என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • பழந்தமிழர்கள் முதலில் இயற்கையை வழிபட்டனர்.
    • சங்ககாலத்துக்கு முந்தைய நூலான தொல்காப்பியத்திலும் தமிழ்க் கடவுள் முருகன் பற்றி கூறப்பட்டுள்ளது.

    உலகம் தோன்றி 100 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் வரையறுத்து உள்ளனர். சூரியனில் இருந்து பிரிந்து பூமி உருவானபோது தண்ணீரும், நில பரப்புகளும் தோன்றின.

    அதன் பிறகு உயிரினங்கள் தோன்றின. அந்த சமயத்தில் உலக நாடுகளின் அமைப்பு தற்போது இருப்பது போல அமைந்திருக்கவில்லை. ஐரோப்பா கண்டத்தின் பெரும் பகுதி, ரஷியா, சீனா பெரும்பகுதி போன்றவை அப்போது இல்லை.

    ஆனால் தெற்கு பகுதியில் தென்அமெரிக்காவில் தொடங்கி ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா வரை நிலப்பரப்பு இருந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் அரபிக்கடலோ, வங்காள விரிகுடா கடலோ இல்லை.

    அந்த நிலப்பரப்பு குமரிகண்டம் என்று அழைக்கப்பட்டது. பழந்தமிழர்கள் மிக மிக சிறப்பாக அங்கு வாழ்ந்தனர் என்று நம்பப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி எனப்படும் கடல்கோள் ஏற்பட்டபோது குமரிகண்டத்தின் தென்பகுதி முழுமையாக அழிந்தது.

    அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல், இந்திய பெருங்கடல்கள் தோன்றின. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அந்த காலத்தைத்தான் முதல் சங்க காலம் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.

    முதல் சுனாமியில் தப்பியவர்கள் வடக்கே வந்து புதியதாக குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். தங்களது தலைநகராக அவர்கள் கபாடபுரத்தை அமைத்து இருந்தனர். சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி அந்த நிலப்பரப்புகளையும் கடலுக்குள் விழுங்கியது. அந்த கால கட்டத்தை இடைச்சங்கம் என்று சொல்கிறார்கள்.

    அதன் பிறகு மூன்றாம் சங்க காலம் என்று கருதப்படும் காலம் தோன்றியது. முதல் 2 சுனாமியால் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்த 49 நாடுகள் அழிந்தன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நாடுகளு டன் பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் மண்மூடி புதைந்து போயின.

    தமிழர்களுக்கு மேலும் சோதனை ஏற்படுத் தும் வகையில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமி காரணமாகத்தான் வட பகுதி உயர்ந்து இமயமலையாக மாறி தென் பகுதி தாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    அதன் பிறகுதான் தற்போதைய தமிழினம் தனது பூர்வீக வேர் காரணமாக சிறப்பு அடைய தொடங்கியது. சங்க இலக்கியங்கள் தோன்றின. அதில் தமிழர்களின் வாழ்வியல் நடைமுறைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்படப்பட்டுள்ளன.

    பழந்தமிழர்கள் வாழ்ந்த குமரி கண்டத்தில் இருந்து தற்போதைய தமிழகம் வரை உள்ள நிலப்பரப்பையும் வாழ்க்கை முறைகளையும் ஒரு கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து பார்த்தால் பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாக தெய்வ வழிபாட்டில் சிறப்பாக இருந்தது தெரிகிறது.

    பழந்தமிழர்கள் முதலில் இயற்கையை வழிபட்டனர். பின்னர் அதன் அடிப்படையில் தெய்வங்களை உருவகப்படுத்தினார்கள். அதில் சிவன், திருமால், சக்தி, முருகன் ஆகிய 4 தெய்வங்களும் பிரதான இடம் பெற்று இருந்தன.

    இவர்களில் முருகனை மட்டுமே பழந்தமிழர்கள் தமிழ்க் கடவுள் என்று கொண்டாடினார்கள். முருகன் மூலமாகத்தான் தமிழ் மொழி தோன்றி உலகம் முழுக்க பரவி செழித்தது என்ற நம்பிக்கை ஆதி தமிழர்களிடம் இருந்தது.

    தமிழ்க் கடவுள் முருகன் என்று தமிழ்நாட்டில் சொல்வது போல வேறு எந்த மாநிலத்திலும் மக்கள் எந்த தெய்வ வழிபாட்டையும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் முருகன் தனித்தமிழ்க் கடவுளாக தமிழர்களுக்கு மட்டுமே உரியத் தெய்வமாக திகழ்ந்தான் என்பது தெரிகிறது. இதை சுட்டிக்காட்டும் சான்றுகள் சங்க இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன.

    தமிழக வரலாற்று அறிஞர்களில் ஒருவரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் இைத உறுதிப்படுத்தி உள்ளார். முருக வழிபாடு என்பது வடமாநிலங்களில் இருந்தோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியில் இருந்தோ தமிழ்நாட்டுக்கு வந்த வழிபாடு அல்ல. இது முழுக்க... முழுக்க... தமிழர்கள் உருவாக்கிய வழிபாடு.

    இதன் காரணமாகத்தான் இன்றளவும் தமிழகத்தில் முருகர் வழிபாடு தமிழர்களின் உணர்வோடு இரண்டற கலந்து உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக முருக வழிபாட்டை வடநாட்டில் இருந்து வந்த வழிபாடு என்று சிலர் கூறினார்கள்.

    வட மாநிலங்களில் வணங்கப்படும் "ஸ்கந்தன்"தான் தமிழ்நாட்டில் முருகர் என்ற அம்சமாக வழிப்படப்படுவதாக சொல்லப்பட்டது. தமிழ் கடவுளான முருகருக்கும், வடமாநிலங்களில் வழிபடப்படும் ஸ்கந்தனுக்கும் ஒரே மாதிரியான வரலாறு இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் சொன்னார்கள்.

    ஆனால் வட மாநிலங்களில் வழிபடப்படும் ஸ்கந்தன் ருத்ரனின் 9-வது அம்சமாக சொல்லப்படுகிறார். அவர் போர்க் கடவுளே அல்ல. ஆனால் நம் முருகன் படை வீடுகள் அமைத்து, போர் நடத்தி சூரனை சம்ஹாரம் செய்தவர். ஸ்கந்தனுக்கும், முருகனுக்கும் வேறுபாடு உள்ளது என்பதற்கு இது ஒன்றே அடிப்படையான, ஆதாரப்பூர்வமான உதாரணமாகும்.

     

    தமிழ்க் கடவுளான முருகனின் பெயர் முருகு என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். இந்த சொல் சங்க கால இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றினை போன்ற நூல்களில் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சங்ககாலத்துக்கு முந்தைய நூலான தொல்காப்பியத்திலும் தமிழ்க் கடவுள் முருகன் பற்றி கூறப்பட்டுள்ளது. கம்ப ராமாயணத்திலும் முருகர் இடம் பெற்றுள்ளார். சங்க இலக்கியங்களில் முருகன் அளவுக்கு சிவன் பற்றியோ, திருமால் பற்றியோ, சக்தி பற்றியோ குறிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் ஆதியில் முதலில் முருகன் வழிபாடே பிரதானமாக இருந்தது என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.

    ஆனால் வரலாற்றில் இடையில் சுமார் 1000 ஆண்டுகள் முருக வழிபாட்டில் தேக்க நிலை ஏற்பட்டு விட்டது. குறிப்பாக 6-ம் நூற்றாண்டில் இருந்து 10-ம் நூற்றாண்டு வரை சைவமும், வைணவமும் போட்டிப் போட்டு வளர்ந்த காரணத்தால் முருக வழிபாட்டின் தனித்தன்மை சிறப்பு மங்கிப்போனது.

    மன்னர்கள் தங்களது சமய கோட்பாடுகள் காரணமாக முருகன் வழிபாட்டை மறந்து போனார்கள் என்றும் சொல்கிறார்கள்.

    இதை பயன்படுத்திதான் முருக வழிப்பாட்டை வடநாட்டில் இருந்து வந்த வழிபாடு என்றும் பேச தொடங்கினார்கள். கடந்த நூற்றாண்டில்தான் இதற்கு விடை கிடைக்க தொடங்கின. குறிப்பாக 1920களில் லாகூருக்கும், அமிர்தசரசுக்கும் இடையே ரெயில் பாதை அமைத்தப் போது மணல் குன்றுகளாக இருந்த இடங்களில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் பொருட்கள் கிடைத்தன. மேலும் ஆய்வு செய்தபோது ஒரு நகரமே அங்கு புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தான் சிந்து சமவெளி நாகரீகம் என்கிறார்கள். அங்கு ஆரியர்கள் வாழ்ந்தனர் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மும்பை கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றிய ஈராஸ் என்பவர் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் மற்றும் பொருட்களை சுமார் ஓராண்டு ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டார்.

    சிந்து சமவெளி நாகரீகம் என்பது தமிழர் நாகரீகம் என்று அறிவித்தார். அதோடு சிந்துவெளி மக்களும் தமிழர்கள்தான் என்ற தகவலையும் அதிரடியாக தெரிவித்தார். அதன் பிறகுதான் ஆய்வாளர்கள் பலரும் விழித்துக் கொண்டு ஈராஸ் நடத்திய ஆய்வை மீண்டும் ஆய்வு செய்து தமிழர் நாகரீகத்தை உறுதிப்படுத்தினார்கள்.

    அது மட்டுமின்றி முருக வழிபாட்டை உறுதிப்படுத்தும் பல பொருட்கள் அங்கு கிடைத்ததையும் வெளியில் கொண்டு வந்தனர். இது பழந்தமிழர்கள் முருகனை தங்களின் முதல் தெய்வமாக வணங்கினார்கள் என்பதை சொல்லாமல் சொன்னது.

    அதிர்ஷ்டவசமாக இந்த கண்டுபிடிப்புகள் வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழத்திலும் சில மாறுதல்கள் ஏற்படத் தொடங்கி இருந்தன. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தை இயற்றி தமிழக மக்களுக்கு வழங்கினார். இது முருக வழிபாடு பற்றி தமிழக மக்களிடம் மீண்டும் புத்துணர்ச்சியை உருவாக்கியது.

    15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் தமிழகம் முழுவதும் சென்று முருகன் மீது பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் முருகனை மீண்டும் ஆழமாக பதிய செய்தார். கடை தமிழ் சங்கத்துக்கு தலைவராக வீற்றிருந்து புகழ் பெற்றவரும் முருகனின் ஆலயங்களை ஆறுபடை வீடுகளாக வகைப்படுத்தி "திருமுரு காற்றுப்படை" நூலை தந்த நக்கீரரை குருவாக ஏற்று அவர் முருகன் புகழ் பாடினார்.

    இதன் காரணமாக 18-ம் நூற்றாண்டில் வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் முருகனை பற்றிய நூல்கள் அலைஅலையாக வெளியில் வந்தன. 19-ம் நூற்றாண்டில் தேவராய சுவாமிகளால் கந்தசஷ்டி கவசம் உருவானது.

    இதன் காரணமாக கடந்த நூற்றாண்டில் முருகர் வழிபாடு மேலும் ஓங்கியது. தமிழர்களின் முதல் கடவுள் முருகர்தான் என்பதை இன்று அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    நாடு முழுவதும் நடந்து வரும் அகழாய்வுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அது மட்டுமல்ல சங்க காலத்தில் எழுதப்பட்ட அத்தனை நூல்களும் முருகனை மிகத்தெளிவாக குறிப்பிட்டு உள்ளன. அதைப் படித்தால் முருகனின் தொன்மை சிறப்பு உங்களுக்குப் புரியும். அது பற்றி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

    • வேலைன்னு வந்தா தீயாய் வேலை செய்யணும் குமாரு... என்பது அவருக்கு ரொம்பவே பொருந்தும்.
    • டைரக்டரிடம் திட்டு வாங்காமல் காப்பாற்றியது தான் பெரியது.

    திரைத்துறையில் எவ்வளவு திறமையும், புகழும் பெற்ற கலைஞர்களாக இருந்தாலும் திறமையான டைரக்டர்களின் கீழ் பணியாற்றும் போது தான் பட்டை தீட்டப்படுகிறார்கள்.

    அந்த வகையில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார் எனது திரை உலக பயணத்தில் முக்கியமானவர். அவரது டைரக்ஷனில் நடித்த முத்து, தெனாலி, நாட்டாமை, அவ்வை சண்முகி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்து மிகப்பெரிய புகழையும் சம்பாதித்தேன்.

    வேலைன்னு வந்தா தீயாய் வேலை செய்யணும் குமாரு... என்பது அவருக்கு ரொம்பவே பொருந்தும்.

    கே.எஸ்.ரவிக்குமாரை பொறுத்தவரை மிகப்பெரிய டைரக்டராக இருந்தாலும் அந்த அளவுக்கு பந்தா காட்டாதவர். ரொம்ப ஜாலியாக இருப்பார்.

    ஷூட்டிங் வந்துவிட்டால் தலைகீழாக மாறிவிடுவார். ரொம்ப கோபம் வரும். கடு கடு என்று இருப்பார். சிறு தவறு செய்தாலும் வறுத்து எடுத்துவிடுவார். எனவே எல்லோரும் பயந்தபடி தான் இருப்பார்கள்.

    நானும் ஜெயராமும், ஜோடியாக நடித்த படம் 'பாறை'. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டு செய்தார்.


    படத்தில் எனக்கு மல்லிகா என்ற பெயர். எனது அம்மா பெயரும் மல்லிகா. எனவே அந்த பெயரில் நடித்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. எனவே படப்பிடிப்பில் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். அந்த படத்தை முற்றிலும் மாறுபட்டு இயக்கினார். அதாவது நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் கிடையாது. இயற்கையான தோற்றத்தில் நடிக்க வேண்டும். சுத்தமாக மேக் அப்பே போடா விட்டாலும் சருமங்கள் பாதிக்கும். முகத்தை கழுவி சுத்தமாக மேக்-அப்பே இல்லாமல் வரவேண்டும் என்பார்கள். அவர்கள் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதனால் எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

    காலையில் இருந்து இரவு வரை கேமரா லைட், வெயிலில் நிற்போம். மேக்-அப்பே இல்லாமல் இருந்தால் முக சருமம் பாதிக்கும். மேக்-அப் போட்டிருப்பது அழகுக்காக மட்டுமல்ல சரும பாதுகாப்புக்காகவும் தான்.

    இது தெரிந்தும் சுத்தமாக முகத்தை கழுவி விடுங்கள் என்றதால் கஷ்டமாக இருந்தது. 3-வது நாள் படப்பிடிப்பு மேக்-அப் எதுவும் போடவில்லை. ஆனால் உதட்டுக்கு 'லிப்பாம்' கூட போடாமல் வெறும் லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக் கொண்டு சென்றேன். தேவைப்பட்டால் உடனே அதை அகற்றி விட முடியும்.

    ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ரவிக்குமார் சார் என்னை பார்த்ததும் 'மேக்-அப் போடாமல் தானே வரச்சொன்னேன். ஏன் லிப்ஸ்டிக் போட்டு வந்தாய்? என்று கோபத்தில் கேட்டார்.

    அவருக்கே தெரியும் நான் வேறு எந்த மேக்-அப்பும் போட்டிருக்கவில்லை. வெறும் லிப்ஸ்டிக் மட்டுமே போட்டிருந்தேன். அதையும் சில விநாடிகளில் அழித்துவிட முடியும் என்பது.


    என்னை பற்றி தெரிந்தவர்... மேக்-அப்பிரச்சனைகளையும் தெரிந்தவர்... இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் பலர் மத்தியில் வைத்து இப்படி சத்தம் போட்டு விட்டாரே என்று அழுகையே வந்து விட்டது. கண்ணீர் பொங்கியது. மற்றவர்கள் மத்தியில் வைத்து அழுது விடக் கூடாது என்று கண்ணீரை அடக்கி பார்த்தேன். ம் கூம்.... முடியவில்லை..

    பெருக்கெடுத்து கண்களில் திரண்டு நின்ற கண்ணீரை சாதாரணமாக திரும்புவது போல் வேறுபக்கமாக திரும்பி துடைத்து விட்டேன். சகஜ நிலைக்கு வருவதற்கு சிறிது நேரம் ஆனது. இந்த சாதாரண லிப் ஸ்டிக்குக்கே இவ்வளவு கோபப்பட்ட நிலையில் மறுநாள் ரம்யாகிருஷ்ணன் வந்திருந்தாரே பார்க்கணும்....

    கழுத்தில் இருந்து தோள்பட்டை வரை மேக்-அப் போட்டிருந்தார். அது அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டுக்கு மேல் பகுதியில் பளிச்சென்று தெரிந்தது. இதை ரவிக்குமார் சார் பார்த்தால் அவ்வளவு தான். ஒரு ருத்ர தாண்டவமே ஆடி விடுவார்.

    எனவே நான் ரம்யாகிருஷ்ணன் அருகில் சென்று காதில் மெதுவாக சொன்னேன். 'மேக் அப் போட்டிருப்பது நன்றாக தெரிகிறது. டைரக்டர் பார்த்தால் அவ்வளவு தான். இப்படித்தான் நான் நேற்று வாங்கி கட்டினேன் என்றேன்'. அச்சச்சோ.... என்றவர் ஜாக்கெட்டை சற்று மேலே தூக்கிவிட்டு பார்த்தும் மேக்கப் மறையவில்லை. அதன் பிறகு நானே அவருக்கு பின்னால் நின்று மேக் அப்தெரியாமல் அழித்து விட்டேன்.

    அழித்தது பெரிதல்ல. டைரக்டரிடம் திட்டு வாங்காமல் காப்பாற்றியது தான் பெரியது. நல்ல வேளை உன்னால நான் தப்பித்தேன் என்று ரம்யா நன்றி சொன்னார்.

    அடுத்த சுவாரஸ்ய தகவலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்...

    ஓ.கே. பை... பை....

    (தொடரும்)

    • மனச் சோர்வு, மன உளைச்சல் இவை மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் குறைத்து விடுகின்றன.
    • யாரிடமும் எதற்காகவும் கெஞ்சக் கூடாது. எதனையும் இறைவனிடம் கேளுங்கள்.

    நாம் இப்படியெல்லாம் இருந்தால் தன்னம்பிக்கை உடையவர் தான்.

    * எப்போதும் அமைதியாய் நம்மால் இருக்க முடிகின்றதா?

    * நம்மால் எந்த நேரத்திலும் கவுரவமாக நடந்து கொள்ள முடிகின்றதா?

    * வளைந்து நெளியாமல் கம்பீரமாக உட்காருகின்றோமா?

    * பொறுமை இருக்கின்றதா?

    * பிறரை ஏதோ மகா மட்டமானவர் போல் பார்க்காமல் இருக்கின்றோமா?

    * பிறரிடம் பேசும்போது கண் வெளியே குதிப்பது போல் உருட்டி, மிரட்டி இல்லாது அமைதியான பார்வையோடு பேசுகின்றோமா?

    * வாக்குவாதம் என்றாலும் அதில் கோபம் ஊடுருவி கடுமையான, தகாத வார்த்தைகளை கொட்டாது இருக்கின்றோமா?

    * எதனையும் முழு விவரம் அறிந்த பின்பே பேசுகின்றோமா?

    * அமைதியான தொனியிலேயே பேசுகின்றோமா? அப்புறம் என்ன? நிறைய 'ஆம்' இருந்தால் தன்னம் பிக்கையின் மறு பெயரே நீங்கள்தான்.

    சரி, தன்னம்பிக்கை இருக்கு. கூடவே ஞாபக சக்தியும், கூர்ந்த கவனிப்பும் இருந்தால் தானே திறம்பட இருக்க முடியும். இதற்கு உடனே சில முறைகளை பின்பற்ற ஆரம்பித்தால் கைமேல் பலன் கிடைக்கும். சிறு குழந்தைகள் முதலே குறுக்கெழுத்து போட்டி பழகுவது ஞாபக சக்தியினைக் கூட்டும் கவனத்தினை நேர்படுத்தும்.

    * இருப்பினும் புதிதாக ஒரு பொழுது போக்கு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். மூளை நம் தசை போலத்தான். நன்கு வேலை கொடுத்தால் மூளை நன்கு உறுதியாய் இருக்கும். புது சவால்களாக சற்று கடுமையானதாக எடுத்து பழகி அதில் முன்னேற்றம் காணுங்கள்.

    * எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எடை ஞாபகத்திறனை வெகுவாக பாதித்து விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * மன நலத்துக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்தாலே உடல் நலம் நன்கு இருக்கும் என்பது ஆய்வுகள் கூறும் கருத்து. மனச் சோர்வு, மன உளைச்சல் இவை மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் குறைத்து விடுகின்றன. சோகம், அதிக மன உளைச்சல் இவை 'ஹிப்போகாம்பஸ்' எனப்படும் மூளையின் ஞாபக சக்தி பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    ஆக மன உளைச்சல், மனச் சோர்வு போன்றவை நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமே சிறந்த வழி.

     

    * மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள் (ஓமேகா-3) இவை மூளையின் திசுக்களை வலிவு பெற செய்கின்றன. இது தொடர்ந்து தேவைப்படுவதால் மருத்துவர் அறிவுரையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * யோகா, உடற்பயிற்சி, ஓட்டம் ஆகிய வற்றினை வயதிற்கேற்ப பயிற்சியாளர் மூலம் மேற்கொள்ளும்போது மூளைக்கு ஞாபக சக்தி திறனை கூட்டுகின்றன.

    * வெள்ளை சர்க்கரை, தேன் முடிந்தால், அனைத்து வகை சுவீட் வகைகளையும் நிறுத்தி விடுங்கள். குளிர்பானங்களைத் தவிருங்கள். இவை உங்கள் ஞாபகத்திறன் சக்தியினை விழுங்கி விடும். நீங்கள் சிறிது காலம் இனிப்புகளைத் தவிர்த்து தான் பாருங்களேன்.

    * சிறிது நேரம் மற்றவர்களுடன் நேரம் செலவழித்துப் பாருங்கள். மற்றவர் கதை கேட்டால் புத்தி கூர்மை பெறும்.

    * எதை செய்தாலும் அதில் முழு கவனத்தோடு செய்ய வேண்டும். இஸ்திரி போட்டாலும், சமைத்தாலும் போனில் பேசிக்கொண்டே செய்யாமலும் அதனையும் முழு கவனத்தோடு செய்யுங்கள்.

    * கிரீன் டீ இரு முறை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

     

    * அடர்ந்த சாக்லேட், கோகோ இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

    உங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்துக் கொள்கின்றீர்களா?

    எளிமையாக இருப்பது, பண்பாக இருப்பது, பணிவோடு இருப்பது இவை மனிதனை 'மனிதருள் மாணிக்கம்' எனக் காட்டும்.

    மற்றவரின் புகழ் வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும். மேற்கூறிய குணங்கள் இருந்தால் மனம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் தெரியுமா? மன நிம்மதியை விட உலகில் சிறந்தது எதுவுமே இல்லை. சரி, நமக்கு நாம் மரியாதை கொடுத்துக் கொள்வது எப்படி?

    * யாரிடமும் எதற்காகவும் கெஞ்சக் கூடாது. எதனையும் இறைவனிடம் கேளுங்கள். இறைவனிடம் கெஞ்சுங்கள். கண்ணீர் விடுங்கள். ஆனால் பிறரிடம் கெஞ்சி மரியாதையினை இழக்கக்கூடாது.

    * எவ்வளவு தேவையோ அதை விட சற்று குறைவாகவே பேசுங்கள். அதிக பேச்சுக்கு மரியாதையே கிடையாது.

    * உங்களை சிறிது மரியாதை குறைவாக யார் நடத்தினாலும் உடனே எதிர்த்து விடுங்கள்.

    * உங்கள் மீது அக்கறை இல்லாதவர்களுக்காக அவர்களை நீங்கள் தேடி செல்ல வேண்டாம்.

    * எப்போதும் சுத்தமாக, கம்பீரமாக, அழுக்கில்லாத உடை எடுத்து இருப்பது மிகவும் முக்கியம்.

    * எதனையும் பேசுவதற்கு முன்னால் சிறிய இடைவெளி கொடுங்கள். 95 சதவீதம் பிரச்சினைகள் எழாமலே போய் விடும்.

    * முதலில் உங்களை கவனியுங்கள். அதற்கு வேறு யாரும் உங்களுக்கு இல்லை.

    * ஊர் வம்பு மிக மோசமான நோய். அதனை கிட்ட நெருங்க விடக்கூடாது.

    * சற்று சிந்தித்துப் பாருங்கள். கடந்து போன ஒரு நொடியினை எத்தனை கோடிகள் செலவழித்தாலும் திரும்ப கொண்டு வர முடியுமா? நடந்த ஒரு நிகழ்வினை மாற்ற முடியுமா? அப்போது காலத்திற்கு அது ஒரு நொடியாயினும் மதிப்பினை கணக்கிட முடியாது. ஆக ஒவ்வொரு நொடியிலும் முழு கவனத்துடன் செயல்படுங்கள்.

    * கோபம் கொப்பளிக்கின்றதா? உடனே எதுவும் பேசாது அந்த இடத்தை விட்டு வெகு தூரம் நகர்ந்து விட வேண்டும்.

    * பிறரை உங்கள் வார்த்தைகள் காயப்படுத்தும் என்றால் ஒரு பேச்சு கூட வெளி வரக்கூடாது. அத்தகைய சுய கட்டுப்பாடு வேண்டும்.

    * உங்கள் அமைதி உறவுகளை முறிக்காது, காப்பாற்றும் என்றால் தப்பே இல்லை. வாயை சிமெண்ட் போட்டு பூசி விடுங்கள்.

    நாம் மகிழ்ச்சியாக இருக்க சின்ன எளிய வழிகள்!

    * அதிக நேரம் செல்போனுக்குள் மூழ்காதீர்கள். ஆய்வுகள் கூறுவது அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பவர்களோ சிலர் காலை முதல் இரவு வரை டி.வி. குறிப்பாக சீரியல்கள் பார்ப்பார்கள். இவர்கள் எளிதில் மனச்சோர்வு, மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறது.

    * நாம் வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடிக்கொண்டே இருப்போம். வர வேண்டிய நன்மைகளும் சரியான நேரத்தில் வந்து சேரும்.

    * உடற்பயிற்சி செய்ய சோம்பலாக இருக்கும்தான். செய்த பின் சற்று பலவீனமாகக் கூட உணரலாம். ஆனால் உண்மையில் உறுதியானவர் ஆக்குகின்றது. அது போல்தான் வாழ்க்கையும்.

    * பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது பயமாக இருக்கலாம். ஆனால் அது உங்களை தைரியமானவர் ஆக்குகின்றது என்பதனை உணர்கின்றீர்களா? அதுதான் வாழ்க்கை.

    இதையெல்லாம் புரிந்து கொண்டு விட்டால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது?

    சகுனி என்ன மகாபாரதத்தில் மட்டுமா இருந்தார்?

    குடும்பத்தினைப் பிரிக்க ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும் இருக்கின்றார். காட்டிக் கொடுக்கவும், மாட்டிக் கொடுக்கவும் வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் ஒரு எட்டப்பர் இருக்கின்றார்.

    பழி சொல்ல பத்தாயிரர் பேர், வழி சொல்ல ஒருவர் இல்லை.

    மனம் அமைதியாய் இருந்தால் இவைகள் புரியும்!

    * நமக்கென்ற எல்லைக் கோடுகளை வகுத்துக் கொள்வது சுயநலம் அல்ல. கட்டுப்பாடு என்று.

    * பிறருடைய கருத்தும் நம் கருத்தும் வேறுபட்டால் அது கருத்து வேறுபாடே அன்றி பகைமை ஆகாது.

    * பிறர் உங்களைப் பற்றி கூறும் தவறான கருத்தினைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

    * இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு வேலையினை 2 மாதம் தள்ளிப்போட்டு அதனை மனதினில், எண்ணத்தினில் சுமையாக சுமக்கக் கூடாது.

    * சற்று நேரம் வெளியில் காலாற நடப்பது எத்தனை இயற்கை தரும் 'இதம்' என்று புரியும்.

    * அன்றைய நாளினை சில பகுதிகளாக பிரித்து அந்த பகுதியில் குறிப்பிட்ட வேலையினை செய்வது எத்தனை எளிதாய் வாழ்க்கையினை மாற்றும் என்று பரியும். பல் தேய்ப்பதும் 10 மணி, காலை உணவு 11 மணி, குளிப்பது கண்ட நேரத்தில் என்று இருப்பவர் பலர். இவர்கள் நேரத்தினை பிரித்து உரிய வேலை செய்வது என்பது ஒழுக்கமாக அமையும்.

    * செல்போன் அருகில் இல்லாது இருப்பது எத்தனை அமைதி என்று புரியும்.

     

    கமலி ஸ்ரீபால்

    * நிதானம் அமைதியானது, ஆழமான முடிவுகள் கொண்டது. கூடவே வேகமான தும் கூட. வேகம் ஒரு வகை பதறல்தான்.

    * என்ன செய்ய வேண்டும் என்ற லிஸ்ட் முக்கியம். 'என்னவெல்லாம் செய்யக்கூடாது' என்ற லிஸ்ட் மிக மிக முக்கியம்.

    * முக்கியமானவை என்ற லிஸ்டில் 2-3க்கும் மேல் இருந்தால் எதுவுமே முக்கியமில்லைத்தான்.

    * நம்மோடு மட்டுமே நம்மை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். நேற்று இருந்த நம்மை, இன்று இருக்கும் நம்மை ஒப்பிட்டு பாார்த்துக் கொள்ளலாம்.

    * மன அமைதி வாழ்வின் சொர்க்கம் என்பது புரியும்.

    • துறவறம், இல்லறம் என்னும் இரண்டு ஒழுக்கங்கள் முதன்மையானவை.
    • இல்லற வாழ்வைத் தவறவிட்டவர்கள் வாழ்வின் இனிய பக்கங்களைத் தவறவிட்டவர்கள் ஆவர்.

    சிறந்த தம்பதி யார் என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.

    ஆண்மையும் பெண்மையுமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலக உயிர்மைப் பண்பாட்டில், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றாக இல்லற வாழ்வை ஏற்று இணைந்து வாழ்கிற நாகரிக வாழ்க்கையை மனிதர்கள் மட்டுமே கடைப்பிடித்து வருகின்றனர். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒழுக்கங்கள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள், துறவறம், இல்லறம் என்னும் இரண்டு ஒழுக்கங்கள் முதன்மையானவை.

    துறவு வாழ்வு வாழ்வதற்கு ஒருவனோ, அல்லது ஒருத்தியோ போதுமானது ஆகும்: அடுத்தவர் துணையின்றித் துறவு வாழ்க்கையைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், இல்லற ஒழுக்கத்தைப் பேணுவதற்கு, ஒருவனும் ஒருத்தியும் ஆகிய இருவர் மனமொத்து இணைய வேண்டும். மனமொத்து இணைவதற்குத், திருமணம் என்னும் சடங்கு முக்கியமான நுழைவுச் சீட்டாகக் கருதப்படுகிறது. அவனும் அவளும் மனம் ஒருமித்து இணைகிற காதல் மணமாயினும் சரி!, அவனையும் அவளையும் அறிந்த சான்றோர் தேடிக் கண்டுபிடித்து மணம் செய்துவைக்கின்ற நிச்சயித்த மணமாயினும் சரி! ஊரோர் அறியத் திருமணம் நடந்து அவர்கள் தம்பதியராய் வாழவேண்டும். தனியராய்ப் பிறந்து வளரும் ஆணும் பெண்ணும் உரிய பருவத்தில் இல்லறத்தில் இணைந்து குடும்பம் நடத்தத் தொடங்கும்போது அவர்கள் தம்பதியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

    ஆணும் பெண்ணும் இணையராய் இணையும் போது, எல்லாவகைப் பொருத்தங்களும் பார்க்கப்படுகின்றன; இந்தக் காலங்களில், மாப்பிள்ளையும் பெண்ணும் முடிவானபின்னர், அவர்களிருவரும், ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரம் முறைகூடக் கலந்துரையாடுகின்றனர். இருவரும் மனம்விட்டுப்பேசி முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், திருமணம் முடிந்த அடுத்த வாரமே ஆயிரம் மனத்தாங்கல்களும், சண்டை சச்சரவுகளும் தலைதூக்கி விடுகின்றனவே! காரணம் என்ன?. பெற்றோர்கள் பார்த்துவைக்கும் திருமணங்கள் மட்டுமல்ல, தம்பதியர் இருவரும் திருமணத்திற்குமுன் அவர்களாகவே விருப்பப்பட்டுக் காதலித்தனர் என்றாலும்கூட, திருமணத்திற்குப் பின் சண்டைகள் விதிவிலக்கல்லவே!.

    'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!' என்பது பழமொழி, வேறொரு முறைமையில், 'திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!' என்று சொல்லப்படுகிறது. அன்பும் அறமுமாகக் குடும்பத்தில் தழைக்கவேண்டிய மணமக்கள், தற்போது விலைகொடுத்து வாங்கப்படுகிற சந்தைப்பொருளாக மாறிவிட்ட அவலத்தை இப்பழமொழி தமிழ்ச் சவுக்குக் கொண்டு சாடுகிறது.

    ஆணும் பெண்ணுமாக இணைந்துவிட்ட பின்னர், ஒருவருக்கொருவர் அன்பு செய்யக் கற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கப் பழகிக்கொண்டு, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிப்பரிமாறி, இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொண்டு, நல்லறங்களை இணைந்தே செய்யும் நல்லொழுக்கத்தைப் பயின்றுகொண்டு வாழும் உயர்ந்த நெறிகளை இல்லறமே ஊட்டிவளர்க்கிறது. இல்லற வாழ்வைத் தவறவிட்டவர்கள் வாழ்வின் இனிய பக்கங்களைத் தவறவிட்டவர்கள் ஆவர்.

    சுந்தர ஆவுடையப்பன்

    இந்த உலகில் படைப்புக் கடவுளின் வேலைகளை அவர் சார்பில் இல்லறத்தாரே நிகழ்த்திக் காட்டுகின்றனர்!. ஆம் ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைந்து, கருக்கூடி, பிள்ளைகள் பெற்றுப், புதிய தலைமுறைகளை இந்த உலகத்தில் உலவவிடும் படைப்பாளிகள் ஆகின்றனர். உலக மாந்தரிடையே இருக்கவேண்டியதாக வலியுறுத்தப்படும் அன்பு, கருணை, இரக்கம், பரோபகாரம், நன்றியுணர்வு, இனிய சொற்கள், உண்மை பேசுதல், உதவிசெய்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற எல்லா ஒழுக்க குணங்களும் உற்பத்தியாக வேண்டிய இடம் குடும்பமாகவே இருக்கிறது.

    ஆனால் இன்று குடும்பம் குடும்பமாகவா இருக்கிறது?. திருமணமான அடுத்த நாளிலிருந்தே யார் பெரியவர்? யார் அறிவாளி? யார் வசதியானவர்? யார் பலசாலி? எனும் ஆணவப் போராட்டங்களால் இன்று தம்பதியர் தம்பதியராய் இருப்பதில்லை. ஆணின் மனத்தைப் பெண்ணும், பெண்ணின் மனத்தை ஆணும் முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே, இருவருமே திறமையான தம்பதியராய் வாழமுடியும்.

    இரண்டு அரசர்கள் போரிட்டனர். ஒருவன் வெற்றி கண்டான்;. இருந்தாலும், வெற்றிபெற்ற அரசன் தோல்வியடைந்த அரசனிடம், "மீண்டும் உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். இந்தமுறை நீ என்னோடு சண்டைபோட வேண்டாம்; நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியான பதிலை யாரிடமாவது கேட்டுவந்து என்னிடம் சொல்!. பதில் சரியானதாக இருந்தால், உன்னிடமிருந்து நான் ஜெயித்த நாட்டை உனக்கே திருப்பித் தந்துவிடுகிறேன்!" என்றான். சரியென்று தோற்ற மன்னன் ஒப்புக்கொண்டதும் கேள்வியை வென்ற ராஜா சொன்னான்," பெண்கள் தங்கள் ஆழ்மனத்தில் என்ன சிந்திப்பார்கள்?. இதுதான் கேள்வி. இதற்கான பதிலை நீயே சொல்லலாம்! அல்லது யாராவது ஞானியரிடம் கேட்டுவந்து சொல்லலாம்!. ஆனால் ஒருவாரத்திற்குள் சொல்லியாக வேண்டும்" இந்தக் கேள்வியை, வென்ற ராஜா அவனாகக் கேட்கவில்லை!; அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்; அவள் அவனிடம் கேட்ட கேள்விதான் அது; இந்தக் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் மட்டுமே அவனை அவள் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிப்பாளாம்.

    தோற்ற ராஜா தன் நண்பர்கள், அமைச்சர்களிடம் ஆலோசித்தான். சரியான பதிலாக எதுவும் பிடிபடவில்லை; ஆனால் எல்லா நண்பர்களும் ஒருமுகமாக ஒரு கருத்தைச் சொன்னார்கள். அந்த நாட்டின் மலை உச்சியில் ஒரு சூனியக்காரக் கிழவி இருக்கிறாள்; அவளிடம் போனால் நிச்சயம் சரியான பதிலை அவளிடமிருந்து பெற்று வரலாம்! என்பதே அது. ராஜா மலை உச்சிக்குச் சென்று கிழவியிடம் வந்த காரியத்தைச் சொன்னான். "பெண்கள் ஆழ்மனத்தில் நினைப்பது என்ன?". "இதற்குச் சரியான பதிலைச் சொன்னால் உனக்கு என்ன கிடைக்கும்?" சூனியக்காரக் கிழவி கேட்டாள். "நான் இழந்த எனது நாடு எனக்குத் திரும்பக் கிடைக்கும்!" என்றான் ராஜா. "சரி உனக்கு உன் நாடு கிடைக்கும்! பதிலைச் சொல்லப்போகிற எனக்கு என்ன கிடைக்கும்?" விவகாரமாய்க் கேட்டாள் கிழவி. "நீ என்ன கேட்டாலும் தருவேன்! இது சத்தியம்; பதிலைச் சொல்!" சொன்னான் அரசன்.

    "எந்தப் பெண்ணாக இருந்தாலும் தான் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும்! என்றுதான் ஆழ்மனத்தில் விரும்புவாள்!" என்றாள் சூனியக்காரக் கிழவி. தோற்ற அரசன், வென்ற அரசனிடம் இந்த பதிலைச் சொல்ல, அவனும் அவனது காதலியிடம் சொல்ல, காதலியும் மகிழ்ச்சியோடு பதிலை ஏற்றுக்கொண்டு, திருமணத்திற்குச் சம்மதிக்க. தோற்ற அரசனுக்கு இழந்த நாடு இப்போது திரும்ப வந்து அவன் மீண்டும் மன்னன் ஆனான்.

    தன் நாட்டிற்கு மன்னன் ஆன கையோடு மலை உச்சியிலிருந்த சூனியக்காரக் கிழவியைக் காணச் சென்றான் ராஜா. " சொல்! உனக்கு என்ன வேண்டும் கேள்!" கேட்டான்; " நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள் கிழவி. மறுவார்த்தை பேசாமல் சரி என்று ஒத்துக்கொண்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கிளம்பினான். " அதற்கு முன் ஒரு நிபந்தனை!" என்றாள் சூனியக்காரக்கிழவி. "என்னை நீ மணம் முடித்தபிறகு நீ சரியென்றால், பகல் முழுவதும் தேவதையாக உருவெடுத்து உன் உடன் இருப்பேன்!; ஆனால் இரவு முழுவதும் சூனியக்காரக் கிழவியாக மாறி விடுவேன்!; இல்லை நான் இரவில் தேவதையாக இருந்தால் நல்லது என்று நீ விரும்பினால்… அதற்கும் சரி! ஆனால் பகலில் நான் உன்னுடன் சூனியக்காரக் கிழவியாக இருப்பேன்! பரவாயில்லையா?" கேட்டாள் கிழவி.

    யோசித்தான் ராஜா. "என்ன பேசாமல் இருக்கிறாய்? சொல்! நான் எப்போது கிழவியாகவும், எப்போது தேவதையாகவும் இருக்க வேண்டும்?" திருத்தமாகக் கேட்டாள் கிழவி. " நீ பெண்ணாக இருப்பதால், உன் சம்பந்தப்பட்ட முடிவுகளை நீயே எடுப்பதையே நீ பெரிதும் விரும்புவாய் என்பதால், இது தொடர்பான முடிவை நீயே எடுத்துக்கொள்!" என்று தெளிவாகச் சொல்லி விலகிக்கொண்டான் ராஜா. மனம் மகிழ்ந்த கிழவி," என் முடிவை நானே எடுத்துக்கொள்ள வேண்டும் என வழிவிட்டதால், இனி இரவு பகல் எந்நேரமும் வாழ்க்கை முழுவதுமே நான் தேவதையாகவே உன்னுடன் குடும்பம் நடத்துவேன்!" என்று தன் முடிவை அறிவித்தாள் கிழவி. ஆம். பெண்கள் விஷயத்தில், அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்களையே முடிவெடுக்க விட்டுவிட்டால் அவர்கள் எப்போதும் தேவதையாகவே இருப்பர். இடையிடையே ஆண்கள் தங்களது அதிகாரத்தைத் திணிக்க நினைத்தால்... இடையிடையே அந்த அருவருப்பான முகங்களையும் சந்திக்க நேர்ந்து விடும்.

    இல்லறம் என்பது இரண்டு கருவிகளையோ அல்லது இரண்டு பொம்மைகளையோ வைத்து இயக்கி நடத்தும் விளையாட்டு அல்ல.

    ரத்தமும் எலும்பும் சதையும் உயிரும் மனமும் கொண்டு உணர்வோடு இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு மனிதங்களின் வாழ்வியல் சாதனை. எல்லாச் சாதனைகளும் வெற்றிகளில்தான் நிறைவடைகின்றன என்பது கிடையாது. சோதனை நிகழ்வுகளும் உண்டு; சோதனைகளைத் தோல்வி நிலைகளுக்குச் சென்றுவிடாமல் அவ்வப்போது நேர்படுத்த வேண்டிய பொறுப்பும் உண்டு.

    எப்போதும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றால், யார் பேசுவது? யார் அமைதியாக இருப்பது?. விட்டுக்கொடுப்பதுதான் வாழ்க்கை என்றால் எப்போதும் நான்மட்டும்தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா?... நான் எந்த வகையில் குறைச்சல்?...இப்படிக் கேட்டுக் கொண்டே போனால் வாதம்தான் பெருகுமே யொழிய வழிபிறக்காது.

    ஒரு போட்டி நடந்தது. 'சிறந்த தம்பதி யார்?'. திருமணமாகி ஓராண்டு ஆனவர்கள் முதல் ஐம்பதாண்டு கடந்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். ரகசிய நேர்காணல் நடத்தி மதிப்பெண்கள் போடப்படும். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒரு தம்பதி அரங்கத்துக்குள் நுழையும்போதே சண்டை நாறி விட்டது. இதுல எல்லாம் ஜெயிச்சு பரிசு வாங்கலாம்னா கூட்டிட்டு வர்றீங்க! ஒரு பரிசும் கிடைக்காதபடிக்கு நான் பார்த்துக்கிர்றேன்!- சபதம்போட்டு உள்ளே வந்தார் அந்த முப்பத்தைந்து வருடமான தம்பதியின் மங்கையர் திலகம். ரகசிய நேர்முகங்கள் முடிந்து மதிப்பெண் முடிவை அறிவித்தனர். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளான ஒரு தம்பதி நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தனர். அந்த சண்டை போட்டுக் கொண்டு அரங்கத்துக்குள் நுழைந்த 35 வருட தம்பதி நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆனாலும் சிறந்த தம்பதியாக வென்றவர்கள் யார் தெரியுமா? பூஜ்யம் மதிப்பெண் எடுத்த அந்த ஒத்துப்போகாத தம்பதியர்.

    நடுவர்கள் சொன்னார்கள்," இல்லற வாழ்வில் மனம் ஒத்து பதினைந்து ஆண்டுகள் இணைந்து வாழ்வதை விட, சண்டைபோட்டாலும், மனம் ஒத்துப்போகவில்லை என்றாலும் தொடர்ந்து 35 ஆண்டுகள் பிரியாமல் ஒன்றாக வாழ்வதே பெரிய சாதனைதான்; எனவே அவர்கள்தான் சிறந்த தம்பதி!"

    வித்தியாசமான தீர்ப்புதான். சங்கடமில்லாத வாழ்க்கையுமில்லை.;சதுரமான முட்டையுமில்லை என்பார்கள்; தம்பதியரிடையே சண்டை என்பது சாம்பாரில் உப்புப் போடுவதைப்போல இருந்தால் அதுவும் சுவைதான்.

    தொடர்புக்கு: 9443190098

    • கசடு இப்படித்தான் இருக்கும் என்பதை அறிவது ஒரு கல்வி.
    • திருக்குறள், திருஅருட்பா, திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களின் தன்மையை தெரிந்திருக்க வேண்டும்.

    அதிகாரம்: கல்வி

    இந்த அதிகாரத்தில்,

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

    என்ற குறளில் தொடங்கி

    கேடில் விழுச்செல்வம் கல்வி

    யொருவற்கு

    மாடல்ல மற்றை யவை.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    கல்வி என்ற இந்த அதிகாரம் அரசியலில் இடம் பெற்றுள்ளது. எனவே இதனை மன்னருக்கு முதலில் கூறியிருக்கின்றார். ஒரு மன்னர் ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எதிரியை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதை அறிந்து போர் பயிற்சியையும் போர்கலைகளையும் கற்றுக் கொள்வது அவசியமான கல்வியாகும். இதனால் நாட்டை பாதுகாக்கின்ற முறையை அறிந்து அரசியல் நுணுக்கங்கள் அறிந்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்ய முடியும்.

    இல்லறத்தார்கள் தங்கள் தொழிலை செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் உலக நடை கல்வியைப் பயில வேண்டும். அது பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு போன்றவை ஆகும். இது உலகியல் வாழ்க்கைக்கு உதவும்.

    மற்றொரு கல்வி உயர்ந்ததாக கருதப்படுகிறது. அது பிறவிப் பிணிக்கு மருந்தாக இருக்கும். அவற்றுள் மரணத்தை வெல்லுவதற்கான உபாயம் கூறப்பட்டிருக்கும். அதனை படித்தால் தேகக்கசடு நீங்குவதற்கான வழியையும் உபாயத்தையும் கூறியிருப்பார்கள். அதில் மாசு இப்படித்தான் இருக்கும் என்பது சொல்லப்பட்டிருக்கும்.

    இந்நூலில் மனமாசுபற்றியும் களிம்பை அறுப்பது பற்றியும் மும்மலத்தை நீக்குவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கும். இதனை ஐயப்பாடு இல்லாமல் அறிந்து அதனை இயற்றியவர்களின் திருவடியின் மீது பக்தி செலுத்தி தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

    உடலைப் பற்றி அறிந்து கொள்வதும், உடலில் உள்ள கசடைப் பற்றி அறிந்து, அதை நீக்குவது பற்றி அறிந்து கொள்வதும் உயர்ந்த கல்வி. கசடு இப்படித்தான் இருக்கும் என்பதை அறிவது ஒரு கல்வி. அந்த கசடை அறுக்க முயற்சிப்பது ஒரு முயற்சி. உண்மை தெரிந்து கொண்ட பின்புதான் கசடு அற்றுப்போகும். அதன் பின் களிம்பை அறுக்க வேண்டும்.

    திருக்குறள், திருஅருட்பா, திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களின் தன்மையை தெரிந்திருக்க வேண்டும். இந்த நூல்கள் வாழ்க்கைக்கு பயன்படக் கூடிய நூல்கள். உலகநடை அறிந்து வாழ்வதற்கு உரிய நூலாகவும், உயரிய நூலாகவும் இருக்கும். இந்த நூல்கள் உயிரைப் பற்றியும் உடலைப் பற்றியும் சொல்லும். இந்த ஞானநூல்களின் துணைகொண்டு ஆன்மாவைப் பற்றி அறியலாம். ஆன்மாவைப் பற்றி அறிந்தால்தான் உடலைப்பற்றி அறிய முடியும்.

    அவாவை அறுக்க வேண்டும். அவாவிற்கு உடம்புதான் காரணம். பசிக்கு காரணம் இயற்கை. மூச்சுக்காற்று அசைவுக்கு காரணம் பசி. பசியின் காரணமாக உணவு. இந்த தேகம் உணவில் உள்ள சத்தை ஊட்டி அசத்தை வெளியே தள்ளுகிறது. இதற்கு கருவிகரணங்கள் காரணமாக உள்ளது.

    சத்து ஊட்டும்போது உடல் வளர்கிறது. அதுவே காமத்திற்கு காரணமாக உள்ளது. சாப்பிடாமல் இருந்தால் காமம் அறுபடுமா? அறுபடாது. பட்டினி போடாமல் காமத்தை அறுக்க வேண்டும். இதனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டால் கசடற கற்றுக் கொண்டான் என்பது ஆகும். கசடு என்ற அழுக்கை அறிந்து அதனை அறுக்க கற்றுக்கொள்கிறான்.

    ஆன்ம வளர்ச்சிக்கு கற்க வேண்டிய நூலைக் கற்றான். ஆன்மா ஆக்கம் பெற்றால் அறிவு ஆக்கம் பெறும். அப்போதுதான் ஆன்மாவின் இயல்பை அறிய முடியும். உயிருக்கு ஆக்கம் தரக்கூடியது ஒன்று பக்தி. மற்றொன்று தர்மம்.

    பக்தி செலுத்துவது ஆன்மா ஆக்கம் பெறுவதற்காகத்தான். ஆன்மா ஆக்கம் பெற்றால் உடல் ஆக்கம் பெறும். உடம்பையும் உயிரையும் அறிந்து, இரண்டையும் சேர்க்க கற்றுக் கொள்வதே உயர்ந்த கல்வி. இதுவே சாகாக் கல்வி. இத்தகைய கல்வி அழியாத செல்வத்தையும், அழியாப் புகழையும் தரும்.

    அசுத்தமான உயிருக்கு ஆக்கம் தருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கீழ்தரமான ஆன்மாவிற்கு ஆக்கம் தரமுடியாது. மலமற்றவனின், அழுக்கு நீங்கியவனின் ஆசி பெறும் போதுதான் ஆன்மா மாசற்றதாக மாறும். மாசுள்ள உயிரை மாசற செய்வது புண்ணியம். புண்ணியவான்களின் திருவடியைப் பற்றினாலன்றி அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியாது.

    ஆசையை நீத்துப் போக செய்தல் வேண்டும். நீத்துப் போகுதல் என்பது பெரிய விசயம். தேகம் தோற்றமாக இருக்கும், நடமாடிக் கொண்டிருக்கும், ஆன்மா பிரிந்தால் பிணமாகும். நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைத்தால் கரியாக மாறும். அதனை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது சாம்பலாக மாறும், நீத்துப்போகும்.

    இந்த ரகசியத்தை அறிவதுதான் சாகாக்கல்வி.

    ஞானிகளின் திருவடியை உள்ளம் உருக பூஜித்தால்தான் ஞானிகள் இதை நமக்கு உணர்த்துவார்கள்; உணர்த்தினாலன்றி இதை உணர முடியாது. ஞானிகளின் திருவடியை பூஜை செய்தால்தான் நமக்கு நீக்குவதா, அறுப்பதா, நீத்துப்போவதா என்பதைப் பற்றி தெரியும்.

    நீத்துப் போன தேகத்தில் பசி இருக்காது, காமம் இருக்காது, சூடு இருக்காது, கருப்பு இருக்காது, வெள்ளையாக இருக்கும். நெருப்பை அணைத்தால் கரியாக இருக்கும். அதை எரித்தால் சாம்பலாக இருக்கும். இங்கு நெருப்பும் இல்லை; கரியும் இல்லை நீத்து விட்டது.

    எந்த இயற்கை நம்மை வஞ்சித்ததோ? எந்த இயற்கை பசிக்கு காரணமாக இருந்ததோ, எந்த இயற்கை பசிக்கு உணவாக இருந்ததோ, எந்த இயற்கை பசிக்கு கருவிகரணங்களாய் இருந்ததோ, எந்த இயற்கை தொண்ணூற்றாறு தத்துவங்களாய் இருந்ததோ, அதே இயற்கையின் துணை கொண்டு நம்முள் இருக்கும் அற்புத சக்தியை தட்டி எழுப்புவதற்கே இந்த உடம்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்து கொண்டால் இந்த உடம்பு எக்காலத்திலும் அழியாத உடம்பாக மாறும். இல்லையெனில் நம்மை இந்த உடம்பு நரகத்தில் தள்ளி விடும். இத்தகைய இயற்கையின் ரகசியத்தை அறிந்தவர்களின் திருவடியை பற்றிக் கொள்வதே உயர்ந்த கல்வி.

    இயற்கை அன்னையை புரிந்து கொண்டவர்கள் ஞானிகள். அவளே நம் உடம்பில் காளியாகவும் இருப்பாள், அசுத்த மோகினியாகவும் இருப்பாள், அவளே கருணை பொருந்திய தாயாகவும் இருப்பாள். அவளைப் புரிந்து அவள் சீற்றத்தை தணித்தால், அவள் நமக்கு அமிழ்தபானம் ஊட்டி நம்மைக் காப்பாற்றுவாள். இயற்கை அன்னை என்றும் வாழ்பவள்.

    தோற்றுவிப்பதற்கு முன்பு அரூபமாக இருப்பாள். பின்பு ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பாள். பல்வேறு ஜீவராசிகளாகவும் இருப்பாள். மும்மலமாகவும் இருப்பாள். பரிணாம வளர்ச்சியாகவும் இருப்பாள். அவளே நரை திரை மூப்பாகவும் இருப்பாள்.

    இயற்கை அன்னையைப் புரிந்து கொண்டால் தாயாக மாறுவாள். அவளின் கொடுமையை மாற்ற வேண்டும், வஞ்சகத்தை உடைத்தெறிய வேண்டும். அவள் நமக்கு தாயாக மாறவேண்டும். அதற்கு ஒரே வழி மலமறுத்தான் திருவடி. அதைத் தவிர வேறு வழியில்லை. ஞானிகளின் திருவடியைப் பற்றினால் இதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    ஞானிகள் ஆன்மாவைப் பற்றி அறிந்து ஆன்மாவிற்கு ஆக்கம் தேடிக்கொண்டவர்கள். அவர்களை வணங்கினால் சிறப்பறிவு ஏற்படும். ஞானியர்களின் திருவடியை பூஜை செய்வதும் புண்ணியம் செய்வதுமே சிறப்பறிவு. பக்தி ஆன்மாவிற்கு விளக்கம் தரக்கூடியது. புண்ணியம் ஆன்மாவிற்கு ஆக்கம் தரக்கூடியது.

    பக்தியும் புண்ணியமும் சேர்ந்தால் பரிணாம வளர்ச்சிக்குட்பட்ட தேகம் மாசற்று போகும். உயர்ந்த சாகாக் கல்வி இலகுவானது. இங்கு உடல் உழைப்புக்கு வேலை இல்லை, அறிவுக்கு மட்டுமே வேலை. இந்தக் கல்வி சிந்தனை தெளிவால் பெறக்கூடியது. இதனை தெரிந்து கொள்ள சொற்குருவின் ஆசியிருக்க வேண்டும். சாகாக்கல்வி சான்றோர் தொடர்பினாலும் விடா முயற்சியினாலும் கிடைக்கக்கூடியது.

    புலால் உணவு உண்பது, உயிர்க்கொலை செய்வது போன்ற பாவங்களை செய்வதாலும், குணக்கேடுகள் இருப்பதாலும் இதனை அறிய முடியாது. இவர்கள் முயற்சிப்பது வறண்ட நிலத்தில் கிணறு வெட்டுவது போன்றதாகும்.

    உண்மைப் பொருளை அறிந்து முயற்சித்தால் இத்தகைய கல்வி ஏழு ஜென்மத்திற்கு துணையாக நிற்கும். ஒரு ஜென்மத்தில் இந்த கல்வியைக் கற்றுக் கொண்டால் அதுதான் ஏழு ஜென்மத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும். ஆகவே ஞானிகளின் திருவடிகளைப் பற்றினாலன்றி இதனைக் கற்க முடியாது.

    ஞானிகள் திருவடியைப் பற்றுவதே சாகாக் கல்வி. அதற்கு புண்ணியம் அவசியம். பிறருக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் புகழும் உண்டாகும். புண்ணியமும் பெருகும், ஆன்மாவிற்கு ஆக்கம் உண்டாகும், உடம்பும் உயிரும் சேர்ந்து கொடுப்பதால் உயிரும் ஆக்கம் பெறும். இத்தகைய புண்ணியம் நாம் மேற்கொள்கின்ற தவமுயற்சிக்கு துணையாக இருக்கும். இதனால் உயிர் ஆக்கம் பெறும், உடலில் நோய் இருக்காது, வறுமை இருக்காது, சிறப்பறிவு உண்டாகும்.

    நாம் எடுத்துக் கொண்ட லட்சியங்கள் ஈடேற தடையாய் இருக்கின்ற பொறிபுலன்களை அடக்கிக்கொள்ள வேண்டும். மோட்சத்திற்கும் அல்லது முக்திக்கும் எவையெல்லாம் தடையாய் இருக்கின்றதோ அவற்றை அடக்கிக் கொள்ளவேண்டும். பொறி புலன்களை அடக்குவது இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து இறுதியில் முக்தி பெறுவதற்கான பலனைக் கொடுக்கும்.

    அடக்கமாக இருந்து இதனை அறிந்து கொண்டவன் பிறருக்கு சொல்ல வேண்டும். அதுதான் பிறருக்கு பலன் தரும். மாசற்ற குணம், மாசற்ற தேகம், மாசற்ற கல்வி போன்றவற்றை கற்றவன் சொன்னால் அது ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகவே இருக்கும். அதுபோன்ற கல்வி உயர்ந்த கல்வி, சாகாக் கல்வி.

    மனிதவர்க்கம் அறிந்து கொள்வதற்கு இரண்டு கல்வி உண்டு. ஒன்று உலக நடை அறிந்து கொள்வதற்காக உள்ள கல்வி. மற்றொன்று ஆன்மாவையும், ஜென்மத்தையும் அறிந்து இனி பிறக்காமல் இருப்பதற்கான வழியைச் சொல்லும் கல்வி ஆகும். இதற்கான விளக்கம் எந்த நூலில் இருக்கின்றதோ அதனை படிக்க வேண்டும். அதுவே சாகாக் கல்வி, உண்மைக் கல்வி. இத்தகைய கல்வியை யாராலும் பறிக்க முடியாது. இதனைக் கற்றால் எங்கு சென்றாலும் சிறப்பு உண்டு.

    மரணத்தை வென்றவர்களின் திருவடியைப் பற்றி பூஜை செய்து சாகாக் கல்வியை அறிந்து கொள்ளலாம். நாமும் சாகா வரத்தை பெறலாம். தேகத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதும், கசடைப் பற்றி அறிந்து கொள்வதும், கசடை நீக்குவது பற்றி அறிந்து கொள்வதும் உயர்ந்த கல்வி. உடம்பையும், உயிரையும் சேர்க்க கற்றுக்கொள்வதே உயர்ந்த கல்வி.

    ஆன்மாவையும் ஜென்மத்தையும் அறிந்து இனிப்பிறக்காமல் இருப்பதற்கான கல்வி சாகாக்கல்வி ஆகும்.

    சாகாவரத்தைப் பெறுகின்ற கல்வி சாகாக்கல்வி. சாகாக்கல்வியை யாராலும் பறிக்க முடியாது. சாகாவரத்தைப் பெற்றால் எங்கும் சிறப்பு உண்டு.

    • ‘நல்ல பேறு கொடுப்பேன் என மகனை கூட்டி வரச் சொன்ன இறைவன் இவ்வாறு செய்துவிட்டாரே’ என அழுது புலம்பினார்.
    • வைகுண்ட சுவாமிகள் விஞ்சை பெற்ற வேளையில் நாராயண மூர்த்தி அருளியதாக சில அருள்மொழிகளை அகிலம் தொகுத்தளிக்கிறது.

    கி.பி.1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் வருடம் 1008 மாசி) திருச்செந்தூர் முருகவேள் ஆலயத்தில் கொடியேற்று விழாவுடன் மாசித்திருவிழா தொடங்கியது. விழாவிற்கு சென்ற முத்துக்குட்டியும் செந்தூர் அலைவாயிலில் புனிதத் தீர்த்தமாட வேண்டி மார்ச் முதல் நாள் கடலினுள் இறங்கினார். அப்போது அவரைத் திரை இழுத்துச் சென்றது. கடலுக்குள் சென்ற மகனை காணோமெனத் தாயார் கதறி அழுது புலம்பினார். 'நல்ல பேறு கொடுப்பேன் என மகனை கூட்டி வரச் சொன்ன இறைவன் இவ்வாறு செய்துவிட்டாரே' என அழுது புலம்பினார்.

    ஆனால் தாயாரும் ஏனையோரும் அறிய கடலினுள் மறைந்த முத்துக்குட்டி மூன்றாவது நாள் (மார்ச் 3) அற்புதம் நிகழ்த்தினார்.

    ஆழ்கடலின் மேற்பரப்பிலிருந்து தனது திருமுகத்தைக் காட்டினார். யாவரும் அவரது திடீர்த்தோற்றத்தில் வியப்புற்றுத் தம்மை மறந்திருக்கையில் முத்துக்குட்டி கரையை நோக்கி வந்து தாயாரிடம் சென்றார். அவரிடமிருந்து எதிர்பாராதவிதமாக சொற்கள் வெளியாயின.

    "ஆண்டாயிரத்தெட்டு முன்னே அன்னையெனவே நீ இருந்தாய்

    கூண்டாமெட்டாமாசியிலே இருந்தாய் குணமாய் நாராயணர் மகவாய்

    சான்றோர்கெதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து ஒரு

    குன்றாக்குடைக்குள் அரசாள கொண்டே பெற்றேன் கண்டிரு நீ"

    எனக் கூறிக் குடும்ப பந்தத்திலிருந்து விடுவித்து பொது வாழ்வில் அடி எடுத்து வைத்தார்.

    சான்றோர்களை காத்து, தீமைகளை அழித்து அனைத்து அறநெறிகளையும் தழைக்கச் செய்திடுமாறு நாராயண மூர்த்தியும், லட்சுமிதேவியும், வைகுண்டராகத் தன்னை ஈன்றெடுத்த பாங்கினையும் கடலினுள் தான் பெற்ற பேறுகளையும், தான் விஞ்சை பெற்ற நிகழ்ச்சியையும் கூடியிருந்த மக்களிடம் ஐயம் தீர எடுத்துரைத்தார். முத்துக்குட்டி வைகுண்டராகி விஞ்சை அடைந்த விதத்தை நாராயணர் உரையாக அகிலம் கூறுகின்றது:

    "மகனே உனது மனம் அறிய மறையோரறியா விஞ்சை செய்து

    அகமேயருளித் தருவதெல்லாம் மனுபோலசலில் அகலாதே

    யுகமே முடிந்ததின் பிறகு உதிக்கும் தர்மயுகத்தில் வந்தால்

    செகமே அறியச் சொல்லி மிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே"

    வைகுண்டர் தன்னை, கூடி நின்றவர்களிடம் 'இன்று முதல் ' நான்தான் நாராயணன்' எனவும், 'காணிக்கை, காவடி, கைக்கூலி போன்றவைகளை வேண்டாது இருக்கப் போகின்றேன்' எனவும் கூறித் தனது விஞ்சைகளையும் திருமால் தனக்கு அருளிய அறிவுரைகளையும் எடுத்தியம்பினார்.

    தாயாரிடம் 'வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றோர் குடைக்குள் பொய்கொண்டோர்களை பலிசெய்து அரசாளப் போகிறேன், குலக் கிழடே நீ பார் என்று கூறி, 'நங்கையே என்னுடைய நாமம் கேட்டாலே அன்பர்க்குப் பால்போல, பதம்போல பாவம் தீரும்' என உறுதியுடன் சொன்னார்? 'நல்லோர்க்கு நல்லகாலம் உண்டு' என நம்பிக்கை கூறினார். அன்பர்கள், வாடிய பயிர்களின் நடுவில் பெய்த மழைபோலத் தங்களைக் காத்திடத் தோன்றிய வைகுண்ட சுவாமிகள், எனவே அவரைப் போற்றித் தொழுதனர்.

    அருள்உரை

    வைகுண்ட சுவாமிகள் விஞ்சை பெற்ற வேளையில் நாராயண மூர்த்தி அருளியதாக சில அருள்மொழிகளை அகிலம் தொகுத்தளிக்கிறது. சுவாமிகள் காட்டுகின்ற வாழ்வியல் நெறியினை இவ்வருள் உரைகள் தெளிவுபடுத்துகின்றன.

    "ஏதுவினை செய்தாலும் எண்ணம் வையாதே

    தாழ்ந்திரு என் மகனே சட்டைக்குள்ளே பதுங்கி

    சார்ந்திரு என் மகனே தனதில் மிக நினைத்து

    கோபமாய் விழாதே குவிய சிரியாதே

    பாவத்தை காணாதே பராக்கிரமம் காட்டாதே

    ஆத்திரமெல்லாம் அடக்கியிரு என் மகனே

    தாக்குகிறவனாகிடினும் சற்றும் பகையாதே.

    பொல்லாதார் ஆகிடினும்

    வாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே

    சாரமறிந்து தானுரை.

    வல்லாமை பேசாதே மாதிரி போடாதே

    ஏழையாய் இரு நீ.

    எளியோரை கண்டு இரங்கியிரு என் மகனே

    வலியாரை கண்டு மகிழாதே என் மகனே.

    அடக்கம் பெரிது அறிவுள்ள என் மகனே

    கடக்க கருதாதே கற்றோரை கைவிடாதே

    நன்றி மறவாதே நாம் பெரிதென்றெண்ணாதே

    அண்டின பேரையகற்ற நினையாதே

    ஆபத்தைக் காத்து அகல நீ தள்ளாதே

    சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்

    கோபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே

    பாவத்தைக் காணாதே பகட்டு மொழி பேசாதே

    பசுவையடைத்துப் பட்டினிகள் போடாதே

    விசுவாசமதிலே விரோதம் நினையாதே

    எளியோரை கண்டு ஈந்து இரங்கிடு நீ

    அழிவென்று பேச்சுனுப் போல் நினையாதே

    தொட்டுப்பிடியாதே தோர்வை வைத்துக் காணாதே

    விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே

    வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே.

    தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்

    மாழக்கிடப்போர் மதத்தோர்கள் என் மகனே.

    பொறுமை பெரிது

    தர்மம் பெரிது தாங்கியிரு என் மகனே.

    பொல்லாதாரோடும் பொறுமையுரை மகனே.

    பெரியோர்க்கு வாழ்வு பெருகச் சிறந்தாலும்

    மரியாதையாய் இரு என் மகனே.

    சற்றேலே வாழ்வு சகடருக்கே வருகில்

    கற்றோரையாகிடினும் கண்டறிவேன் போ நீ என்பான்

    முள்முருங்கைப் பூ மினுக்கு மூன்று நாளை

    கள்ளருக்கு வாழ்வு காணுமது போல் மினுக்கு

    நல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாமல்

    வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்

    சுவாமிகள் விஞ்சை பெற்ற வேளையில் பெற்ற திருமொழி அனைவருக்கும் வழிகாட்டும் நல்மொழியாக உள்ளது.

    ஊர் திரும்புதல்

    முருகப்பெருமானை அணுகி, 'நாடு கேட்கப் போகிறேன் நாராயணனாகிய நான்; நீ உன் கோபுரத்தின் உயர்ந்த வட மூலையில் பின் கோபுரம் காணப் பிளந்து போட்டு, உலகோர் அறிய ஒரு வாயிலுமடைத்து, செல்லா உன் சிலையை தெற்கு முகமாகத் திருப்பி விட்டு, கண்மூடி கவிழ்ந்தே இரு எனக் கூறிவிட்டுக் கடலினுள் திருமால் அருளிய ஆணையை மனதிலிருத்தி தெற்கு நோக்கிச் சீர்திருத்தப் பயணத்தை மேற்கொண்டார். அவ்வமயம் பொறுமைக் குலங்கள் எல்லாம் தர்ம வைகுண்டர் மலரடி தொழுது 'கப்பல் கரை கண்டாற் போல உம்மையும் நாங்கள் கண்டோமே' என அவரை கண்டு அகமகிழந்தனர். எனினும் சில குறும்பர்கள் 'பேயன் போவதைப் பார் என தூற்றினர்.

    சிலர் கல்கொண்டு எறிந்தனர். ஓரிடத்தில் தனது கால்களில் படிந்த தூசியினை கழுவிடக் குளம் ஒன்றில் இறங்கியபோது, 'தூசையா கழுவுகிறாய்! உனது காலை வளைத்துத் தோளில் போட்டுக் கொள்' எனச் சிலர் வைதனர். இவ்வாறு சிலரது வசைமொழிகளையும் கேட்டுக் கொண்டே பயணத்தைத் தொடர்கையில், தாகம் ஏற்பட்டு, பதனீர் இறக்குபவர் ஒருவரிடம் அருந்துவதற்குப் பதனீர் கேட்ட போது, அத்தொழிலாளி பதனீரில் சுண்ணாம்பு அதிகமாக கலந்து கொடுத்தார்.

    அப்பதனீர் பால் போல் மாறியதால், சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்த வைகுண்டரை அவர் உற்றுப்பார்த்தபோது, 'தாலியறுத்துக் கட்டு' எனச் சொல்லி நகர்ந்தார்." வரும் வழிதோறும் தன்னைக் கண்டு வணங்கி நின்ற அன்பரிடம், 'கருத்தயர்ந்து போகாதுங்கோ! ஐந்து பஞ்சமதையும் குலைய விடாதிருங்கோ!' என்று பண்புடன் கூறி வழி நடந்து பூவண்டன் தோப்பு வந்தடைந்தார். தொடர்ந்து தவ வாழ்வு தொடங்கிய வைகுண்டரின் செயல்களை வரும் வாரத்தில் பார்ப்போம்.

    • சுதந்திரப் பறவைபோல் அந்த வீதியெங்கும் சைக்கிளில் சுற்றி வந்தான்.
    • நம் தவறுகளை நியாயமாக நமக்குச் சுட்டிக்காட்டுவதற்கு ஒருசிலர் தேவை.

    'எவராவது தம்முடைய வாழ்வில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று அர்த்தம்'.

    -ஐன்ஸ்டைன்

    அவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். சுறுசுறுப்பான சிறுவன். விளையாட்டு, படிப்பு, இசை எல்லாவற்றிலும் அதீத ஆர்வம். ஒவ்வொன்றையும் தானாகவே கற்றுக் கொள்வதில் அதிக விருப்பம்.

    அவனுடைய பிறந்தநாள் வந்தது.

    'என்ன பரிசு வேண்டும்?' - அப்பா கேட்டார்.

    'நியூ மாடல் சைக்கிள்' என்றான் அவன்.

    மகன் கேட்டபடியே, அவன் வயதுக்கேற்ற ஓர் அழகிய சைக்கிளை வாங்கிப் பரிசளித்தார் அப்பா. அவனுக்கு ஏக மகிழ்ச்சி.

    'ஒரு கன்டிஷன். நான் வீட்ல இல்லாத போது, நீ சைக்கிளை எடுக்கக் கூடாது. என் உதவியோடுதான் நீ சைக்கிள் ஓட்டிப் பழகணும்' என்றார் அப்பா.

    அவன் தலையாட்டினான்.

    தினமும் மாலையில் அவன் சைக்கிள் ஓட்டிப் பழகுவான். அப்பா மிதமான ஓட்டமும் நடையுமாய் அவனோடு செல்வார். வீதிகளில் சைக்கிளில் உலா வரும்போது, அவன் மனம் ஆகாயத்தில் பறக்கும்.

    ஆனால், அவனுக்குள் ஓர் எண்ணம். அப்பா உதவியின்றித் தானாகவே சைக்கிள் ஓட்ட வேண்டும். அப்பாவிடம் சொன்னால் சம்மதிக்க மாட்டார்.

    ஒருநாள் அவர் தனது நண்பர் வீட்டுத் திருமணத்திற்காக பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். சைக்கிளை எடுத்தான். ஆர்வ மிகுதியானால், அம்மா சொல்லையும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    சுதந்திரப் பறவைபோல் அந்த வீதியெங்கும் சைக்கிளில் சுற்றி வந்தான். திடீரென ஒரு ஸ்கூட்டி எதிரே வர, பதற்றமடைந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குக் காயம் இல்லை. ஆனால், ஸ்கூட்டி மோதி சைக்கிளின் முன்சக்கரம் நெளிந்துவிட்டது.

    கண்கலங்கியபடி சைக்கிளை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். அம்மா திட்டித் தீர்த்தாள். அந்நேரம் அப்பா வந்துவிட்டார். சைக்கிளின் பரிதாப நிலையைப் பார்த்த அவருக்குக் கோபம் 'குப்'பென்று தலைக்கு ஏறியது.

    'நான் வீட்ல இல்லாத நேரத்துல ஏன்டா சைக்கிளை எடுத்தே' என்று ஆத்திர ஆத்திரமாய், அவன் முதுகில் 'சப்'பென்று அறைந்தார். அம்மா தடுத்தாள். கோபம் தாளாமல், மேலும் நான்கைந்து பளார் பளார் விழுந்தன.

    'இனி உனக்கு சைக்கிள் கிடையாது' என்று சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, அவன் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தான். சைக்கிள் கிடைக்கவே கிடைக்காதோ என்ற பெருங்கவலை அவனுக்கு. அப்போதுதான், அவனுக்குப் பிரியமான தாத்தா, ஊரிலிருந்து இரண்டு பைகள் நிறைய பொருட்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கினார். வீட்டிற்குள் நுழைந்ததும், பேரன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்துத் துடிதடித்துப்போனார்.

    'ஏங்கண்ணு அழுவுறே?'

    'அப்பா அடிச்சாரு'.

    'டேய் மவனே, ஏன்டா எம்பேரனை அடிச்சே?' என்று அவர் சத்தமிட, அறையிலிருந்து அப்பா வந்தார்.

    'அவன் என்ன பண்ணிருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா? புதுசா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டி உடைச்சிட்டான். காஸ்ட்லி சைக்கிள்'.

    'அதுக்காக புள்ளைய அடிக்கிறதா...கேக்கிறேன்'.

    கவிஞர் தியாரூ

    'பின்ன கொஞ்சணுமா?'

    'சரிடா, நீ சின்ன புள்ளையா இருந்தப்ப, உன் தாய்மாமன் துபாய்லேருந்து பெரிய பேட்டரி கார் வாங்கி வந்து கொடுத்தான். அதை மொரட்டுத்தனமா சுவர்ல மோதவிட்டு விளையாடி, ஒருமணி நேரத்துல சுக்குநூறா உடைச்சிப் போட்டியே. அப்ப நான் உன்னை கண்டிச்சேன். ஆனா அடிச்சேனா? எத்தனை பொருளை பிரிச்செடுத்திருக்கிறே. அதனாலதான், இன்னிக்கு நீ பெரிய மெக்கானிக்கல் என்ஜினீயரா இருக்கிறே... தெரிஞ்சிக்கோ'.

    'சரிப்பா, என்னதான் செய்ய சொல்றீங்க?'

    'உடைக்காம எதையும் புதுசா உருவாக்க முடியாது. தப்பே செய்யாம ஒருத்தன் அறிவாளி ஆக முடியாது. ஆர்வத்துனால தவறுகள் வரலாம். ஆனா, அந்த தவறுகள்தான் முன்னேற்றத்துக்கு முதலீடு'.

    'அப்ப கண்டிக்கவே கூடாதா?'

    'பக்குவமா கண்டிக்கணும். ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடக் கூடாது. தவறுகளை நிதானமா சொல்லிப் புரிய வைக்கணும். அப்பதான் நல்ல விஷயங்கள் உருவாகும்' என்று சொல்லிவிட்டு, பேரனை மடியில் அமர்த்திக் கொண்டார் தாத்தா.

    எல்லோரும் தவறு செய்கின்றோம். குழந்தைகளின் தவறுகளை நாம் அன்போடு சரிசெய்ய வேண்டும். நாம் தவறு செய்யும் போது, அதை நாமே உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். அல்லது ஞானமிக்க நல்லவர்கள் சுட்டிக்காட்டும் போது, அதை ஏற்று நம்மைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிலர் இருக்கிறார்கள். தங்கள் தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டினால், அது அவர்களுக்குப் பிடிக்காது. நேரடியாகவே உதாசீனப்படுத்துவார்கள். சிலர், கேட்டும் கேட்காததுபோல் நடந்து கொள்வார்கள்.

    பேருந்தில் தங்கள் இருக்கையை யாரேனும் கேட்டுவிடுவார்களோ என்ற எண்ணத்தில், தூங்குவதுபோல் கண்களை மூடிக்கொண்டு இருப்பார்களே; அப்படிப்பட்டவர்கள் எந்தத் தவறையும் மிக லாவகமாகச் செய்வார்கள். எதுவும் செய்யாததுபோல் இருப்பார்கள்.

    தவறுகள் செய்வது இயல்புதான். ஆனால், தவறுகளையே செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால், அனுபவங்களிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

    அனுபவ ஞானம் என்பது வயது முதிர்ச்சியினைப் பொறுத்ததல்ல; தவறுகளிலிருந்து நம்மை நாம் எப்படித் திருத்திக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தது.

    சிலர் தாங்கள் செய்த தவறுகளையே சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஒன்றன்பின் ஒன்றாக நினைவுபடுத்திப் பேசுவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.

    'அன்னிக்கு மட்டும் நான் அதை செய்யாம இருந்திருந்தா, இன்னிக்கு ஓஹோன்னு இருந்திருப்பேன். எல்லாம் தலைவிதி'.

    'எங்க அப்பா எவ்வளவோ சொன்னாரு. நான் கேட்கல. அதனாலதான் இந்தப்பாடு'.

    இப்படி விதவிதமாகப் புலம்பிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? பலரிடம் இருக்கும் பிரச்சனை இதுதான். தங்கள் தவறுகளை எல்லாம் ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அவற்றிலிருந்து வெளிவருவதற்கு முயற்சிக்கவே மாட்டார்கள். தவறுகளை நிவர்த்தி செய்து முன்னேறுவதுதானே முக்கியம்.

    அதற்கு ஒரு மிகச்சிறந்த வழி, இலக்கை நிர்ணயிப்பது. படிப்பு, விளையாட்டு, தொழில் - இப்படி எதுவாக இருந்தாலும் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்தல்; விளையாட்டில் முக்கிய குழுவில் இடம்பிடித்தல்; தொழிலில் புதிய உயரத்தை எட்டுதல் என அவரவர் தங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு செயல்படும்போது, நம் பலவீனங்களைக் கண்டு கொள்ளலாம். முந்தைய தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான உந்துதலையும் பெறலாம்.

    நம்மைச் செம்மைப்படுத்துவதற்கு, நம் தவறுகள் நமக்குப் பாடங்களாக அமையுமெனில், அவை நமக்கு லாபங்களே. அதற்காக, மீண்டும் மீண்டும் தவறுகளையே நாம் செய்து கொண்டிருந்தால், அது அறிவீனம்.

    சிலர் தாங்கள் சரியாகச் செய்வதாக எண்ணிக்கொண்டு, எல்லாவற்றையும் தப்புத் தப்பாகச் செய்வார்கள். நம் தவறுகளை நியாயமாக நமக்குச் சுட்டிக்காட்டுவதற்கு ஒருசிலர் தேவை.

    தயு மற்றும் யுதாங் என இரண்டு ஜென் குருமார்கள். அவர்களைத் தேடித் தலைமைத் தளபதி ஒருவர் வந்தார். தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி அவர்களிடம் வேண்டினார்.

    'உன் பணிவு, தெளிவு ஆகியவற்றைப் பார்க்கும் போது, நீ புத்திசாலியாகத்தான் தெரிகிறாய். எனவே, நல்ல சீடனாகவும் இருப்பாய்' என்றார் யுதாங்.

    'இவனா? இந்த அடிமுட்டாளுக்கு மண்டையில் அடித்துச் சொன்னால்கூட ஜென் தத்துவத்தைப் புரியவைக்க முடியாதே' என்றார் தயு.

    தளபதி கோபப்படவில்லை. தன்னை ஏளனமாய்ப் பேசிய தயுவையே தன் குருவாக ஏற்றுக் கொண்டார். தன் தவறுகளை இடித்துரைத்துத் தன்னைச் செம்மைப்படுத்துவதற்கு, அந்த குருதான் தனக்குத் தேவை என்பதைத் தளபதி உணர்ந்திருந்தார்.

    அறிவார்ந்த ஆலோசனைகளும் அக்கறையான கண்டிப்புகளும், நம்மைச் சீர்படுத்திக் கொள்வதற்கு நமக்கு உதவும். கசக்கின்ற பாகற்காய் நம் உடல்நலனுக்கு நல்லது.

    தவறுகள் நியாயமானவையா நியாயமற்றவையா என்று விவாதிப்பது வீண். தவறுகளிலிருந்து தெளிவு பெற்று, நம்மைப் புதுப்பித்துக் கொண்டுள்ளோமா என்ற தற்பரிசோதனை அவசியம்.

    தவறு செய்வது தவறல்ல. 'தவறு செய்கிறோம்' என்ற உணர்வே இல்லாமல் தவறுகளையே செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய தவறு; அது குற்றம்.

    இன்றைய உலகிற்குப் போதைப்பொருள் மிகக்கொடிய அச்சுறுத்தல். பள்ளி, கல்லூரி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களே. இது மனித சமூகத்தையே பலவீனப்படுத்துகின்ற தீமை அல்லவா! எனினும், இது தொடர்கிறதே. காரணம் என்ன? குற்றம் உணராமை!

    தங்களின் தவறான செயல்களால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அபாயத்தைக் கொஞ்சமும் சிந்திக்காத குருட்டுத்தனம். அதனால்தான், இன்று குடும்பங்களிலும் சமூகத்திலும் பலப்பல பிரச்சனைகள்.

    யாராக இருந்தாலும், பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்குத் தங்கள் தவறுகளை உணர்கின்ற மனம் வேண்டும். தாங்கள் செய்த தவறுகளால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மன்னிப்புக் கேட்கின்ற குணம் வேண்டும். அப்போதுதான் வாழ்வில் திருத்தம் ஏற்படும். அந்த திருத்தங்களால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

    போன்: 9940056332

    • உடல் பருமனாக இருக்கும்போது வயதான தோற்றத்தைக் கொடுக்கும், சுறுசுறுப்பாக இருக்க முடியாது.
    • உடல் எடை அதிகம் உள்ளவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 500 கிலோ கலோரிகளாவது குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உடல் பருமன் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு சிக்கலாகவே உள்ளது. சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே இருந்த இந்நோய், தற்போது அனைவரையும் பாதித்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    எனவே நாம் எவ்வளவு உடல் எடையுடன் இருக்க வேண்டும்? அதற்கு எவ்வளவு கலோரிகள் தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்? உடல் பருமனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பது பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

    ஒருவரின் முழுமையான நலனில், உடல் எடை மிகவும் முதன்மையானது. இந்த உடல்தான் நம் உயிர்ச்சக்தியைச் சுமந்து இத்தரணியில் நம்மை இயங்க வைக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வது இந்த உடலை வைத்துத்தான். ஒருவரைப் பார்த்தவுடனேயே இவர் ஒல்லியாக இருக்கிறாரே, உடல் பருமனாக உள்ளதே என்று மனத்துக்குள் நினைத்துக் கொள்கிறோம் அல்லது அவரிடமே நாம் நினைத்ததை வெளிப்படுத்துகின்றோம். இதுமட்டுமல்ல முழுமையான நலத்துடன் இருக்க, சரியான உடல் எடையுடன் இருப்பது மிகவும் முதன்மையானது. எனவே சரியான உடல் எடை எவ்வளவு? என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

    நம் உயரத்திலிருந்து (செ.மீ) 100-ஐக் கழித்துவிட்டால் என்ன எண் வருகிறதோ அதுவே நமக்கான சரியான உடல் எடை ஆகும்.

    சரியான உடல் எடை = உயரம் (செ.மீ) -100.

    எடுத்துக்காட்டாக, ஒருவர் உயரம் 162 செ.மீ என வைத்துக்கொண்டால், சரியான எடை 62 கி.கி (162செ.மீ - 100 = 62கி.கி). இதைவிட 2 கிலோ கிராம் முன்பின் இருக்கலாம். அதற்கு மேல் இருக்கும்போது உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர நாம் முயல வேண்டும்.

    உடல் பருமனாக இருக்கும்போது வயதான தோற்றத்தைக் கொடுக்கும், சுறுசுறுப்பாக இருக்க முடியாது, விரைவில் உடல் சோர்வு அடையும், வேகமாக நடப்பதற்கும், கீழே அமர்ந்து எழுவதற்கும் கடினமாக இருக்கும். முதுகு வலியும், மூட்டு வலியும் சிறுவயதிலேயே வந்துவிடும்.

    வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களைக் கட்டுக்குள் வைப்பதற்குச் சரியான உடல் எடையுடனும், சரியான இடை, இடுப்பு விகிதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம்.

    இடை இடுப்பு விகிதம் = இடைச் சுற்றளவு / இடுப்புச் சுற்றளவு.

    இடைச் சுற்றளவு என்பது விலா எலும்பிற்கும், இடுப்பு எலும்பிற்கும் நடுவில் உள்ள பகுதியாகும். இதன் சுற்றளவை அளந்து கொள்ள வேண்டும். இடுப்புச் சுற்றளவு என்பது இடுப்பின் அதிகமான சுற்றளவு உள்ள பகுதி ஆகும். இதன் சுற்றளவை அளந்து கொள்ள வேண்டும். பின்பு மேற்கூறப்பட்ட விகிதத்தை கணக்கிடவும்.

    இந்த விகிதம் ஆண்களுக்கு 0.95-க்குக் கீழேயும், பெண்களுக்கு 0.80-க்குக் கீழேயும் இருப்பது நல்லது. இடைச்சுற்றளவு பெண்களுக்கு 80 செ.மீட்டருக்குக் குறைவாகவும், ஆண்களுக்கு 94 செ.மீட்டருக்குக் குறைவாகவும் இருப்பது நல்லது. அனைவரும் இந்தச் சுற்றளவு, இடை இடுப்பு விகிதம், உடல் எடை ஆகிய மூன்றும் சரியாக உள்ளனவா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் பருமன் இருக்கிறதா என்பதைத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு வாழ்வியல் முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

     

    உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்:

    நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், கல்லீரலில் கொழுப்புப் படிதல், எலும்புத் தேய்மானம், தூக்கத்தில் வரும் சிக்கல்கள், மன அழுத்தம்

    வயதானவர்களை அதிகமாகத் தாக்கக் கூடிய மேற்கூறப்பட்ட நோய்கள் அனைத்தும், தற்போது உடல் பருமன் உள்ளவர்களுக்குச் சிறுவயதிலேயே வருகிறது.

    எனவே நம் உடல் நலமுடன் இருக்கவும், வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி இருக்கவும், நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் எவ்வளவு? என்றும், ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான கலோரிகள் எவ்வளவு? என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு நாளைக்குத் தேவையான கலோரிகள்:

    பெண்களுக்கு 1800 - 2000 கிலோ கலோரி

    ஆண்களுக்கு 2100 - 2500 கிலோ கலோரி

    இந்தக் கலோரிகளின் அளவு நாம் செய்யும் வேலை மற்றும் உடல் உழைப்பைப் பொறுத்து மாறுபடுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு 1800 கிலோ கலோரிகளே போதுமானது.

    உடல் எடை அதிகம் உள்ளவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 500 கிலோ கலோரிகளாவது குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அப்போதுதான் உடல் எடை குறைந்து, நம் உடல் நலன் மேன்மையுறும். வாரத்திற்கு ஒரு முறை சமைக்காத காய்கறிகளை மட்டும் அல்லது பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டால் உடல் எடை விரைவாகக் குறையும்.

     

    உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் உணவுப் பொருட்கள்:

    மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, கிரீன் டீ இந்த உணவுப் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் உடல் எடை குறையத் தொடங்கும்.

    உடல் எடையைக் குறைப்பதற்கு உண்ணும் உணவில் உள்ள கலோரிகளின் (கிலோ கலோரி) அளவைக் கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

    சர்க்கரை ஒரு தேக்கரண்டி-30, தேநீர் (பால் இல்லாமல்)- 40

    தேநீர் (பால் - சர்க்கரை சேர்த்து)- 35, இட்லி ஒன்று- 80-100

    சாம்பார் 100மிலி- 200-250, தோசை ஒன்று- 120-150

    நெய் தோசை ஒன்று-150, மசாலா தோசை ஒன்று-250

    பொங்கல் + சாம்பார்-350 + 200, பூரி ஒன்று-150

    சப்பாத்தி ஒன்று-60, அரிசிப் புட்டு-200

    அரிசி உணவு 100 கிராம்- 250, முட்டை ஒன்று- 80,

    ஆம்லேட் ஒன்று-120 ,காய்கறிகள் -10-30

    தக்காளி-15, காய்கறிகள் கலவை-100

    ஆப்பிள்- 45-50, கொய்யா-45-50

    வாழைப்பழம்-80-120, மாம்பழம்-120-150

    தயிர்-100, வடை - ஒன்று-200-250

    பருப்பு வடை - ஒன்று- 250-300, ஜாமூன் - ஒன்று- 100

    ரசகுல்லா - ஒன்று-150, அல்வா - 100 கிராம்- 570

    முறுக்கு - 100 கிராம்- 500-550, அதிரசம் - 100 கிராம்- 500

    உருளைக் கிழங்கு வற்றல் (சிப்ஸ்-ஒன்று)-110

    காய்கறி பிரியாணி 100கிராம்-350-500

    அசைவ பிரியாணி 100கிராம் (நெய் மற்றும் இதரப்பொருட்களின்

    அளவைப் பொருத்தது)-1500-2500

    வெள்ளை அரிசி-346, கேழ்வரகு 100கிராம்- 328

    தினை-331, சாமை-341

    குதிரை வாலி-307, வரகு-309

    சோளம்-361, இனிப்பு பிரட்-245

    பாரம்பரிய அரிசிகள்-149

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

     

    மேற்கண்டவற்றை பார்த்துத் தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உணவில் அதிகம் சேர்க்க வேண்டியவைகளை அன்றாடம் அதிகம் பயன்படுத்துங்கள்.

    நம் உடல்தான் நாம் வசிக்கும் இடம். எனவே அனைவரும் அளவான உணவு உண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.

    • திவ்யா, டேவிட்டுடன் தனியாக வாழ ஆரம்பித்து, ஒரு வாரம் ஆகிவிட்டது.
    • குரல் கேட்டு, திரும்பினார் இன்ஸ்பெக்டர்… ஸ்டேஷனுக்குள் நுழைந்து நின்றான் பெருமாள்!

    திவ்யா உட்பட அனைவரும் சற்று வெலவெலத்து போய் நிற்க, அருகில் வந்த பெருமாள் நேராக அப்பாவின் அருகில் போய் நின்றான். பக்கத்தில் நின்ற திவ்யாவின் அம்மா தலைகுனிய,

    "ஏம்மா.. தலை குனியுற.. அப்பாவோட சேர்ந்து, என் கூடயே இருந்து கிட்டு, இவ கல்யாணத்துக்கு சப்போர்ட் பண்ணி இருக்கீங்க இல்ல..?

    அப்பா ஏதோ சொல்ல முயல "வேண்டாம்பா. விளக்கம் சொல்லாதீங்க... தடுத்தவன் தொடர்ந்தான். என் கண்ணு முன்னாடியே, வேறு ஒரு மதத்துக்காரன் கையால தாலிய கட்டிக்கிட்ட இவள் நிம்மதியா வாழ்ந்துடக் கூடாதுன்னு கங்கனம் கட்டிகிட்டு இருக்கேன். நீங்க இவள தனிக்குடித்தனம் வைக்க வீடே பார்த்து வெச்சு இருக்கீங்க.."

    அப்பாவும், அம்மாவும் செய்வதறியாது முழிக்க "நான் குடிச்சு இருக்கேன்பா.. மனசு ஒடஞ்சு போய் குடிச்சுட்டு கடையில் இருந்து வெளியே வரேன்.. உங்க கார் கிராஸ் ஆகுது. உள்ள.. இந்தா இந்த புதுமண குயில்கள்!"- டேவிட்டையும், திவ்யாவையும் முகம் பார்க்காமலேயே கை நீட்டி சொன்னான்.

    "என்னடா.. இதுவரைக்கும் நம்ம கூட சேர்ந்து, திவ்யா காதலை எதிர்த்த அம்மாவும், அப்பாவும் அவங்க கூடவே கார்லே போறாங்களேன்னு, வந்து பார்த்தா தெரியுது, நீங்க இத்தனை நாளும் என்னை ஏமாத்தி நடிச்சு இருக்கீங்கன்னு... சூப்பர் மதர்! சூப்பர் பாதர்!"

    அவனது வார்த்தைகளில் நக்கலும் நயவஞ்சகமும் தெரிந்தது.

    "என்ன இருந்தாலும் அவ..." அப்பா ஆரம்பிக்கவும் குறுக்கிட்டான் பெருமாள். "நோ! எந்த விளக்கமும் வேண்டாம். குட்பை அம்மா.. அப்பா! ஆனா... ஒண்ணு என்ன முயற்சி பண்ணாலும், எவ்வளவு முட்டுக்குடுத்தாலும்.. இவ இனிமே நிம்மதியா வாழவே முடியாது!"


    திவ்யா, டேவிட்டை நோக்கி ஒரு வன்மப் பார்வையை வீசியபடி, பைக்கை திளப்பி சென்றான். கூடவே வந்த அவனது ஆட்கள் டேவிட்டின் நண்பர்களை முறைத்த படி, கிளம்பி சென்றனர்.

    அவன் போவதையே பார்த்த திவ்யாவின் அப்பா ரங்கராஜன், "அவன் கிடக்கிறான் ... விடும்மா... வாங்க.. எல்லாரும் வீட்டுக்குள்ள போகலாம்" என அனைவரையும் ஆறுதல் படுத்தி வீட்டுக்குள் அழைத்து சென்றார்.

    திவ்யா, டேவிட்டுடன் தனியாக வாழ ஆரம்பித்து, ஒரு வாரம் ஆகிவிட்டது. டேவிட்டின் அம்மா, அப்பா மற்றும் மேரியும் ஞாயிறு அன்று சர்ச், பின்னர் மதியம் சாப்பாடு, அரட்டை, இரவு டின்னர் என வார இறுதிநாளை கழித்துவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    "கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி இருக்கலாம்… ரொம்ப லேட் ஆயிடுச்சு…" பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த திவ்யா வாட்ச்சை பார்த்து சொன்னாள்.

    "சண்டேயில்ல... அதான் ரோட்ல டிராபிக் இல்ல. மத்தபடி பெருசா லேட் எல்லாம் ஒண்னும் இல்ல.. மணி என்ன 11 இருக்குமா…" பைக் ஒட்டியபடி டேவிட் கேட்டான்.

    "11.30 - திவ்யா பதில் சொல்லி முடிக்கும் முன், அந்த கார் குறுக்கிட்டது. சுதாரித்து, 'பிரேக்' போட்ட டேவிட் கடுப்பாகி கத்தினான்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    "யோவ்… பார்த்து வரக்கூடாது…இப்படியா சந்துக்குள்ள இருந்து வேகமா வருவ…" டேவிட் கத்தி முடிக்கவும், காருக்குள் இருந்து 'தடிதடி'யாக ஐந்து பேர் இறங்கினார்கள். அனைவர் முகத்திலும் போதையின் சாயல்.

    திவ்யா சுற்றும், முற்றும் பார்க்க… அது சிட்டி அவுட் ஆப் ஏரியா என்பதால், ஆள் நடமாட்டமேயில்லை.

    இறங்கி வந்தவர்களில், கருப்பாய் இருந்தவன் டேவிட்டை பார்த்து கேட்டான்.

    "என்னடா கேட்ட…?"

    "இவ்வளவு வேகமா வர்றீங்களே… ஆக்சிடென்ட் ஆயிருக்குமேன்னு கத்தினேன்…"

    "பொண்டாட்டி முன்னாடி ஹீரோயிசம் காட்டுறியா…" இன்னொருவன் குறுக்கிட்டான்.

    டேவிட் "என்ன செய்ய.." என எத்தனிக்கும் முன், ஒருத்தன் குத்துவிட பைக்கோடு கீழே விழுந்தனர் டேவிட்டும், திவ்யாவும்.

    "ஐயோ.." என அலறியபடி திவ்யா விழுந்த வேகத்தில் ரோட்டில் உருள..

    "திவ்யா…"

    அலறியபடி, கீழே விழுந்த டேவிட் வேகமாய் வந்து திவ்யாவை தூக்கினான்.

    அதற்குள் இன்னொருத்தன் டேவிட் மீது பாய, டேவிட் அவனை தூக்கி வீசினான். கிட்டத்தட்ட சினிமா சண்டை காட்சி போல் நடக்க, திவ்யா போனில் டேவிட் நண்பர்களை அழைக்க டயல் செய்தாள்.

    அப்போது ஒரு போலீஸ் ரோந்து ஜீப் அங்கே வரவும், சண்டை போட்டவர்கள் காரில் ஏறி ஓட, திவ்யா போன் கேமராவை ஆன் பண்ணினாள். அவளது 'கிளிக்'குகளில் அந்த ரவுடிகளின் முகமும், காரின் நம்பரும் சிக்கியது.

    இதற்குள் கார் இருட்டில் மறைய, வந்து நின்ன ஜீப்பில் இருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர். பார்க்க முறுக்கிவிட்ட மீசையும், தொப்பையும், முன்வழுக்கையுடனும், ஐம்பது வயது தாண்டியவர் என்பது முகத்திலும் தெரிய, ரொம்ப கேசுவலாய் கேட்டார்.. "யார் அவங்க..? உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை?"

    போலீஸ் ஸ்டேஷன்..

    மணி காலை 10.30. டேவிட் நண்பர்கள், திவ்யாவின் அப்பா ரங்கராஜன், டேவிட்டின் அப்பா தேவசகாயம் உட்பட டேவிட்டும், திவ்யாவும் ஸ்டேஷனில் உள்ள பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

    ஸ்டேஷனில் இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் டேவிட்டின் நண்பன் செந்தில், மெதுவாய் கேட்டான்..

    "மேடம்.. 9 மணிக்கு வர சொன்னாங்க…மணி 10.30-யை தாண்டியாச்சு. எதுக்கு வர சொன்னீங்கன்னு இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டு சொன்னீங்கன்னா…"

    குறுக்கிட்ட லேடி கான்ஸ்டபிள்… "இருப்பா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கீங்க…ராத்திரி கலாட்டா பண்ண பசங்க யாருன்னு இன்வெஸ்டிகேஷன் போயிகிட்டு இருக்கு… வெயிட் பண்ணுங்க… இன்ஸ்பெக்டர் கூப்பிடுவாரு!" என்று சொல்லி முடிக்கவும்,

    அந்த அறையின் கதவை திறந்து வெளிப்பட்ட இன்ஸ்பெக்டர், ரங்கராஜனை பார்த்து 'சார் உங்க பொண்ணு எடுத்த போட்டோக்களை வைத்து ட்ரேஸ் பண்ணோம்… நம்பரை வச்சு ட்ரை பண்ணினா அது போலி நம்பர்… அதுனால குற்றவாளிகளை பிடுச்சுட்டு சொல்றேன். யோவ்… மணி… கையெழுத்து வாங்கிட்டு அவங்களை அனுப்புய்யா… என கூறிவிட்டு, இன்ஸ்பெக்டர் மீண்டும் அறைக்குள் நுழைய போனார்.

    "ஒரு நிமிடம் சார்!"

    குரல் கேட்டு, திரும்பினார் இன்ஸ்பெக்டர்… ஸ்டேஷனுக்குள் நுழைந்து நின்றான் பெருமாள்!

    திவ்யா, டேவிட் உட்பட அனைவரும் 'ஷாக்' ஆகி பார்த்தனர்.

    'வந்திருப்பது லோக்கல் கட்சி பிரமுகர்' என்பதால், இன்ஸ்பெக்டர் சற்று மரியாதையுடன்-

    "பெருமாள் சார்… நீங்க எங்க இங்க.."

    "என் தங்கச்சி தான் சார் திவ்யா… அவமேல கை வச்ச ரவுடிங்க யாருன்னு எனக்கு உடனே தெரியணும்… கோபமாய் பெருமாள் கத்தினான்.

    (தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353

    • நீ வாங்கும் எள் இதுவரை சாவே நடக்காத வீட்டிலிருந்து பெற்றதாக இருக்க வேண்டும்.
    • சாரதாதேவி புரிந்துகொண்ட உண்மையை நாமும் புரிந்துகொண்டால் இறப்புக்காக அழ மாட்டோம்.

    வாழ்க்கை நிலையற்றது என்பதை உரத்துப் பேசுகின்றன நம் மதங்கள். நெற்றியில் திருநீறு இடுவதே `இந்த உடல் என்றேனும் ஒருநாள் இப்படித்தான் சாம்பலாகப் போகிறது` என்ற வாழ்வின் நிலையாமையை நாள்தோறும் நினைத்துக் கொள்ளத்தான்.

    இந்த வாழ்வே நிலையற்றது என்கிறபோது, இருக்கிற கொஞ்ச காலத்தை நல்லவிதமாக வாழ்ந்து முடிக்கலாமே என்ற சிந்தனை திருநீறு இடுவார் மனத்தில் எழவேண்டும் என்பதே திருநீற்றுத் தத்துவத்தின் பின்னணி. நீறில்லா நெற்றிபாழ் என்றதும் இந்த அடிப்படையில் தான்.

    உடம்பு முட்டை ஓட்டைப் போன்றது. உயிர் அதிலிருந்து வெளிவந்து பறக்கும் பறவையைப் போன்றது. முட்டையை விட்டு வெளியே பறவை பறப்பதுபோல் உடலை விட்டு உயிர் ஒருநாள் பறந்துவிடும் என்று எச்சரிக்கிறது குறள்.

    `குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே

    உடம்போடு உயிரிடை நட்பு'

    ஆனாலும் மரணத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்கிறார் வள்ளுவர். மரணம் உறங்குவதைப் போன்றதுதான் என்கிறார்.

    மறுபடி விழிப்பதைப் போன்றது பிறப்பு என்கிறார்.

    `உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

    விழிப்பது போலும் பிறப்பு!'

    புத்தரது வாழ்வில் ஒரு சம்பவம். அவர் தவ முனிவராகப் புகழ்பெற்றிருந்த காலகட்டம். ஒரு மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அப்போது அவரைத் தேடி வருகிறாள் கிசாகவுதமி என்ற பெண்மணி. அவள் கையில் ஒரு குழந்தையின் சடலம். கண்களில் ஆறாய்ப் பெருகும் கண்ணீர்.

    `சுவாமி! என் அன்பு மகன் இறந்துவிட்டான். இவனைத் தாங்கள் உயிர்ப்பிக்க இயலுமா? எத்தனையோ பேரைக் கேட்டு விட்டேன்.

    எல்லோரும் இயலாது எனக் கைவிரித்து விட்டார்கள். தாங்கள் மாபெரும் முனிவர் என்றும் தங்களிடம் சென்று வேண்டுமாறும் பலரும் அறிவுறுத்தினார்கள். தாங்கள் இந்த உதவியைச் செய்ய முடியுமா சுவாமி?`

    பேதமையோடு கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைக் கனிவுடன் பார்த்தார் புத்தர்.

    `அதற்கென்ன? இறந்த குழந்தைக்கு உயிர்கொடுக்கலாம் அம்மா. அது ஒன்றும் சிரமமில்லை. ஆனால் அதற்கு ஒரே ஒரு பிடி எள் வேண்டும்! அக்கம்பக்கத்தில் கேட்டு வாங்கிவா.`

    கிசாகவுதமி விழிகளைத் துடைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு உடனே புறப்பட்டாள். புத்தர் அவளைச் சற்று நிறுத்தினார்:

    `பெண்ணே! எள்ளைப் பெறுவதில் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. நீ வாங்கும் எள் இதுவரை சாவே நடக்காத வீட்டிலிருந்து பெற்றதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த எள் வேலை செய்யும். இறந்த குழந்தைக்கு உயிரைக் கொடுக்கும். போ. சாவே நடவாத வீட்டிலிருந்து எள்ளைப் பெற்று வா!`

    கிசாகவுதமி அவசர அவசரமாக நடந்தாள். வீடு வீடாக ஏறி இறங்கினாள். ஒரு பிடி என்ன ஒரு மூட்டை எள் வேண்டுமானாலும் கொடுப்பதற்குப் பலர் தயாராயிருந்தார்கள். ஆனால் சாவே நடக்காத வீட்டிலிருந்து வேண்டுமாமே?

    எல்லார் வீட்டிலும் ஏதோ ஒரு சாவு எப்போதோ கட்டாயம் நடந்திருந்தது. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை, கணவன், மனைவி என யாரையோ நிரந்தரமாக இழந்த துக்கத்தை எல்லோரும் அனுபவித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

    சாவில்லாத வீடே இல்லை என்பதை அந்தத் தாயின் மனம் உணர்ந்துகொண்டது. இறப்பது இயல்புதான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள். தன் குழந்தையை அடக்கம் செய்த அந்தத் தாய், பின்னர் வந்து புத்தரை வணங்கி அவர் சங்கத்தில் இணைந்தாள் என்கிறது புத்தரின் திருச்சரிதம்...

    `பிறர் சாவுக்கு அழுகிறோமே? நாமே நம் வாழ்வில் பலமுறை செத்திருக்கிறோமே? அதற்கு மட்டும் நாம் ஏன் அழுவதில்லை?` என்று கேட்டு வியக்கிறது குண்டலகேசிப் பாடல்.

    குழந்தையாகவும் சிறுவனாகவும் வாலிபனாகவும் நடுத்தர வயதினனாகவும் இருந்து இன்று முதியவனாய் மாறியிருக்கிறான் ஒருவன். அதுசரி, அந்தக் குழந்தை எங்கே? அந்தச் சிறுவன் எங்கே? அந்த வாலிபன் எங்கே? அந்த நடுத்தர வயது மனிதன் எங்கு போனான்?

    அவர்களெல்லாம் தான் இன்று முதியவனாய் உருவாகியிருக்கிறார்கள் என்றால், நாமே செத்துச் செத்துப் பிறக்கிறோம் என்பதுதானே உண்மை? நம் வாழ்வில் நாம் சாவதை அறியாமல் சாகிறோமே, அந்தச் சாவுகளுக்கு நாம் ஏன் அழுவதில்லை?

    என்ன விந்தையான கேள்வி! உலக இலக்கியத்தில் எங்கும் கேள்விப்படாத அற்புதமான கேள்வி இது. அந்தப் பாடல்:

    பாளையாம் தன்மை செத்தும்

    பாலனாம் தன்மை செத்தும்

    காளையாம் தன்மை செத்தும்

    காமுறும் இளமை செத்தும்

    மீளுமிவ் வியல்பு மின்னே

    மேல்வரும் மூப்பு மாகி

    நாளும் நாம் சாகின்றோமால்

    நமக்கு நாம் அழாததென்னே?

    நிலையில்லாத வாழ்வில், இருப்பதைக் கொண்டு நிறைவுகண்டு வாழ்வை அனுபவிக்காமல், பணம் பணம் என்று பறக்கும் கேடுகெட்ட மனிதர்களைப் பற்றி அவ்வையார் நினைத்து நினைத்து வியக்கிறார்:

    `பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த

    கேடுகெட்ட மானிடரே, கேளுங்கள்! - கூடுவிட்டிங்கு

    ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்

    பாவிகாள் அந்தப் பணம்?'

    என்ற அந்த அவ்வைப் பாட்டியின் கேள்வியை நாம் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது நல்லது...

    ச.து.சு. யோகியார் தம் ஆகச்சிறந்த மரபுக் கவிதைகளின் மூலம் தமிழ்மொழியை வளப்படுத்தியவர். அவரது `தமிழ்க் குமரி` என்ற நூல் உயர்ந்த கவிதைத் தொகுதியாக அறிஞர்களால் போற்றப்படுகிறது.

    ராஜம் என்ற சிறுமி அவரது செல்ல மகள். எட்டே வயதில் இறந்துவிட்டாள். அந்த இழப்பின் சோகத்திலிருந்து மீள அவர் எழுதிய உன்னதமான கவிதைதான் `கண்மணி ராஜம்`.

    `பூப்போலக் கன்னங்கள்,

    பூப்போலப் புன்சிரிப்பு,

    பார்ப்போர் செவிக்குத்தேன்

    பாய்ச்சும் குதலை மொழி,

    என்றெல்லாம், மாய்ந்த தன் மகளைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறார் யோகியார். ஆனால் அவரின் ஆழ்மனத்திற்கு ஓர் ஆறுதல் வேண்டுமே? அதற்கும் அந்தக் கவிதையிலேயே அசைக்கமுடியாத ஒரு வாதத்தை முன்வைத்துக் கொள்கிறார்.

    `உயிர் என்பது பறவை மாதிரி. பறவையின் இயல்பு ஓர் இடத்தில் நிரந்தரமாய்த் தங்காது பறத்தல். உயிரின் இயல்பும் அதுவே. ஒரு பறவை ஒரு மரக்கிளையில் அமர்ந்து விட்டுப் பறந்தால், தன்னிடம் வந்து அந்தப் பறவை கொஞ்ச நேரம் அமர்ந்ததைப் பற்றி மரக்கிளை மகிழ்ச்சி அடைய வேண்டுமே அல்லாது அது பறந்து சென்றதைப் பற்றி வருந்தலாமா?

     

    என் மகள் என்கிற அழகிய சின்னஞ்சிறு பறவை சில ஆண்டுகள் என் குடும்ப மரத்தில் இளைப்பாறியதற்கு நான் மகிழவேண்டுமே அல்லாது அவள் உயிர் பறந்துசென்றது பற்றி நான் வருந்துவது என்ன நியாயம்?` என்று கேட்டு அமைதி அடைகிறார் யோகியார்.

    `தேசமெலாம் சுற்றும் சிறு பறவை சின்னேரம் வீசும் கிளையொன்றில் வீற்றிருந்து போவது போல்` அல்லவா நீ போயிருக்கிறாய் என்று உருகி உருகித் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறது தத்துவக் கண்ணோட்டம் நிறைந்த அவரது உயர்ந்த உள்ளம்.

    `ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மானிடரே?` என்று கேட்டுச் சிந்திக்க வைக்கிறாள் அவ்வைப் பாட்டி.

    `இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லிப் புலம்புவதாலே உயிரை மீண்டும் தருவானா?` என்று வினவுகிறார் கண்ணதாசன்.

    அதுல் என்ற அழகிய வாலிபன் காலமானான். பரமஹம்சருக்கும் சாரதாதேவிக்கும் சொந்தக்காரப் பையன் அவன். தான் பார்த்த மனிதர்களிலேயே அதுல் மிக அழகானவன் என்று பரமஹம்சர் ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

    அப்போது சாரதாதேவிக்குத் திருமணம் நடந்து சிறிதுகாலம் தான் சென்றிருந்தது. அதுலின் சடலத்தருகே சிறுமி சாரதாதேவியும் மற்றும் பலரும் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தார்கள்.

    பரமஹம்சர் அங்கே வந்தார். சடலத்தை உற்றுப் பார்த்தார். கடகடவென்று உரக்கச் சிரித்தார். பின்னர் வெளியேறிச் சென்றுவிட்டார்.

    இழவு வீட்டில் வந்து சிரிக்கிறாரே? இவர் என்ன பைத்தியமா? உறவினர்களின் மனத்தில் ஓடிய கேள்வி சாரதாதேவியின் கண்களுக்குத் தப்பவில்லை.

    அன்று மாலை குருதேவரை நேரில் சந்தித்தாள் சிறுமி சாரதா. `பிரேதத்தைப் பார்த்து நகைத்தீர்களே? நீங்கள் என்ன பைத்தியமா?` என்று நேரடியாகக் கேட்டாள்.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    குருதேவர் தன் மனைவியான அந்தச் சிறுமியையே உற்றுப் பார்த்தார். பின் மீண்டும் கடகடவென நகைத்தார்.

    `நீ பைத்தியம். அங்கே அழுதவர்கள் அத்தனை பேரும் பைத்தியங்கள். எதற்காக அழுகை இப்போது? உடல் என்பது, ஆன்மா என்கிற அழிவே இல்லாத வாள் வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக உறைதானே? உறை இனி உதவாது என்பதால் அழியும் உறையிலிருந்து அழியாத ஆன்மா என்னும் வாளை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டுவிட்டான் இறைவன்.

    அழிவே இல்லாத ஆன்மா நிலையாகத் தானே இருக்கிறது? அப்படியிருக்க என்றேனும் ஒருநாள் கட்டாயம் அழியக்கூடிய இந்த உடல் என்ற உறை, எப்போது அழிந்தால்தான் என்ன? அதற்கு எதற்கு அழுகை?`

    பரமஹம்சரின் கேள்வியைக் கேட்ட சாரதைக்குப் பரவசம் ஏற்பட்டது. அவள் ஒன்றைப் புரிந்துகொண்டாள். உலகத்தில் பைத்தியத் தன்மையே இல்லாத மிகச் சரியான மனநிலையில் இருக்கக் கூடிய ஒரே ஒருவர் தன் கணவர்தான் என்ற உண்மைதான் அது.

    சாரதாதேவி புரிந்துகொண்ட உண்மையை நாமும் புரிந்துகொண்டால் இறப்புக்காக அழ மாட்டோம். உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு என்று வள்ளுவர் சொல்லும் தத்துவத்தைப் புரிந்துகொள்வோம்.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • இந்தியாவில் சர்க்கரை வியாதி மிகவும் அதிகமாக உள்ளது.
    • சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு அவர்களது உடலில் பலவிதமான தொற்று கிருமிகள் ஏற்படுகிறது.

    சர்க்கரை வியாதி...

    இது இன்று பொதுவாகவே எல்லோருக்கும் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். குறிப்பாக பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. பெண்கள் பலருக்கு இன்று சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்படுவது என்பதும் பொதுவாக இருக்கிறது. இந்த கால கட்டத்தில் இருக்கக்கூடிய உணவு பழக்க முறைகள், உடற்பயிற்சி இல்லாத நிலை, நவீன வாழ்க்கை முறைகள், கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் மனதளவில் ஏற்படுகிற மன அழுத்தம், தூக்கம் இல்லாத நிலையில் இரவில் தொடர்ந்து கண் விழித்தல் ஆகியவை அனைத்துமே சர்க்கரை வியாதியை அதிகரிக்கிற மிக முக்கியமான விஷயமாகும்.

    இதில் நான் உணவு வகைகளை சொல்லவே இல்லை. ஏனென்றால் உணவு வகைகளை பற்றி எல்லோருக்கும் தெரியும், உணவு வகைகளில் நமது நாட்டு பெண்களுக்கு அரிசி உணவு சாப்பிடும் பழக்கம் அதிக அளவில் இருப்பதால் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகம்.

    அதனால் தான் இந்தியாவில் சர்க்கரை வியாதி மிகவும் அதிகமாக உள்ளது. இது பற்றிய புரிதல் பலருக்கு நன்றாக தெரிந்த நிலையிலும், சிலருக்கு எதுவும் தெரியாத நிலையிலும் நிறைய பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் அதிக உடல் உழைப்பு இருப்பவர்களுக்கு கூட இப்போது சர்க்கரை வியாதி அதிகம் இருக்கிறது என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    சர்க்கரை வியாதி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உணவு உட்கொள்ளும் முறைகள் பற்றி ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட்டை, சிம்பிள் கார்போஹைட்ரேட்டாக நிறைய சாப்பிடும் வகையிலான அரிசி உணவு சாப்பிடும் பழக்கம் என்பது கண்டிப்பாக சர்க்கரை வியாதி வருவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துகிறது. இது சர்க்கரை வியாதி பாதிப்பு ஏற்படுவதற்கான நிச்சயமான நிலையையும் கொடுக்கிறது.

    சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் உறவு பிரச்சனைகள் என்னென்ன?

    பெண்களுக்கு சர்க்கரை வியாதியானது அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், அவர்களுக்கு பாலியல் உறவு சம்பந்தமான விஷயத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

    ஆண்களை பொருத்தவரை சர்க்கரை வியாதி பாதிப்பு இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கும். ஆண்களுக்கு சர்க்கரை வியாதி பாதிப்பு இருந்தால் ஆண்மைக்குறைவுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் விறைப்புத்தன்மை செயலிழப்பு ஏற்படும், உயிரணு முந்துதல் பிரச்சனை ஏற்படும், உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாகும், உயிரணுக்களின் கருவுற வைக்கும் தன்மை குறைவாகும், இதுபோன்று எல்லாவிதமான பிரச்சனைகளும் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ஆனால் பெண்களுக்கு இதனால் என்னென்ன பிரச்சனைகள் என்று கேட்டால், பொதுவாக பெண்களுக்கு பெண் உறுப்பில் சர்க்கரை வியாதியால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. என்னென்ன பிரச்சனைகள் வரலாம், ஏன் வரலாம் என்று எங்கள் மருத்துவமனை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தினோம். அதன் முடிவுகள் வெளியானதில், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் எவ்வளவு வருகிறது என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வருகிறது.

    முதலில் அது உறவு முறைகளில் ஆர்வம் இல்லாத நிலையாக இருக்கலாம், விருப்பம் குறைவாக இருக்கலாம், பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம். இரண்டாவது, பாலியல் உணர்வுகள் நார்மலாக இருந்தால் கூட, பாலியல் உறவுக்கான எழுச்சி குறைவாக இருக்கலாம். மூன்றாவதாக, இதனால் ஏற்படுகிற சில உச்ச கட்டங்களுக்கான பிரச்சனைகளை சீரான முறையில் அவர்களால் உணர முடியாமல் இருக்கலாம், நான்காவதாக, முக்கியமான விஷயமாக வலிகளும் ஏற்படலாம்.

    அதனால் பாலியல் விஷயத்துகான இந்த 4 செயல்பாடுகளுமே சர்க்கரை வியாதி உள்ள பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

     

    இந்த பாதிப்புகள் எந்தெந்த வழிமுறைகளில் வரலாம்?

    சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு அவர்களது உடலில் பலவிதமான தொற்று கிருமிகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் ஹார்மோன் மாற்றங்கள், செல்களில் மாற்றங்கள் ஆகியவை உருவாகிறது. இது தவிர கடைசியில் அவர்களின் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக ரத்தக்குழாய்களில் பழுது, நரம்பு மண்டலங்களில் பழுது, அதில் உள்ள தோல் பகுதிகள் மற்றும் ஜவ்வு பகுதிகளில் பழுது போன்றவையெல்லாம் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.

    எனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு, பாலியல் உறவு கொள்வதில் ஏன் ஆர்வம் ஏற்படாமல் இருக்கிறது என்று பார்த்தோமென்றால், இதுபற்றி வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் சொல்லப்படுகிற ஒரு கருத்து இந்த பெண்களுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் குறைவு என்பதுதான். அதாவது அந்த பெண்களுக்கு உறவு கொள்ளலாம் என்கிற எண்ணங்கள் வரலாம், ஆனால் உறவு கொள்வதற்கான ஆர்வம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இது பலராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.

    இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முதல் முக்கியமான காரணம், பெண் உறுப்புகளில் ஏற்படுகிற சில உலர்வு தன்மைகள் ஆகும். குறிப்பாக உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது, இந்த பெண்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, பல நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் வருவது குறைவாகி, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாகி, அதனால் ஏற்படும் சில பிரச்சனைகளால் பெண்களுக்கான உலர்வுத்தன்மை அதிகரிக்கிறது. இதன் மூலம் பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள், தாக்கங்கள் ஆகியவை மூலம் அவர்களின் ஆர்வம் குறைவாகலாம். பல நேரங்களில் இதற்கு சில நவீன சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம்.

    அந்த வகையில் சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு, இந்த ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுவது ரொம்ப ரொம்ப பொதுவான விஷயம் ஆகும். அதனால் தான் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு மாறுபடும், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மாறுபடும். ஆண்களுக்கு அதுவே சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாகும், ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும். அப்போது ஆண்களுக்கு ஏற்படுகிற தோல் தொடர்பான மாற்றங்கள் அனைத்தும் இதனை அடிப்படையாக கொண்டது.

     

    நரம்பு மண்டலம், ரத்தக்குழாய்களில் பழுது:

    பெண்களுக்கு சர்க்கரை வியாதியால் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும் நிலையில் அதன் தொடர்ச்சியால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்று பார்த்தால், பெண்களுக்கு பொதுவாக இந்த ஹார்மோன் குறைவு ஏற்படும் நிலையில் உறவு கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் உறவு கொள்ளும்போது செயல்படக்கூடிய விதங்களில் பல குறைபாடுகள் ஏற்படலாம்.

    ஏனென்றால் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறிப்பாக முதலில், நரம்பு மண்டலமும், ரத்தக்குழாய்களும் பழுதாகும். இதன் காரணமாக பெண் உறுப்புக்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். மேலும் பெண்ணுறுப்பை சீராக வைத்திருக்கிற நரம்பு மண்டலம் பழுதாகும் நிலையில், அவர்கள் பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    எனவே சர்க்கரை வியாதி உள்ள பெண்களுக்கு உடல் ரீதியாக இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும் போது, கண்டிப்பாக தானியக்கமாக சர்க்கரை அளவு மேலும் அதிகமாகி, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் அதிகரிக்குமே தவிர, அவர்களுக்கு அது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது.

    அப்படியென்றால் சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு பாலியல் உறவு பிரச்சனைகள் என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்குமா என்று பயப்பட வேண்டாம். என்னை பொருத்தவரை சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியுமா என்று என்னிடம் கேட்டால், முடியும் என்பது தான் என்னுடைய பதில். சரி... அவர்களுக்கு பாலியல் பிரச்சனைகள் வராமல் எப்படி தடுப்பது என்பதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

    • அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசி பெற்றவர்கள்.
    • பூசம் நட்சத்திரம் நாளில் பெருமாளை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும்.

    27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி சனியாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை குரு. பூசம் என்ற வார்த்தை பூஷ்யம் என்ற வார்த்தையில் இருந்து வரையறுக்கப்பட்டது. பூஷயம் என்றால் ஒளி அல்லது வளம் தரும் ஒளி என்று பொருள். வானில் நீண்ட அம்பு கூடை போன்ற வடிவில் காட்சி தரும். இதன் உருவம் புடலம் பூ எனவும் அம்பு எனவும் மூல நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தைப்பூச திருநாளன்று சக்தி தேவி முருகனுக்கு தொடுத்த சக்திவேலையும், அஸ்திரங்களையும் வானில் பூச நட்சத்திர வடிவில் தரிசிக்கலாம். சிவசக்தி மற்றும் முருகன் அருள் பெறலாம்.

    பூசம் நட்சத்திரத்தின் பொது பலன்கள்

    பூசம் நட்சத்திரம் பெண் ராசியான கடகத்தில் சஞ்சரிப்பதால் இவர்களுக்கு தாய்மை உணர்வு மிகுதியாக இருக்கும். உடல் மற்றும் மனம் வலிமை மிகுந்தவர்கள்.

    மனோ பலமும், கற்பனைத் திறனும் இயற்கையிலேயே உண்டு. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பழமொழி பூச நட்சத்திரத்திற்கு மிக பொருந்தும். முத்தாய்பான முயற்சியுடையவர்கள். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர்கள். துணிவு, சிக்கனம் மிகுந்தவர்கள்.

    எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டு. திட்டமிடுதலில் ராஜ தந்திரி. இவர்கள் ஒரு செயலுக்குத் திட்டமிட்டால் கனகச்சிதமாக இருக்கும். சமூக அதிகாரம் மிகுந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே, வாழும் காலத்தில் அனைத்து அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசி பெற்றவர்கள்.

    இன்சூரன்ஸ், உயில் சொத்து, போட்டி, பந்தய வெற்றி போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள். வாய் ஜாலம் நிறைந்தவர்கள். தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்து பொருளீட்டுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் பேசியே சரி செய்து விடும் திறமை உண்டு. நிரந்தரமான தொழில் கூட்டாளிகள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உண்டு. பல தொழில் முனைவோர்களுக்கு ரோல் மாடலாக வாழ்வார்கள்.

    கல்வி

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்கள் என்பதால் கதை, கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆசிரியர், எழுத்தாளர், கலைத்துறை, மருத்துவம், ஜோதிடம், இலக்கணம், யோகா, பயணம் மற்றும் டூரிசம் பிரிவுகளில், ஓட்டல்-ரெஸ்டாரன்ட் தொடர்பான படிப்புகள், மத போதகர், பண்டிதர், வெளிநாட்டு வாணிபம், போஸ்டல் மற்றும் கூரியர் சேவைகள, போன்ற துறைகள் பொருத்தமானதாக இருக்கும்.

    தொழில்

    வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர்களின் குலத் தொழில் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். உள்ளுணர்வு மிகுந்தவர்கள். பயணம் சார்ந்த தொழில் மற்றும் கடல் சார்ந்த தொழிலில் ஆர்வம் அதிகம். நாடகம், கலை, வர்த்தகம் தொடர்பான பிசினஸ் லாபம் தரும். அத்துடன், பால் பொருட்கள், விவசாயம், தோட்டக்கலை, கால்நடைகள் வளர்த்தல், உணவுப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல், அரசியல், பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர், மத போதகர், கவுன்சிலர், சைக்காலஜிஸ்ட், தன்னார்வ தொண்டர், ஆசிரியர், பயிற்சியாளர், குழந்தைகள் காப்பகம், பிளே ஸ்கூல், வீடு, டவுன்ஷிப் அல்லது சொசைட்டி கட்டுபவர், மத தொடர்பான நிகழ்ச்சிகள் அல்லது சமுதாய நிகழ்ச்சிகளை நிர்வகிப்பவர், சமூக சேவை, போக்குவரத்து போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள்.


    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை உண்டு. சகிப்பு தன்மை கொண்ட வாழ்க்கை துணை அமையும். மனதிற்கினிய வாழ்க்கை துணையாக அழகு அந்தஸ்து நல்ல புரிந்துணர்வு, உடையவராக இருப்பார்.

    திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் அதிகமாகும். சந்திரனைப் போல வருமானமும் நிலையற்றதாக இருந்தாலும் கிடைக்கும் பொருளை கவனமாக பாதுகாத்து பயன்படுத்துவார்கள். வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுடன் எப்போதும் சேர்ந்து வாழ விரும்புவார்கள். பெண் தெய்வங்களை அதிகம் விரும்பி வழிபடுவார்கள்

    தசா பலன்கள்

    சனி தசா: பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும். இதன் தசா காலம் 19 வருடம். பிறந்த நட்சத்திர பாதத்திற்கு ஏற்ப இதன் தசா வருடம் வழி நடத்தும். சுய ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் பெற்றோர்கள் நல்ல வசதியான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார்கள். நன்றாக படித்து முதன்மை மாணவராக திகழ்வார்கள். சனி பலம் குறைந்தால் இளமை வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    புதன் தசை: இது தன தாரையின் நட்சத்திரம். இதன் தசா வருடம் 17. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு சினிமாத் துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பல வகையில் புகழ் பெறும் வாய்ப்புள்ளது. இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, போன்றவற்றிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவார்கள்.

    வாழ்க்கையில் அத்தனை வசதிகளையும் பெறுவார்கள். சனி தசாவின் கால அளவிற்கு ஏற்ப புதன் தசாவில் நிலையான, தொழில் உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு, வாகனம் என வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள். குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார். கடின உழைப்பினால் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள்.

    கேது தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 7 ஆண்டுகள் பணி நிமித்தமாக வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளை விட்டு தள்ளி இருக்க நேரலாம். ஆனால் குடும்ப வாழ்வில் எந்த பாதிப்பும் நேராது. வாழ்க்கையில் நல்ல வசதிகளை அடைய உழைப்பீர்கள். அமைதியான மற்றும் ஒழுக்கமான குணம் கொண்ட நீங்கள் மற்றவர்களின் முறையற்ற செயல்களால் சில நேரங்களில் பாதிக்கப்படலாம். இந்த காலத்தில் உங்கள் மனதில் இருப்பதை வார்த்தைகளாக கூறுவதில் சிரமப்படுவீர்கள். இதனால் உங்களது மனது காயப்படக்கூடும். கடவுள் நம்பிக்கை அதிகமாகும். சில போராட்டங்களை வாழ்க்கையில் சந்திப்பீர்கள். அதன் பிறகு வளர்ச்சி காண்பீர்கள்.

    சுக்ர தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 20. சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவையாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும். கேது தசாவில் இழந்த இன்பங்களை சுக்ர தசா மீட்டுத்தரும். உங்களது நல்ல குணங்களால் மற்றவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் அதிகமாகும் சுய ஜாதகத்தில் சுக்ரனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எதிர் பாலினத்தினரால் மன உளைச்சல் அதிகமாகும். சிலருக்கு இந்த காலகட்டத்தில் மறு விவாகம் நடக்கும்.

    சூரிய தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். சிறி சிறு இன்பங்களை அடைய விரும்புவீர்கள். பாராட்டுக்கு மயங்குவீர்கள் சுய ஜாதகத்தில் சூரியன் பலம் குறைந்தால் கடன், வறுமை, பரம்பரை நோய் தாக்கம் ஏற்படும். இதனால் உங்களது திருமண வாழ்வில் சலசலப்புகள் ஏற்படலாம். உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை இருக்கும். முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முன்கோபத்தால் பிறரை வருத்திவிட்டு பின்பு வருத்தம் கொள்வீர்கள். நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களை பெற முடியும்.

    சந்திர தசா: இது ஆறாவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். மன அமைதியை விரும்புவீர்கள். நல்ல புத்திசாலி தனதுத்துடன் பாரபட்சமின்றி நடப்பதுடன் எளிமையான வாழ்வை பின்பற்றுவீர்கள். இரக்க குணம் தயாள குணம் அதிகமாகும்.

    ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    பூசம் நட்சத்திரத்தின் சிறப்புகள்:

    இந்த நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் குரு என்பதால் வியாதிகளுக்கு மருந்து உண்ண சிறந்த நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரம் நாளில் பெருமாளை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும். ஆலய திருப்பணிகள் தொடங்கவும் ஆலயங்களில் விக்ரக பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் போன்ற தெய்வ காரியங்களை செய்வதற்கு உகந்த நட்சத்திரமாகும். சித்த மருத்துவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் மூலிகை பறித்தால் அந்த மூலிகைகளில் விசேஷ சக்தி நிரம்பி இருக்கும். இந்த நாளில் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் பொதுஜன வசியம் ஏற்படும். மாந்திரீக தகடுகள் எழுதுபவர்கள் பூசம் நட்சத்திரம் உதிக்கும் நாளில் எழுதினால் அந்த தகடுகளில் ஜீவ ஓட்டம் எளிதில் ஏற்படும். இதன் உருவம் புடலம் பூ என்பதால் கொடி வகைகள், மலர்க்கொடி மற்றும் செடி வகைகளை நடுவதற்கு உரிய நட்சத்திரம் ஆகும். வாஸ்து சாந்தி பரிகாரம் செய்வதற்கும் வித்யாரம்பம் செய்வதற்கும் பூசம் ஏற்ற நட்சத்திரமாகும்.

    செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

    மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனைகோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.

    நட்சத்திர பட்சி: நீர்காகம்

    யோகம்: திருதி

    நவரத்தினம்: நீலம்

    உடல் உறுப்பு: முகம்

    திசை: தென் கிழக்கு

    பஞ்சபூதம் : நீர்

    அதிதேவதை: குரு

    நட்சத்திர மிருகம்: பெண் கரடி, ஆடு

    நட்சத்திர வடிவம்: புடலம் பூ, அம்பு

    நட்சத்திர விருட்சம்: அரசு

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை. ஆயில்யம்,கேட்டை, ரேவதி

    சேம தாரை: பரணி, பூரம், பூராடம்

    சாதக தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    பரம மிக்ர தாரை : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

    பரிகாரம்: பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவையறிந்து உதவ வாழ்வியல் மாற்றம் ஏற்படும்..

    பூசம் நட்சத்திர நாளில் முருகன் வழிபாடு செய்வது நல்லது.

    பூச நட்சத்திரகாரர்களின் தல விருச்சம் அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.

    சாதக தாரையான அஸ்தம் நட்சத்திர நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் அனைத்து வளங்களும் பெருகும்.

    ×