என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தவறு செய்வது தறல்ல!
    X

    தவறு செய்வது தறல்ல!

    • சுதந்திரப் பறவைபோல் அந்த வீதியெங்கும் சைக்கிளில் சுற்றி வந்தான்.
    • நம் தவறுகளை நியாயமாக நமக்குச் சுட்டிக்காட்டுவதற்கு ஒருசிலர் தேவை.

    'எவராவது தம்முடைய வாழ்வில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று அர்த்தம்'.

    -ஐன்ஸ்டைன்

    அவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். சுறுசுறுப்பான சிறுவன். விளையாட்டு, படிப்பு, இசை எல்லாவற்றிலும் அதீத ஆர்வம். ஒவ்வொன்றையும் தானாகவே கற்றுக் கொள்வதில் அதிக விருப்பம்.

    அவனுடைய பிறந்தநாள் வந்தது.

    'என்ன பரிசு வேண்டும்?' - அப்பா கேட்டார்.

    'நியூ மாடல் சைக்கிள்' என்றான் அவன்.

    மகன் கேட்டபடியே, அவன் வயதுக்கேற்ற ஓர் அழகிய சைக்கிளை வாங்கிப் பரிசளித்தார் அப்பா. அவனுக்கு ஏக மகிழ்ச்சி.

    'ஒரு கன்டிஷன். நான் வீட்ல இல்லாத போது, நீ சைக்கிளை எடுக்கக் கூடாது. என் உதவியோடுதான் நீ சைக்கிள் ஓட்டிப் பழகணும்' என்றார் அப்பா.

    அவன் தலையாட்டினான்.

    தினமும் மாலையில் அவன் சைக்கிள் ஓட்டிப் பழகுவான். அப்பா மிதமான ஓட்டமும் நடையுமாய் அவனோடு செல்வார். வீதிகளில் சைக்கிளில் உலா வரும்போது, அவன் மனம் ஆகாயத்தில் பறக்கும்.

    ஆனால், அவனுக்குள் ஓர் எண்ணம். அப்பா உதவியின்றித் தானாகவே சைக்கிள் ஓட்ட வேண்டும். அப்பாவிடம் சொன்னால் சம்மதிக்க மாட்டார்.

    ஒருநாள் அவர் தனது நண்பர் வீட்டுத் திருமணத்திற்காக பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். சைக்கிளை எடுத்தான். ஆர்வ மிகுதியானால், அம்மா சொல்லையும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    சுதந்திரப் பறவைபோல் அந்த வீதியெங்கும் சைக்கிளில் சுற்றி வந்தான். திடீரென ஒரு ஸ்கூட்டி எதிரே வர, பதற்றமடைந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குக் காயம் இல்லை. ஆனால், ஸ்கூட்டி மோதி சைக்கிளின் முன்சக்கரம் நெளிந்துவிட்டது.

    கண்கலங்கியபடி சைக்கிளை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். அம்மா திட்டித் தீர்த்தாள். அந்நேரம் அப்பா வந்துவிட்டார். சைக்கிளின் பரிதாப நிலையைப் பார்த்த அவருக்குக் கோபம் 'குப்'பென்று தலைக்கு ஏறியது.

    'நான் வீட்ல இல்லாத நேரத்துல ஏன்டா சைக்கிளை எடுத்தே' என்று ஆத்திர ஆத்திரமாய், அவன் முதுகில் 'சப்'பென்று அறைந்தார். அம்மா தடுத்தாள். கோபம் தாளாமல், மேலும் நான்கைந்து பளார் பளார் விழுந்தன.

    'இனி உனக்கு சைக்கிள் கிடையாது' என்று சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, அவன் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தான். சைக்கிள் கிடைக்கவே கிடைக்காதோ என்ற பெருங்கவலை அவனுக்கு. அப்போதுதான், அவனுக்குப் பிரியமான தாத்தா, ஊரிலிருந்து இரண்டு பைகள் நிறைய பொருட்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கினார். வீட்டிற்குள் நுழைந்ததும், பேரன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்துத் துடிதடித்துப்போனார்.

    'ஏங்கண்ணு அழுவுறே?'

    'அப்பா அடிச்சாரு'.

    'டேய் மவனே, ஏன்டா எம்பேரனை அடிச்சே?' என்று அவர் சத்தமிட, அறையிலிருந்து அப்பா வந்தார்.

    'அவன் என்ன பண்ணிருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா? புதுசா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டி உடைச்சிட்டான். காஸ்ட்லி சைக்கிள்'.

    'அதுக்காக புள்ளைய அடிக்கிறதா...கேக்கிறேன்'.

    கவிஞர் தியாரூ

    'பின்ன கொஞ்சணுமா?'

    'சரிடா, நீ சின்ன புள்ளையா இருந்தப்ப, உன் தாய்மாமன் துபாய்லேருந்து பெரிய பேட்டரி கார் வாங்கி வந்து கொடுத்தான். அதை மொரட்டுத்தனமா சுவர்ல மோதவிட்டு விளையாடி, ஒருமணி நேரத்துல சுக்குநூறா உடைச்சிப் போட்டியே. அப்ப நான் உன்னை கண்டிச்சேன். ஆனா அடிச்சேனா? எத்தனை பொருளை பிரிச்செடுத்திருக்கிறே. அதனாலதான், இன்னிக்கு நீ பெரிய மெக்கானிக்கல் என்ஜினீயரா இருக்கிறே... தெரிஞ்சிக்கோ'.

    'சரிப்பா, என்னதான் செய்ய சொல்றீங்க?'

    'உடைக்காம எதையும் புதுசா உருவாக்க முடியாது. தப்பே செய்யாம ஒருத்தன் அறிவாளி ஆக முடியாது. ஆர்வத்துனால தவறுகள் வரலாம். ஆனா, அந்த தவறுகள்தான் முன்னேற்றத்துக்கு முதலீடு'.

    'அப்ப கண்டிக்கவே கூடாதா?'

    'பக்குவமா கண்டிக்கணும். ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடக் கூடாது. தவறுகளை நிதானமா சொல்லிப் புரிய வைக்கணும். அப்பதான் நல்ல விஷயங்கள் உருவாகும்' என்று சொல்லிவிட்டு, பேரனை மடியில் அமர்த்திக் கொண்டார் தாத்தா.

    எல்லோரும் தவறு செய்கின்றோம். குழந்தைகளின் தவறுகளை நாம் அன்போடு சரிசெய்ய வேண்டும். நாம் தவறு செய்யும் போது, அதை நாமே உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். அல்லது ஞானமிக்க நல்லவர்கள் சுட்டிக்காட்டும் போது, அதை ஏற்று நம்மைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிலர் இருக்கிறார்கள். தங்கள் தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டினால், அது அவர்களுக்குப் பிடிக்காது. நேரடியாகவே உதாசீனப்படுத்துவார்கள். சிலர், கேட்டும் கேட்காததுபோல் நடந்து கொள்வார்கள்.

    பேருந்தில் தங்கள் இருக்கையை யாரேனும் கேட்டுவிடுவார்களோ என்ற எண்ணத்தில், தூங்குவதுபோல் கண்களை மூடிக்கொண்டு இருப்பார்களே; அப்படிப்பட்டவர்கள் எந்தத் தவறையும் மிக லாவகமாகச் செய்வார்கள். எதுவும் செய்யாததுபோல் இருப்பார்கள்.

    தவறுகள் செய்வது இயல்புதான். ஆனால், தவறுகளையே செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால், அனுபவங்களிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

    அனுபவ ஞானம் என்பது வயது முதிர்ச்சியினைப் பொறுத்ததல்ல; தவறுகளிலிருந்து நம்மை நாம் எப்படித் திருத்திக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தது.

    சிலர் தாங்கள் செய்த தவறுகளையே சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஒன்றன்பின் ஒன்றாக நினைவுபடுத்திப் பேசுவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.

    'அன்னிக்கு மட்டும் நான் அதை செய்யாம இருந்திருந்தா, இன்னிக்கு ஓஹோன்னு இருந்திருப்பேன். எல்லாம் தலைவிதி'.

    'எங்க அப்பா எவ்வளவோ சொன்னாரு. நான் கேட்கல. அதனாலதான் இந்தப்பாடு'.

    இப்படி விதவிதமாகப் புலம்பிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? பலரிடம் இருக்கும் பிரச்சனை இதுதான். தங்கள் தவறுகளை எல்லாம் ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அவற்றிலிருந்து வெளிவருவதற்கு முயற்சிக்கவே மாட்டார்கள். தவறுகளை நிவர்த்தி செய்து முன்னேறுவதுதானே முக்கியம்.

    அதற்கு ஒரு மிகச்சிறந்த வழி, இலக்கை நிர்ணயிப்பது. படிப்பு, விளையாட்டு, தொழில் - இப்படி எதுவாக இருந்தாலும் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்தல்; விளையாட்டில் முக்கிய குழுவில் இடம்பிடித்தல்; தொழிலில் புதிய உயரத்தை எட்டுதல் என அவரவர் தங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு செயல்படும்போது, நம் பலவீனங்களைக் கண்டு கொள்ளலாம். முந்தைய தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான உந்துதலையும் பெறலாம்.

    நம்மைச் செம்மைப்படுத்துவதற்கு, நம் தவறுகள் நமக்குப் பாடங்களாக அமையுமெனில், அவை நமக்கு லாபங்களே. அதற்காக, மீண்டும் மீண்டும் தவறுகளையே நாம் செய்து கொண்டிருந்தால், அது அறிவீனம்.

    சிலர் தாங்கள் சரியாகச் செய்வதாக எண்ணிக்கொண்டு, எல்லாவற்றையும் தப்புத் தப்பாகச் செய்வார்கள். நம் தவறுகளை நியாயமாக நமக்குச் சுட்டிக்காட்டுவதற்கு ஒருசிலர் தேவை.

    தயு மற்றும் யுதாங் என இரண்டு ஜென் குருமார்கள். அவர்களைத் தேடித் தலைமைத் தளபதி ஒருவர் வந்தார். தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி அவர்களிடம் வேண்டினார்.

    'உன் பணிவு, தெளிவு ஆகியவற்றைப் பார்க்கும் போது, நீ புத்திசாலியாகத்தான் தெரிகிறாய். எனவே, நல்ல சீடனாகவும் இருப்பாய்' என்றார் யுதாங்.

    'இவனா? இந்த அடிமுட்டாளுக்கு மண்டையில் அடித்துச் சொன்னால்கூட ஜென் தத்துவத்தைப் புரியவைக்க முடியாதே' என்றார் தயு.

    தளபதி கோபப்படவில்லை. தன்னை ஏளனமாய்ப் பேசிய தயுவையே தன் குருவாக ஏற்றுக் கொண்டார். தன் தவறுகளை இடித்துரைத்துத் தன்னைச் செம்மைப்படுத்துவதற்கு, அந்த குருதான் தனக்குத் தேவை என்பதைத் தளபதி உணர்ந்திருந்தார்.

    அறிவார்ந்த ஆலோசனைகளும் அக்கறையான கண்டிப்புகளும், நம்மைச் சீர்படுத்திக் கொள்வதற்கு நமக்கு உதவும். கசக்கின்ற பாகற்காய் நம் உடல்நலனுக்கு நல்லது.

    தவறுகள் நியாயமானவையா நியாயமற்றவையா என்று விவாதிப்பது வீண். தவறுகளிலிருந்து தெளிவு பெற்று, நம்மைப் புதுப்பித்துக் கொண்டுள்ளோமா என்ற தற்பரிசோதனை அவசியம்.

    தவறு செய்வது தவறல்ல. 'தவறு செய்கிறோம்' என்ற உணர்வே இல்லாமல் தவறுகளையே செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய தவறு; அது குற்றம்.

    இன்றைய உலகிற்குப் போதைப்பொருள் மிகக்கொடிய அச்சுறுத்தல். பள்ளி, கல்லூரி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களே. இது மனித சமூகத்தையே பலவீனப்படுத்துகின்ற தீமை அல்லவா! எனினும், இது தொடர்கிறதே. காரணம் என்ன? குற்றம் உணராமை!

    தங்களின் தவறான செயல்களால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அபாயத்தைக் கொஞ்சமும் சிந்திக்காத குருட்டுத்தனம். அதனால்தான், இன்று குடும்பங்களிலும் சமூகத்திலும் பலப்பல பிரச்சனைகள்.

    யாராக இருந்தாலும், பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்குத் தங்கள் தவறுகளை உணர்கின்ற மனம் வேண்டும். தாங்கள் செய்த தவறுகளால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மன்னிப்புக் கேட்கின்ற குணம் வேண்டும். அப்போதுதான் வாழ்வில் திருத்தம் ஏற்படும். அந்த திருத்தங்களால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

    போன்: 9940056332

    Next Story
    ×