என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

யார் சிறந்த தம்பதி?
- துறவறம், இல்லறம் என்னும் இரண்டு ஒழுக்கங்கள் முதன்மையானவை.
- இல்லற வாழ்வைத் தவறவிட்டவர்கள் வாழ்வின் இனிய பக்கங்களைத் தவறவிட்டவர்கள் ஆவர்.
சிறந்த தம்பதி யார் என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.
ஆண்மையும் பெண்மையுமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலக உயிர்மைப் பண்பாட்டில், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றாக இல்லற வாழ்வை ஏற்று இணைந்து வாழ்கிற நாகரிக வாழ்க்கையை மனிதர்கள் மட்டுமே கடைப்பிடித்து வருகின்றனர். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒழுக்கங்கள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள், துறவறம், இல்லறம் என்னும் இரண்டு ஒழுக்கங்கள் முதன்மையானவை.
துறவு வாழ்வு வாழ்வதற்கு ஒருவனோ, அல்லது ஒருத்தியோ போதுமானது ஆகும்: அடுத்தவர் துணையின்றித் துறவு வாழ்க்கையைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், இல்லற ஒழுக்கத்தைப் பேணுவதற்கு, ஒருவனும் ஒருத்தியும் ஆகிய இருவர் மனமொத்து இணைய வேண்டும். மனமொத்து இணைவதற்குத், திருமணம் என்னும் சடங்கு முக்கியமான நுழைவுச் சீட்டாகக் கருதப்படுகிறது. அவனும் அவளும் மனம் ஒருமித்து இணைகிற காதல் மணமாயினும் சரி!, அவனையும் அவளையும் அறிந்த சான்றோர் தேடிக் கண்டுபிடித்து மணம் செய்துவைக்கின்ற நிச்சயித்த மணமாயினும் சரி! ஊரோர் அறியத் திருமணம் நடந்து அவர்கள் தம்பதியராய் வாழவேண்டும். தனியராய்ப் பிறந்து வளரும் ஆணும் பெண்ணும் உரிய பருவத்தில் இல்லறத்தில் இணைந்து குடும்பம் நடத்தத் தொடங்கும்போது அவர்கள் தம்பதியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
ஆணும் பெண்ணும் இணையராய் இணையும் போது, எல்லாவகைப் பொருத்தங்களும் பார்க்கப்படுகின்றன; இந்தக் காலங்களில், மாப்பிள்ளையும் பெண்ணும் முடிவானபின்னர், அவர்களிருவரும், ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரம் முறைகூடக் கலந்துரையாடுகின்றனர். இருவரும் மனம்விட்டுப்பேசி முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், திருமணம் முடிந்த அடுத்த வாரமே ஆயிரம் மனத்தாங்கல்களும், சண்டை சச்சரவுகளும் தலைதூக்கி விடுகின்றனவே! காரணம் என்ன?. பெற்றோர்கள் பார்த்துவைக்கும் திருமணங்கள் மட்டுமல்ல, தம்பதியர் இருவரும் திருமணத்திற்குமுன் அவர்களாகவே விருப்பப்பட்டுக் காதலித்தனர் என்றாலும்கூட, திருமணத்திற்குப் பின் சண்டைகள் விதிவிலக்கல்லவே!.
'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!' என்பது பழமொழி, வேறொரு முறைமையில், 'திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!' என்று சொல்லப்படுகிறது. அன்பும் அறமுமாகக் குடும்பத்தில் தழைக்கவேண்டிய மணமக்கள், தற்போது விலைகொடுத்து வாங்கப்படுகிற சந்தைப்பொருளாக மாறிவிட்ட அவலத்தை இப்பழமொழி தமிழ்ச் சவுக்குக் கொண்டு சாடுகிறது.
ஆணும் பெண்ணுமாக இணைந்துவிட்ட பின்னர், ஒருவருக்கொருவர் அன்பு செய்யக் கற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கப் பழகிக்கொண்டு, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிப்பரிமாறி, இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொண்டு, நல்லறங்களை இணைந்தே செய்யும் நல்லொழுக்கத்தைப் பயின்றுகொண்டு வாழும் உயர்ந்த நெறிகளை இல்லறமே ஊட்டிவளர்க்கிறது. இல்லற வாழ்வைத் தவறவிட்டவர்கள் வாழ்வின் இனிய பக்கங்களைத் தவறவிட்டவர்கள் ஆவர்.
சுந்தர ஆவுடையப்பன்
இந்த உலகில் படைப்புக் கடவுளின் வேலைகளை அவர் சார்பில் இல்லறத்தாரே நிகழ்த்திக் காட்டுகின்றனர்!. ஆம் ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைந்து, கருக்கூடி, பிள்ளைகள் பெற்றுப், புதிய தலைமுறைகளை இந்த உலகத்தில் உலவவிடும் படைப்பாளிகள் ஆகின்றனர். உலக மாந்தரிடையே இருக்கவேண்டியதாக வலியுறுத்தப்படும் அன்பு, கருணை, இரக்கம், பரோபகாரம், நன்றியுணர்வு, இனிய சொற்கள், உண்மை பேசுதல், உதவிசெய்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற எல்லா ஒழுக்க குணங்களும் உற்பத்தியாக வேண்டிய இடம் குடும்பமாகவே இருக்கிறது.
ஆனால் இன்று குடும்பம் குடும்பமாகவா இருக்கிறது?. திருமணமான அடுத்த நாளிலிருந்தே யார் பெரியவர்? யார் அறிவாளி? யார் வசதியானவர்? யார் பலசாலி? எனும் ஆணவப் போராட்டங்களால் இன்று தம்பதியர் தம்பதியராய் இருப்பதில்லை. ஆணின் மனத்தைப் பெண்ணும், பெண்ணின் மனத்தை ஆணும் முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே, இருவருமே திறமையான தம்பதியராய் வாழமுடியும்.
இரண்டு அரசர்கள் போரிட்டனர். ஒருவன் வெற்றி கண்டான்;. இருந்தாலும், வெற்றிபெற்ற அரசன் தோல்வியடைந்த அரசனிடம், "மீண்டும் உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். இந்தமுறை நீ என்னோடு சண்டைபோட வேண்டாம்; நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியான பதிலை யாரிடமாவது கேட்டுவந்து என்னிடம் சொல்!. பதில் சரியானதாக இருந்தால், உன்னிடமிருந்து நான் ஜெயித்த நாட்டை உனக்கே திருப்பித் தந்துவிடுகிறேன்!" என்றான். சரியென்று தோற்ற மன்னன் ஒப்புக்கொண்டதும் கேள்வியை வென்ற ராஜா சொன்னான்," பெண்கள் தங்கள் ஆழ்மனத்தில் என்ன சிந்திப்பார்கள்?. இதுதான் கேள்வி. இதற்கான பதிலை நீயே சொல்லலாம்! அல்லது யாராவது ஞானியரிடம் கேட்டுவந்து சொல்லலாம்!. ஆனால் ஒருவாரத்திற்குள் சொல்லியாக வேண்டும்" இந்தக் கேள்வியை, வென்ற ராஜா அவனாகக் கேட்கவில்லை!; அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்; அவள் அவனிடம் கேட்ட கேள்விதான் அது; இந்தக் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் மட்டுமே அவனை அவள் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிப்பாளாம்.
தோற்ற ராஜா தன் நண்பர்கள், அமைச்சர்களிடம் ஆலோசித்தான். சரியான பதிலாக எதுவும் பிடிபடவில்லை; ஆனால் எல்லா நண்பர்களும் ஒருமுகமாக ஒரு கருத்தைச் சொன்னார்கள். அந்த நாட்டின் மலை உச்சியில் ஒரு சூனியக்காரக் கிழவி இருக்கிறாள்; அவளிடம் போனால் நிச்சயம் சரியான பதிலை அவளிடமிருந்து பெற்று வரலாம்! என்பதே அது. ராஜா மலை உச்சிக்குச் சென்று கிழவியிடம் வந்த காரியத்தைச் சொன்னான். "பெண்கள் ஆழ்மனத்தில் நினைப்பது என்ன?". "இதற்குச் சரியான பதிலைச் சொன்னால் உனக்கு என்ன கிடைக்கும்?" சூனியக்காரக் கிழவி கேட்டாள். "நான் இழந்த எனது நாடு எனக்குத் திரும்பக் கிடைக்கும்!" என்றான் ராஜா. "சரி உனக்கு உன் நாடு கிடைக்கும்! பதிலைச் சொல்லப்போகிற எனக்கு என்ன கிடைக்கும்?" விவகாரமாய்க் கேட்டாள் கிழவி. "நீ என்ன கேட்டாலும் தருவேன்! இது சத்தியம்; பதிலைச் சொல்!" சொன்னான் அரசன்.
"எந்தப் பெண்ணாக இருந்தாலும் தான் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும்! என்றுதான் ஆழ்மனத்தில் விரும்புவாள்!" என்றாள் சூனியக்காரக் கிழவி. தோற்ற அரசன், வென்ற அரசனிடம் இந்த பதிலைச் சொல்ல, அவனும் அவனது காதலியிடம் சொல்ல, காதலியும் மகிழ்ச்சியோடு பதிலை ஏற்றுக்கொண்டு, திருமணத்திற்குச் சம்மதிக்க. தோற்ற அரசனுக்கு இழந்த நாடு இப்போது திரும்ப வந்து அவன் மீண்டும் மன்னன் ஆனான்.
தன் நாட்டிற்கு மன்னன் ஆன கையோடு மலை உச்சியிலிருந்த சூனியக்காரக் கிழவியைக் காணச் சென்றான் ராஜா. " சொல்! உனக்கு என்ன வேண்டும் கேள்!" கேட்டான்; " நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள் கிழவி. மறுவார்த்தை பேசாமல் சரி என்று ஒத்துக்கொண்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கிளம்பினான். " அதற்கு முன் ஒரு நிபந்தனை!" என்றாள் சூனியக்காரக்கிழவி. "என்னை நீ மணம் முடித்தபிறகு நீ சரியென்றால், பகல் முழுவதும் தேவதையாக உருவெடுத்து உன் உடன் இருப்பேன்!; ஆனால் இரவு முழுவதும் சூனியக்காரக் கிழவியாக மாறி விடுவேன்!; இல்லை நான் இரவில் தேவதையாக இருந்தால் நல்லது என்று நீ விரும்பினால்… அதற்கும் சரி! ஆனால் பகலில் நான் உன்னுடன் சூனியக்காரக் கிழவியாக இருப்பேன்! பரவாயில்லையா?" கேட்டாள் கிழவி.
யோசித்தான் ராஜா. "என்ன பேசாமல் இருக்கிறாய்? சொல்! நான் எப்போது கிழவியாகவும், எப்போது தேவதையாகவும் இருக்க வேண்டும்?" திருத்தமாகக் கேட்டாள் கிழவி. " நீ பெண்ணாக இருப்பதால், உன் சம்பந்தப்பட்ட முடிவுகளை நீயே எடுப்பதையே நீ பெரிதும் விரும்புவாய் என்பதால், இது தொடர்பான முடிவை நீயே எடுத்துக்கொள்!" என்று தெளிவாகச் சொல்லி விலகிக்கொண்டான் ராஜா. மனம் மகிழ்ந்த கிழவி," என் முடிவை நானே எடுத்துக்கொள்ள வேண்டும் என வழிவிட்டதால், இனி இரவு பகல் எந்நேரமும் வாழ்க்கை முழுவதுமே நான் தேவதையாகவே உன்னுடன் குடும்பம் நடத்துவேன்!" என்று தன் முடிவை அறிவித்தாள் கிழவி. ஆம். பெண்கள் விஷயத்தில், அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்களையே முடிவெடுக்க விட்டுவிட்டால் அவர்கள் எப்போதும் தேவதையாகவே இருப்பர். இடையிடையே ஆண்கள் தங்களது அதிகாரத்தைத் திணிக்க நினைத்தால்... இடையிடையே அந்த அருவருப்பான முகங்களையும் சந்திக்க நேர்ந்து விடும்.
இல்லறம் என்பது இரண்டு கருவிகளையோ அல்லது இரண்டு பொம்மைகளையோ வைத்து இயக்கி நடத்தும் விளையாட்டு அல்ல.
ரத்தமும் எலும்பும் சதையும் உயிரும் மனமும் கொண்டு உணர்வோடு இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு மனிதங்களின் வாழ்வியல் சாதனை. எல்லாச் சாதனைகளும் வெற்றிகளில்தான் நிறைவடைகின்றன என்பது கிடையாது. சோதனை நிகழ்வுகளும் உண்டு; சோதனைகளைத் தோல்வி நிலைகளுக்குச் சென்றுவிடாமல் அவ்வப்போது நேர்படுத்த வேண்டிய பொறுப்பும் உண்டு.
எப்போதும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றால், யார் பேசுவது? யார் அமைதியாக இருப்பது?. விட்டுக்கொடுப்பதுதான் வாழ்க்கை என்றால் எப்போதும் நான்மட்டும்தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா?... நான் எந்த வகையில் குறைச்சல்?...இப்படிக் கேட்டுக் கொண்டே போனால் வாதம்தான் பெருகுமே யொழிய வழிபிறக்காது.
ஒரு போட்டி நடந்தது. 'சிறந்த தம்பதி யார்?'. திருமணமாகி ஓராண்டு ஆனவர்கள் முதல் ஐம்பதாண்டு கடந்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். ரகசிய நேர்காணல் நடத்தி மதிப்பெண்கள் போடப்படும். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒரு தம்பதி அரங்கத்துக்குள் நுழையும்போதே சண்டை நாறி விட்டது. இதுல எல்லாம் ஜெயிச்சு பரிசு வாங்கலாம்னா கூட்டிட்டு வர்றீங்க! ஒரு பரிசும் கிடைக்காதபடிக்கு நான் பார்த்துக்கிர்றேன்!- சபதம்போட்டு உள்ளே வந்தார் அந்த முப்பத்தைந்து வருடமான தம்பதியின் மங்கையர் திலகம். ரகசிய நேர்முகங்கள் முடிந்து மதிப்பெண் முடிவை அறிவித்தனர். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளான ஒரு தம்பதி நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தனர். அந்த சண்டை போட்டுக் கொண்டு அரங்கத்துக்குள் நுழைந்த 35 வருட தம்பதி நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆனாலும் சிறந்த தம்பதியாக வென்றவர்கள் யார் தெரியுமா? பூஜ்யம் மதிப்பெண் எடுத்த அந்த ஒத்துப்போகாத தம்பதியர்.
நடுவர்கள் சொன்னார்கள்," இல்லற வாழ்வில் மனம் ஒத்து பதினைந்து ஆண்டுகள் இணைந்து வாழ்வதை விட, சண்டைபோட்டாலும், மனம் ஒத்துப்போகவில்லை என்றாலும் தொடர்ந்து 35 ஆண்டுகள் பிரியாமல் ஒன்றாக வாழ்வதே பெரிய சாதனைதான்; எனவே அவர்கள்தான் சிறந்த தம்பதி!"
வித்தியாசமான தீர்ப்புதான். சங்கடமில்லாத வாழ்க்கையுமில்லை.;சதுரமான முட்டையுமில்லை என்பார்கள்; தம்பதியரிடையே சண்டை என்பது சாம்பாரில் உப்புப் போடுவதைப்போல இருந்தால் அதுவும் சுவைதான்.
தொடர்புக்கு: 9443190098






