாவை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். காலையில் ஒருநாளும் சாப்பிட மாட்டார். அதற்கு பதிலாக கொஞ்சம் உலர் பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு நடிக்க கிளம்பி விடுவார்.

    இவருக்கு பசிக்காதா? இரவில் என்னதான் சாப்பிட்டாலும் காலையில் பசிக்கும். சாப்பிடாமல் எந்த வேலையும் ஓடாது.

    பானுப்பிரியாவால் மட்டும் எப்படி பசியை தாங்கி கொள்ள முடிகிறது என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு அவரிடமே நேரடியாக பதில் கேட்டேன்.

    Intermittent fasting diet என்பது இப்போது பிரபலமாகி விட்டது. ஆனால் இந்த முறையை பானுப்பிரியா அப்போதே கடை பிடித்தார்.

    அதாவது முந்தைய நாள் இரவு 8 மணிக்கு சாப்பிட்டால் மறுநாள் காலை 8 மணிக்கு காலை உணவை சாப்பிட மாட்டார்கள். மதியம் தான் சாப்பிடுவார்கள். இதை அப்போதே அவர் கடை பிடித்தது ஆச்சரியமாக இருந்தது. மைசூரு அரண்மனையில்தான் படப்பிடிப்பு நடந்தது. எனக்கும், பானுபிரியாவுக்கும் அந்த அரண்மனையிலேயே தங்குவதற்கு அறையும் கொடுத்து இருந்தார்கள். இருவரும் ஒன்றாக தங்கியிருந்ததால் அவரது உணவு கட்டுப்பாட்டை பார்த்து நானே ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    மாலையில் நேரம் கிடைக்கும்போது அந்த அரண்மனையில் இருக்கும் கடைகளுக்கு சென்று அணிகலன்களை பார்ப்பதும், வாங்குவதும் தான் எங்கள் வேலை.

    தயாரிப்பாளர் விஜயகுமார் ரொம்ப பெரிய மனதுக்காரர். செலவை பற்றி யோசிக்க மாட்டார். அவரை பொறுத்தவரை காட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் கொண்டவர். காஸ்ட்யூமை பொறுத்தவரை சில பாடல் காட்சிகள் மற்றும் காட்சிகளுக்கு நான்கைந்து சேலை வரை தேவைப்படும். எனவே கொஞ்சம் குறைந்த விலை புடவைகளையே 'செலக்ட்' பண்ணுவேன். ஆனால் அவர் விடமாட்டார். விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. அதை எடுத்துக்கோம்மா... காட்சிக்கு நல்லா இருக்கும்ல என்பார்.

    நல்லாத்தான் சார் இருக்கும். ஆனால் விலை ரொம்ப அதிகமாக இருக்கு சார். வேண்டாம் என்பேன்.

    அவர் விடமாட்டார். விலையை பற்றி யோசிக்காதே. நமக்கு காட்சி நல்லாயிருக்கணும் எடுத்துக்கோ என்பார்.

    தயாரிப்பாளர்தான் சொல்லிவிட்டாரே என்று நாங்களும் விலையை பார்க்காமல் காஸ்ட்யூமை செலக்ட் பண்ணுவோம். அவருடைய நல்ல மனதுக்கு காட்சிகளும் நன்றாக அமைய வேண்டும் என்று உயிரை கொடுத்து நடித்தோம்.

    கன்னட நாட்டாமை வளர்ந்து கொண்டிருந்தார். இரவில் ஓட்டலில் தங்கியிருந்தபோது ஒருநாள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.

    அப்போது விஷ்ணுவர்தன் 'மீனா, நீ நல்லா பாடுவாய் என்று கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாடு' என்றார்.

    அய்யய்யோ வேண்டாம் சார். ஆடுவேன், நடிப்பேன், அதுதான் எனக்கு தெரிந்தது. பாட்டெல்லாம் வராது சார். பிளீஸ்... வேண்டாம் என்றேன்.

    ஆனால் அவரும் மற்றவர்களும் விடுவதாக இல்லை. பாடு மீனா... பாடு மீனா... என்று பிடிவாதமாக இருந்தார்கள்.

    வேறு வழியில்லை. எனக்கு தெரிந்த ராகத்தில் 'யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே... கண்ணனோடுதான் ஆட...' பார்வை பூத்திட... பாதை பார்த்திட பாவை ராதையோ வாட...' என்ற பாடலை பாடினேன். கைதட்டி உசுப்பேற்றினார்கள். அத்தோடு விடவில்லை. ஒரு இந்தி அல்லது ஆங்கில பாடலும் பாட வேண்டும் என்று அடம் பிடித்தார்கள்.

    அய்யய்யோ இது என்னடா வம்பா போச்சு என்றபடி 'டைட்டானிக்' படத்தில் வரும். 'மை ஹார்ட் வில் கோ ஆன் எவரி நைட் இன் மை டிரீமஸ். ஐ.சி.யூ., ஐ.பீல்.யூ...' என்ற பாடலை பாடினேன். நண்பர்கள் ஒரே இடத்தில் இப்படி கூடி ஒருவருக்கொருவர் கலாய்த்து ஆடி, பாடி பொழுதை போக்கினால். வேலை செய்த அலுப்பெல்லாம் மறைந்து மனம் முழுக்க சந்தோஷம் நிறைந்து விடுமல்லவா? அன்று அப்படித்தான் மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்தது. அதனால்தான் அந்த நினைவுகள் இன்றுவரை மறக்கவில்லை.

    மறக்காத இன்னும் பல நினைவுகளுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

     

    16 வயதினிலே இசை ஆல்பத்தில்...

    பாரதிராஜா சாரின் மகன் மனோஜ் என்னை அணுகி 16 வயதினிலே என்ற பெயரில் ஒரு இசை ஆல்பம் பண்ண போகிறேன். அதில் நீங்கள் பாட வேண்டும் என்றார். மனோஜ், இது சரியா வராது. என் குரல் 'கீச்' குரல் என்று தயங்கினேன். இல்லை, உங்கள் குரல் நல்லா இருக்கு. 'முயற்சி செய்யுங்கள். நல்லா வரவில்லை என்றால் விட்டு விடலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

    அவருடைய வற்புறுத்தலால் பாடினேன். இசை ஆல்பமும் வெற்றிகரமாக வந்தது. மீனா... அசத்திபுட்டே... என்று எனக்கு நானே காலரை தூக்கி விட்டுக்கொண்டேன். 

    • உணவுகளை பேக் செய்யும்போது சிலவற்றில் உள்ள கெடுதியான ரசாயனங்களால் புற்றுநோய் ஆபத்தும் உள்ளது என்கின்றனர்.
    • 16 மணி நேரம் உணவு தவிர்ப்பு என்பதெல்லாம் மருத்துவர், நிபுணர் இவர்கள் ஆலோசனைப்படியே எடுக்க வேண்டும்.

    புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. உலகெங்கிலும் 13.15 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்வில் இந்த புற்றுநோயை எதிர்கொள்கின்றனர்.

    சமீபத்திய மருத்துவ முன்னேற்றம் காரணமாக இதன் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் இதன் பாதிப்பு விகிதம் கூடித்தான் இருக்கின்றது.

    உணவுப் பொருட்களை பேக் செய்யும் கவர்கள், பொருட்களில் இருந்தும் சில ரசாயனங்களில் இருந்தும் இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    சுமார் 189 ரசாயனங்கள் மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

    இன்றைய வாழ்க்கை சூழலில் ஏதோ ஒரு பிரிவு சம்பந்தமான புற்றுநோய் பாதிப்பிற்கு சுமார் 40 சதவீத ஆண்களும், 38 முதல் 39 சதவீதபெண்களும் ஆளாவதாக அமெரிக்க புற்றுநோய் ஆய்வு குறிப்பிடுகின்றது. மேலும் மார்பக புற்று நோயினைப் பொறுத்தவரை 8 பெண்களில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    1990களில் இருந்தே ஸ்கிரீனிங் என்ற முறையில் மார்பகங்களை பரிசோதித்து அறிவதன் மூலம் அதிக அளவில் இதன் பாதிப்பினால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இளம் பெண்களுக்கும் எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது என்பதைத் தெளிவாக்க ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    * பெண்களுக்கே இது அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

    * 50 வயதினை தாண்டியவர்கள்.

    * பரம்பரை உறுப்பினர்கள்.

    * கேன்சர் பாதிப்பினை ஏற்படுத்தும் ரசாயனங்கள் போன்றவை பாதிப்பிற்கு முக்கிய காரணங்கள் ஆகின்றன.

    * எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல்.

    * சீரான எடை பராமரிப்பு (குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு)

    * 30 வயதிற்குள்ளாக குழந்தை பெற்றுக் கொள்வது, தாய்ப்பால் அளிப்பது போன்றவை தவிர்ப்பு முறையாகவும் பாதுகாப்பு முயற்சிகளாகவும் அமையும்.

    உணவுகளை பேக் செய்யும்போது சிலவற்றில் உள்ள கெடுதியான ரசாயனங்களால் புற்றுநோய் ஆபத்தும் உள்ளது என்கின்றனர். இதில் பிளாஸ்டிக் உள்பட சிலவற்றினை கூறியுள்ளனர். தரம் குறைவானவைகளை பயன்படுத்தாது டிபன் பாக்ஸ் (எவர்சில்வர்) வாழை இலை இவையெல்லாம் எத்தனையோ பாதுகாப்பு எனலாம்.

     

    கண்ணாடி பொருட்களால் இத்தகைய பாதிப்பு இல்லை. எனினும் அனைத்திற்கும் கண்ணாடி, மண்பாண்டங்கள் இவற்றினை பயன்படுத்துவது கடினம்.

    ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். மது, புகை போன்றவற்றினை தவிர்ப்பது சிறந்த பாதுகாப்பினைத் தரும்.

    குறிப்பிட்ட நேரத்திற்கு உண்ணுதல்:

    குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தின் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்பாடு, உடல் எடை குறைப்பு ஆகியவற்றினை அடைய முடியும் என ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இது மட்டும் அல்லாது இம்முறையின் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

    ஒருவரது வயது, பாலினம், செய்யும் வேலை இவற்றினைக் கொண்டே இந்த முறை பயன்படுத்தப்பட வேண்டும். முதியவர்கள் கூட இதன் மூலம் பயன் பெற முடியும். நீரிழிவு பிரிவு, கல்லீரல் கொழுப்பு மற்றும் சில கடுமையான பாதிப்புகளுக்கு எதிராகக் கூட இந்த உணவு முறை பயன்படுகின்றது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவ தால் தொற்று நோய்களில் இருந்து கூட பாதுகாப்பு அளிக்கின்றது என விஞ்ஞானிகளின் ஆய்வு வலியுறுத்துகின்றது.

    கல்லீரல் கொழுப்பு நோய் என்பது சரி செய்யப்படாமல் இருக்கும் போது கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் கூடவே நீரிழிவு நோய் இருந்து விட்டால் பாதிப்புகள் கூடுகின்றன.

    பொதுவில் மாலை 6 மணிக்குள் இரவு உணவினை முடித்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அநேகருக்கு எளிதாக இருக்கின்றது.

    சிலர் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு எடுத்துக் கொள்வர். மீதி 18 மணி நேரம் உணவின்றி இருப்பர்.

     

    உணவு உண்ணாத போதும் நீர் குடிப்பது அவசியம்.

    மூன்று வேளை உணவு, அதில் சத்துக்களில் கவனம், தவறான உணவுகளை தவிர்த்தல், அதிக உப்பு, புளி, காரம் இன்றி இருத்தல், உடற்பயிற்சி செய்தல், நொறுக்கு தீனி அறவே தவிர்த்தல், இரவு உணவினை 7 மணிக்குள் முடித்து விடுதல் போன்றவையே நல்ல பலன் கொடுக்கும்.

    16 மணி நேரம் உணவு தவிர்ப்பு என்பதெல்லாம் மருத்துவர், நிபுணர் இவர்கள் ஆலோசனைப்படியே எடுக்க வேண்டும். முரட்டு பயிற்சி முறைகள் நம்மூரில் சர்வ சாதாரணம் என்பதால் மருத்துவர் அறிவுரை இன்றி எதுவும் செய்வது தவறு.

    மேலும் ஒரு நாளில் நீண்ட நேரம் உணவின்றி இருப்பதற்கு சமீப கால ஆய்வுகள் சில எதிரான கருத்துக்களை கொண்டு உள்ளன. ஆய்வுகள் தொடரவும் செய்கின்றன.

    ஆக அதிக உணவு, தவறான உணவு, கண்ட நேரத்தில் உணவு, நொறுக்கு தீனி, காபி, டீ இவற்றினை தவிர்த்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    பக்கவாத பாதிப்பு 11 சதவீதம் இறப்பிற்கு காரணம் ஆகின்றது என வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.

    இதில் முதல் பிரிவாக- மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது மூளைக்குத் தேவை யான ஆக்சிஜன் கிடைப்பது இல்லை.

    2-வது பிரிவு மூளையில் ரத்தக் குழாய் வெடித்து வெளியே ரத்தம் கசிந்து அருகில் உள்ள திசுக்களை பாதிப்பதால் ஏற்படுகின்றது.

    சில சமயங்களில் 'மினிஸ்ட்ரோக்' என்று கூறப்படும் 2 நிமிடம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது என மூன்று வகைப்படும்.

    பக்கவாதம் என்பது மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இதனைப் பற்றிய மேலும் சில விவரங்களை அறிவோம்.

     

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    * சிலர் பக்கவாதத்தினையும், ஹார்ட் அட்டாக் இரண்டினையும் குழப்பிக் கொள்கின்றனர். பக்கவாதம் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு, பாதிப்பு ஆகும். ஹார்ட்அட்டாக்- மாரடைப்பு என்பது இருதய ரத்த குழாயில் ஏற்படும் அடைப்பு ஆகும்.

    * பக்கவாதத்திற்கு முக்கிய காரணங்களாக உயர் ரத்த அழுத்தம், புகை பிடிப்பது, அதிக கொழுப்பு (கொலஸ்டிரால்), அதிக எடை, சர்க்கரை நோய், கழுத்து, தலை இவற்றில் அடிபடுதல் ஆகியவைகளைக் கூறுகின்றனர்.

    அதிக மன உளைச்சல், மது அருந்துதல் ஆகியவையும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

    * முகம் ஒரு பக்கம் கோணல் ஆகுதல்.

    * தோள் பலவீனம்

    * பேசுவதில் குழறல்

    * குழப்பம், பார்வை தெளிவின்மை.

    * நடக்க இயலாமை

    * அதிக தலைவலி

    இவைகளை ஸ்டிரோக் பதிப்பின் அறிகுறிகளாகக் கூறலாம்.

    * பக்கவாதம் ஏற்பட்டால் சரி செய்ய முடியுமா? என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது.

    * அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாது மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை அழைத்து செல்ல வேண்டும். மிக நல்ல முன்னேற்றத்தினை சிகிச்சை மூலம் கொண்டு வர முடியும்.

    * வயது கூடும்போது பக்கவாத பாதிப்பின் அபாயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 55 வயதினை கடக்கும்போது ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இதன் பாதிப்பு அபாயம் இரட்டிப்பு ஆகின்றது.

    * சிலருக்கு அறிகுறிகள் காட்டாது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யும்போது பாதிப்பினைக் காட்டலாம். இவர்கள் தலைவலி, மயக்கம், கவனிக்கும் திறன் குறைதல் ஆகிய காரணங்களுக்காக மருத்துவரை அணுகியிருக்கலாம். வயது கூடும்போது எதனையும் சாதாரணம் என்று கவனிக்காமல் இருக்கக் கூடாது.

    * மினி ஸ்டிரோக் சின்னது தானே என விட்டு விடக்கூடாது. பெரிய ஸ்டிரோக் வரும் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உரிய கவனம் செலுத்தி விட்டால் பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.

    * ஸ்டிரோக் பாதிப்பில் உடனடி கவனிப்பு பெறுபவர்கள், இணைப் பாதிப்புகள் இல்லாத நிலையை இயல்பு நிலை மருத்துவத்தின் மூலம் பெற முடியும்.

    சிலர் குறைந்த அளவு பாதிப்போடு நலம் பெறுவர்.

    சிலருக்கு பாதிப்புகள் கூடுதலாக இருக்கலாம்.

    • மிக செழிப்பான வாழ்க்கையில் இருந்த ரூஸ்வெல்ட்டுக்கு அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை பற்றி எலினார் புரிய வைத்தார்.
    • 1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக பிராங்க்ளின் பதவி வகித்தார்.

    மனித உரிமைகளைப் பெரிதும் மதித்து அதற்காகப் போராடியவர், அமெரிக்காவின் முதல் பெண்மணியாகத் திகழ்ந்தவர், ஐக்கிய நாடுகள் சபை உருவாகப் பெரிதும் உழைத்தவர் – உலகின் முதல் பெண்மணி என்று போற்றப்பட்டவர் – இத்தனை பெருமைக்கும் உரியவராகப் போற்றப்படும் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட் ஆவார்.

    பிறப்பும் இளமையும்:

    எலினார் ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் 1884-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஒரு செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எலியட் ரூஸ்வெல்ட் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் நெருங்கிய வம்சாவளி உறவினர் ஆவார். தாயார் அன்னா ரெபக்கா ஹால் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்.

    எலினாரின் இளமை வாழ்வு மிகவும் சோகமயமானது. தான் அழகாக இல்லை என்ற எண்ணம் இளமையிலிருந்தே இவருக்கு ஆழமாக மனதில் பதிந்து விட்டது. இளமையில் பெரியவர் போல மிகவும் சீரியஸாக இவர் இருந்ததால் இவரைப் பாட்டி என்றே இவரது தாயார் அழைப்பது வழக்கம். இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உண்டு.

    1892-ம் ஆண்டு அவரது தாயார் டிப்தீரியா நோயால் மரணமடைந்தார். இதே வியாதியால் ஜூனியர் எலியட்டும் மரணமடைந்தார். தந்தையோ 1894-ம் ஆண்டு மதுப்பழக்கத்தினால் ஒரு சானிடோரியத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜன்னலிலிருந்து கீழே குதித்தார். அந்த விபத்தில் உயிர் பிழைத்தாலும் பின்னர் காலமானார். இப்படி ஏராளமான இழப்புகளை இவர் இளமையில் சந்திக்க நேர்ந்தது.

    லண்டனில் படிப்பு:

    தாயையும் தந்தையையும் இழந்த நிலையில் அவர் தாய்வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டார். பதினைந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள ஆலன்ஸ்வுட் என்ற இடத்திற்கு பாட்டி அனுப்பி வைத்தார். அங்கு தலைமை ஆசிரியையாக இருந்த மேரி ஸௌவெஸ்டர் என்பவர் அவரை எல்லாவற்றிலும் நன்கு ஊக்குவித்தார். அவரால் அழகு என்பது மட்டுமே தேவையான ஒன்று அல்ல என்பதை அவர் உணர்ந்தார். பின்னால் எலினார் குறிப்பிடுகையில் அவருடன் தான் இருந்த மூன்று வருடங்கள் தான் தனது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சிகரமான வருடங்கள் என்று குறிப்பிட்டார்.

    1902-ம் ஆண்டு எலினார் நியூயார்க்க்கிற்கு சமூக அறிமுக நிகழ்ச்சிக்காகத் திரும்ப வேண்டியீருந்தது. பாரம்பரியமாக குடும்பத்தினர் சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்ததால் அவரும் அந்த சேவைகளில் ஈடுபடலானார்.

    பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்:

    அந்தக் கால வழக்கப்படி அவரது பாட்டி அடிக்கடி விருந்துகள் (பார்ட்டிகள்) கொடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட விருந்து ஒன்றில் தன் எதிர்காலக் கணவரான பிராங்ளின் ரூஸ்வெல்ட்டை அவர் சந்தித்தார். 'என்னுடன் நடனமாட வருகிறாயா' என்ற ரூஸ்வெல்ட்டின் அழைப்புடன் அவர்கள் சந்திப்பு தொடங்கியது.

    மிக செழிப்பான வாழ்க்கையில் இருந்த ரூஸ்வெல்ட்டுக்கு அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை பற்றி எலினார் புரிய வைத்தார். இதனால் பிராங்க்ளினுக்கு எலினார் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 1905-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது பிராங்க்ளினுக்கு வயது 22. எலினாருக்கு வயது 20.

    முதலில் அன்னா என்ற பெண் குழந்தையைப் பெற்ற எலினார் ஆறு குழந்தைகளுக்குத் தாயானார். அவரது மாமியாரது கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருந்தது.

    முதல் உலகப் போர் ஆரம்பமாகவே அவரது சகோதரர் விமானப் படையில் சேர்ந்தார். அதை அவரது மாமியார் கடுமையாக விமர்சித்தார். கனவானான ஒருவர் இப்படி போர்க்காலத்தில் விமானப்படையில் சேரலாமா என்ற அவரது விமரிசனத்திற்கு, கனவான் என்பவர் மற்ற அமெரிக்க குடிமகனை விட எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று கேட்டார் எலினார். இது தான் அவர் முதன்முதலாக தனியாக தனது உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்திய சம்பவமாக அமைந்தது.

    அவரது கணவர் பிராங்க்ளின் அரசியலில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருந்தார், அமெரிக்க செனட்டர் ஆனார்.

    இதே கால கட்டத்தில் அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத நிலையை அடைந்தார். மாமியாரோ தாங்க முடியாதபடி அவரை பலவிதத்திலும் மனதளவில் காயப்படுத்தினார். இதனால் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.

    தன் கணவர் வீல்சேரில் அமர்ந்து இருக்க, அவரை அவரது அரசியல் வாழ்க்கையைத் தொடர அவர் வற்புறுத்தினார். அவருக்கு சொற்பொழிவுக்கான உரைகளைத் தயார் செய்து தர ஆரம்பித்தார். பல ஆவணங்களைச் சேகரித்துக் கொடுக்கலானார். படிப்பதில் இளமையிலிருந்தே இருந்த அவரது ஆர்வம் இதற்கு நன்கு கை கொடுத்தது.

    'ஒரு பெண் என்பவள் ஒரு டீ பை போல; அவள் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதை அந்த டீ பேக்கை வெந்நீரில் போடும் வரை உங்களால் அறிய முடியாது' என்றார் அவர். 'உங்களை வழி நடத்த உங்கள் மூளையை உபயோகியுங்கள்; மற்றவர்களைக் கையாளும்போது உங்கள் இதயத்தை உபயோகியுங்கள்' என்றார் அவர். இதன்படி அனைவருடனும் இயல்பாகவே எளிமையாகப் பழக ஆரம்பித்தார்; அனைவரையும் கவர ஆரம்பித்தார்.

    அரசியலில் முக்கியத்துவம்:

    1924-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தின் டெமாக்ரடிக் கட்சியில் தலைவராக இருந்த சார்லஸ் மர்பியிடம், அவர் பெண்களுக்கு கட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் மர்பி அதை மறுத்து விட்டார். நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல பத்திரிகையில்' "பெண்கள் ஆண்களிடமிருந்து மதிப்பைப் பெற வேண்டும்." என்ற அவரது கட்டுரை பிரசுரமானது. இந்தக் கட்டுரை அனைவரையும் கவர்ந்தது. மர்பி அவரது கோரிக்கைக்கு இணங்கினார்.

    தொடர்ந்து 1928-ம் ஆண்டு பிராங்க்ளின் நியூயார்க் நகரத்தின் கவர்னராக ஆனார். 'நாங்கள் இருவரும் மக்களின் முன்னேற்றத்தை விரும்புகிறோம்' என்ற அவரது உரையை மக்கள் கூர்ந்து கவனத்துடன் கேட்டனர். 'மை டே' என்ற அவரது பத்திரிகையில் வரும் பகுதி அனைவரையும் கவர்ந்தது.

    மைனாரிட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைக்காக அவர் பாடுபடலானார். குறிப்பாக இளைஞர்களுக்காக தேசீய இளைஞர் நிறுவனம் ஆரம்பிக்க அவர் முனைந்தார்.

    இதனாலெல்லாம் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்த அவர் தன் கணவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்குப் பெரிதும் காரணமானார்.

    பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொண்ட முதல் கூட்டம்:

    பெண்களின் உரிமையில் பெரிதும் அக்கறை கொண்டவர் அவர் என்பதை அவரது ஒரு சந்திப்பு நன்கு விளக்கியது. 1933-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆனார் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

    தான் பத்திரிகை நிருபர்களைச் சந்திக்கப்போவதாக அறிவித்தார் எலினார். பத்திரிகையாளர்கள் அனைவரும் அதை ஆவலுடன் வரவேற்றபோது, 'ஒரே ஒரு நிபந்தனை, அந்த நிருபர்கள் கூட்டத்தில் பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்' என்றார் அவர்.

    அனைவரும் வியந்தனர். பெண்கள் அவரைப் போற்றினர். அவசரம் அவசரமாக அனைத்துப் பத்திரிகைகளும் ஏராளமான பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின; பயிற்றுவித்தன.

    ஜனாதிபதி பதவியேற்ற இரண்டே நாட்களில் மார்ச் மாதம் 6-ந் தேதி அவரது பெண் நிருபர்கள் கூட்டம் நடந்தது. இதுபோல 348 பெண் நிருபர்கள் கூட்டத்தை அவர் நடத்தினார்.

    1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக பிராங்க்ளின் பதவி வகித்தார். இந்தக் காலத்தில் பல நாடுகளுக்கும் எலினார் பயணம் மேற்கொண்டார். உரைகளை நிகழ்த்தினார். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதை உலகம் அறிந்து போற்றியது.

    அத்துடன் அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தன் கணவரை எலினார் வற்புறுத்த அவரும் அதை ஏற்றார். பெண்களுக்கு முன்பு கண்டிராத உரிமைகளும் பதவிகளும் கிடைத்தன!

     

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    இரண்டாம் உலகப் போர்:

    இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பயங்கரமான நாஜி ஜெர்மனியுடன் போர் புரியும் நிலை ஏற்பட்டது. எலினார் தன் பங்கைச் செய்ய அமெரிக்கா இதற்கு ஈடு கொடுத்தது.

    ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியான மேரியன் ஆண்டர்ஸன் என்ற பாடகியை அமெரிக்க புரட்சி மகளிர் சங்கம் கான்ஸ்டிடியூஷன் ஹாலில் பாடக்கூடாது என்று போர்க்கொடி தூக்கியது. இந்த இனவெறியைக் கண்டித்த எலினார் அவரை ஆதரித்து தனது உறுப்பினர் பதவியை அந்தச் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார். தனியாக ஒரு கூட்டத்தை லிங்கன் மெமோரியல் இடத்தில் ஏற்பாடு செய்தார். 75000 பேர்கள் அங்கு குழுமினர்.

    இப்படி பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தன.

    கணவரின் மறைவு:

    1945-ம் ஆண்டு பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மறைந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன் அவரை உலகின் முதல் பெண்மணி என்று பாராட்டினார். தனது கணவர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி மறைவதற்கு சில மணி நேரம் முன்பாக அவர் தனது கடைசி பெண் நிருபர்கள் கூட்டத்தை நடத்தினார்.

    தன் பணியை அவர் தொடர்ந்து செய்தார். அடுத்த ஆண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் அவர் முதல் இடத்தைப் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆன ட்ரூமன் அவரை 1945 முதல் 1952 முடிய ஐ.நா.வின் அமெரிக்க தூதராக நியமித்தார்.

    நூல்கள்: வாழ்நாள் முழுவதும் அவர் 28 நூல்களை எழுதியுள்ளார். அவரது சுவையான சுயசரிதம் பல பகுதிகள் கொண்ட நூல்களாக அமைந்துள்ளது. பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் 3000-க்கும் மேற்பட்டவை.

    மறைவு: ஒருவித எலும்பு மஜ்ஜை காச நோயினால் பாதிக்கப்பட்ட எலினார் தனது 78-ம் வயதில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி மரணமடைந்தார். ஹட்ஸன் நதிக்கரையோரம் உள்ள பிராங்க்ளின் நூலகத்தின் அருகில் ஹைடன்பார்க்கில் அவரது குடும்பத்தினருக்கான கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார். அந்த நூலகமே அவரை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    எலினாரின் பொன்மொழிகள்:

    குறிப்பிடத்தகுந்த அவரது பொன்மொழிகளில் சில:

    பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன. சராசரி மனங்கள் சம்பவங்களை விவாதிக்கின்றன. சிறிய மனங்களோ மனிதர்களை விவாதிக்கின்றன.

    எந்த ஒருவரும் உங்கள் அனுமதியின்றி உங்களை தாழ்ந்தவராக கருதச் செய்ய முடியாது.

    ஒரு நல்ல தலைவர் மக்களைத் தன் மீது நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார். ஒரு பெரிய தலைவரோ மக்களை தங்கள் மீதே நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார்.

    • எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச் செய்யக்கூடிய எந்தச் செயலும் சுமையாக இல்லாமல் சுகமாக மாறிப்போகும்.
    • கடமையைச் செம்மையாகச் செய்தால் போதும்; எந்தப் பலனும் தோல்வியாக அமையாமல் நன்மையாகவே பூக்கும்.

    பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வதில் ஆர்வம் காட்டும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    உழைப்பின் வியர்வை நெற்றியிலிருந்து நிலத்தில் விழுவதற்குமுன் உழைப்பிற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பழங்கால உழைப்பூதியக் கொள்கை குறிப்பிடுவதுண்டு. உழைப்பு என்றாலே அது ஊதியம் என்கிற பலனை எதிர்நோக்கிச் செய்யப்படுவதுதான். ஆனால் வாழ்க்கையில் மனிதராகத் தோன்றி நாம் செய்கிற எல்லாச் செயல்களுக்கும் ஏற்ற பலனையும், பாராட்டுக்களையும் உடனடியாக எதிர்பார்க்கக் கூடாது .

    நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் ஒரு ஞானியைப் பார்க்க அவரது ஆசிரமத்திற்குச் சென்றிருந்தான். அப்போது அவரைப் பார்த்துக் கேட்டான், "கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்று பகவத்கீதை கூறுகிறதே, நாட்டை ஆளும் மன்னன் நான், எனது ஆட்சித் திறத்தை மக்கள் எல்லோரும் பாராட்ட வேண்டும்! என்று எதிர்பார்க்கக் கூடாதா?.அது தவறா?". மன்னனின் கேள்வியைக் கேட்ட ஞானி, " உங்களின் இந்தக் கேள்விக்கு நான் சரியாகப் பதில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் எனது ஆசிரமத்தில் ஒரு வாரம் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டுமே! இயலுமா?" என்று கேட்டார். "ஓ! தாராளமாக!" என்று கூறிவிட்டு அங்கேயே பரிவாரங்களுடன் தங்கியும் விட்டான் மன்னன்.

    ஒருவாரம் ஆனது; ஞானியைப் பார்க்கச் சென்றான் மன்னன். " மன்னா! ஒரு வாரம் தங்கியிருந்தீர்களே! எங்கள் ஆசிரமச் சாப்பாடு எப்படியிருந்தது?" கேட்டார் ஞானி. " ஆஹா! பிரம்மாதம்!. இப்படியொரு சுவையான சாப்பாட்டை என் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை. ஆசிரமத்தில் உள்ள உங்களது தலைமை சமையல்காரரை, நான் நாட்டிற்குத் திரும்பும்போது உங்கள் அனுமதியுடன் உடன் அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளேன்; அதுமட்டுமல்ல!; அவரை எனது அரண்மனையின் தலைமைச் சமையல்காரராகவும் பணிநியமனம் செய்யவும் உத்தேசித்துள்ளேன்!" என்றான் அரசன்.

    சிரித்துக்கொண்டே ஞானி பேசினார், " சமையல் என்று வந்துவிட்டால், உணவைச் சுவையாகச் சமைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமையல்காரரின் கடமை. எங்கள் சமையல்காரர் அவரது கடமையைச் சரியாகச் செய்திருக்கிறார்; அதற்கான பலனாக அவர் எதிர்பார்க்காமலேயே அவருக்கு அரண்மனையில் பணி கிடைத்துள்ளது. ஆசைப்படுவது என்பது வேறு; எதிர்பார்ப்பது என்பது வேறு!. ஆசைப்படுவதற்கு அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பது. ஆசைப்படுவதே தவறு என்னும்போது, அதற்கு அடுத்த நிலையிலே இருக்கக் கூடிய எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டே போவதென்பது பேராசையென்னும் பெருங்குழியில் தள்ளிப், பெருநஷ்டத்தையல்லவா உண்டுபண்ணி விடும்?. ஒரு செயலைப் பயனை எதிர்நோக்கிச் செய்தால், அதில் நாம் வெற்றிபெற முடியாமல்கூடப் போகலாம். அதேவேளையில், அந்தச் செயலைப் பயனை எதிர்பார்க்காமல் செய்தால், அதன்மூலம் நாம் அடையப்போகும் பலனை நிச்சயம் யாராலும் தடுக்கவும் முடியாது" உறுதியாகச் சொன்னார் ஞானி. மன்னன் தெளிவான பதிலைப் பெற்றுக்கொண்டான்.

    இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டு உலகம், செயல்கள் நடக்கின்றனவோ என்னவோ, அதற்கு முன்னதாகவே கைமேல் பலன் செயலை முந்திக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிற விரைவான உலகமாக இருக்கிறது. 'ஆரோகணம்' 'அவரோகணம்' என்று 'தொடக்கம்' 'முடிவு' குறித்து இசையுலகம் குறிப்பிடும். எந்தவொரு தொடக்கமும் மெதுமெதுவாகத் தொடங்கிப், பிறகு நிலைத்த கதியில் சென்று, நிறைவாக வேகம் குறைத்து மெதுமெதுவாகத் தேய்ந்து நின்று விட வேண்டும். ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகம் எடுத்தவுடனேயே அதிகபட்ச வேகத்தை அந்த வாகனம் எத்தனை நொடிகளின் பகுதிகளில் எட்டிப்பிடிக்கும்?. என்று கேட்கிற அவசர உலகமாக இருக்கிறது. கடமைகளின் செயல் வேகங்களைவிடப் பலன்களின் வேகங்கள் விரைவு மிக்கனவாக எதிர்பார்க்கப்படுகின்றன.

    பொதுவாக, நிகழ்வுகளின் பதிவாகப், புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன; குரல் பதிவுகள் செய்யப்படுகின்றன; வீடியோப் பதிவுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒருகாலத்தில், இவற்றைக் கலைக் கூடங்களுக்கு எடுத்துச் சென்றால் தான், புகைப்படங்களாக, ஒலித் தொகுப்புக்களாக, ஒலிஒளிப் படங்களாக கலையாக்கம் செய்து , ஆல்பங்களாகவோ, சிடிக்களாகவோ உருவாக்கி அடுத்தவர் பார்வைக்கு அனுப்பிவைக்க முடியும். பெரிய பெரிய புகைப்படக் கருவிகள், ஒலிவாங்கிகள், ஒலிப்பதிவு இயந்திரங்கள், வீடியோ கேமராக்கள் போன்றவை அடிப்படைத் தேவைகளாகவும் இருந்தன.

    இன்றைய அவசர டிஜிட்டல் உலகத்தில் செல்பேசி ஒன்றே போதுமானதாகக் கட்டமைக்கப் பட்டுவிட்டது. ஆண்ட்ராய்டு போனில் சகலமும் வந்து விட்டன. எடுக்கின்ற புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் இசைப் பதிவுகள் அனைத்தையும், முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், வாட்ஸ்அப், யூடியூப் என சகலத்தின் வழியாகவும் சகலத்தையும் அனுப்பிவிடும் மாயக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சொந்தப் பதிவேற்றங்கள் மட்டுமல்ல; அடுத்தவர் அனுப்பியவை; அடுத்தவர்க்கு அடுத்தவர் அனுப்பியவை என முன்மொழிந்து அனுப்புபவைகளும் உண்டு.

    இந்த டிஜிட்டல் தளங்களில் அனுப்பி வைப்பதோடு மட்டும் இந்த வேலைகள் நின்றுவிடுவதில்லை; அப்படி நின்றுவிட்டால், 'கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!' என்கிற கோட்பாடு இங்கே கனஜோராகக் காப்பாற்றப்படுகிறது என்கிற முடிவுக்கு நாம் வந்து விடலாமே!. முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், வாட்ஸ்அப், யூடியூப் போன்றவற்றில் செய்திகளை அனுப்பிவிட்டுத், தொடர்ந்து நொடிக்கொருதரம் அவற்றைத் திறந்து, "இதுவரை எத்தனை விருப்பங்கள் வந்திருக்கின்றன? எத்தனை கருத்துக்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன? எத்தனை எண்ணிக்கையில் வீடியோக்கள் சுழலவிடப் பட்டிருக்கின்றன? இவர்களில் யார் யார் நமக்கு வேண்டியவர்கள்? யார் யார் புதியவர்கள்? காலையில் ஒரு நண்பனுக்கு 'வெகு பிரம்ம்மாதம்!' என்று ரொம்பச் சாதாரணமான செய்திக்குக் கருத்துத் தெரிவித்திருந்தோமே அவன் நமக்குப் பிரதிபலனாக ஏதேனும் பாராட்டுக் கருத்துத் தெரிவித்திருக்கிறானா?" என்று நெஞ்சம் பதைபதைக்கக், கண்கள் பரபரக்கப் பார்த்துப் பார்த்துப் பதற்றமடைகிறார்களே! இதை எங்கே போய்ச் சொல்ல?.

    ஒரு விதையை நட்டுவைத்துவிட்டு, அது செடியாகி, மரமாகிப், பூப்பூத்துக், காய் காய்த்துப் பழமாகும்வரை காத்திருக்கும் ஒரு பாமரக் கிராமத்து மனிதனுக்கு இருக்கக் கூடிய பொறுமைகூட, இன்றைய நாகரிக நகர மனிதனுக்கு இல்லையென்னும்போது, கடமையைச் செய்துவிட்டுப் பலனை எதிர்பாராத பண்பை அவனிடம் எப்படி எதிர்பார்ப்பது?.

    இன்றைய அவசர உலகில் மட்டுமல்ல, எதையுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் எந்தக் காலத்திற்கும் வந்துசேரக்கூடிய பெரும் சாபம் 'பரபரப்பு' 'பதற்றம்' 'அமைதியின்மை' 'ரத்த அழுத்தம்' மன அழுத்தம்' 'கொழுப்பு' 'சர்க்கரை' 'மாரடைப்பு' போன்ற நோய்கள்தாம். எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச் செய்யக்கூடிய எந்தச் செயலும் சுமையாக இல்லாமல் சுகமாக மாறிப்போகும்; கடமை என்பதே எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச் செய்யப்படுவதுதான்; அப்படிச் செய்யும்போது விளைவு நேர்முறையானாலும் எதிர்மறையானாலும் மனம் எந்தச் சலனத்திற்கும் ஆளாகாமல் அமைதியாகவே இருக்கும்.

    ஒரு நாட்டின் ராஜாவை அரண்மனையில் பார்க்க வந்திருந்தார் அமைச்சர். ஒரு ஆப்பிள் பழத்தை நறுக்கிக் கொண்டிருந்த ராஜா, அமைச்சரைப் பார்த்ததும் அவசரத்தில் கையின் சுண்டுவிரலை நறுக்கிக் கொண்டார். அப்போது அரசரைப் பார்த்து ' எல்லாம் நன்மைக்கே!" என்று கூறினார் அமைச்சர். அரசருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது; இருந்தாலும் அரண்மனை வைத்தியர் வந்து கட்டுப்போட்டுவிட்டுச் செல்லும் வரை பொறுத்துக் கொண்டார். " என்ன அமைச்சரே! நான் சுண்டுவிரலை நறுக்கிக் கொண்டிருக்கிறேன் நீங்கள் என்ன எல்லாம் நன்மைக்கே! என்று நக்கலாகக் கூறுகிறீர்கள்?" அரசர் கேட்டார். அரசே! எல்லாம் நன்மைக்கே! என்பது நான் அடிக்கடி கூறும் சுபாவப் பேச்சு! அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்!. நல்லது. என்னைத் தற்போது நீங்கள் அவசரமாக வரச் சொன்னதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?" பவ்யமாகக் கேட்டார் அமைச்சர்.

    " அமைச்சரே! முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், பரிவாரங்களும் ஏதுமில்லாமல் திடீரெனக் காட்டிற்குத் தனியாக வேட்டைக்குச் செல்லலாமெனத் தீர்மானித்திருக்கிறேன்!. நீங்கள் வேண்டுமானால், என்னோடு இணைந்து கொள்ளலாம்!. கிளம்புங்கள்! ரெண்டுபேரும் வேட்டைக்குச் சென்று வருவோம்! என்று வேட்டைக்கு மந்திரியையும் அழைத்தார் ராஜா. " அரசே! மன்னிக்க வேண்டும்!. எனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அரசாங்க வேலைகள் நிறைய இருக்கின்றன; நான் இங்கிருந்து அவற்றைக் கவனிக்க வேண்டும்; நீங்கள் வேண்டுமானால் திட்டமிட்டபடி, காட்டிற்கு நீங்கள் மட்டும் வேட்டைக்குச் சென்று வாருங்கள்!" என்றார் அமைச்சர்.

    இதைக் கேட்ட அரசருக்குக் கோபம் வந்துவிட்டது." உங்களுக்கு வேலை இருக்கிறது! என்றால், நான் ஏதோ வேலையற்றுப்போய் வேட்டைக்குப் போகிறேன் என்று கேலியா பேசுகிறீர்கள்?. யாரங்கே! இந்த அமைச்சரைப் பிடித்து, நான் காட்டிலிருந்து திரும்பி வரும்வரை சிறையில் போடுங்கள்!' என்று உத்தரவிட்டான் மன்னவன். " எல்லாம் நன்மைக்கே!" என்று கூறிவிட்டுச் சிறைக்குச் சென்றார் அமைச்சர். காட்டின் எல்லைவரை பரிவாரங்களோடு சென்ற அரசர், காட்டிற்குள் அவர்மட்டும் தனியாக வில் அம்பு சகிதம் வேட்டைக்கு நுழைந்தார்.

    நடுக்காட்டிற்குள் அரசர் இருக்கும்போது நரமாமிசம் சாப்பிடும் காட்டு மனிதர்களிடம் மாட்டிக்கொண்டார். அன்று பவுர்ணமி நாள்; அவர்களின் குலதெய்வத்திற்கு அரசரைப் பலிகொடுத்து, அவர் உடம்பை விருந்தாக உண்பது என முடிவெடுத்தனர் காட்டு மனிதர்கள். பலி கொடுக்கும் மனித உடம்பில் ஒச்சம் குறை எதுவுமில்லாமல் இருக்கிறதா? என ஒருவன் பரிசோதனை செய்தான்; அரசரின் சுண்டுவிரல் நறுக்கப்பட்டதைப் பார்த்ததும் அரசரை அந்தக் கூட்டம் பலிகொடுக்காமல் நிராகரித்து விடுவித்து விட்டது.

    தப்பித்தோம் பிழைத்தோம் என அரண்மனை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த அரசரின் மனவோட்டத்தில், 'சுண்டுவிரல் ஒச்சத்தால் நாம் பலியிலிருந்து தப்பித்தோம்! எல்லாம் நன்மைக்கே!' என்று நினைத்துக் கொண்டார். வந்தவுடன் அமைச்சரை விடுதலை செய்யச் சொல்லி, அவரிடம் கேட்டார், "ஆப்பிள் நறுக்கும்போது சுண்டுவிரல் காயம் கண்டு எல்லாம் நன்மைக்கே! என்றீர்கள்! நான் தப்பித்தேன். உங்களைப் பிடித்து சிறையில் போடுங்கள் என்று நான் சொல்லும்போதும்,ஏன் 'எல்லாம் நன்மைக்கே!' என்று கூறினீர்கள்?" ராஜா கேட்டார்.

    "அரசே! நான் சிறை செல்லாமல், உங்களோடு வந்திருந்தால், காட்டில் காயம் காரணமாக உங்களை நிராகரித்த கூட்டம், என்னைப் பரிசோதித்திருந்தால்? உடம்பில் எந்த அங்கக் குறையுமில்லாத நானல்லவா பலியாகியிருப்பேன்? சிறைக்குச் சென்றதும் நன்மைக்குத் தானே? எல்லாம் நன்மைக்கே!" என்றார் அமைச்சர்.

    கடமையைச் செம்மையாகச் செய்தால் போதும்; எந்தப் பலனும் தோல்வியாக அமையாமல் நன்மையாகவே பூக்கும்.

    தொடர்புக்கு 94431 90098

    • குறைந்த ஒலியில் மென்மையானக் குரலில் பாடுவதற்கு அப்போதிருந்தவர்களில் பொருத்தமானவர் பி.பி.சீனிவாஸ்தான்.
    • “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற அந்தப் பாடலில் பலவித குரல்களின் ஒலிகள் வரும்.

    கர்ணன் திரைப்படத்தின்போது, ஒரு சிக்கல். இயக்குநரான பி.ஆர். பந்துலுவுக்கு ஓர் ஆசை வருகிறது. அதை சொன்னால் ஒட்டுமொத்த படக்குழுவும் ஏற்கவில்லை.

    குரு சேத்திரம் போர்க்களக் காட்சியில் போரிட தயங்கும் அர்ச்சுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் செய்வதை காட்சியாக வைக்க வேண்டும் - பந்துலு.

    வேண்டாம் இயக்குநரே, போர் செய்யும்போது நிறுத்திட்டு பக்கம் பக்கமா வசனம் பேசினா நல்லாயிருக்காதே - குழுவினர்.

    கீதோபதேசத்தின் சாரங்களை இங்கே விட்டா எங்கே சொல்வது? நிச்சயமா காட்சியில் கொண்டு வந்தே ஆகணும் - பந்துலு.

    எடுபடாதுங்க. அலுப்புத் தட்டி எல்லோரும் எழுந்துப் போயிடுவாங்க - படக்குழு.

    பந்துலு, எம்.எஸ்.வி.யிடம் சொல்கிறார். போர்க்களத்திலே கீதோபதேசம் வைக்கலாம்னு நினைக்கறேன். ஏற்கெனவே படம் அதிக நீளம், அதனால வேண்டாம்னு இவங்கள்லாம் சொல்றாங்க. என்ன பண்ணலாம்?

    அப்படியா? ஒன்னு செய்யுங்க, கவிஞரைக் கூப்பிடுங்க.. கீதையினுடைய சாரத்தை சொல்லச் சொல்லுங்க. அவர் நான்கைந்து நிமிடத்துக்கு வருகிற மாதிரி ஒரு பாட்டை எழுதிடுவார். அதுக்கு மெட்டுப் போட்டு படமா எடுத்துடுங்க. நேரம், செலவு எல்லாம் மிச்சம். பண்ணலாமில்லையா? என்கிறார் எம்.எஸ்.வி.

    ஆகா... இது நல்ல ஐடியாங்க, அப்படியே செய்திடுறேன். பந்துலுக்கு பெரிய பிரச்சனை தீர்ந்தது.

    அப்படியே கீதோபதேசத்தை பாட்டாக வடித்தார் கவிஞர். 'மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்...' என்று ஆரம்பித்து எல்லோர் மனதையும் கலங்கடித்து விட்டார். அதற்கு சஹானா ராகத்தில் மெட்டுப் போட்டு நடுநடுவே அர்ச்சுனன் பேசும் வசனங்களுடன் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் தந்த அந்தப் பாடல் அதிசயத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

    தாய், சகோதரர்களை பிரிந்தே வாழும் கர்ணனுக்கு என்ன மெட்டில் பாட்டு அமைக்கலாம்? இரக்கம், கருணை எல்லாம் காட்டுகிற நிறைய ராகங்கள் இருக்க, சக்கரவாகம் என்ற ராகத்தில் (பிரிவுத் துயரை சொல்லும் ராகம்) சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாட வைத்தது என்பது இசை மேதைகளே வியக்குமிடம்.

    ஒருமுறை, இயக்குநர் ஸ்ரீதருக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்தது. கதையின்படி இரண்டாம் கதாநாயகனும் கதாநாயகனின் தங்கையும் வீட்டிற்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இவர்கள் பாடும் பாடலும் ரகசியக் குரலில் தானே இருக்க வேண்டும்? அதனால் ஸ்ரீதர் சொல்லிவிட்டார், குறைந்த ஒலியில் எனக்குப் பாட்டு வரணும்.

    சரி, குறைந்த ஒலியில் மென்மையானக் குரலில் பாடுவதற்கு அப்போதிருந்தவர்களில் பொருத்தமானவர் பி.பி.சீனிவாஸ்தான். அவரையும் மந்திர ஸ்தாயி என்கிற மிகக் குறைந்த ஸ்தாயியில் பாட வைத்தப் பாடல்தான் 'போலீஸ்காரன் மகள்' படத்தில் "பொன்னென்பேன் சிறுப்பூ என்பேன்" என்றப் பாடல் வந்தபோது இப்படியெல்லாம் கூட மெட்டமைக்க முடியுமா என்று பலரும் புருவம் உயர்த்தினார்கள்.

    எட்டுக் கட்டையில் பாடும் நடிகர் டி.ஆர். மகாலிங்கம், என்பவரை வைத்து "செந்தமிழ் தேன் மொழியாள்" என்றும் பாட வைத்தவர்கள் மெல்லிசை இரட்டையர்கள்

     

    டி.ஆர். மகாலிங்கம்

    டி.ஆர். மகாலிங்கம்

    மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர். மகாலிங்கத்தை வைத்து மத்திய ஸ்தாயியில் "செந்தமிழ் தேன்மொழியாள்" பாடி எடுத்துவிட்டார்கள், வித்தியாச முயற்சிக்காக. ஆனால், டி.ஆர். மகாலிங்க பாணி குறைந்ததாக தெரியவே, அவரது ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்ற தொகையறாவை சேர்த்து பாடலை அலங்கரித்து விட்டார்கள். தமிழ்த் திரையிசையில் முதன் முதலில் மிமிக்கிரியை தந்தவர் எம்.எஸ்.வி.தான்.

    'பறக்கும் பாவை' படம் 1966ல் வந்தது. சர்க்கசில் இருப்பது போல் காஞ்சனா கனவில் எம்.ஜி.ஆருடன் ஆடி பாடுகிறார். சர்க்கசில் இருக்கும் பறவை, முயல், கிளிகள் போன்றவை பெண்ணுக்குத் தோழியாகவும், யானை, சிங்கம், காட்டெருமை போன்ற விலங்குகள் கதாநாயகனுக்கு தோழமையாகவும் பாடுவது போல மிக பிரமாதமான கற்பனையுடன் அந்தக் கனவுப்பாடல் அமைந்திருக்கும். "முத்தமோ, மோகமோ, தத்தி வந்த வேகமோ" என்ற இந்தப் பாடலில்தான் எத்தனை மிமிக்கிரி குரல்களை கொண்டு வந்திருப்பார் எம்.எஸ்.வி. இதுபோன்ற குரல்களை வழக்கமாக சாய் பாபா சதன் தருவது வழக்கம். அல்லது மாண்டலின் ராஜூ சில சமயம் தருவார்.

     

    பல வருடங்கள் கழித்து "அவள் ஒரு தொடர்கதை" என்ற ஒரு திரைப்படம் வந்தது. அந்தக் காலகட்டத்தில் மிமிக்ரி கலை நன்றாக வளர ஆரம்பித்திருந்தது. அந்தக் கலையை தனது படத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் கொண்டு வந்திருந்தார்.

    "கடவுள் அமைத்து வைத்த மேடை" என்ற அந்தப் பாடலில் பலவித குரல்களின் ஒலிகள் வரும். கிளிகள், தவளை, யானை, மான், முயல் போன்ற ஒலிகள் மற்றும் அதற்கு தொடர்புடைய இசைகளும் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.எஸ்.வி. இசையில் இதெல்லாம் புதுமையாக கொண்டுவரப்பட்டது.

     

    கவிஞர் கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கவிஞர் கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    இரு மலர்கள் என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் "மகாராஜா ஒரு மகாராணி இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி" என்று ஒரு பாடல். இதில் பொம்மை பாடுவது போல் சில வரிகள் வரும். அவை வென்ட்ரிலோகிசம் என்ற கலையின்படி வருவது.

    வென்ட்ரிலோகிசம் என்பது ஒரு மனிதன் தன் வயிற்று தசைகளை இயக்கி, வாய் மூடி கையில் இருக்கும் பொம்மை பேசுவது போல் பேசும் மாயக்குரல் கலை. இதற்கு "இரு மலர்கள்" படத்தில் முதன் முதலாக இசையமைத்தவர் எம்.எஸ்.வி.

    பொம்மை போன்று பாடவும், சிரிக்கவும், கோபப்படவும், காதலை சொல்லவும் வரிகளை எழுத கண்ணதாசனும், அதற்கேற்ற மெட்டுப் போட எம்.எஸ்.வி.யும் பாவனைகளுடன் பாட எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், சதனும் சேர்ந்துக் கொள்ள தமிழ்த் திரையிசையில் இதுபோன்ற ஒரு புதுமைப் பாடல் இன்னும் வரவில்லை.

    • முகலாயர்கள் ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு பிரியாணி வந்தததாக தரவுகள் உள்ளன.
    • இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரியாணியின் சுவையில் வித்தியாசமான அனுபவங்களை உணவுப் பிரியர்கள் பெறுகிறார்கள்.

    சுவை, மாறுபட்ட மற்றும் ருசியான உணவை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 11ம் தேதி (இன்று) 'உலக பிரியாணி தினம்' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் நாடுகளின் சிக்கன், மட்டன், காய்கறிகள், காளான் உள்பட பல்வேறு வகையிலான பிரியாணிகளை மக்கள் விருப்ப உணவாக கொண்டுள்ளனர். இந்தியாவிலும் பிரியாணிக்கென்று தனி மவுசு உள்ளது.

    அரிசி மற்றும் இறைச்சி உணவான பிரியாணியின் பிறப்பிடம் ஈரான். ஈரானின் பெர்சியாவில்தான் முதன்முதலில் பிரியாணி உருவானது. அதன்பின்னர், அந்த உணவு பழக்கம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

    இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரியாணியின் சுவையில் வித்தியாசமான அனுபவங்களை உணவுப் பிரியர்கள் பெறுகிறார்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் அதன் கலாச்சாரம் மற்றும் கிடைக்கக்கூடிய மசாலாப் பொருட்கள் அல்லது பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் தங்கள் பிரியாணியின் சுவை சற்று மாறுபடுகிறது.

    பிரியாணி, ஒரு ருசியான உணவானது. உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களின் இதயங்களையும் சுவை உணர்வுகளையும் கவர்ந்துள்ளது.

    இந்தியாவுக்கு பிரியாணி வந்த வரலாறு:

    முகலாயர்கள் ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு பிரியாணி வந்தததாக தரவுகள் உள்ளன. ஈரான் உள்பட மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வணிகத்திற்காக இந்தியாவிற்கு வந்தவர்கள் இங்கு பிரியாணி உணவை அறிமுகம் செய்திருக்கலாம் என வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன.

    பிரபலமான பிரியாணி வகைகள்

    ஐதராபாத் பிரியாணி:

    இது பாசுமதி அரிசி, இறைச்சி (கோழி அல்லது ஆடு) மற்றும் சிறப்பு மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த பிரியாணியின் சுவை மற்றும் சுவை இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள உணவுப் பிரியர்களிடையே தனி இடத்தைப் பெற்றுள்ளது.

    சிந்தி பிரியாணி:

    இது மணம் மற்றும் சுவையானது, மேலும் இறைச்சி சேர்க்கப்பட்ட அரிசி உணவு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து வருகிறது. இது அரிசி, சிக்கன், மட்டன், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சமைக்கப்படுகிறது. காரமான சுவைக்காக பச்சை மிளகாயைப் பயன்படுத்துகிறது.

    டெல்லி பிரியாணி:

    முகலாயர் காலத்திலிருந்து நவீன காலம் வரை, டெல்லியில் பிரியாணி விரும்பி உண்ணும் உணவுப் பிரியர்களிடையே இது ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. பழைய டெல்லி மற்றும் நிஜாமுதீன் பிரியாணியின் உண்மையான சுவையை மக்கள் பெறும் இடங்கள்.



    தலச்சேரி பிரியாணி:

    கேரளாவின் மலபார் பகுதியில் தலச்சேரி பிரியாணி பிரபலமான உணவாகும். பிரியாணி அதன் சுவையில் தனித்தன்மை வாய்ந்தது, ஏனெனில் கைமா அரிசி, இறைச்சி மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது சிறப்பு சுவையையும் அமைப்பையும் தருகிறது.

    லக்னோவி பிரியாணி:

    லக்னோவி பிரியாணி ஆவாதி பிரியாணி என்றும் அழைக்கப்படுகிறது. இது மிதமான மசாலாப் பொருட்களுடன் ஆவாத் பாணியின் வளமான பாரம்பரியமாகும்.

    கொல்கத்தா பிரியாணி:

    இது அரிசி மற்றும் இறைச்சியில் லேசான மசாலாப் பொருட்களுடன் சுவை கொண்டது. நீங்கள் உணவுப் பிரியர் மற்றும் புதிய உணவு வகைகளை ஆராய்வீர்கள் என்றால், கொல்கத்தா சென்று அங்கு பிரியாணியை ஒருமுறை கண்டிப்பாகச் சுவைக்க வேண்டும்.

    • கடந்த மூன்று மாதங்களாக முயற்சி செய்து ஒரு மாப்பிள்ளையும் பார்த்து விட்டான்.
    • உண்மையை சொல்லப் போனால், இந்த லேசான பயம்தான் அவர்களுக்குள் காதலையும் வரவழைத்தது.

    "அவங்க பின்னாடி துரத்தி வந்து கிட்டு இருக்காங்க... சீக்கிரம் போங்க...! சீக்கிரம் போங்க...!"

    திவ்யா கத்த கத்த வேகமாய் சென்று கொண்டு இருந்த அந்த கார் இன்னும் வேகம் பிடித்தது.

    காருக்குள் திவ்யா. அருகில், இன்னும் சற்று நேரத்தில் வீட்டுக்குத் தெரியாமல், திருச்செந்தூரில் திருமணம் செய்து கொள்ள போகும், அவளுடைய இரண்டு வருட காதலன் டேவிட் அமர்ந்திருக்கிறான். அவர்களுடன் டேவிட்டின் நண்பர்கள் செந்தில், தியாகு,நெல்சன் மூவரும் உடன் இருக்கின்றனர்.

    காரை ஓட்டிக் கொண்டிருக்கும் நெல்சன், பின்னால் திரும்பி திவ்யாவிடம், "திவ்யா... உன் அண்ணன் பெருமாள் சும்மா இருக்க மாட்டானா? ஏன் இப்படி அவன் பிரண்ட்ஸை கூப்பிட்டுகிட்டு மூணு பைக்ல ஆறு பேரா சேஸ் பண்றான். இது என்ன சினிமாவா?" என கூற,

    "இங்க பாரு... நீ மேஜர். உன் இஷ்டத்துக்கு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கலாம்... எதுக்கு இப்படி தடுக்கணும்னு திரியுரான் உங்க அண்ணன்?" என செந்தில் கேட்க, முட்டி வரும் கண்ணீரை அடக்கியபடி திவ்யா,

    "அது ஏனோ நான் ஒரு கிறிஸ்டின் பையன காதலிக்கிறேன்னு ஆரம்பத்துல சொன்ன நாளில் இருந்து அப்பாக்கு பிடிக்கல... அம்மாவுக்கும் புடிக்கல... எங்க அண்ணனுக்கு பிடிக்கல.. அவங்க ஒத்துக்கிட்டு இருந்தா... இப்ப நான் ஏன் திருட்டுத்தனமா போய் தாலி கட்டப்போறேன்...?"-என சொல்ல...

    அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாய் செந்தில், "இப்ப கூட உன் இஷ்டப்படி, அதுவும் இந்து முறைப்படி திருச்செந்தூரில் தாலி கட்டறதுக்கு ஒத்துக்கிட்டு தான் டேவிட்டே வருகிறான். அது கூட உன் அண்ணனுக்கு புரியல... இத தடுக்குறதுக்கு ஐஞ்சு தடியன் களை கூட்டிட்டு துரத்திட்டு வரான் பாரு!" என கூற,

    அப்போது பின்னால் திரும்பி பார்த்த தியாகு, "டேய்... பக்கத்துல வந்துட்டாங்கடா நம்ம இனிமே மெயின் ரோட்டில் போய் பிரயோசனம் கிடையாது. வண்டிய ரைட்ல வுடு!" என சொல்ல, அந்த கார் பக்கத்தில் இருந்த சந்துக்குள் விரைகிறது.

    விடாமல் பின்னால் வந்து கொண்டிருக்கும் திவ்யாவின் அண்ணன் கும்பலும் துரத்துகிறது. திவ்யாவின் அண்ணன் ஒரு எம்.எல்.ஏ.விடம் கிட்டத்தட்ட பி.ஏ.வாக இருக்கிறவன். இந்து பற்று அதிகம் உள்ள ஒருவன்.

    தன் தங்கை திவ்யா, ஒரு கிறிஸ்தவனை காதலிக்கிறாள் என்று தெரிந்த நாளிலிருந்து, எப்படியாவது அவர்கள் காதலை தடுத்து, ஒரு இந்துவுக்கு தன் தங்கையை கல்யாணம் முடித்து வைக்க , பகீரத பிரயோசனம் செய்தான்.

    திவ்யாவிடம் நல்லவிதமாக பேசி, அவளை மூளை சலவை செய்து, அந்த காதலை மறக்கடிக்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய ,வெகுண்டு எழுந்தான் .

    அடுத்து அவனது முடிவு-அப்பாவின் சம்மதத்துடன் திவ்யாவுக்கு ஒரு இந்துப் பையனை திருமணம் செய்து வைப்பது தான்!

    அதற்கு கடந்த மூன்று மாதங்களாக முயற்சி செய்து ஒரு மாப்பிள்ளையும் பார்த்து விட்டான். மாப்பிள்ளை, தென்காசி பக்கம் மேலகரத்தில் சொந்த வியாபாரம் செய்யும் ஒரு இந்து பையன்.

    பெண்பார்க்கும் வைபவம் நடப்பதற்கு ஏற்பாடு செய்யும் சமயத்தில்தான், திவ்யா இப்படி ஒரு முடிவை எடுத்தாள். தன் காதலன் டேவிட்டிடம் யாருக்கும் தெரியாமல் பேசினாள்.

    இயக்குநர் A.வெங்கடேஷ்

    இயக்குநர் A.வெங்கடேஷ்

    "எங்க வீட்ல எனக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க... எனக்கு உன்ன தான் புடிச்சிருக்கு !உன் கூடத்தான் வாழ்வேணு முடிவு பண்ணிட்டேன். ஆனா ஒண்ணு..என் கழுத்துல நீ தாலிய ஒரு இந்து கோவில்ல வைச்சுத்தான் கட்டணும்... ஓகேயா?" எனக் கேட்க,

    கொஞ்சம் கூட யோசிக்காம டேவிட்,"திவ்யா... இங்க பாரு, எங்க வீட்ட பொறுத்த வரைக்கும், என் காதலுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. உங்க அப்பா, உங்க அண்ணன், உங்க அம்மா எல்லாருக்கும் தான் நான் கிறிஸ்டின் என்ற ஒரே காரணத்துக்காக என்னை பிடிக்கவில்லை. எனக்கு எம்மதமும் சம்மதம்! உன் இஷ்டப்படி கல்யாணத்தை இந்து. கோவில்ல வைச்சு பண்ணிடலாம்..." அவனும் ஒத்துக்கொண்டான்.

    இதோ! அவர்கள் எடுத்த முடிவுபடி, திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டு இருக்க, அவளது அண்ணன் பெருமாள், தன்நண்பர்களுடன் விரட்டிக் கொண்டிருக்கிறான்.

    திடிரென்று நெல்சன் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, "எல்லாரும் இறங்குங்க.. நான் சொல்றபடி கேளுங்க. வண்டியை விட்டு எல்லோரும் இறங்குங்க..." என பரபரப்பாக கத்த, எல்லோரும் இறங்க, ஒரு மார்க்கெட் மாதிரி இருக்கக்கூடிய ஒரு ஏரியாவுக்குள், இவர்களை வேகமாக அழைத்துக் கொண்டு, நெல்சன் செல்ல, அனைவரும் கூட்டத்திற்குள் கலந்து விடுகிறார்கள்.

    இப்போது துரத்தி வந்த திவ்யாவின் அண்ணன் கோஷ்டி, கார் ஓரிடத்தில் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து இறங்கி, காரை திறக்க முயல, கார் லாக் செய்யப்பட்டிருக்கிறது.

    திவ்யாவின் அண்ணன் பெருமாள், "டேய்... பிரில்லியண்டா காரை பார்க்கிங்ல போட்டு, இறங்கி கூட்டத்துல எஸ்கேப் ஆகி போயிட்டாங்கடா... விடக்கூடாது... வாங்கடா!..."

    அவர்கள் சுற்று முற்றும் எந்த பக்கம் போயிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், "என்ன தம்பி யாரை தேடுறீங்க..." என கேட்க,

    "இல்லைங்க ஐயா... ஒரு பொண்ணு... கூட ஒரு நாலு பசங்க... அப்படி யாராவது போனத பாத்தீங்களா..."

    "இதோ... இந்த பஜார்தெரு வழியா போயி, அந்த கடைசி சந்துல போறாங்க..."- அவர் கையை காட்ட,

    "டேய்... வாங்கடா..." அவர் காட்டிய திசையில் பெருமாள் ஓட, அவனது நண்பர்கள் அவனை தொடர்ந்தனர்.

    பெருமாள் நண்பர்களுடன் ஓடி வருவதைப் பார்த்த டேவிட் நண்பன் நெல்சன், "டேய்... பெருமாள் நம்மள பாத்துட்டு துரத்தி வரான்டா... டக்குனு பதுங்குவோம்!..."

    அவர்கள் ஒரு கடைக்குள் பதுங்க, ஒளிந்து இருக்கும் அவர்களை கிராஸ் செய்து, பெருமாளும் அவன் நண்பர்களும் ஓடுகிறார்கள். வேறொரு வழியாக வெளியே வந்த திவ்யா, டேவிட் மற்றும் டேவிட்டின் நண்பர்கள் மூன்று பேரும், அங்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறுகிறார்கள் .

    "பக்கத்தில் எந்த இந்து கோவில் இருக்கோ... அங்க போங்க..." என நெல்சன் கூற, "அருணாசல சுவாமி கோவில் இருக்கு... அங்க போலாமா?" என ஆட்டோகாரன் கேட்க," போங்க... போங்க..."ஆட்டோக்காரனை வேகப்படுத்த, ஆட்டோ மின்னலாய் செல்கிறது.

    அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் பெருமாளும், அவன் நண்பர்களும் தேடிக்கொண்டிருக்க, பெருமாளின் போனில் மெஜெஜ் ரிங் அடிக்கிறது.

    அவன் போனை எடுத்து பார்க்க, அதில் , "புதுத்தெரு அருணாசல சுவாமி கோவில்!"-என இருக்கிறது. அதை பார்த்த பெருமாள் கத்துகிறான். "அவங்க திருச்செந்தூர் கோவில் போகலடா... வாங்கடா...''

    அவர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்ப, இப்போது அருணாச்சலம் சுவாமி கோவில் முன்பு வந்து ஆட்டோ நிற்க, இவர்கள் இறங்குகிறார்கள்.

    திவ்யா கிட்டத்தட்ட டேவிட்டை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் ஓடுகிறாள். கூடவே நண்பர்கள் ஓடுகிறார்கள். இரண்டு மாலைகளை வாங்கி கொண்டு, நண்பர்கள் ஓடி வர, ஹேண்ட் பேக்கில் தயாராக வைத்திருந்த தாலிய எடுத்து டேவிட்டிடம் கொடுக்கிறாள் திவ்யா.

    வேகமாக அவர்கள் கோவிலுக்குள் செல்ல முயல, கோவில் வாசலில், அவர்களை நிறுத்திய பூசாரி, "வீட்டுக்கு தெரியாம கல்யாணமா? அப்படி வந்தமா... போனமான்னெல்லாம்ல்இந்த கோவில்ல கல்யாணம் பண்ண முடியாதும்மா... அதுக்கெல்லாம் பார்மாலிட்டிஸ் இருக்குது...

    முதல்ல நீங்க சப் ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ்ல ரிஜிஸ்டர் பண்ணணும்... அந்த ரிஜிஸ்ட்றேஷன் நம்பர கொண்டு வந்து கோவில்ல காட்டி பணம் கட்டணும். அதுக்கு பிறகு நோட்டிஸ் போர்டுல இன்னார் இன்னார்க்கு கல்யாணம் அப்படின்னு ஒட்டி, அப்ஜெக்ஷன் எதுவும் வரலேனா 15 நாள் கழிச்சு கல்யாணம் பண்ணலாம். முறை எதுவும் தெரியாமல் திடீர்னு வந்து கல்யாணம் பண்ணணும்னா எப்படி? என சொல்ல ,

    "என்ன செய்வது?" என எல்லோரும் முழிக்க, டேவிட் கையை பிடித்து இழுத்து சென்ற திவ்யா, அங்கு கோவில் வாசலில் இருக்கக்கூடிய பிள்ளையார் முன்னாடி நிறுத்தி, "இங்க பாரு டேவிட்... யோசிக்க நேரமில்லை... இப்போ நல்ல நேரம் தான்... உடனே என் கழுத்துல தாலிய கட்டு" எனக் கூற, ஒரு கணம் டேவிட் திகைக்க, "என்ன யோசிக்கிற... எங்க அண்ணன் எப்ப வேணா வந்து நிப்பான்... கட்டு!"

    டேவிட் அவள் கழுத்தில் தாலியை கட்டி முடிக்கவும், கரெக்டாக தாலி கட்டி முடியவும் வந்து நின்றான் பெருமாள், தன் மொத்த கேங்குடன் !

    தாலி கட்டி முடித்தது... கல்யாணம் நடந்து விட்டது... என்ற தைரியத்தில் பெருமாளை ஒரு தைரியப் பார்வையுடன் எதிர் கொள்ள தயாராக நின்றாள் திவ்யா.

    அவள் அருகில் வேகமாக வந்த பெருமாள் டேவிட்டையும் திவ்யாவையும் மாறி மாறி கோபமாக பார்த்தான். அவள் கழுத்தில் தொங்கும் அந்த புதிய தாலி, அவனைப் பார்த்து கேலியாக சிரிப்பது போல் இருந்தது. பெருமாளின் முகம் இறுகியது.

    திவ்யா முகத்தின் அருகே வந்தவன் "இப்ப கூட... இங்கேயே உன்னை வெட்டிப்போட்டு எனக்கு போக முடியும். ஆனா, எப்போ நான், அப்பா, அம்மா, யாரும் வேண்டாம்னு முடிவு பண்ணி, இவன் முக்கியம்னு வந்துட்டியோ.. அதுவும் தாலிய... அவன் கையால வாங்கிட்டியோ... அப்பவே முடிஞ்சு போச்சு ..உனக்கும் எனக்கும் உள்ள அண்ணன்-தங்கை உறவு! இனி எனக்கு நீ தங்கச்சியே இல்லை... நான் உன் முகத்தில் முழிக்கவே மாட்டேன்...''- என கோபமாக சொல்லிவிட்டு அவன் திரும்பி சென்று பைக்கை எடுத்து செல்கிறான்.

    கிட்டத்தட்ட அழும் நிலைமைக்கு வந்துவிட்ட திவ்யாவை தொட்டு ஆறுதலாக தட்டிக் கொடுக்கிறான் டேவிட்.

    பக்கத்தில் வந்த தியாகு, "மாப்பிள்ளை... இப்ப டென்ஷன் ஓவர் ! நாம அருணாச்சலம் கோவில்ல போய் தான் கல்யாணம்கட்ட போறோம் என்கிறத நான் தான் திவ்யா அண்ணனுக்கு மெசேஜ் அனுப்பினேன்"- என கூற திவ்யா அதிர்ந்து பார்க்க,

    "ஆமா திவ்யா... சும்மா விரட்டிக்கிட்டே இருப்பான்... உருட்டிக்கிட்டே இருப்பான்... நாம இவனுக்கு பயந்து பயந்து ஓடணுமா? இதோ தாலியை கட்டியாச்சு... பெருமாள் உன் உறவை உதறிட்டு போய்ட்டான்ல... இனி நோ டென்ஷன். என்ன..நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணா எப்படி வாழ்ந்து காட்டுறீங்க என்பதை பொறுத்து தான் உங்களுடைய காதல் ஜெயிச்சதா இல்லையானு தெரியும்'' என கூற,

    இடைமறித்த நெல்சன், "டேய்... வாய மூடு...இப்பதான் கல்யாணம் பண்ணிருக்காங்க அதுக்குள்ள பயமுறுத்தாத...," என கூற, திவ்யாவும் டேவிட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

    இதுவரை காதலர்களாக இருந்த அவர்கள் இப்பொழுது கணவன்-மனைவி! இனிமேல் நிதர்சன வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற பயம் அவர்களுக்கு லேசாக வரத் தொடங்கியது. உண்மையை சொல்லப் போனால், இந்த லேசான பயம்தான் அவர்களுக்குள் காதலையும் வரவழைத்தது.

    ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே டேவிட்டை முதன்முதலாக தன் தோழி மேரியின் வீட்டில், அவளது அண்ணணாக பார்த்தபோது, திவ்யாவுக்கு, அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை. பார்த்தாலே பிடிக்காமல் போன டேவிட் மீது காதல் வந்தது - ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்!

    (தொடரும்)E-Mail: director.a.venkatesh@gmail.com

    • குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.
    • முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என ஆயிற்று.

    நவராத்திரி விழாவில் தசரா கொண்டாட்டங்கள் என்றதும் நம்மில் அனைவரும் பட்டென்று நினைப்பது இந்தியாவில் நான்கு இடங்களில் நடைபெறும் தசரா விழா கொண்டாட்டங்களை தான்.

    கர்நாடக மாநிலத்தில் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள், யானை அணிவகுப்புகள்...

    குஜராத் மாநிலத்தில் தாண்டியா நடனத்துடன் தசரா கொண்டாட்டங்கள்...

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் துர்க்கா தேவி பூஜை.


    தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் வேடம் புனைந்து கடற்கரையில் முத்தாரம்மனோடு மகிஷாசுர வதத்திற்காக செல்லும் ஊர்வலம்.

    இந்த நான்கு தசாரா கொண்டாட்டங்கள் இந்தியாவில் புகழ் பெற்ற நவராத்திரி விழாக்கால கொண்டாட்டங்கள் என அழைக்கபடுகிறது.

    இந்த நான்கில் நம்மூர் தாய் குலசை முத்தாரம்மன் தசரா கொண்டாட்டத்தை பற்றி நான் திரட்டிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு...

    சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் தென் மறைநாடு, வீர வளநாடு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.

    கொற்கை என அழைக்கப்பட்ட பாண்டியர்களின் துறைமுக நகரமே இன்றைய குலசேகரபட்டினம் ஆகும்.

    குலசேகரபட்டினம் ஊர் கடல் பகுதி. இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு ஆழமான கடற்பரப்பை கொண்டது.

    பாண்டிய மன்னன் சடைய வர்ம சுந்தரபாண்டியனின் மகன் மாற வர்ம குலசேகர பாண்டியன் கொற்கை பகுதியை கி.பி.1268 ம் ஆண்டு முதல் கி.பி 1311 வரை சுமார் 43 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

    1274 -ம் ஆண்டு கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுக்க செல்லும் முன் தன் குல தெய்வமான முத்தாரம்மனை வேண்டி கொண்டான்.

    மன்னன் கனவில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தோன்றி போரில் வெற்றி கிட்டும் என அருளாசி வழங்கினாள்.

    சேரனோடு நடந்த போரில் வெற்றி பெற்று கொல்லம் பகுதியை கைப்பற்றிய குலசேகரப்பாண்டியன் "கொல்லம் கொண்ட பாண்டியன்" என்ற அடைமொழியை பெற்றான்.

    கி.பி. 1279 ஆம் ஆண்டு நடந்த மற்றொரு போரில் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் மற்றும் போசளர் இன தலைவனையும் ஒரே போரில் தோற்கடித்தான் மன்னன் குலசேகர பாண்டியன்.

    பின் 1284 ல் இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று நிறைய செல்வங்களோடு வந்தான் மன்னன் குலசேகரன்.

    வெற்றி மேல் வெற்றியை முத்தாரம்மனின் அருளால் பெற்ற குலசேகர பாண்டிய மன்னன் முத்தாரம்மனின் உத்தரவுப்படி கொற்கை துறைமுகத்தை சீர்படுத்தி, அம்மனின் ஆலயத்தையும் புனரமைத்து ஊரையும் விரிவு படுத்தினான்.

    அன்று முதல் இந்த ஊரின் பெயர் குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.


    குலசேகர பட்டினத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் முத்தாரம்மனின் பெயர் காரணத்தை சொல்லுடேய் சில் வண்டு என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.

    முன்னொரு காலத்தில் சக்தி முனி என்ற முனிவர் பூலோகத்தில் இருந்து அஷ்டமா சித்திகள் பெற வேண்டி யாகம் வளர்த்தார்.

    யாகத்தீயின் வெம்மை விண்ணுலகம் வரை பரவுகிறது. சிவனாரின் உத்தரவின் படி சக்தி முனிவன் வளர்த்த யாகத்தை நிறைவு செய்ய சென்ற பார்வதி தேவியின் நெற்றியில் வேள்வி தீ வெக்கையால் முத்து போன்ற வியர்வை துளிகள் அரும்புகின்றன.

    நெற்றியில் அரும்பிய வியர்வை துளிகளை யாக குண்டத்தில் வீசி எறிகிறாள் அன்னை பார்வதி தேவி.

    சிவனின் வியர்வையில் தோன்றிய சிவ அம்சமான வியர்வை புத்திரனை போல் பார்வதிதேவி வேள்வி குண்டத்தில் வீசி எறிந்த வியர்வை துளிகளில் இருந்து சக்தியின் அம்சமாக அஷ்டமா சக்திகள் பிறக்கின்றனர்.

    முத்தாரம்மன்,வடபத்திரகாளியம்மன்,முப்பிடாரியம்மன், பொன்னியம்மன், உலகளந்தாள், அரியநாச்சி, செண்பகவல்லி, சந்தனமாரி என்ற பெயர் கொண்ட அஷ்ட காளிகளில் (பேச்சு வழக்கில், அட்டகாளி) மூத்தவள் முத்தாரம்மன் என்பதால் மூத்தமாரி (முத்துமாரி) என அன்னையை அழைப்பதாகவும் பக்தர்கள் கூறுவர்.

    எத்தனை பெயர்கள் இருப்பினும் அத்தனை பெயர்களுக்கும் அன்னையானவள் அர்த்தம் கற்பிப்பவளாகவே இருக்கிறாள் என்பது அம்பிகையின் பெரும் சிறப்பு தானே.

    தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து அதை ஆரங்கள் (மாலை) ஆக்கி பாண்டிய மன்னர்கள் தங்கள் அன்னைக்கு அணிவித்து அழகு பார்த்ததால் அம்பிகையானவள் முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாக சொல்வார்கள்.

    முத்துகள் எனும் அம்மை நோய் அன்னையை வழிபட்டால் ஆறி விடும். உடலில் ஏற்படும் அம்மை முத்துக்கள் குணமாக அன்னையை வேண்டி வழிபட்டால் உடனே ஆற்றுபவள் என்பதால் முத்துகளை ஆற்றும் அம்மன்.

    முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என அம்மன் பெயர் பெற்றதாக அம்பாளின் பெயருக்கான காரணத்தை கூறுவர்.

    வேள்வியில் தனது அம்சமாக பிறந்த அஷ்ட காளிகளை தன்னுடன் அழைத்து கொண்டு கயிலைக்கு வந்தாள் அன்னையான பார்வதி தேவி.

    மகாதேவரான சிவனாரை வணங்கி தொழுது நின்ற அஷ்ட மாகாளிகள் அனைவரும் சிவனிடம் தங்களை பிறவி செய்த காரணத்தை வினவினர்.

    மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் கொடிய மகிஷாசுரனை வதம் செய்யவே பார்வதியின் அம்சமாய் உங்களை பிறவி செய்தேன் என சிவன் பதிலுரைத்தார்.

    சிவனாரிடம் வேண்டிய வரங்களை பெற்று அஷ்டமாகாளிகள் எட்டு பேரும் மகிஷனோடு போர் புரிய வருகின்றனர்.

    அஷ்ட மாகாளிகள் மற்றும் மகிஷாசுரன் இடையே துவந்த யுத்தம் நடக்கிறது.

    சிவனாரிடம் பெற்ற வரத்தின் மகிமையால் மகிஷன் அஷ்ட காளிகளை எதிர்த்து மூர்க்கமாய் போரிடுகிறான்.

    எட்டு பேரும் தனி தனியாக நிற்பதை விட ஒரு சேர நின்றால் தங்களின் அஷ்ட மா சித்திகளுக்கு வலிமை அதிகம் என்பதை அஷ்ட காளிகள் உணர்கின்றனர்.

    அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு தேவியாய் இணைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

    உயிர் பிரியும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன் தன் தவறை உணர்கிறான்.

    அன்னை சாமுண்டீஸ்வரி தாயே! என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை அசுர குலத்தில் ராஜாவாக இருந்தேன்.


    என்னை மன்னித்து மறு பிறப்பு தந்து வனத்தில் வாழும் உயிரினங்களின் ராஜாவான சிங்கமாக என்னை பிறவி செய்து தாயே! உன்னை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அன்னையிடம் வேண்டினான் மகிஷன்.

    ஆங்கார ரூபிணியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த சொரூபிணியாக மாறி மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக பிறவி செய்து மகிஷனை தனது வாகனமாக்கி "சிம வாகிணி" என பெயர் பெற்றாள்.

    எல்லாம் சரிடேய்!! சில் வண்டு...

    குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசாரா கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கடற்கரையில் நடைபெறும் மகிஷாசுர சம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பல்வேறு வேஷம் போட்டு அம்மனோடு செல்வதற்கான காரணம் என்னன்னு கேக்குறீங்க .. சரி தானே.

    மகிஷாசுரனோடு அன்னை முத்தாரம்மன் யுத்தம் நிகழ்த்திய போது அன்னைக்கு துணையாக நிறைய பரிவார தெய்வங்களும் பூதப்படைகளும் கலந்து கொண்டன.

    அன்னைக்கு துணையாக நாங்களும் இருக்கிறோம் என அன்று பரிவார தெய்வங்கள், பூதப்படையினர் கலந்து கொண்டதை நினைவுபடுத்தும் வகையில் பக்தர்கள் விரதமிருந்து வேடம் அணிந்து மகிஷாசுர சம்ஹாரத்தின் போது அன்னையின் படையினராக கலந்து கொள்கின்றனர்.

    பக்குவமான ஆன்மீக மன நிலைக்கு மனிதனை செல்ல விடாமல் தடுப்பது அவனின் அகந்தையும், ஆணவமும்.

    விரதமும், பணிவும் மனிதனையும், மனித மனத்தையும் பக்குவபடுத்தும்.

    இவ்வாறு வேடம் அணியும் பக்தர்கள் ஜாதி, மதம், அந்தஸ்து பாராமல் அனைவரின் வீடுகளுக்கு சென்று தனது ஆணவம், அகந்தையை விட்டு பணிவோடு முத்தாரம்மைக்கு காணிக்கை தாங்க.. என கேட்பார்கள்.

    அவ்வாறு சேகரிக்கும் காணிக்கையை அன்னையிடம் சமர்பித்து தாயே ! எனது அகந்தையை விட்டு விட்டேன். உன்னோடு என்னையும் சேர்த்துக் கொள் அம்மா! என வேண்டிக்கொள்வதன் அர்த்தமாக வேடம் அணிந்த பக்தர்கள் அன்னையோடு அசுர சம்ஹாரத்திற்கு செல்லும் நிகழ்வு கருதப்படுகிறது.

    அகந்தையை விட்டு விரதம் இருந்து வேடம் அணிந்து வரும் தனது பக்தர்களின் வேண்டுதல்களை அடுத்த தசாரா விழா கொண்டாட்டங்களுக்கு முன்பே அன்னை நிறைவேற்றி விடுவதாக ஐதீகம்.

    வேடம் அணிந்த பக்தர்களின் வேண்டுதலை மட்டுமல்ல வேடம் அணியாமல் உண்மையான பக்தியோடு தன்னை நோக்கி கை கூப்பி அம்மா.. முத்தாரம்மா.. தாயே என்னை காப்பாற்று! என வேண்டுவோர்களின் வேதனைகளையும் தீர்த்து வைக்கிறாள் திரிபுரம் எனும் முப்புரத்தில் குடியிருந்த முப்புரநாயகியாகிய முத்தாரம்மன்.

    இந்த நவராத்திரி விழா காலங்களில் மட்டும் அல்லாது அன்னையின் அருள் என்றென்றும் நம்மை காக்கட்டும்... ஓம் சக்தி...

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.
    • தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீனமாக இருப்பது.

    இப்போது எங்கும் பரவி வரும் பாதிப்பு சுவாசக் குழாய் தொற்று. 'ப்ளூ' பாதிப்பு போன்றவைதான். பாதிப்பு அடைந்தவர்கள் அருகில் நீங்கள் இருந்தால் போதும். தும்மல், சளி, ஜூரம் என உங்களுக்கும் வந்து விடும்.

    சிலருக்கு எளிதில் சரி ஆகி விடும். சிலரை மருத்துவமனையில் படுக்க வைத்து விடும்.


    ப்ளூ பாதிப்பிற்கு உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்து, நிறைய திரவ உணவு, நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டால் நல்ல பலனை அடையலாம்.

    * ஜுரம் * உடல் சில்லிப்பு * மூக்கில் நீர் வடிதல் * மூக்கடைப்பு * அதிக சோர்வு * மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பின் தலைவலி, தொண்டை பாதிப்பு, வறட்டு இருமல் இருக்கும்.

    * கண் சிவந்து நீர் வடிதலும் இருக்கலாம். சாதாரண ஜலதோஷத் திற்கும் ப்ளூ பாதிப்பிற்கும் சிறிய வித்தி யாசம் இருக்கும்.

    * ப்ளூ ஜுரம் 3 அல்லது 4 நாட்கள் வரை கூட நீடிக்கும்.

    * ப்ளூ பாதிப்பில் உடல் வலி மிகக் கடுமையாக இருக்கும்.

    * உடல் சில்லிப்பு, குளிர் போன்றவை ப்ளூ ஜுரத்தில் அதிகமாக இருக்கும்.

    * தும்மல் ஜலதோஷத்தில் அதிகமாக இருக்கும்.

    * இருமல், நெஞ்சில் அசவுகரியம் போன்றவை ப்ளூ பாதிப்பில் அதிகமாக இருக்கும்.

    * தலைவலி ப்ளூ பாதிப்பில் 'மண்டையில் இடி' என்பது போல் இருக்கும்.

    * ப்ளூ பாதிப்பில் பாதிப்படைந்தது வெளியில் தெரிவதற்கு முன்பாகவே உங்களை சுற்றி உள்ளவர்கள் பாதிப்பு அடைகின்றனர்.

    * திடீரென உடலில் அதிக அசதி ஏற்படும்.

    * மூன்றாவது நாள் மேற்கூறிய பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

    * பசி இல்லாத உணர்வு இருக்கும்.

    * பாதிப்பின் போது அதிக ஓய்வு எடுப்பது அவசியம்.


    * அதிக திரவ உணவு, தண்ணீர், கிரீன் டீ, கஞ்சி, சூப், எலோக்ட்ர லைட்ஸ், வெது வெதுப பான நீர் இவற்றினை குடிக்கலாம்.

    * சோடா, ஜூஸ், காபி இவற்றினை தவிர்த்து விட வேண்டும்.

    * உடலுக்கு வெது வெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம்.

    * தனித்து இருப்பது நல்லது.

    * மருத்துவர் ஆலோ சனையின் பெயரில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    * 5 அல்லது 7 நாட்கள் வரை இந்த பாதிப்பு இருக்கலாம்.

    * ஐந்து வயதுக்கு கீழ் இருப்பவர்களும், 65 வயதிற்கு மேல் இருப்பவர்களும் கூடுதல் கவனம் பெற வேண்டும்.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் பாதுகாப்பு அவசியம்.

    * சர்க்கரை நோய் * ஆஸ்துமா * இருதய நோய் * கல்லீரல் பாதிப்பு * சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் பாதிப்பினை அதிகம் அடைவர்.

    இந்த நோய்களின் உறவுக்காரர்கள் போல் * நிமோனியா, * சைனஸ் * காது கிருமி பாதிப்பு

    * நுரையீரல் பாதிப்பு * இருதய வீக்கம் * உறுப்புகள் பாதிப்பு என எழுத தவிர்க்கும் சில அச்சுறுத்தும் பாதிப்புகளும் ஏற்படலாம்.

    * மூச்சு விடுவதில் சிரமம் * வயிறு, நெஞ்சில் ஒரு அழுத்தம் * மயக்கம் *சிறுநீர் வெளி செல்லுதல் குறைவு * வாந்தி இருந்தாலோ, ஜூரம் திரும்ப வருவது போன்ற சில புதிய அறிகுறிகள் இருந்தாலோ தாமதமின்றி மருத்துவர் ஆலோசனை பெறுவதே அவசியம்.

    * ப்ளூ தவிர்ப்பு ஊசியினை யும் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    மனித மூளைக்கும், உட லுக்கும், மனதிற்கும் பொழுது போக்குகள் அவசியம் என்று நினைக்கின்றோம். மருத்துவர்களும் அறிவுறுத்து கின்றனர். பொதுவாக பொழுது போக்கு என்பது வயதிற்கேற்ப மாறுபடும்.

    * விளையாட்டு

    * புகைப்படம் எடுத்தல்

    * புத்தகம் படித்தல் என பல பிரிவுகளில் இருக்கும். சமுதாயத்தோடு இணைந்த சில பொழுது போக்குகள் உள்ளன.

    * கூட்டு விளையாட்டு

    * கூட்டு நடனம்

    * கூட்டு உடற்பயிற்சி போன்றவை இதனுள் அடங்கும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா?

    * அன்றாடம் சமைக்கும் அம்மாவிற்கு அது பெரிய வேலை, சுமை. ஆனால் அவ்வப்போதாவது வீட்டில் உள்ள வர்கள் சமைத்தால் அது பொழுதுபோக்கு.

    * கிராம பகுதிகளில் இருப்பவர்கள் பறவைகளை பார்ப்பது, அதன் சத்தத்தினை ரசிப்பது பொழுதுபோக்கு.

    * இரவில் சிறிது நேரம் நட்சத்திரங்களை பார்த்து ரசிக்கலாம்.

    * சைக்கிளில் வெளியில் செல்லலாம்.

    * புது மொழி கற்கலாம்

    * தனி மனித உரிமை போன்ற சட்டங்களைப் படிக்கலாம்.

    * மீன் நீந்துவதனை பார்க்கும் போது மனம் அமைதிப்படும் என்பர்.


    கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்

    * திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.

    * தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீன மாக இருப்பது

    * வயிற்று வலி குறிப்பாக வலது பக்க விலாவின் கீழ் இருப்பது

    * அடர் நிறம் கொண்ட சிறுநீர், வெளிர் நிற கழிவு வெளியேற்றம்

    * அதிக சர்க்கரை அளவு (ரத்தத்தில்)

    * ரத்த பரிசோதனையில் அதிக கொழுப்பு

    * சிறிய அடிபட்டால் கூட கருத்து விடுதல்

    * கண்களில் மஞ்சள்

    இவையெல்லாம் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறிகள் என்று அறிவோம்.


    * நவீன உலகில் அதிகம் நம்மை அறியாமல் மூழ்கினால் நமது உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியம் இன்மை ஏற்படும்.

    * நினைத்த நேரத்தில் கண்ட உணவு உண்பதை நீங்கள் நாகரீக வாழ்க்கை என்ற பெயரில் நோய்களுக்குள் சிக்கிக் கொண்டீர்கள் என்று கொள்ளலாம்.

    * எதற்கெடுத்தா லும் யாரையும் கேட்காமல் மருந்து களை தன் மனம் போனபடி எடுத்துக் கொள்வது நாகரீகமாகாது.

    * நான் சற்று கடை தெரு சுற்றி வந்தால் மனம் மகிழ்ச்சி அடையும் என்று நினைப்பது நாகரீகமா?

    * அதிக நேரம் டி.வி., போன் இவற்றில் மூழ்குபவர்கள். இவர்கள் நவீனம் என்ற பெயரில் உடல் நோய், மன நோய் இவற்றில் பாதிப்பினை பெறு கின்றார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    இதிலிருந்து ஒவ்வொருவரும் உறுதி எடுத்து வெளிவருவது மிக அவசியம்.

    வெறும் மருந்து, மாத்திரை என்றில்லாமல் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தியானம் போன்ற பழக்கங்கள் முக்கியம். இந்த பழக்கங்கள் இல்லாமல் உடல் நலத்தினை பேணுவது கடினமே.

    • பிரகாஷ்ராஜ் எல்லோரையும் எளிதில் ஏமாற்றும் கேரக்டர். ஆனால் நான் மட்டும் அவரிடம் ஏமாற மாட்டேன்.
    • இந்த படத்தில் நான் நடித்து கொண்டிருந்தபோது ஜப்பான் ரசிகர்கள் சிலர் என்னை தேடி வந்திருந்தார்கள்.

    இரண்டு வில்லன்களிடம் ஒரு பெண் மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்?

    பிரகாஷ்ராஜ், ரகுவரன்... இந்த இருவரது மிரட்டலான வில்லன் தோற்றத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

    அப்படிப்பட்ட அவர்கள் இருவருக்கிடையேயும் சிக்கி கொண்ட அனுபவம் எனக்கு உண்டு.

    'தயா'

    இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடி நான். அது மட்டுமா... பிரகாஷ்ராஜுக்கும் எனக்கும் ஒரு டூயட் பாட்டும் உண்டு. படத்தின் தொடக்கத்தில் வில்லன் போல் வருவார். பின்னர் ரொமான்டிக் நாயகனாக மாறுவார்.

    வில்லத்தனமாக சந்தித்து பழக்கப்பட்ட நாயகனுடன் நான் ரொமான்டிக்காக நடிப்பது... அதே போல் வில்லன் பாத்திரத்தில் அதிகமாக கலக்கியவர் நாயகனாக நடித்து இருப்பது... எங்கள் இரு வருக்குமே அந்த படம் ஒரு மாறுபட்ட அனுபவம்.

    எங்களுக்குள் நடக்கும் டூயட் பாடலான

    "ஆணழகா... ஆணழகா...

    என்னை கவ்வ வந்த நீ பேரழகா

    நீ அழகா... நீ அழகா...

    பொய் சொல்ல சொல்ல தமிழ் அழகா?" என்ற பாடல் நான் ரசித்த பாடல். எல்லோரையும் கவர்ந்த பாடல்.

    தயா படத்தில் காநாயகனும் நானும் எலியும் பூனையும் போல்தான் இருப்போம். வழக்கமான கேரக்டர் கிடையாது. ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.

    பிரகாஷ்ராஜ் எல்லோரையும் எளிதில் ஏமாற்றும் கேரக்டர். ஆனால் நான் மட்டும் அவரிடம் ஏமாற மாட்டேன்.

    காட்சிக்கு காட்சி ரொம்பவே திரில்லிங்காக இருக்கும். இந்த மாறுபட்ட கேரக்டர், கதை எனக்கு ரொம்பவே பிடித்தது. எனவேதான் இந்த படத்தில் நடிக்கவும் ஒத்துக்கொண்டேன். எதிர்பார்த்தது போலவே பிரகாஷ்ராஜ், ரகுவரன் சாரோடு நடித்ததும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

    பிரகாஷ்ராஜ் அப்போது தனது முதல் மனைவி லலிதாகுமாரியை பிரியவில்லை. லலிதாகுமாரி என்னிடம் ரொம்ப பிரியமாக இருப்பார். ஷூட்டிங்கின்போது அவர் சமைத்து கொடுத்து அனுப்பும் உணவு வகைகள் வித்தியாசமானது. ருசியும் வித்தியாசமாக இருக்கும். அதை ரசித்து ருசித்து சாப்பிட்ட அனுபவம் என்றும் மறக்காது. இந்த படத்தில் லட்சுமி அம்மாவும் உண்டு. அவர் ஆதரவற்றோர் விடுதி நட த்தும் பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மிக மூத்த கலைஞர்களில் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பவர். நிறைய ஆலோசனைகள் வழங்குவார்.

    இந்த படத்தில் நான் நடித்து கொண்டிருந்தபோது ஜப்பான் ரசிகர்கள் சிலர் என்னை தேடி வந்திருந்தார்கள். படப்பிடிப்பு தளத்துக்கே அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஜப்பானிய மொழி தெரியாது. கை சைகைகளும், புன்னகையும் மட்டுமே நாங்கள் பேசிக்கொள்ளும் மொழியாக இருந்தது. நின்று கும்பிடுவார்கள், சிரிப்பார்கள், கை குலுக்குவார்கள். ஜப்பானில் இருந்து இவ்வளவு தூரம் நம்மை தேடி வந்திருக்கிறார்களே என்று நினைத்தபோது பாவமாக இருந்தது.

    எனவே அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப நானும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். சில பொருட்களை என்னிடம் தந்தும் புகைப்படும் எடுத்து கொண்டார்கள்.

    இதை சற்று தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த லட்சுமி அம்மா நான் திரும்பி சென்றதும் என்னை அழைத்தார். ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்கணும். அது தப்பில்லை. ஆனால் இவர்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா? உன் படத்தை வைத்தே "பிசினஸ்" கூட பண்ணுவார்கள். அந்த பொருட்களை நீதான் அறிமுகப்படுத்தினாய் என்று விளம்பரப்படுத்தி வியாபாரமும் செய்வார்கள். ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

    அதுவரை இப்படியெல்லாம் பண்ண முடியும் என்று எனக்கு தெரியாது. இதில் கூட இவ்வளவு விஷயம் இருக்கு என்பதை அவர் சொன்ன பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

    அதன் பிறகு கொஞ்சம் உஷாராகி கொண்டேன். ஜப்பானில் எனக்கு ரசிகர் மன்றங்களும் வைத்திருந்தார்கள்.

    இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் பல தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

     

    செல்போன் 'கெத்து...'

    கேரவன் வந்ததை போலவே செல்போன் அறிமுகமான காலமும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எண்களை சுழற்றி மட்டுமே போன் செய்து கொண்டிருந்தோம். கொஞ்சம் அட்வான்ஸ் என்றால் 'காட்லெஸ் போன்' அவ்வளவு தான் இருந்தது.

    செல்போன் வந்ததும் அதிலும் எண்களை அழுத்தி யாரையும் அழைக்க முடியும் போன் போல் பேச முடியும் என்றதும், ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது செல்போன் வைத்திருந்ததையே ஒரு கெத்தாக நினைப்போம்.

    ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு எடுத்து செல்வேன். அங்கிருந்து அம்மாவுக்கு போன் செய்து 'அம்மா... இதை சமைத்து கொடு... அதை சமைத்து கொடு' என்று சொல்வேன்.

    அதன்பிறகு அதிலும் 3ஜி, 4ஜி, 5ஜி என்று செல்போனுக்குள் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் அன்றே வந்திருந்தால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்...? என்று இப்போது நினைக்க தோன்றுகிறது. காலப்போக்கில் இன்னும் என்னென்ன மாற்றங்களை சந்திக்க போகிறோமோ? மாற்றம் ஒன்றுதானே மாறாதது?

    • உலகம் எண்ணற்ற இளைஞர்களாலும், இணையான முதியவர்களாலும் நிறைந்திருக்கிறது.
    • மூத்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும், தவறுக்கு வருந்துவதும் ஆகச் சிறந்த மரியாதைக் குணமாகக் கருதப்பட வேண்டியதாகும்.

    மூத்த குடிமக்களுக்கு மரியாதை செலுத்துவதில் ஆர்வமுன்னுரிமை காட்டும் இனிய வாசகர்களே வணக்கம்!.

    உலகம், மரம், செடி, கொடி, போன்ற தாவர இனங்களாலும், சிங்கம், புலி, யானை, கரடி போன்ற விலங்கினங்களாலும், பறப்பன, ஊர்வன போன்ற பல்வகை உயிரினங்களாலும் சூழப்பட்டுள்ளது; இவ்வகை உயிருள்ள ஜீவ ராசிகளால் மட்டுமல்ல… மலைகள், பாறைகள், மண், நீர், நெருப்பு, காற்று எனும் பலவகை உயிரற்ற பொருள்களாலும் கலந்து இருப்பதே உலகம். இவற்றில் ஆறாவது அறிவுகொண்ட மனித இனமும் தோன்றி வாழ்ந்து, ஆளுமை செலுத்தி வருவதே சிறப்பு.

    மனித இனம் உட்பட, உயிருள்ளதும் உயிரற்றதுமாக இயங்கும் இந்த உலகில், அனைத்துமே ஒரே வயதும் பருவமும் கொண்டவை அல்ல; காலத்துக்குத் தக்கபடி, தோன்றுவது, இருப்பது, பிறகு மடிந்து அழிந்து போவது ஆகிய மூன்றுவகையான செயல்இயக்க விதிகளுக்கும் இவை ஆளாகக் கூடியவையே ஆகும். அதனால் எல்லா உயிரினங்களிலும் இளமை, வளமை, முதுமை எனும் மூவகைத் திறமும் வயது அடிப்படையில் உண்டு. சார்ந்து வாழ்வது, அரவணைத்து வாழ்வது, சேர்ந்து வாழ்வது, கூட்டமாக வாழ்வது போன்ற வாழ்நிலைகள் மனிதர்களைப் போலவே மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டு.

    எத்தனை விதமான உயிரினங்கள் இந்த மண்ணில் தோன்றி வாழ்ந்தாலும், மனிதர்களுக்கு மட்டுமே மனம் மொழி மெய்களால் சிந்திக்கவும் செயல்படவும் உதவுகிற ஆறாவது அறிவு படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆறாவது அறிவுகொண்டு அவன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பலவற்றைப் பல ஞானியரும் மேதையரும் பலவகைப் போதனைகளாகவும் இலக்கியங்களாகவும் படைத்து வழிகாட்டியிருக்கின்றனர். அவற்றில் இன்றியமையாச் சிறப்பினவாகத் திகழும் ஒன்றுதான், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெரியவர்களை மதித்தல் என்பது ஆகும்.

    "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னர்க் கசக்கும் பின்னர் இனிக்கும்" என்கிற தமிழ்ப் பழமொழி, மூத்தோர் சொல்லில் திகழக்கூடிய அமரத் தன்மையை எடுத்தியம்புவதாகும். இந்த உலகம் எண்ணற்ற இளைஞர்களாலும், இணையான முதியவர்களாலும் நிறைந்திருக்கிறது. இளைஞர்கள், பொங்கி வழியும் ஆற்றலுடனும், முதியவர்கள் ஆற்றுப்படுத்தும் அனுபவத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்களை ஒரு காட்டாற்று வெள்ளத்தோடு ஒப்பிட்டால், பல காட்டாறுகள் வழிப்படுத்தப்பட்ட பழமைமிகு ஆற்றோடு முதியவர்களை ஒப்பிடலாம். கரைகளுள்ள ஆற்றுவழி செல்லாத காட்டாறுகளால் அழிவுதான் மிஞ்சுமேயொழிய, வளமான வயல்களுக்கு நீர்போய்ச் சேராது. அதுபோல முதுமையால் நெறிப் படுத்தப்படாத இளமையால் ஆற்றல் வீணடிப்பே பெரிதும் நிகழும்.

    வாழ்க்கை மரபிற்கு வழிநெறி காட்டுகிற வள்ளுவப் பேராசானும், பெரியவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்!; பெரியவர்களை உற்ற துணையாக எப்போதும் கொண்டிருக்க வேண்டும்!; பெரியவர்களிடம் பிழைசெய்து விடாமல் வாழவேண்டும்! என்று வலியுறுத்துகிறார். வள்ளுவர் காலந்தொட்டு, இன்றைய கணினிக் காலம்வரை, மூத்தோர்களை மதிப்புடன் நடத்தவேண்டும்! என்று எல்லாரும் விடாமல் சொல்லிவருவதற்கு என்ன காரணம்?. வாழ்க்கை என்றால் எப்போதும் அது மரபுநிலை திரியாத வாழ்க்கையாக இருக்க வேண்டும்; "மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்!" என்பது நமது ஆதித் தமிழ்நூலாகிய தொல்காப்பியத்தின் மரபுநிலை போற்றும் வாசகமாகும்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்


    பெரியவர்களை மதிக்கவேண்டும் என்கிற கூற்று யாரை நோக்கியது? என்று பார்த்தால், அது முழுக்க முழுக்க இளம் தலைமுறையை நோக்கியதே ஆகும். வளரும் குழந்தை முதற்கொண்டு, பள்ளி செல்லும் சிறுவர்கள் தொடர்ந்து, கல்லூரி செல்லும் இளைஞர் வரையுள்ள அனைத்து இளம் தலைமுறையினருக்கான ஒரே வலியுறுத்தல் தான் பெரியவர்களை மதித்தல் என்பதாகும். ஒரு தலைமுறையின் பண்பாட்டு வளர்ச்சி என்பது இளைய தலைமுறையினரிடமிருந்தே துளிர் விடத் தொடங்குகிறது.

    ஒரு குடும்பம் என்று எடுத்துக்கொண்டால், குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர்களான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அத்தை, மாமா எனவுள்ள அனைவரையும் மதிப்புடனும் மரியாதையுடனும் இளம் தலைமுறையினர் நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக, இளம்தலைமுறை மதிக்கும் வண்ணம் மரியாதைப் பெருமையுடன் மூத்தவர்கள் நடந்து கொள்ள வேண்டும். சதா அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் குடும்பத்தில், பிள்ளைகள் பெற்றோர்களை மதிப்பதே கிடையாது. 'உங்க அப்பாவைப் பற்றித் தெரியாதா?' என அம்மாவும், 'உங்க அம்மாவைப் பற்றித் தெரியாதா?' என அப்பாவும் பிள்ளைகளிடம் எப்போதும் குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டே இருந்தால், அந்தக் குடும்பத்தில் எவருக்குமே எவரிடமும் மரியாதையென்பது துளியளவும் இல்லாமல் போகும்.

    குழந்தைகள் முன்னிலையில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் அழைத்துக்கொள்ளும் பண்பு, அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் பிள்ளைகளிடம் உயர்த்திக்காட்டும். அதே போலக், குழந்தைகள் எதையுமே புதியதாகச் செய்யும்போது, அவற்றைப் பிழையின்றித் திருத்த வேண்டியதும், திருத்தியபடிக், குழந்தைகள் நடக்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க வேண்டியதும் மூத்தோர்களின் பெரும்கடமை ஆகிறது. இந்த இடத்தில் 'தவறுக்கு வருந்துதல்!' மன்னிப்புக் கேட்டல்!' ஆகிய மாபெரும் கடமைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதுவும் சகவயதுக் குழந்தைகள், இளைஞர்கள் இவர்களைத் தவிர்த்துத், தம்மிலும் மூத்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும், தவறுக்கு வருந்துவதும் ஆகச் சிறந்த மரியாதைக் குணமாகக் கருதப்பட வேண்டியதாகும்.

    'நான்' என்னும் ஆணவக் குணம் மனித உயிர் கருவாகும் காலந்தொட்டே உடன் வளரும் தீய குணமாகும். 'எல்லாம் என்னால் முடியும்!' என்பது ஒருவகையில் தன்னம்பிக்கைப் பேச்சு என்றாலும், மற்றொரு வகையில் 'என்னால் மட்டுமே முடியும்!' என்கிற தன்னை மையமிட்ட ஆணவப் பேச்சாக அது மாறிவிடும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் இளைய சமுதாயம், வெற்றிகளுக்கு மட்டுமல்ல, தோல்விகளுக்கும் தவறுகளுக்கும்கூட நாம்தாம் காரணம் என்று ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் ஆகவும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெரியவர்களிடம் பிழைக்கு வருத்தம் தெரிவிக்கிற சமுதாயம் ஆகவும் மாறவேண்டியது அவசியம் ஆகிறது. நெருப்பால் சுடப்படினும் பிழைத்துக் கொள்ளலாம்; ஆனால் பெரியவர்களிடம் தவறு செய்துவிட்டு, அவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிட்டால் தப்பவே முடியாது என்கிறார் திருவள்ளுவர்.

    எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

    பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்

    ஒவ்வொரு வீட்டிற்கும் சில பெரியவர்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும்; இன்றைய நகர்மயக் குடும்ப வாழ்வியலில், கணவர் ஓரிடம்; மனைவி ஓரிடம்; பெற்றோர் தனித்தனிப் புகலிடம்; பிள்ளைகள் அவரவர் படிப்பிடம் என வாழ்ந்தால் மூத்தோரை எப்படிப் பேணிக் காப்பது? அவர்கள் அரவணைப்பில் எப்படிக் குடும்பம் நடப்பது?. நல்ல கேள்விதான். வாழ்விடம் தனித் தனியானாலும், அவ்வப்போது ஆலோசனைகளையும், அரவணைப்புகளையும் செய்து கொள்ளச் செல்பேசிகளையாவது பயன்படுத்தி அன்போடு மகிழ்வோமே!.

    குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அரசாங்கங்கள் என எல்லா நிறுவனங்களிலும் சில பெரியவர்கள், மதிக்கத்தக்க உயரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பெரியவர்கள், ஏதோ சடங்கு சம்பிரதாயக் காலங்களில் வந்து அட்சதை தூவி ஆசி வழங்குவதற்காக மட்டுமன்று; இளைய தலைமுறை நெறிதவறிப் போகும்போது உரிய முறையில் தட்டித் திட்டி நெறிப்படுத்த வேண்டிய பெரும்பொறுப்பும் அந்த மூத்தோர்களுக்கு உண்டு; வீட்டுத் தலைவனாக இருந்தாலும் நாட்டுத் தலைவனாக இருந்தாலும் இடித்துத் திருத்த வேண்டிய உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் மூத்தவர்களே ஆவார்கள்.

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பார் இலானும் கெடும்

    என்பது, அரசாளும் உதவிக்குப் பெரியவர்களை வைத்துக்கொள்ளாத மன்னவன் பகைவர்கள் இல்லாமலேயே தாமே கெட்டழிவான் என எச்சரிக்கும் வள்ளுவ வாசகம். இதை அப்படியே ஒவ்வொரு குடும்ப நிருவாகத்திற்கும் பொருந்துகிற வாசகமாகப் பொருத்திப் பார்க்கலாம். மூத்த அனுவசாலிகள் கூறுகிற ஆலோசனைகள், நமக்கு வழித்துணையாக வராவிட்டாலும், செல்கிற வாழ்க்கைப் பயணத்தில், துன்பச் சேற்றில், நம்மை வழுக்கிவிழாமல் காக்கின்ற ஊன்றுகோலாகவாவது உதவும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    ஓர் ஊருக்கு ஒரு சாமியார் சீடர்களோடு வந்திருந்தார்; அவரைக் காண அந்த ஊரின் பொதுமக்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களை அந்த ஊரிலிருந்த ஒரு குளத்திற்கு அழைத்துச்சென்று, குளத்தங்கரையிலிருந்த ஓர் உருண்டைக் கல்லைக் காட்டி, அதனைக் குளத்திற்குள் தள்ளுமாறு சொன்னார்; அவர்களும் அவ்வாறே செய்ய, உருண்டைக்கல்லும் உருண்டு குளத்துக்குள் வீழ்ந்து மூழ்கிப்போனது. சாமியார் கேட்டார், "கல் தண்ணீரில் மிதக்குமா?". " மிதக்கவே மிதக்காது! கல் தண்ணீரில் மிதக்கவே மிதக்காது!" மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பதில் சொன்னார்கள். "சரி! நான் மிதக்க வைத்துக் காட்டுகிறேன். நீங்கள் அனைவரும் ஊருக்குள் சென்றுவிட்டு ஓர் அரைமணி நேரம் கழித்து அந்த அதிசயத்தைக் காண வாருங்கள்!" என்று கூறி மக்களை அனுப்பி வைத்தார் சாமியார்.

    மக்கள் குளக்கரையை விட்டு நகர்ந்தவுடன், குளத்தங்கரையில் கிடந்த ஒரு மரக்கட்டையைத் தூக்கிக் குளத்துநீரில் போடுமாறு சீடர்களைப் பார்த்துச் சாமியார் கூறினார். சீடர்கள் போட்ட மரக்கட்டை குளத்தில் மிதந்தது; இப்போது கரையில் கிடந்த ஒரு பாறாங்கல்லைத் தூக்கி, மிதந்து கொண்டிருந்த மரக்கட்டையின் மீது போடுமாறு சீடர்களிடம் சாமியார் கூறினார். மரக்கட்டையின் மீது சேர்ந்து பாறாங்கல்லும் மிதந்தது. ஊருக்குள் சென்று திரும்பிய மக்கள் குளக்கரையில் சாமியாரைப் பார்த்தனர். " பார்த்தீர்களா அதிசயத்தை! பாறாங்கல் குளத்து நீரில் மிதக்கிறது!" சொன்னார் சாமியார்.

    "இதிலென்ன அதிசயம் இருக்கிறது?. தண்ணீரில் இயல்பாக மரக்கட்டை மிதக்கும்; அதன்மீது இருப்பதனால் பாறாங்கல்லும் மிதக்கிறது!" மக்கள் கூறினர். "அதுவும் சரிதான். ஆனால் தனியாகப் போட்டால் கல் தண்ணீரில் மிதப்பதில்லையே! அது ஏன்?. கட்டைமீது வைத்ததும் மிதக்கிறதே! அது ஏன்?" சாமியார் விவரமாக ஒரு கேள்வியை மக்களின் சிந்தனைக் குளத்துக்குள் விட்டெறிந்தார்.

    சாமியாரே விடையும் பகர்ந்தார்," வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் கல் மாதிரி!; வாழ்க்கையென்னும் துன்பக் குளத்துக்குள் வந்தால், சேறு சகதிக்குள் மூழ்கத்தான் வேண்டும். கட்டை போன்றது ஞானிகள் அறிஞர்கள் போன்ற மூத்த பெரியவர்கள் சொல்லியிருக்கிற நல்ல உபதேசங்கள். கட்டைமீது கல் மிதப்பது போல, அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த பெரியவர்களின் வழிகாட்டல் இருந்தால், நாமும் துன்பச் சகதிக்குள் மூழ்கி விடாமல், மிதந்துகொண்டே கடந்து விடலாம்".

    பெரியவர்களைத் துணையாகப் பற்றிக்கொள்வோம்.

    தொடர்புக்கு 9443190098

    ×