என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • மன நல ஆலோசகர்களும், யோகா பயிற்சியாளர்களும் நம் உடல், மனம், ஆன்மா ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதனை அறிவுறுத்துவர்.
    • சில வேதனை, நிகழ்வுகள் காலம் செல்ல செல்ல அமைதி பெறும்.

    அடிக்கடி உடம்பு வலி அல்லது உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலி என்று நாம் கூறுகின்றோம். இந்த வலிகளுக்கு காரணம் பல இருக்கின்றன. இதற்கு உடல், மனம் உளைச்சல், வேதனை உணர்ச்சிகள் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

    மன அழுத்தம் தலைவலியினை ஏற்படுத்தலாம். தொடர் வேலை செய்து இராமல் தினமும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

    தோள் பட்டை வலி- மிக அதிக கவலை உணர்ச்சிகளை சுமப்பது, அதிக பொறுப்பு சுமை இவை தோள்பட்டை வலியினை ஏற்படுத்தலாம்.

    கழுத்து வலி- பிறரை மன்னிக்க முடியாத கோப உணர்ச்சி, தன்னையே மன்னித்துக் கொள்ள முடியாத கோப உணர்ச்சி, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளில் கவனம் செலுத்த முடியாமை போன்றவை கழுத்து வலிக்கு காரணமாக இருக்கும் என்கின்றனர்.

    மேல் முதுகு வலி- யாரும் தன் மீது அன்பு செலுத்தவில்லை என்ற உணர்வு, யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்ற உணர்வு மேல் முதுகு வலியினை ஏற்படுத்துமாம்.

    கீழ் முதுகு வலி- பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு கீழ் முதுகு வலி ஏற்படுகின்றதாம்.

    முழங்கை வலி- சில மாறுதல்களை ஏற்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முழங்கை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.

    கை வலி- தனிமை இதற்கு ஒரு காரணம்.

    இடுப்பு வலி- வாழ்க்கையின் பாதையில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம்.

    முட்டி வலி- எதனையும் தானே செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதற்கும் எதிர்பாராத வாழ்க்கை வேண்டும் என்ற ஒரு அடமும் இதற்கு ஒரு காரணமாம். எளிமை, பிறருக்கு உதவுதல் போன்றவை நன்மை பயக்கும் என்கின்றனர்.

    ஆடு தசை வலி- மனக் கசப்புகளை மறக்காது மனதில் வைத்திருப்பவர்களுக்கு ஆடு தசை வலி ஏற்படலாம். மனதில் நன்றியுணர்வு, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் இவை நலன் அளிக்கும் என்கின்றனர்.

    பாத வலி- அதிக மனச்சோர்வு, அழிவுப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுக்கு ஏற்படுகின்றதாம். ஆக்கப் பூர்வமான எண்ணங்கள் உடையவர்களுடன் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது.

    கணுக்கால் வலி- தன் மீதே ஒருவர் மிகக் கடுமையாக இருப்பவர்களுக்கு கணுக்கால் வலி ஏற்படலாம். ஒருவர் தன்னை நேசிக்கவும் பழக வேண்டும்.

    சரி, இதையெல்லாம் யார் சொன்னார்கள்? பொதுவில் மன நலமின்மை உடல் நலத்தினை பாதிக்கும் என்பது மருத்துவ ரீதியான கூற்றுதான்.

    அதற்காக தானே செயல்படாமல் எந்த ஒரு அறிகுறியினையும் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை, மருந்து, சிகிச்சை இவற்றினை முறையாய் கடைபிடிக்க வேண்டும் என்பதே என்றென்றும் சரியான ஒன்று ஆகும். ஆக இதனையே அனைவரும் பின்பற்ற வேண்டும்.

     

    மன நல ஆலோசகர்களும், யோகா பயிற்சியாளர்களும் நம் உடல், மனம், ஆன்மா ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதனை அறிவுறுத்துவர்.

    மேற்கூறிய வலிகளும், மன நல பாதிப்பும் பற்றி ஒரு மன நல ஆய்வாளர் எழுதி யிருந்ததை படித்தேன். இதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் இல்லைதான். ஆனால் பல மன வேதனைகள், கஷ்டங்கள் இல்லாதவர் என்பது அரிது. இதனையும் அறிந்து கொள்ளலாம் என்ற முறையில் இதனை பகிர்கின்றேன். மன நலத்தினை சீர்படுத்த முயற்சி எடுப்போமே. மற்றபடி எந்த உடல் நலபாதிப்பும் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதே.

    சிந்தித்துப் பாருங்கள். நான் சொன்னது உண்மை என்பதனை உணருவீர்கள்.

    * கடந்த காலத்தினை மாற்றவே முடிவதில்லை. * வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறு வேறு பாதை தான்.

    * ரொம்பவும் யோசித்தால் சோகம்தான் மிஞ்சும். * புன்னகையுங்கள். வெகு வேகமாய் பரவும் தன்மை கொண்டது.

    * மகிழ்ச்சி என்பது வெளியில் எங்கும் இல்லை. அவரவர் மனதினுள்தான் இருக்கின்றது.

    * எதனை நம் எண்ணங்களாய் இவ்வுலகிற்கு தருகின்றோமோ அதுவே அப்படியே நமக்குத் திரும்பி வரும்.

    * சில வேதனை, நிகழ்வுகள் காலம் செல்ல செல்ல அமைதி பெறும்.

    * பணம் பற்றாக்குறை அநேகர் வாழ்வில் பிரச்சனைதான். இதில் முதல் முக்கியத்துவம் எது என்பதில் கவனம் செலுத்தி அதனை சரி செய்துதான் அடுத்த முக்கியத்துவத்தினை பார்க்க முடியும்.

    * ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினை வாழ்கின்றோமா? நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பேற்று சரி செய்ய வேண்டும்.

    * அதிக பய உணர்வு இருக்கின்றதா? பல பயங்களையும் தனித்தனியே பிரித்து விடுங்கள். ஒவ்வொன்றாக கையாள வேண்டும். மொத்த பயத்திலும் மூழ்கி விட்டால் எழுந்திருப்பது கடினம் ஆகி விடும்.

    * சந்கேகம் ஏற்படுகின்றதா? அதில் தகுதியானவர்களிடம் அறிவுரை பெற்றால் தீர்வு மிக எளிதாகி விடும்.

    * வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று நொந்து போகிறீர்களா? தன்னால் இயன்ற சிறு சிறு உதவிகளை பிறருக்கு செய்து பாருங்கள்.

     

    கமலி ஸ்ரீபால்

    * ஒழுக்கமின்மை எதில் இருந்தாலும் சரி. 20 நாட்கள் கடும் தவம் போல் முயற்சி செய்து அதனை கண் காணாது விரட்டி விட வேண்டும். ஒழுக்கம் உள்ளே புகுந்து விடும்.

    * நன்றாக இருக்கும் மூளையை முயன்று கெடுத்துக் கொள்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் செய்வது என்ன தெரியுமா?

    * வெளி உலகமே பார்க்காது ஒரு அறைக்குள்ளேயே அடைந்து காலம் தள்ளுபவர்கள் அநேகர் உள்ளனர். குறிப்பாக வயதானவர்கள் இப்படி இருப்பர். இவர்கள் எப்பொழுதும் சோர்ந்து, வலுவிழந்து, மனதில் மகிழ்ச்சி இன்றி இருப்பார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் சிறிது நேரம் கூட அன்றாடம் சூரிய ஒளியில் அவர்கள் இருக்க மாட்டார்கள். ரூமில் மின்சார விளக்கு உதவியிலேயே அனைத்து வேலைகளையும் செய்வர். இப்படி சூரிய ஒளியே படாத உடலும், மூளையும் கெட்டுப் போகும்.

    * சிலர் வாயைத் திறந்தாலே அழிவுப் பூர்வமான எண்ணங்களின் வாடை மட்டுமே இருக்கும். தவறான வார்த்தைகள், அழிவுப் பூர்வமான எண்ணங்களால் துர்நாற்றங்களை வீசி மற்றவர்களின் நல்ல ஆக்கப்பூர்வ அலைகளை அழித்து விடுவர். இவர்களிடமிருந்து ஓட்டம் பிடிப்பதே நல்லது. இவர்களது மூளை அதிக பாதிப்பினை பெற்று இருக்கும்.

    * இளம் வயதினர் இசை கேட்கின்றேன் என்ற பெயரில் காதில் 'ஹெட்போன்' வைத்து மண்டையை உடைக்கும் சத்தத்தில் இசை கேட்டுக் கொண்டிருப்பர். இப்படி தொடர்ந்து செய்பவர்களின் மூளை பாதிக்கப்பட்டு செயல்திறன் குன்றி இருக்கும்.

    * எந்த ஒரு வீட்டு நிகழ்ச்சியோ, பொது நிகழ்ச்சியோ, இப்படி எதிலும் தலை கூட காட்டாமல் வீட்டினுள் பதுங்கி இருக்கும் மக்கள் உள்ளனர். இவர்கள் சிந்தனை, செயல் எல்லாமே மாறுபட்டு, பாதிக்கப்பட்டு இருக்கும்.

    * செல்போனை குடைந்து கொண்டே இருக்கின்றவர்கள் சோம்பலுடன் இருப்பதோடு உற்றார், உறவினரை ஒதுக்குவது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். அன்றாடம் குளிப்பது கூட இவர்களுக்கு பெரிய சுமை ஆகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு ஒன்று போதும். ஒரு மனிதனின் உடல், மனம், வாழ்க்கை என அனைத்தையும் கெடுத்து விடுகின்றது.

    * காலை எழுந்தது முதல் மூட்டை புளி போல் இருந்த இடத்தினை விட்டு அசையாது இருப்பவர்கள் உள்ளனர். உட்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு, தட்டிலேயே கை கழுவுதல், அப்படியே டி.வி., போன் பார்த்தல், அப்படியே படுத்துக் கொள்ளுதல் என்று காலம் தள்ளுவார்கள். இவர்களது மூளையும் அப்படியே மழுங்கி விடுகின்றது.

     

    * நாள் முழுக்க தூங்குவது, தோன்றும் நேரத்தில் எழுவது சாப்பிட்டவுடன் மலை சாய்வது போல் சாய்ந்து விடுவது என்று இருப்பவர்களுக்கு மூளை செயல்பாடு மிக அதிக பாதிப்படையும்.

    * இவற்றினை அறிந்து கொள்வதே நம்மிடம் ஏதேனும் இத்தகு பழக்கங்கள் இருக்குமாயின் அதனை சரி செய்து மூளையினை பாதுகாத்துக் கொள்ளத்தான்.

    * எது நமக்கு தேவைக்கு மிஞ்சி, அதிகமாக இருக்கின்றதோ அதெல்லாம் விஷம்தான். * உணவு, உடை, தூக்கம், அதிகாரம், சோம்பல், பயம், கோபம் இப்படி எதுவாயினும் அது எல்லைக் கோட்டினை தாண்டி விட்டால் அவை விஷம்தான் என்ப தனை அறிவோமாக.

    * நம் வாழ்க்கைக்கு நாம்தான் ஒரு குறிக்கோளினை உருவாக்கி கொள்ள வேண்டும்.

    * விடா முயற்சி என்பது அந்த குறிக்கோளை அடைவதற்காக வேண்டும்.

    * முயற்சியினால் அடைய முடியாதது இல்லை என்பதே வாழ்க்கை. 'முறையாய் வாழ்வோம்'

    • அறிவு ஞானத்தைத் தருகிறது; ஞானம் எந்த நுட்பமான பொருளையும் புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தருகிறது.
    • அறிவாளனே இந்த உலகை ஆள்வோனாகவும், உண்மையில் வாழ்வோனாகவும் திகழ்வான்.

    ஆற்றலைத் தருகிற அறிவைப் பெறுவதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    எந்த மனிதரைப் பார்த்தும், உங்களிடம் ஆடை துணிமணிகள் இருக்கின்றனவா? நிலபுலன்கள் இருக்கின்றனவா? வீடு கார் வசதிகள் இருக்கின்றனவா? காசு பணம் இருக்கின்றனவா? குடும்பம் மனைவி பிள்ளை குட்டிகள் இருக்கின்றனவா? என்று எந்தக் கேள்வி கேட்டாலும், 'இருக்கிறது!' அல்லது 'இல்லை' என்று பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள். ஆனால் அதே மனிதர்களிடம்,' உங்களிடம் அறிவு இருக்கிறதா?' என்று மட்டும் கேட்டுப் பாருங்கள்! அவர்களிடமிருந்து, பதிலுக்கு பதிலாகக் கோபம் எப்படிப் பொத்துக்கொண்டு வருகிறது என்பதைச் சற்று எட்டநின்று ரசியுங்கள்.

    மனிதர்கள் செல்வம், வீடு, வாசல், மனைவி, மக்கள், காசு பணம், ஆடை அணிமணிகள் என்று எதுவும் இல்லாமல் இருப்பதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துடன் இருக்கிறார்கள்!; ஆனால் அதே நேரத்தில், தம்மை அறிவில்லாதவர் என்று யாரும் குறைகூறிவிடக் கூடாது என்பதில் அதிக கவனத்துடனும் இருக்கிறார்கள். அதனால்தான் அறிவு இருக்கிறதா? என்று கேட்டால், 'யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டாய்? என்று அடிக்கவும்கூட வந்து விடுவார்கள். அறிவு ஒரு மனிதனை முழுமை மனிதனாக மாற்றும் ஆற்றல் மிக்கது; தன்னை வறியவன், கோழை, சோம்பேறி, கஞ்சன் என்றெல்லாம் கூறுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மனிதன், தன்னை முட்டாள் என்று அடுத்தவர் இழித்துக் கூறுவதை ஏற்றுக்கொள்வதே இல்லை.

    கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று வகையான ஆற்றல்கள் மனிதரை ஆளுமை மிக்கவராக உருவாக்கும் வல்லமை மிக்கவை. இவற்றில் கல்வி ஒன்றே அறிவோடு நெருங்கிய தொடர்புடையது என்று எண்ணுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. கல்வி என்பது எல்லாத் துறைகள் சார்ந்த அறிவு நுட்பத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறது. இன்னும் சொல்லப்போனால் செல்வம் ஈட்டுவதற்கும், பொருளீட்டல் சார்ந்த அறிவையும் நுட்பத்தையும் அவசியம் பெற்றிருக்க வேண்டும். அதே போல வீரம் என்பது கண்களுக்குப் புலப்படுகிற அங்கங்களின் வலிமை தொடங்கிக், கண்களுக்குப் புலப்படாத மனம்,, தன்னம்பிக்கை, அஞ்சாமை, துணிச்சல் முதலான ஆளுமைப் பண்புகள் வரையிலான அறிவைப் பெற்றிருத்தல் ஆகும். அந்த அடிப்படையில் கல்விக்கூடக் கல்வி தவிர்ந்து, துறைசார்ந்த பயிற்சிக் கல்வியும், அவற்றின்மூலம் விளைச்சலாகும் நுட்ப அறிவும் அறிவு என்கிற பெரும்பிரிவின்கீழ் வரும்.

    'அறிவு என்பது ஆற்றல்' என்னும் பழமொழி ஆற்றல்மிக்க தொடராகத் தற்போது கருதப்படுகிறது. அறிவு ஒரு மனிதனை அறிவாளி ஆக்குகிறது.

    படிப்புத் துறைகளில் பல்வேறு கல்விகள் கற்றுப் பட்டங்கள் பெறுவோரையெல்லாம் அறிவாளிகள் என்று கூறிவிட முடியாது; அவர்களைப் படிப்பாளிகள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்; உண்மையில் அறிவாளிகள் வேறு; படிப்பாளிகள் வேறு. அறிவாளிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள்; கற்றுப் பெற்றதோடு, சுயசிந்தனையில் உருவாகும் சமயோசிதப் புத்தி எனப்படும் நுட்ப அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் படிப்பாளிகள், கற்றதை மட்டுமே வேத வாக்காக்கி, இருப்பதை மட்டுமே இயல்பான அறிவென நம்பி, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

    அறிவு எல்லாருக்கும் பொதுவானது; எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ஆனாலும் பகுத்து அறிகிற அறிவு என்பது மனித குலத்திற்கே சொந்தமானது. அறிவை வளர்த்துக்கொள்வதற்கும், விரிவு செய்வதற்கும் அதன்மூலம் மானுட நேயத்தை வளர்த்துக் கொள்வதற்கும் அறிவென்பதே சிறந்த கருவியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு மனிதனையும் ஆபத்துக் காலங்களிலும், இக்கட்டு நேரங்களிலும் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்துகிற சிறப்பான செயலை அறிவு நிகழ்த்திக் காட்டுகிறது.

    சுந்தர ஆவுடையப்பன்


    ஓர் அழகிய வனஇனக் கதை. ஓர் ஆட்டுக்குட்டி காட்டில் தனக்குக் கிடைத்த தேனை ஒரு மண்குடுவையில் ஊற்றி எடுத்துக்கொண்டு, அருகிலிருக்கும் காட்டில் குடும்பத்தோடு வாழும் தன் பெரியம்மா ஆட்டைக் காணச் சென்றது. காட்டிற்குள் செல்லும் வழியில் கடும் மழை பெய்யத் தொடங்கியது. தேனுள்ள குடுவைக்குள் மழைநீர் புகுந்துவிடாமலிருக்க, ஒரு தேக்குமரத்தின் இலையைப் பறித்து மண் குடுவையின் வாய்ப்பாட்டை மூடிக்கொண்டது. இருந்தாலும் மழை கடுமையாகப் பெய்ததால், ஆடு நனையாமலிருக்க, வழியோரத்தில் இருந்த ஒரு குகைக்குள் புகுந்தது.

    குகைக்குள் புகுந்த ஆட்டிற்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே, ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு ஓநாய் ஆகியவை இருந்தன. மூன்றுமே கொடூரமான மிருகங்கள்; மாட்டிக்கொண்டால், மூன்றுமே நம்மைக் கொன்று உண்டுவிடும் பயங்கரத் தன்மையானவை.

    இவற்றிடமிருந்து எப்படித் தப்பிப்பது? ஆடு யோசிக்கத் தொடங்கியது. " என்ன இந்தப் பக்கம்?" நக்கலாகக் கேட்டது சிங்கம். " வெளியில் கடுமையான மழை; மழைக்கு ஒதுங்கலாமெனக் குகைக்குள் வந்தேன்!" என்று அஞ்சி நடுங்குவதுபோல் ஆடு பதில் சொன்னது. "நாங்களும் மழைக்கு ஒதுங்கலாமென்றுதான் இங்கு வந்துள்ளோம்!" வில்லத்தனமான புன்னகையோடு சிங்கம் சொன்னது. மேற்கொண்டு எதுவும் பேச்சுக் கொடுத்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று எண்ணிய ஆடு, கையிலிருந்த மண்குடுவையை இறுகப் பற்றிக்கொண்டு குகையில் இன்னும் சற்று ஓரமான பகுதிக்குச் சென்று ஒதுங்கி நின்றுகொண்டது.

    இன்று வசமான விருந்து ஒன்று அதுவாக ஒதுங்கி நம்மிடம் வந்துள்ளது என நினைத்து மகிழ்ந்த காட்டுராஜா ஆட்டிடம், " அது என்ன கையில் மண்குடுவை?" என்று கேட்டது. சுதாரித்துக்கொண்ட ஆடு, "ஓ! அதுவா ராஜா!. இந்த மண் குடுவைக்குள் ஒரு அபூர்வ மருந்து இருக்கிறது. இதை அருந்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் வலிமை குன்றாமல் பலசாலியாகவே வாழலாம். ஆனால் அதில் ஒரு சிறு சிக்கல் இருக்கிறது!..." என்று இழுத்தது ஆடு. "அபூர்வமான மருந்துதான். அது என்ன சிக்கல்?. அது என்னவென்று சொல்! நான் தீர்த்து வைக்கிறேன்; அதன் பிறகு அந்த மருந்தை நானே குடித்து மேலும் வலிமையுள்ளவனாகவும் ஆகிறேன்!" கர்ஜித்தது சிங்கம்.

    " அந்தச் சிக்கல் என்னவென்றால், இந்தக் குடுவைக்குள் இருக்கும் மருந்திற்குள் ஒரு ஓநாயின் வாலைக் கத்தரித்துப் போட்டு ஒருமணிநேரம் ஊறவைத்துப் பின் குடித்தால் மருந்து வீரியத்துடன் செயல்படும் " என்றது ஆடு. "ஓநாயின் வாலைக் கத்தரித்து மருந்திற்குள் போட்டு ஊறவைத்துக் குடிக்க வேண்டும்! இவ்வளவுதானே விஷயம்?. இதோ நம் எதிரேயே ஓநாய் இருக்கிறதே! அதனுடைய வாலைக் கத்தரித்தால் ஆயிற்று!" என்று கூறி சிங்கம் ஓநாயின் அருகில் வந்தது; கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குகையை விட்டு வெளியேறி ஓநாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடத் தொடங்கியது. அதனைத் துரத்திக்கொண்டு சிங்கமும் ஓடத் தொடங்கியது.

    அப்பாடா! இரண்டு எதிரிகளைக் குகையிலிருந்து ஒரே நேரத்தில் வெற்றிகரமாகத் துரத்திவிட்டோம்! என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது ஆடு. ஆயினும்…சிங்கமும் ஓநாயும் ஓடிவிட்டால் என்ன? புலி இருக்கிறதே!. ஆட்டைக் கடித்துக் குதற நெருங்கி வந்தது புலி. தனது சமயோசிதப் புத்தியைப் பயன்படுத்தி ஆடு பேசத் தொடங்கியது. "புலியாரே! காட்டுராஜா சிங்கத்திடமிருந்து உண்மையிலேயே நான்தான் இப்போது உங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். உண்மையில் அந்த மருந்துக் குடுவையில் போட்டு ஊறவைக்கப்பட வேண்டியது ஓநாயின் வால் அல்ல; ஒரு புலியினுடைய இதயம். இந்த உண்மையை நான் சிங்கத்திடம் சொல்லியிருந்தால், நீங்கள் இப்போது இங்கே நின்றுகொண்டிருக்க மாட்டீர்கள்; ஓநாய்க்குப் பதிலாக நீங்கள்தான் காட்டிற்குள் ஓடிக்கொண்டிருப்பீர்கள்!. அதற்காக எனக்கு நன்றி சொல்லுங்கள்!" என்றது ஆடு.

    புலி சிந்திக்கத் தொடங்கியது. ஓநாயின் வாலோடு எப்படியும் சிங்கம் மருந்துக் குடுவைக்காக மீண்டும் இந்த குகைக்குத்தான் வரும்; அப்போது நம்முடைய இதயம் என்கிற உண்மையை ஆடு சிங்கத்திடம் கூறிவிட்டால் நம்கதி அதோகதிதான்!. சிந்தனை முடிவதற்குள், சிங்கம் திரும்புவதற்குள் புலி குகையைவிட்டு ஓடத் தொடங்கியது. இதை ஆவலோடு எதிர்பார்த்த ஆடு, இப்போது மழை நின்று விட்டதால் குகையை விட்டு வெளியேறி, நிம்மதியாகத் தேன்குடுவையுடன் பெரியம்மா வீடுநோக்கி நடக்கத் தொடங்கியது.

    அறிவு என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நமக்குக் கவசமாக இருந்து பாதுகாப்பது; அது உள்ளழிக்க முடியாத அரண் என்பது வள்ளுவர் கருத்து. ஆடு, தன்னை முதலில் சிங்கத்திடமிருந்தும், பிறகு ஓநாயிடமிருந்தும், அதன்பிறகு நேக்காகப் புலியிடமிருந்தும் காத்துக்கொள்ளக் கையிலெடுத்த கருவி அறிவாயுதம் மட்டுமே!. ஒருதுளி ரத்தமும் சிந்தப்படாமல், துரும்பளவு ஆயுதமும் தூக்கப்படாமல், எதிரிகளைப் புறங்கண்டு ஓடச் செய்து வெற்றிகாண்பதற்கு அறிவு ஒன்றே போதுமானது. எதிரிகள் ஆள் அம்பு சேனை செல்வம் அதிகாரம் என்று எதைக்கொண்டு வந்து எதிர்த்து நின்றாலும் அவற்றின் வியூகங்களையெல்லாம் அறிவு தவிடுபொடி ஆக்கிவிடும்.

    அறிவு ஞானத்தைத் தருகிறது; ஞானம் எந்த நுட்பமான பொருளையும் புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தருகிறது. அறிந்து கொள்வது அறிவு என்றால் புரிந்து கொள்வது ஞானம். எதையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளத் தொடங்குதலே ஞானம் பெறுதலின் அடிப்படை அறிவு. எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் வல்லமை பெற்ற மனிதனுக்கு அவை எல்லாவற்றையும் அடக்கியாளும் திறமையும் வாய்த்துவிடுகிறது. பிறகென்ன? அறிவின் மனிதன் உலகின் மனிதனாகி விடுகிறான்.

    அறிவு மனிதனுக்குப் பெயரைப் பெற்றுத் தருகிறது. அறிவு மனிதனுக்குப் புகழைச் சம்பாதித்துத் தருகிறது. அறிவு மனிதனுக்கு இடைவிடாத மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டுவந்து கொட்டித் தருகிறது. அறிவு, செல்வம் குறித்த துல்லியமான ஞானத்தை உணரவைப்பதால், செல்வமில்லாக் காலத்தும் செல்வந்தனைவிடவும் அதிகமான நிறைவுடையவனாக ஆக்கிக் காட்டுகிறது. கேள்வித் தேடல்களின் அடிப்படையாகக், கல்வி இருப்பதால், தேடுவதும் கண்டடைவதுமான மகிழ்ச்சி விளையாட்டை விளையாடுபவனாக அறிவாளி திகழ்கிறான்.

    ஆணவச் சிகரங்களை உண்மை அறிவு தகர்த்து விடுவதால். பணிவுள்ள மனிதர்களை அது உற்பத்திபண்ணி விடுகிறது. இடைவிடாத கற்றலும் அறிவுத் தேடலும் உள்ள மனிதனுக்கு இடைவிடாத அறிவுப்பசி எடுத்துக்கொண்டே இருக்கும்; அறிந்துகொள்ளும் தாகம் பெருகிக் கொண்டே இருக்கும். அறிவான பசியும் தாகமும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் படைப்புகளையும் இந்த உலகிற்கு அறிவுக் கொடைகளாக வழங்கிக் கொண்டிருக்கும். அறிவாளனே இந்த உலகை ஆள்வோனாகவும், உண்மையில் வாழ்வோனாகவும் திகழ்வான்.

    தொடர்புக்கு 94431 90098

    • வடக்கு வாயில் உள்ள இடத்தில் மாமரம் ஒன்றின் கீழ் சுவாமிகள் வடக்கு நோக்கி தவம் மேற்கொண்டார்.
    • நோய்களை தீர்ப்பதற்குத் தர்மத்தை ஆயுதமாகக் கொண்டார்.

    திருச்செந்தூரில் கடலுள் தான் விஞ்சை பெற்ற போது, நாராயண மூர்த்தி தன்னைத் தவம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார் எனத் தனது அன்பர்களிடம் கூறினார். 'நீ எண்ணியது நடந்திட வேண்டுமெனில் ஆறு ஆண்டு காலம் மூன்று தவங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நீ சிந்தா நன்மையுடன் உலகினில் இருந்திடலாம் ' என நாராயண மூர்த்தி கூறியபடி ஆறு ஆண்டுகள் தவமிருக்க தொடங்கினார்.

    முதல் இரண்டு ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட தவத்தை 'யுகத்தவம்' என அகிலம் குறிப்பிடுகின்றது. கலியுகம் மாற்றித் தர்மயுகம் காண இத்தவம் புரிந்தார். அந்த இரு ஆண்டுகளிலும், ஆறடி பள்ளம் அகழ்ந்து, அதனுள் அமர்ந்து, தவம் செய்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சாதி வேற்றுமை ஒழிந்திடத் தவம் மேற்கொண்டார். கந்தைத் துணி உடுத்தி, நிமிர்த்திக் காட்டாது, ஒருவரிடமும் இனிப்பு மொழி பேசாது, பாலல்லாமல் வேறு உணவு உண்ணாது சாமிதோப்பு பதியில் வடக்கு வாயில் உள்ள இடத்தில் மாமரம் ஒன்றின் கீழ் சுவாமிகள் வடக்கு நோக்கி தவம் மேற்கொண்டார்.

    மூக்கு நடுவே மும்முகமும் முத்திமுத்தி

    நாக்கு சுளிதாங்கி நாராயண எனவே

    மகாபரனை நெஞ்சில் மறவாமல் எப்போதும் கண்டு,

    உடலுள் சூட்சமம் ஒருவருக்கும் காணாமல்

    அகமதுவே பூசித்து அதிக தவசு இருந்தார்

    சுவாமிகள் நான்கு வருட தவத்தினை முடிக்கும் வேளையில், திரள் திரளாக மக்கள் அவரைக்காண வந்தனர்.

    "சாணானிடையன் சாதிவணிகனுடன்

    நாணாத காவேரி நல்ல துலுக்க பட்டர் முதல்

    சூத்திரப் பிரமான் தோல் வாணியன் பறையன்

    கம்மாளன் ஈழன் கருமறவன் பரவன்

    வெம்மான சுராணி வேகண்ட நிடையார்

    சக்கிலியனோடு சாதி பதினெட்டுகளும்"

    வைகுண்டரை தலமளந்த நாதன் எனக் கருதி வணங்கி நின்றனர். சுவாமிகளின் மூன்றாவது இரண்டாண்டு கால தவம், பெண் அடிமை நிலை மாறி, அவர்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டது. வைகுண்ட சுவாமிகளை காணவந்த பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் குறைகளையும், துன்பங்களையும் கூறி, தீரா வியாதிகளை எல்லாம் தீர்த்திடுமாறு வேண்டி நின்றனர்.

    பிறவிக் குருடு ஊமை பேச்சறா நாக்குவரல்

    திறவி யொளி போல் திறமும் மொழி கொடுத்தார்

    கர்ம வியாதிகளால் கால்மொட்டி கைகள்மொட்டி

    தர்மமில்லா பாவிகட்கு தாழ்மை மிகக் கொடுத்தார்.

    அவர் நோய் தீர்த்து அருளிய முறை எளிமையானதும் விந்தையானதும் ஆகும். நோய்களை அறத்தால் தீர்த்தார் எனவும், தர்ம வைத்தியமாய்த் தண்ணீர் மண் ஈந்து குணப்படுத்தினார் எனவும் அகிலம் உரைக்கின்றது. நோய்களை தீர்ப்பதற்குத் தர்மத்தை ஆயுதமாகக் கொண்டார். நாடி வந்த அன்பர்களுக்கு, நோய் அகற்றி, அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தினார். வைகுண்ட சுவாமிகளின்

    மேன்மை அறிந்து

    கர்த்தாதி கர்த்தன் கடவுளாரென்று சொல்லி

    பதினெண் சாதிகளும் பண்பாய் ஒருதலத்தில்

    விதி வந்ததென்று மேவிக் குலாவி

    இன்புற்று இருந்தனர் என்று அகிலம் குறிப்பிடுகின்றது.

    அறிவுரைகள்

    வைகுண்ட சுவாமிகளின் புகழ் திக்கெட்டும் பரவிட, ஏராளமான மக்கள் அவரை நாடி வரலாயினர். வந்தோரிடம், அன்புடன் அவர்தம் குறைகளை கேட்டு, அவற்றை களைந்திடும் வழிமுறைகளை ஆதரவாய் எடுத்துரைத்தார். தன்னுடைய அறிவுரைகளை யதார்த்த மாகவும், ஐயமின்றியும், மக்களிடம் போதித்தார். தன்மானம், தர்மம், உண்மை, அன்பு, ஒற்றுமை முதலியவற்றோடு வாழ்ந்திட மக்களைத் தயார்ப்படுத்தினார்.


    இன்று முதல் எல்லோரும்...

    ஒன்று போல் ஒரு புத்தியாய் இருங்கோ

    காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ

    வீணுக்குத் தேடுமுதல் விருதாவில் போடாதுங்கோ

    அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்தாண்டிடுங்கோ

    எவனெவனுக்கும் பதறியினி மலைய வேண்டாமே.

    என்று தன்னை நாடி வந்த மக்களிடம் புரட்சி முழக்கமிட்டார்.

    தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய்.

    உண்டு பண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல்

    கண்டதெல்லாம் தெய்வமெனக் கையெடுப்பார் சண்டாளர்.

    அறிந்து பல சாதி முதல் அன்பொன்றுக்குள்ளானால்

    பிரிந்து மிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்.

    சத்துருவோடும் சாந்தமுடனே இரு

    புத்தியில்லாரோடும் பேசியிரு என் மகனே.

    இரப்பனைக் கைக்கொண்டோர் எனையேத்தார்

    பரப்பனைக் கைக்கொண்டோர் பரமேத்தார்.

    இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே நன்றாகும்

    பரப்போரைக் கைசேர்த்துப் பரிவதுமே நன்றாகும்.

    அடக்கம் பெரிது அறிவுள்ள என் மகனே

    கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே.

    நன்றி மறவாதே நாம் பெரிதென்றெண்ணாதே

    அண்டினபேரையகற்ற நினையாதே.

    கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே

    வலிமாய நினைவு மாய்மாலமென் மகனே

    ஆனதால் ஆயுதங்கள் அம்புதடி வேண்டாமே

    மானமாக விருந்தால் மாழுங்கலி தன்னாலே.

    பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே

    மெய்யரோடு அன்பு மேவியிரு என் மகனே.

    வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே

    பரம்பூமி கண்டு பாவித்திரு என் மகனே.

    சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்

    நீட்டம் காணாதே.

    சொத்து ஆஸ்தி வஸ்து சுகம் என்று எண்ணாதே

    வஸ்து வகை பெண்வகையென்று எண்ணாதே.

    சத்தியம் தான் மறந்து மத்திபத்தைச் செய்யாதே

    மத்திபத்தைச் செய்தானால் மனநாகம் தீண்டிவிடும்.

    கொத்தைக் குறையாதே குறைமரக்கால் வையாதே.

    வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்

    தர்மம் தலைகெடுங்காண் சாத்திரத்துக் கேராது.

    யாருக்கும் பதறாதே அச்சமில்லை என் மகனே!

    நல்லவர் இட்ட தர்மம் நாள்தோறும் பொங்குமடா

    நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று

    வான் பெரிது அறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்.

    கருதியிருங்கோ கருத்த யர்ந்து போகாதுங்கோ

    அலைய விடாதிருங்கோ அஞ்சு பஞ்சமதையும்.

    என்று அவர் உரைத்த போதனைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்து சுயமாகச் சிந்திக்க தூண்டி யது. தனி மனிதனின் உரிமையை காத்தல், சமத்துவ நிலைக்கு எல்லோரையும் கொண்டு செல்லுதல் முத லிய கொள்கை தீபங்களை, வைகுண்ட சுவாமிகள் மக்கள் மன்றத்தில் ஏற்றி வைத்தார். அவரது போதனைகள் உரிமை வேட்கையில் மக்களைத் தணியாத் தாகம் கொள்ளச் செய்தன. சுரண்டலற்ற சுதந்திர வாழ்க்கைக்கு அழைப்பு விடுத்தன. இந்த சூழலில் ஆளும் வர்க்கத்தின் அராஜக அரசியலுக்கு எதிராக வைகுண்ட சுவாமிகள் ஓர் அமைதிப் புரட்சியை அரங்கேற்றினார். அது என்ன? வரும் தொடரில் பார்ப்போம்.

    • மூட்டு வலி, கணுசூலை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.
    • ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    நம் அனைவருக்கும் ஆண்டு முழுவதும் தெம்பும், நலமும் தேவை. இருப்பினும், ஆண்டின் குறிப்பிட்ட சிலமாதங்களில் உடல் நலச்சிக்கல்கள் மிகவும் பொதுவானவை. எடுத்துக் காட்டுக்கு, கோடையில் வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது போல, குளிர்காலத்தில் நரம்பு மற்றும் கிருமி தொற்று காரணமாக ஏற்படுகின்ற நோய்கள் நம்மை அதிகம் பாதிக்கின்றன. எனவே குளிர்கால சுகாதாரச் சிக்கல்கள் பற்றியும், அதிலிருந்து நம்மைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும் இப்பகுதியில் காணலாம்.

    குளிர்கால நலவாழ்வுச் சிக்கல்கள்

    முகவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிவிரைவான நரம்புத் தளர்ச்சி எனப்படும் ஜி.பி.எஸ். வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, மேலும் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, டிரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) என்ற நரம்பு பாதிப்பு மற்றும் நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் வலிகள் குளிர்காலங்களில் அதிகமாகின்றன. எனவே வலியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, மாத்திரைகளின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது.

    சூரிய ஒளியின் அளவு குறைவதால் வைட்டமின் "டி" மற்றும் செரடோனின் அளவு குறைகிறது, இதனால் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஏற்கெனவே மனஅழுத்தத்தால் துன்புற்றவர்களுக்கு மனஅழுத்தத்தின் தாக்கம் அதிகரிக்கிறது.

    ரத்தக் குழாய் அடைப்பு நோய்களான பக்கவாதம், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் குளிர்ந்த வெப்பநிலை ரத்தநாளங்களைச் சுருக்கு கின்றன. மேலும் ரத்தத்தைச் சிறிது தடிமனாக மாற்றவும் செய்வதால், குளிர்காலங்களில் ரத்தக்குழாய் அடைப்பு அதிகமாக வருகிறது. இந்த மாற்றங்களால் இதயநோய் உள்ளவர் களுக்கு நெஞ்சுவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனவே அதற்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மூட்டு வலி, கணுசூலை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். தோல் வறண்டு போவதால், அரிப்புகள் அதிகமாகி, அதனால் ஏற்படும் காயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும். "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயிற்றுப் போக்கு மற்றும் பிற தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். (நிமோனியா / ஆஸ்துமா / தொண்டை வலி). போன்றவையும் வரும் வாய்ப்புகள் உண்டு.

    குளிர்ச்சியான சூழலில் தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் பல்கிப் பெருகுவதால், எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கின்றன. வைரஸ் மூலம் பரவும் சளி, காய்ச்சல் மற்றும் பிற மூச்சு நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக்கூடும். பருவகால நோய்த்தொற்றுகள், தட்டம்மை, டிப்தீரியா என்னும் தொண்டை நோய் மற்றும் காலரா, ரோட்டா வைரஸ், டைபாய்டு போன்ற மலம்-வாய்வழித் தொற்றுகள், மலேரியா உள்ளிட்ட வெக்டரால் (விலங்கு மற்றும் கொசுக்களின் மூலம் மனிதர் களுக்குப் பரவுவது) பரவும் நோய்கள் மற்றும் பாலியலால் பரவும் கோனோரியா ஆகியவை பரவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    குளிர்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

    பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறைவாக இருப்பதால், காய்ச்சல் மற்றும் சளியை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள், மூடிய அறைகளில் சுற்றும் காற்றின் மூலம், குழந்தைகளுக்கு எளிதில் பரவுகிறது. இதுதான் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதற்கான முதற்காரணமாகும்.

     

    ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அதிகக் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு அடிக்கடி செல்லாமல் இருப்பது நோய்த்தொற்றைக் குறைக்கும். குழந்தைகளின் காது, மூச்சுப்பாதை மற்றும் உணவுப்பாதையில் தொற்று ஏற்படுவதால், காதுகளில் அரிப்பு, அடைப்பு, சீல் வடிதல், மூச்சு விடுவதில் கடினம் மற்றும் உணவுகளை விழுங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பருவகாலக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சாப்பிட ஊக்கப்படுத்த வேண்டும்.

    குளிர்காலம் மூளையைப் பாதிக்கிறதா?

    குளிரின் தீவிரம் மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது தலைவலி, மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் பாதிப்படைந்த நரம்புகளின் சிக்கல்களை அதிகப்படுத்தும் என்பதை முன்பே பார்த்தோம். இதைத் தடுக்க வைட்டமின் "டி"-யை எடுத்துக்கொள்வது நல்லது.

    குளிர்காலத்தில் வைட்டமின் "டி"-ஐ எவ்வாறு பெறுவது?

    குளிர்காலத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது 600மிகி வைட்டமின் "டி" அல்லது வாரம் ஒரு முறை 60,000ஐயூ என்ற அளவில் 8 வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குளிர்சாதன அறையிலேயே வேலை புரிபவர்கள் இந்த வைட்டமின் "டி" மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் சூரிய ஒளியில் 20 நிமிடங்களாவது இருப்பது நல்லது.

     

    வைட்டமின் ''டி'' அதிகமுள்ள உணவுகள்:

    முளைக்கட்டிய தானியங்கள், பாதாம் பால், தேங்காய்ப் பால் மற்றும் இளநீர், காளான்கள், முட்டை, மீன் எண்ணெய், மீன்களில் சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் வாள்மீன் ஆகியவைகளில் வைட்டமின் 'A' அதிகமுள்ளது. இவைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் "டி-''யை அதிகமாகப் பெறலாம். ஆனால் குளிர்காலங்களில் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

    அசைவ உணவுகளை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?

    குளிர் காலங்களில் உடல் உழைப்புக் குறைவாக இருப்பதாலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை செரிக்க உடலுக்கு அதிக நேரம் தேவைப்படுவதாலும் மற்றும் எடை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    குளிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க.!

    நன்றாக அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது நல்லது. குறிப்பாக உணவு அருந்துவதற்கு முன்பு கைகளைக் கட்டாயம் சோப்புப் போட்டு கழுவ வேண்டும். வீட்டில் உள்ள நாற்காலி, படுக்கை மற்றும் கைப்பிடிகள் ஆகியவற்றை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.

    நிறைய நேரம் தூங்குவது நல்லது. சரிவிகித உணவை உண்ணுங்கள். சுறுசுறுப்பாக இருங்கள். மனஅழுத்தத்தைத் தணிக்கவும், ஓய்வெடுக்கவும் நேரம் ஒதுக்குங்கள். மதுப் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. சூடான உணவு மற்றும் பானங்களை உட்கொள்ள வேண்டும். உடலைச் சூடாக வைத்திருக்கும் ஆடைகளை அணியுங்கள். குளிரைத் தாங்கும் ஆடைகள், கையுறை, தொப்பிகள், சால்வைகள் மற்றும் காலுறைகள் தேவைக்கேற்றவாறு அணிந்து கொள்ளுங்கள்.

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

     

    சளி பிடிக்கத் தொடங்கும் போது, நம் உடலில் உள்ள இரத்த உறைதல் தன்மை அதிகரிப்பதால், குளிர் காலத்தில் அதிக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து, சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் மற்றும் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் உண்ணும் உணவில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், இஞ்சி ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

    குளிர்காலங்களில் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோமாக. 

    • யாரையாவது வேடிக்கை மனிதராக்கி, மட்டம் தட்டிப் பேசாவிட்டால் அவர்களுக்குப் பொழுது போகாது.
    • எளிமையாக வாழ்ந்தவன், பதவிக்கு வந்தபின் வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளிவிடுகின்றான்.

    'வார்த்தைகள் பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த விஷயம். வார்த்தைகள் கொள்கலன்கள். அவை, நம்பிக்கை அல்லது பயத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப விளைவுகளை ஏற்படுத்துகின்றன'.

    -சார்லஸ் கேப்ஸ்

    காலை நேரம். பேருந்து நிலையத்தில் வழக்கமான பரபரப்பு. அந்தப் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்லூரி மகளிர், வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் என கூட்ட நெரிசல். நடத்துநர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓட்டுநர் காபி குடித்து வந்ததும் பேருந்து புறப்படும்.

    இளைஞர்களின் பேச்சில் ஒரே கலகலப்பு. அப்போது 'மைனர் மிடுக்'குடன் ஓர் இளைஞன் அந்தப் பேருந்தில் ஏறினான். எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு, பேருந்தின் நடுப்பகுதியில் வந்து நின்று நோட்டமிட்டான்.

    ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த ஓர் இளம்பெண், வெளியே நின்று பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் ஒருமுழப் பூ வாங்கித் தலையில் வைக்கும்போது, அந்த இளைஞன் 'கமென்ட்' அடித்தான்.

    'ஒரு பூ தன் தலையில் பூ வைத்தது' என்றான்.

    அவள் கண்டுகொள்ளாததுபோல் இருந்தாள். ஆனால், அவள் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது. வெளிப்பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எல்லோர் முன்னும் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக்கொண்ட அந்த இளைஞன், மீண்டும் ஜாடையாகப் பேசினான்.

    'தலையில் வைக்க பூ வாங்கியாச்சி. வேற என்ன வேணும். நான் வாங்கித் தர்றேன்' என்று அவன் சீண்ட, அவளிடமிருந்து வார்த்தை தெறித்து வந்தது.

    'செருப்பு' என்றாள்.

    'த்தோ பார்ரா, செருப்பு இல்லையாம். கவலைப்படாத ஸ்வீட்டி, நான் எதுக்கு இருக்கேன்'.

    'செருப்படி வாங்குறதுக்கு' என்று முகத்தில் அறைந்தாற்போல் பட்டென்று அந்த இளம்பெண் சத்தமிட, பேருந்தில் இருந்த பலரும் அவனைப் பார்த்து பலமாகச் சிரித்தார்கள். சிலர் கேவலமாகப் பார்த்தார்கள்.

    அவமானப்பட்டுப்போன அந்த இளைஞனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திக்குமுக்காடினான். முகம் கருத்துவிட்டது. என்ன வேகத்தில் பேருந்திற்குள் வந்தானோ, அதே வேகத்தில் தடதடவென்று பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டான்.

    எந்த இடமாக இருக்கட்டும் யாரிடமாகட்டும், வாய்திறக்குமுன் யோசிக்க வேண்டும். எதிர்வினையின் சீற்றம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, நாவடக்கம் தேவை.

    கலகலப்பாகப் பேசுவது ஓர் அற்புதமான கலை. குடும்ப வைபவங்கள், பணியிடங்கள், நண்பர்களின் கூடுகை - இப்படி எந்த ஓர் இடமாக இருந்தாலும், சிலரிடம் ஓர் ஈர்ப்பு இருக்கும். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்துவிடும். அவர்கள் பேசுவதைக் கேட்பதில் அவ்வளவு விருப்பம்.

    பேசி மகிழ்வதும் மற்றவர்களை மகிழ்விப்பதும் ஓர் உன்னதப் பண்பு. நல்ல குணமும் விஷய ஞானமும் உள்ளவர்கள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் பலவற்றைத் தெரிந்து கொள்வதற்கும், அவர்களின் பேச்சில் நிறைய விஷயங்கள் இருக்கும். ஈர்ப்பின் ரகசியம் அதுதான்.

    நையாண்டி செய்வதொன்றும் பெரிய விஷயமல்ல. நாலு பேர்க்கு முன்னால் ஒருவனைக் கேலி செய்து அவமானப்படுத்துவது அறிவாளித்தனமா? சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு. யாரையாவது வேடிக்கை மனிதராக்கி, மட்டம் தட்டிப் பேசாவிட்டால் அவர்களுக்குப் பொழுது போகாது. சில நேரங்களில் கலகலப்பாக ஆரம்பித்துக் கைகலப்பில் முடிவதும் உண்டு.

    சிலரின் வார்த்தைகள் ஊசி குத்துவதுபோல் இருக்கும். சிலரின் விஷம வார்த்தைகள் கடப்பாறையைப்போல் தாக்கும். அநாகரிகமான வார்த்தைகள் ஆபத்தை ஏற்படுத்துமே அன்றி, வேறொன்றுக்கும் உதவாது.

    நாம் நடந்துகொள்ளும் விதம் நாகரிகமாகவும், நம்முடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பண்பட்டதாகவும் இருக்க வேண்டும். அதுதான் வாழ்வின் அழகு.

    ஜவுளி உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்; என் நெருங்கிய நண்பர். அண்மையில் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்: 'வார்த்தை என்பது விதை'.

    அது சத்திய வாக்கு அல்லவா! வார்த்தை என்கிற விதை நல்ல விதையாக இருப்பின், அதிலிருந்து எழுகின்ற விருட்சத்தின் கனிகள் நற்கனிகளாக இருக்கும். அதுவே விஷ வித்தாக இருப்பின், விஷக்கனிகளையே அது விளைவிக்கும். அழிவையும் அவப்பெயரையுமே அது ஏற்படுத்தும்.

    தங்களை மட்டுமே அறிவாளியாக எண்ணிக் கொள்பவர்களுக்கு, அறிவுக் கண்களே இருக்காது. அதனால்தான், அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் குருட்டுத்தனமாகவே இருக்கும். அங்கிருந்துதான் பிரச்சனைகள் ஆரம்பமாகும்.

    வீட்டிற்கு வந்திருந்த மாமியாருக்கு, உணவு சமைத்துப் பரிமாறினாள் மருமகள். அன்போடு கேட்டுக் கேட்டு எடுத்து வைத்தாள்.

    'அத்தே, வெண்டைக்காய் பொரியல் சாப்பிடுங்க. அவியல் நல்லாருக்குதா?'

    'காய்கறி விக்கிற விலையில இவ்வளவு தேவைதானா? சிக்கனம் வேண்டாமா?'

    'சாப்பிடுங்க அத்தே, உங்களுக்காகத்தானே சமைச்சிருக்கேன். கத்தரிக்காய்

    காரக் குழம்பு எப்படி இருக்கு?'

    'நிறைய எண்ணெய்யை வீணாக்கிருக்கியே!'

    'எண்ணெய் இல்லாம எப்படி தாளிக்க முடியும்?'

    'இப்படி தாராளமா செலவு பண்றதுக்கு, உங்க வீட்ல இருந்து அப்படி என்ன பெருசா கொண்டு வந்தே?'

    'உங்க புள்ளைக்கு நீங்க என்னத்த பெருசா சொத்துசுகம் கொடுத்துட்டீங்களாம். என்னை இங்க கட்டிக் கொடுத்ததே பெருசுதான்'.

    'என்ன... வாய் ரொம்பதான் நீளுது?'

    'தோ பாருங்க. அநாவசியமா பேசாதீங்க. இஷ்டம் இருந்தா சாப்பிடுங்க. இல்ல, ஊருக்குக் கிளம்புங்க'.

    மாமியார் 'ஓ'வென்று கத்திக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

    பாருங்கள்; எங்கே இருந்து பிரச்சனை தொடங்குகிறது. அவமானப்படுத்துகின்ற அல்லது குற்றம்சாட்டுகின்ற பேச்சில் இருந்துதானே!

    ஒருவரை ஒருவர் மதிப்பதுதான் மிகச்சிறந்த பண்பாடு. பிறரைக் காயப்படுத்தாத சொற்கள், மரியாதையான அணுகுமுறை, மமதையின்மை, தீங்கு எண்ணாமை ஆகியவையே மானுடப் பண்பாட்டின் அடையாளங்கள்.

    நாகரிகமாகப் பேசத் தெரியவில்லை என்றால், 'வாய்' என ஒன்று இருப்பதே வீண்தான். போக்கறியா நாக்கு எல்லா கேடுபாடுகளையும் உண்டாக்கிவிடும்.

    விவசாயத்தில் புதிய உத்திகள், தொலைதூர வணிகம், தொழில்திறன், வசதி வாய்ப்புகள், நகரக் கட்டமைப்புகள், வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுதான் ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சி அளவிடப்படுகிறது. ஆனால், அதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது தனிமனித நாகரிகம். அதன்மூலம்தான் நாட்டின் நாகரிகம் வளர்ச்சி பெறுகின்றது.

    ஒழுங்காகப் பேசுகின்றவன், குடித்துவிட்டு வந்தபின் தாறுமாறாக உளறுகிறான். பண்பட்ட மனிதனாக இருந்தவன், பணங்காசு கையில் சேர்ந்தவுடன் ஆணவத்தில் பேசுகிறான். எளிமையாக வாழ்ந்தவன், பதவிக்கு வந்தபின் வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளிவிடுகின்றான். என்ன செய்வது! மனிதமூளை அப்படித்தான் புரள்கிறது.

    மேடை கிடைத்துவிட்டால், சிலரைக் குறிவைத்துத் தாக்குவதற்கென்றே அந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் உண்டு. உபதேசிக்கத் தகுதியற்றவர்கள் உபதேசிப்பார்கள். வார்த்தைகளைத் தங்களுக்குச் சாதகமாக உருட்டி உருட்டி விளையாடுவார்கள்.

    கடவுளிடமே தங்கள் வித்தையைக் காட்டுகிறார்களே. வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டே, மனம் உருகி உருகி மன்றாடுவார்கள். விண்ணப்பங்களை அடக்கத்துடன் முணுமுணுப்பார்கள். அதை முடித்துவிட்டு வந்துவிட்டால், நாடக நாவு இஷ்டம்போல் சுழன்றாடும்.

    ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கட்டுவதும் கவிழ்ப்பதும், ஆக்குவதும் தாக்குவதும் நம் நாக்குதான். நம்மை மரியாதைக்கு உரியவர்களாய் வாழ வைப்பதும், அவமானத்திற்கு உட்படுத்துவதும் நம் வார்த்தைகளன்றி வேறென்ன!

    சிலரைத் தூரத்தில் பார்க்கும்போதே, பலர் உஷார் ஆகிவிடுவார்கள். வேறு வழியில் நழுவிப்போய்விடுவார்கள். காரணம் என்ன? சிக்கிக் கொண்டால் தேவையற்ற வார்த்தைகளால் துளைத்தெடுத்துவிடுவார்கள் என்ற பயம்தான்.

    அழகாகப் பேசத் தெரிந்தால், அதுதான் அறிவின் சாரம். நம் பேச்சுகள் விருந்தாகவும் மருந்தாகவும் இருந்தால், அதுதான் ஞானக்கலை. 'நல்லவர்' என்று ஒருவரைச் சொல்வதற்கு முதற்காரணம், அவரின் கனிவான பேச்சாகத்தான் இருக்கும். ஏனெனில், கண்ணியமும் கனிவும் நல்ல மனதிலிருந்து மட்டுமே வரமுடியும்.

    எவனொருவன் தன்னைத்தான் அறிவில் உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ள பலர்முன் வாயைத் திறக்கின்றானோ, அவன் அவமானத்தைத் தேடிக் கொள்கிறான்.

    ஒரு மடாதிபதி, தமிழ்ப்புலவர்களை வரவழைத்து விருந்து கொடுக்க எண்ணினார். அழைப்பு விடுத்தார்.

    வெவ்வேறு ஊர்களிலிருந்து புலவர்கள் அனைவரும், குறித்த நேரத்தில் மடத்திற்கு வந்து சேர்ந்தனர். மடாதிபதி ஒவ்வொருவர் வருகையையும் கவனித்துக் கொண்டிருந்தார். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்த ஒரு புலவர் மட்டும் மிகத்தாமதமாக விருந்துக்கு வந்து சேர்ந்தார்.

    மடாதிபதிக்கு அந்தப் புலவர் மீது கடுங்கோபம். தாமதமாக வந்திருந்த அந்தப் புலவரை வரவேற்கும் விதமாக, 'வாரும் கடைமடையரே' என்று இருபொருள்பட அழைத்தார்.

    கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது ஒருபொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள்.

    அந்தப் புலவரும் சளைத்தவர் அல்ல. வார்த்தை விளையாட்டில் வல்லவர். சும்மா விட்டுவிடுவாரா? அவரும் பதிலுக்கு, 'வந்தேன் மடத்தலைவரே' என்றார் சிரித்தபடி.

    இதற்கு, மடத்தின் தலைவரே என்பது ஒருபொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.

    வார்த்தைகளை நாம் மிகக்கவனமாகக் கையாள வேண்டும். ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை என்றால், என்ன படித்து என்ன பயன்? ஒழுக்கம் என்பது வார்த்தைகளுக்கும் அவசியம்.

    தேவையற்றவைகளைப் பேசி, பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது. குறைவாகப் பேசினாலும் கருத்தோடு பேச வேண்டும். அப்படிப் பேசினால், மற்றவர்கள் விரும்பி வந்து நம்மைச் சூழ அமர்ந்து கொள்வார்கள்.

    குடும்பத்தினரால், சொந்தபந்தங்களால், நண்பர்களால் விரும்பப்படுகின்ற வார்த்தைகளும் வாழ்க்கையுமே, ஒருவனுக்குக் கிடைக்கின்ற மிகப்பெரிய வரம்.

    சமூக மரியாதை, குடும்ப மகிழ்ச்சி, நட்பின் இன்பம் - இவை அனைத்தும் நமக்குள் இருக்கினறன; நம் நாவில் பிறக்கின்றன. ஏனெனில், வார்த்தையே உயிர்; வார்த்தையே வாழ்க்கை.

    போன்: 9940056332

    • வாழ்வின் உண்மையை அறிந்தவர்களின் வாய்மொழியைக் கேட்டு வாழ்க்கையை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும்.
    • செவிக்குப் பெருமை நல்லவற்றை கேட்பதே ஆகும்

    அதிகாரம்: கேள்வி

    இந்த அதிகாரத்தில்,

    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

    செல்வத்து ளெல்லாந் தலை.

    என்ற குறளில் தொடங்கி

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

    அவியினும் வாழினும் என்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    கேள்வி எனும் இந்த அதிகாரம் செவியினால் கேட்கக்கூடிய செய்திகளைப் பற்றி கூறுவதாகும். ஐம்புலன்கள், எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. பார்த்தல் என்பது கண். கேட்டல் என்பது காது. சுவைத்தல் என்பது வாய், மூக்கு என்பது வாசனையை அறிதல். ஸ்பரிசித்தல் என்பது மெய். ஆடு, மாடு போன்ற விலங்கினங்களுக்கும் கேட்டல் என்பது உண்டு.

    ஆனால் மனிதன் மட்டும் இனம் பிரித்து கேட்கின்றான். கவிகளைக் கேட்கலாம். பாடல்களைக் கேட்கலாம். இசையைக் கேட்கலாம். இப்படியாக மனிதன் மனதை லயப்படுத்தும் எல்லாவற்றையும் கேட்டு ரசிக்கலாம்.

    திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களில், ஞானிகள் கூறுகின்ற கருத்துக்களைக் கேட்டால் அது பிறவிப்பிணிக்கு மருந்தாக அமையும். சான்றோர்களின் உபதேசம் என்பது இனிப் பிறவாமல் இருப்பதற்காகப் பெறக்கூடியது. சொர்க்க நிலை அடைவதற்காக கொடுக்கப்படுவது. ஞானிகளின் உபதேசம் இனி பிறவாமல் இருப்பதற்கான மார்க்கத்தை அறியக்கூடியதாக இருக்கும்.

    சுட்டிக்காட்ட முடியாத பூரண நிலையை சொல்லுவதே "சும்மா இரு" என்பது ஆகும். அத்தகைய ஓர் உயர்ந்த உபதேசத்தை குருநாதர் சுட்டிக்காட்ட வேண்டும். 'சும்மாஇரு' ரகசியத்தை ஆசான் சொல்ல வேண்டும். அதனை தலைவன் உள்ளூர உணர்த்த வேண்டும்.

    அதனைப் படித்து தெரிந்து கொள்வதைவிட கேட்டுத் தெரிந்து கொள்வது உயர்ந்தது. சான்றோர்களிடம் சென்று உண்மையை அறிந்துகொள்கின்ற வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு. ஆறாவது அறிவான சிறப்பறிவைப் பெற்றவன் மனிதன். ஒவ்வொரு புலன்களைப் பற்றி அறிகின்ற அறிவு ஆறாவது அறிவு. அவை மற்ற ஜீவராசிகளுக்கு கிடையாது.

    கல்வி என்பது கணக்கிலடங்காது. எனவே ஞானிகள் சொல்வதை கேட்க வேண்டும். அதனையே ஆசான் திருவள்ளுவர் கேள்விச் செல்வம் உயர்ந்தது எனக்கூறுகின்றார். சான்றோர் சொல்படி கேட்டு அதன்படி நடந்தாலே பிறவியை அறுக்கலாம். முன்செய்த புண்ணியம் இருந்தால் சிறுவயதிலேயே குருகுல வாசம் கிடைக்கும்.

    குருகுல வாசத்தில் இருந்தவர்கள் சிறுவயதிலிருந்து உலகியல் வாழ்க்கையில் எத்தகைய தவறும் செய்யாமல் சமுதாயத்திற்கு நல்லது மட்டுமே செய்திருப்பார்கள். இதற்கு குருநாதரிடம் கேட்ட கேள்வி ஞானமே காரணமாகும்.

    அத்தகையவர்கள் பிறவி ஞானியாக இருப்பார்கள். அவர்கள் சான்றோர்கள் அல்லது குருநாதர்களின் அருகில் இருப்பதால் உயிர்க்கொலை செய்யாதிருத்தல், பொய் பேசாதிருத்தல், அழியக்கூடிய பொருள்கள் மீது பற்று வைக்காமலிருத்தல் போன்ற குணப்பண்புகளைப் பெற்று அறத்தை நிலைநாட்டுபவர்களாக இருப்பார்கள். இதுபோன்ற குணப்பண்புகளைத்தான் சான்றோர்கள் வலியுறுத்துவார்கள்.

    மேலும் நடந்து போகும்போது நமது ஆணவத் தன்மை வெளிப்படும். அப்போது பிறரின் எண்ண அலைகள் நம்மை பாதிக்கும். கொடுமையான பேச்சுக்களை பேசக்கூடாது. ஏளனமாக பிறரைப் பார்த்து சிரிக்கக் கூடாது. அவமானப்படுத்தி சிரித்தல் கூடாது. தூய்மையான இடங்களில் பொதுமக்கள் நடக்கும் இடங்களில் எச்சில் துப்பியோ மற்ற காரணத்தினாலோ அசுத்தப்படுத்துதல் கூடாது.

    கொடூரமான பார்வை பார்த்தல் கூடாது. இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் பிறருக்குத் துன்பம் கொடுக்கக் கூடிய செயல்களையும் அருவெறுக்கத்தக்க செயல்களையும் செய்தல் கூடாது. இதனை சான்றோர்கள் நமக்கு உணர்த்துவார்கள்.

    ஐம்புலன்களில் உயர்ந்த செல்வமாக செவிச்செல்வம் கூறப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கல்வி என்பது எல்லோரும் கற்கக்கூடிய அளவில் பொதுவானதாக இல்லை. ஆனால் அந்த காலக்கட்டத்திலும் பலநூறு ஞானிகள் உருவாகினார்கள். அவர்கள் தங்கள் குருநாதரின் செவி உபதேசம் பெற்றே உருவானார்கள்.

    கல்வி இல்லாதவர்களும் கடவுள் தன்மை அடையலாம் என்பதை இவ்வதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர் நமக்கு உணர்த்துகின்றார். கற்றுத் தெரிந்தவர்கள் கூறுவதை நாம் கேட்டுத் தெரிந்து கொண்டாலே ஞானம் பெற வாய்ப்புண்டு.

    சிலருக்கு பல விஷயங்களை கேட்டு, அதனை தக்க வைக்கின்ற சக்தியும், அதன்படி நடக்கின்ற தன்மையும் இல்லாது போய்விடும். நல்ல செய்திகளை சேகரித்து வைத்துக் கொள்வதற்கு முன்செய்த புண்ணிய பலமே துணையாக இருக்கும். எவ்வளவுதான் உயர்ந்த விஷயங்களை கற்றிருந்தாலும் நல்வினை இருந்தால்தான் புரியும். சான்றோர்கள் அத்தகைய உயர்ந்தநிலையை கூறும் மேலான கவிகளுக்கு விளக்கம் சொல்வார்கள். அதனைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    சான்றோர்கள் நம்மீது கருணை கொண்டு, ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும் அரிய நூல்களைப் பற்றி கூறுகின்ற கருத்துக்கள் நமக்கு ஆன்ம லாபத்தை உண்டாக்கும். அதை கேட்பதே செவிக்கு மிகப்பெரிய சிறப்பாகும்.

    அதிகமாக சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அப்போது மனதில் எதுவும் பதியாது. எனவே குறைவாக சாப்பிட வேண்டும். ஆக இப்படிப்பட்ட முறையை பின்பற்றி சான்றோர்கள் கூறும் கருத்துக்களை தொடர்ந்து கேட்க வேண்டும். அப்படி கேட்டு அதன்படி நடந்தால் மரணமில்லா மார்க்கத்தை தெரிந்து கொள்ளலாம்.

     

    தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    மனித வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும் இருக்கும். அத்தகைய காலக்கட்டத்தில் சான்றோர் சொல் நம்மை துன்பத்திலிருந்து மீட்டு நாம் உயர்ந்து நிற்க ஊன்றுகோலாக உதவும்.

    வாழ்க்கை நிலையில்லாதது. வாழ்வின் உண்மையை அறிந்தவர்களின் வாய்மொழியைக் கேட்டு வாழ்க்கையை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும்.

    பெருந்தன்மையுடைய அறவோரின் வாய்மொழி மேலான மந்திரங்களாக அமையும். அத்தகைய மேலான ஞானிகள் அகத்தைப் பற்றியும் புறத்தைப் பற்றியும் கூறுவார்கள். அவர்களின் வாய்மொழி நிறைமொழி. அந்த நிறைமொழி நம்மை இறை நிலைக்கு உயர்த்தும். இவற்றை செவிகளில் கேட்டு அதன்படி நடந்தால் மரணமிலாப் பெருவாழ்வு எளிது. மரணத்தை வென்றவர்களின் வாய்மொழியே நமக்கு வாழ்வின் நிலையாமையை உணர்த்தி நம்மை கரை சேர்க்கும். குறைந்த நேரத்தில் நல்ல செய்தியை கேட்டிருந்தால் அது பெரிய நன்மையை தரும்.

    ஞானிகள் காம விகாரத்தை வென்றவர்கள், சாதி மதம் அற்றவர்கள், பொன்னுடம்பு பெற்றவர்கள்.

    ஞானிகளின் திருவடியைப் பற்றினால் அதுவே பிறவிப்பிணிக்கு மருந்து. அதுவே உயர்ந்த மந்திரம். ஓம் அகத்தீசாய நம! ஓம் திருவள்ளுவ தேவாய நம! என்ற மந்திரத்தை கேட்பதற்கும் அதை திருப்பி மனம் உருகி ஜெபம் செய்வதற்கும் ஏட்டுக் கல்வி தேவையில்லை. இதை சொல்லி வந்தால் ஞானக்கல்வி கைகூடும்! மரணமிலா பெருவாழ்வு கைகூடும்!!

    செவிக்குப் பெருமை நல்லவற்றை கேட்பதே ஆகும். நல்லக்கருத்துக்களை செவியால் கேட்டுத் தெரிந்துக்கொள்வது ஆன்மாவிற்கு பயனுள்ளதாகும். செம்பொருள் கண்டவர்களின் சொற்கள் எடுத்துக் கொண்ட பிறவிக்கு பயனுள்ளதாக அமையும். கல்வியறிவு இல்லாவிட்டாலும் கேள்வியறிவு நல்ல பலனைத் தரும்.

    • பெருமாள் திகைத்து நிற்க,திவ்யா தொடர்ந்தாள்.
    • திவ்யாவும், டேவிட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

    "என் தங்கச்சிகிட்ட ராத்திரி நேரத்துல, அதுவும் ஆளுங்க நடமாட்டம் இல்லாத இடமா பார்த்து, தப்பா நடந்துகிட்ட அந்த ரவுடிங்க, எனக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல வரணும். அதுவரைக்கும், நான் இந்த ஸ்டேஷன விட்டு போக மாட்டேன்..."- ஆக்ரோஷமாக பேசிய பெருமாளை பார்த்து சற்று அரண்டு விட்டார், அந்த இன்ஸ்பெக்டர்.

    "சார்... பெருமாள் சார்... டென்ஷன் ஆகாதீங்க நிதானமா பேசுவோம்." இன்ஸ்பெக்டர் சமாதானப்படுத்தும் விதமாய் கூற,

    அவரை அலட்சியப்படுத்திய பெருமாள், "அழகர் சார்... நான் உங்ககிட்ட பிசினஸ் பேச வரல. பிரச்சனையை பேச வந்திருக்கேன்..."- என கூற, 'என்ன சொல்லி பெருமாளை சமாளிப்பது 'என்று தெரியாமல் இன்ஸ்பெக்டர் அழகர் விழி பிதுங்கி நின்றார்.

    அவருக்குத் தெரியும் பெருமாள் இருக்கும் கட்சி. அவன் பி ஏ வாக இருக்கும் பிரமுகரின் பின்புலம். அது மட்டும் இல்லாமல், இந்தப் பிரச்சனையை முடிக்கவில்லை என்றால், அவருக்கு டிரான்ஸ்பர் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்.

    பெருமாளுக்கு பின்னாடி நின்ற அவனது சகாக்களையும், சற்று தள்ளி நின்று கொண்டிருக்கும் திவ்யா, டேவிட் மற்றும் அவர்கள் நண்பர்கள், குடும்பத்தாரையும் பார்த்த இன்ஸ்பெக்டர், பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளிடம், "யோவ்... முதல்ல எல்லோருக்கும் டீ சொல்லுயா..." என்று சொல்லிவிட்டு, தனது சேரில் அமர்ந்தார். அவருக்கு எதிர்ப்புறம் இருந்த சேரில் அமர்ந்தான் பெருமாள்.

    "சார்... முதல்ல எனக்கு விளக்கம் சொல்லுங்க! பிரச்சனையில சம்பந்தப்பட்ட ரவுடிகளை இன்னமும் பிடிக்கல. அதுக்குள்ள மொத்த குடும்பத்தையும் ஏன் சார் ஸ்டேஷன்ல நிப்பாட்டி வச்சிருக்கீங்க?" என கேட்க,


    "ஐயோ சார்... நான் கம்ப்ளைன்ட் கொடுத்த திவ்யாவையும், அவங்க வீட்டுக்காரரையும் மட்டும்தான் வரச்சொன்னேன். ஆனா, கூடவே அவங்க பிரெண்ட்ஸ்,அப்பா, அம்மா, இவங்க எல்லாம் வருவாங்கனு நான் எதிர்பார்க்கவில்லை சார்.."

    பெருமாள் இன்ஸ்பெக்டரையே கூர்ந்து பார்க்க, அவர் தொடர்ந்தார்."வந்தவங்களை போங்கன்னு சொல்ல கூடாது இல்லையா? துணைக்கு வந்து இருக்கலாம்...! ஒரு சப்போர்ட்டுக்கு வந்து இருக்கலாம்...! உங்களுக்கு தெரியாதா பெருமாள் சார்?" - என சற்று வழிந்தபடி இன்ஸ்பெக்டர் கூற,

    இங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா, டேவிட்டை ஒரு கணம் பார்த்துவிட்டு, தன் அப்பா அம்மாவை பார்த்தாள். ஆனால், இவர்கள் முகத்தையே பார்க்காமல் இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான் பெருமாள்.

    "சரி சார்... முதல்ல அந்த ரவுடிங்க கலாட்டா பண்ண இடத்துல ஏதாவது சிசிடிவி புட்டேஜ் கிடைச்சுதா இல்லையா?"

    "சார்... அது சிட்டி அவுட்டர் ஏரியா... அங்க எங்கேயுமே சிசிடிவி கேமராக்கள் இல்ல" இன்ஸ்பெக்டர் சொல்லி முடிக்கும் முன் இடைமறித்தான் பெருமாள். "சரி விடுங்க... அது யூஸ் இல்ல... பட் அவ செல்போன்ல எடுத்த போட்டோக்களை வச்சு, இந்த நேரம் வரை யாரு அவங்கனு கண்டுபிடிக்க முடியலையா சார்?"

    "இவங்ககிட்ட கலாட்டா பண்ணவங்க பழைய ரவுடிங்க லிஸ்ட்ல இருக்குற ஆளுங்க இல்ல சார்... புது ஆளுங்களா தெரியுது. கண்டிப்பா கொஞ்சம் டைம் ஆகத்தான் செய்யும் சார்...?" - என இன்ஸ்பெக்டர் கூற,

    "அப்போ... நீங்க அந்த ரவுடிகளை கண்டுபிடிச்சு கிழிச்ச மாதிரி தான்..." என்று இன்ஸ்பெக்டரை பார்த்து கூறியவன் எழுந்து இவர்கள் பக்கம் திரும்பினான்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    திவ்யா, டேவிட், அவனது நண்பர்கள், அம்மா, அப்பா, மேரி அனைவரும் அவனேயே பார்க்க, டேவிட் இவர்களை பார்த்தபடியே இன்ஸ்பெக்டரிடம், "ஏன் சார்...? நேத்து இவங்க ரேண்டு பேரும் பைக்ல போறப்ப அந்த ரவுடிங்க கார் குறுக்க வந்துச்சுல்ல... சப்போஸ் மோதி ஒரு விபத்து ஏற்பட்டு, இரண்டு பேர்ல ஒருத்தருக்கு... இல்ல ரெண்டு பேருக்குமே ஏதாவது ஆகி... அட, யாராவது ஒருத்தர் செத்துப் போயிருந்தா... அப்பவும் இதே மாதிரி தான் பதில் சொல்லுவீங்களா சார்!" எனக் கேட்கவும்,

    'அடப்பாவி ஏண்டா இப்படி எல்லாம் பேசுற?' என்பது போல் பெருமாளின் அப்பா, அம்மா பார்க்க, அப்போது குறுக்கிட்ட திவ்யா, "ஒரு நிமிஷம்... நான் கொஞ்சம் பேசலாமா?"- என கேட்க,

    அவளை பார்த்து பெருமாள், "அதான்... இன்ஸ்பெக்டர்கிட்ட நான் பேசிட்டு இருக்கேன்ல... நீ என்ன பேச போற ?"எனக்கேட்க, "நான் இன்ஸ்பெக்டர்கிட்ட பேச விரும்பல. உன் கிட்ட பேசணும்." - என திவ்யா சொன்னாள். "என்கிட்ட நீ என்ன பேச போற?"- பெருமாள் கேட்கவும், திவ்யா "நீ ஸ்டேஷனுக்கு நேர்ல வந்து பேசுறதெல்லாம் பார்க்கும்போது, எனக்கு உன் மேல தான் டவுட் வருது. அந்த ரவுடிங்க, ஏன் நீ அனுப்புன ஆளுங்களா இருக்க கூடாது...?"

    பெருமாள் திகைத்து நிற்க,திவ்யா தொடர்ந்தாள். 'போங்கடா... போய் கலாட்டா பண்ற மாதிரி பண்ணுங்க... அவங்களுக்கு ஒரு பயமுறுத்தல ஏற்படுத்துங்க! அப்ப போலீஸ் அங்க வரும். நீங்க ஓடி போயிருங்க. மத்தத நான் பாத்துக்கிறேன்' - அப்படினு "நீதான் ஆள் செட் பண்ணி அனுப்பிச்சி இருக்கியோனு, எனக்கு டவுட்டா பலமா இருக்கு" என கூறவும், பெருமாள் அப்படியே கண் விரித்து, அவளையே பார்த்தான்.

    பக்கத்தில் இருந்த டேவிட், "ஆமாம் பெருமாள்... எனக்கும் ஒரு டவுட்டு இருக்குது. நீங்க நிஜமான பதட்டத்தோட, எங்களுக்கு என்னாச்சோ... ஏதாச்சோங்கிற ஒரு எண்ணத்தில வந்திருந்தா, முதல்ல எங்க கிட்ட வந்துதான், நீங்க பேசி இருக்கணும் .அதை செய்யலை...

    இந்த ஸ்டேஷனுக்கு வந்து இவ்வளவு நேரம் ஆகியும், எங்க முகத்தை கூட நீங்க பார்க்கல. ஏதோ எங்களை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் மாதிரி இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு இருப்பீங்க. நாங்க அத நம்பணும். அப்படித்தானே?" - டேவிட் சொல்லவும், திரும்பி அவனை முறைத்தான் பெருமாள்.

    அதற்குள் டேவிட் நண்பர்களில் ஒருவனான நெல்சன் "ஆமா சார்... இவ்வளவு பவர் உள்ள ஒரு ஆள் நீங்க ஒரு போன் பண்ணி இன்ஸ்பெக்டர்கிட்ட பேசியிருந்தாலே, அவர் எல்லா டீட்டையிலும் சொல்லிருக்க போறாரு. அத விட்டுட்டு, நாங்க ஸ்டேஷன்ல இருக்கோம்னு தெரிஞ்சுகிட்டு, எங்க முன்னாடியே வந்து நீங்க இப்படி ஒரு டிராமா பண்ணுறீங்களோன்னு நாங்க நினைக்கலாம் இல்லையா?" நெல்சன் முடிக்கவும், அவனை கூர்மையாய் பார்த்தான் பெருமாள்.

    பின்னர் திரும்பி தன் அப்பாவை பார்த்து, "அப்பா ஆளாளுக்கு பேசுறாங்க. எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கீங்க? அவங்க பேசுவதெல்லாம் சரியானு இப்ப நீங்க சொல்லுங்க" பெருமாள் கேட்கவும், ரங்கராஜன் தயக்கமின்றி பேச ஆரம்பித்தார்.

    "இது திவ்யாக்கு ஏற்பட்ட பிரச்சனை! அவ கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கா. இன்ஸ்பெக்டர் விசாரிச்சுகிட்டு இருக்காரு. அந்த ரவுடிங்க யாருன்னு கண்டுபிடிச்சு இந்த கேஸ அவரே முடிப்பாரு. இதுல நீ தேவையில்லாமல் தலையிட வேண்டாம்..." என கூற,

    ஒரு தீ பார்வையை அவர் மீது வீசிய பெருமாள்,"ஓ... அப்போ இவ நிம்மதியா வாழக்கூடாதுன்னு நான்தான் ரவுடிங்ல செட் பண்ணி அனுப்பி, இவகிட்ட கலாட்டா பண்ண வச்சிருக்கிறேன்.அப்படித்தானே எல்லாரும் யோசிக்கிறீங்க...?" எனக் கேட்க, அனைவரும் மவுனமாக அவனையே பார்க்க,

    பெருமாள், "வெரி குட்... நல்லா யோசிக்கிறீங்க. சரி, அப்ப இனி எனக்கு இங்க வேலை இல்லை"- என்று இன்ஸ்பெக்டரிடம் திரும்பியவன், "இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்! இனிமேல், நான் இந்த கேஸ்குள்ள தலையிட மாட்டேன். எனக்கு பிடிக்காத, வேற ஒரு மதத்துல உள்ளவனை கல்யாணம் முடிச்சுட்டு போனா கூட, அவ என் தங்கச்சிங்கற முறைக்காக தான் ஸ்டேஷனுக்கு வந்தேன். எப்போ நான் வந்தத, இவங்க எல்லாம் தப்பா குற்றம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களோ... அதுக்கப்புறம் இவங்களுக்கு ஆதரவா நான் நிக்கறதுல எந்த பிரயோஜனமும் இல்லை! நான் வரேன்" - என்று திரும்பி விறுவிறு என்று வெளியே போனவன்,

    ஒரு கணம் நின்று திரும்பி இவர்களை பார்த்து, "கல்யாணம் ஆனது ஆகிப்போச்சு..பழசை மறந்துடுவோம், அப்படின்னு நினைச்சு தான் நான் ஸ்டேஷனுக்கு வந்தேன். ஆனால் நான் மறந்தாலும் நீங்க மறக்கத் தயாராக இல்லை. இன்னைக்கு நடந்தத நான் என் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்.

    இப்போ கோவம் இல்லாம நிதானமா சொல்றன். நான் சத்தியமா சொல்றேன், இனி உங்களுக்கும் எனக்கும் ஒரு ஓட்டு உறவு கூட கிடையாது. மொத்தமா கழுவிட்டு போறன்" அவன் வேகமாக கிளம்பி வெளியே போகவும் திவ்யாவும், டேவிட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

    இவர்கள நோக்கி வந்த இன்ஸ்பெக்டர் அழகர், "பெருமாள் சார் வந்த வேகத்தை பார்த்தா, எங்க எனக்கு பிரச்சனை ஆயிடுமோனு பார்த்தேன். நல்லவேளே. நீ குறுக்க பேசி,அவர கிளம்ப வச்சேன்மா... சரி... நீங்களும் கிளம்புங்க. உங்ககிட்ட கலாட்டா பண்ண ரவுடிகளை எப்படியாவது புடிச்சிட்டு, அப்புறமா தகவல் சொல்லி அனுப்புறேன், போயிட்டு வாங்க!"- என அவர்களை கை கூப்பி, அனுப்பி வைத்தார்.

    அவர்கள் ஸ்டேஷனை விட்டு வெளியே வர, அதே நேரத்தில், வெளியே பைக்கில் சென்று கொண்டிருந்த பெருமாள் முகத்தில் கோபத்தின் ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    பக்கத்தில் வந்து கொண்டிருந்த பெருமாளின் அடியாள்களில் ஒருவன், "என்னெண்ண... இப்படி அசிங்கப்படுத்திட்டாங்க!"- என சொல்ல, அவனைப் பார்த்து பெருமாள்,

    "அசிங்கப்படுத்தலடா! அவங்களே அவங்களுக்கு குழியை தோண்டிகிட்டாங்க. உதவிக்கு போன என்ன உதாசீன படுத்திட்டாங்க இல்ல! இனிமேதான் ஏன்டா அன்னைக்கு அப்படி பேசுணோம்னு அவங்க பீல் பண்ண போறாங்க .."-என கூறியபடி, தன் முழு கோபத்தையும் பைக்கின் ஆக்சிலேட்டரில் காமிக்க, பைக் வேகம் எடுத்து சீறி பாய்ந்தது. (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353

    • திருவேங்கடமுடையான் என்பது வேதாந்த தேசிகருக்குப் பெற்றோர் இட்ட இயற்பெயர்.
    • வேதாந்த தேசிகரின் இனிய தமிழைக் கேட்டவாறே தான் வேங்கடவன் நீராடுகிறார்.

    தமிழ், வடமொழி என இரு மொழிகளிலும் எண்ணற்ற நூல்கள் படைத்துப் பெரும்புகழ் பெற்றவர் வைணவ சமயச் சான்றோரில் ஒருவரான ஸ்ரீவேதாந்த தேசிகர்.

    கி.பி. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், காஞ்சிபுரத்தின் அருகே தூப்புல் என்ற இடத்தில் 1268-ம் ஆண்டு புரட்டாசி மாதம் சிரவண நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    தந்தையார் பெயர் அனந்தசூரி. தாயார் தோத்தாத்திரி அம்மையார். திருவேங்கடமுடையான் என்பது வேதாந்த தேசிகருக்குப் பெற்றோர் இட்ட இயற்பெயர்.

    சிறுவயதிலேயே மாபெரும் அறிவாளியாகத் திகழ்ந்த வேதாந்த தேசிகர் திருமலையில் உள்ள கோவில் மணியின் அம்சமாகப் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. இவரது குருவின் பெயர் கிடாம்பி அப்புள்ளார்.

    வேதாந்த தேசிகர், தமது இருபத்தோராம் வயதில் கனகவல்லி என்னும் மங்கையை மணந்து இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்தார். பெரும் புலமையால் ஏராளமான அறிஞர்களை இளமையிலேயே வியக்க வைத்தார்.

    தம் அறிவு மற்றும் ஆற்றல் காரணமாக பல சீடர்களைப் பெற்று வைணவ குரு என்ற உயர்நிலையை இருபத்து ஏழாம் வயதிலேயே அடைந்தார்.

    வேதாந்த மார்க்கத்தில் சிறந்த ஆசார்யராக இவர் திகழ்ந்தார். அதனால் இவரை வேதாந்த தேசிகர் என அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். காலப் போக்கில் இவரின் இயற்பெயர் மறைந்து அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

    தவிரவும் `தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, சுவாமி தேசிகன், உபய வேதாந் தாச்சாரியார்` போன்ற பெயர்களிலும் இவர் அறியப்படுகிறார்.

    பக்தர்கள் நாள் முழுவதையும் இறைச் சிந்தனையில் தோய்ந்து வாழ வேண்டும் என்று சொன்ன இவர், ஒரு நாளில் அமைந்துள்ள இருபத்து நான்கு மணி நேரத்தை எப்படிப் பகுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்தி அட்டவணை அமைத்துத் தந்திருக்கிறார்.

    அந்த வேலைத் திட்டம் `தினசரியை` என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நித்திய கர்ம வழிகாட்டி எனவும் அதை அழைக்கிறார்கள்.

    இவர் வடமொழி, தமிழ் இரண்டிலும் சம அளவு பெரும் புலமை பெற்று விளங்கினார். இரு மொழிகளிலும் மிகச் சிறந்த நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

    வடமொழியில் இவர் எழுதிய நூல்கள் கோதாஸ்துதி, தசாவதார ஸ்தோத்திரம், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், தேசிக மங்களம் உள்பட எண்பத்திரண்டு.

    அவற்றில் `பாதுகா சஹஸ்ரம்` என்ற, முப்பத்திரண்டு அத்தியாயங்களில் ஆயிரம் செய்யுள்களைக் கொண்டு இயற்றப்பட்ட நூல் பெரும்புகழ் பெற்றது. திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள ரங்கநாதரின் பாதுகைகளை வழிபட்டுப் போற்றிப் பாடும் பக்தி நூல் இது.

    ஸ்ரீவைஷ்ணவத்தின் புனித நூல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பதினான்கு ஆண்டுகள் ராமனின் பாதுகைகள் அயோத்தியை ஆண்டன எனக் கூறி, திருமாலின் பாதுகைச் சிறப்பு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

    ராமபிரானின் திருவடிகளைச் சரணடைவதுபோல் அவரது பாதுகைகளைச் சரணடைந்தே முக்தி பெறலாம் என இந்நூல் தெரிவிக்கிறது. பாதுகைகளை மட்டுமே மையமாக வைத்து தம் அபாரமான கற்பனை வளத்தின் மூலம் ஆயிரம் செய்யுள்களைப் புனைந்து பிரமிக்க வைக்கிறார் வேதாந்த தேசிகர்.

    தமிழில் `அமிர்த ரஞ்சனி, அடைக்கலப் பத்து, மும்மணிக் கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம்` உள்ளிட்ட இருபத்து நான்கு நூல்களை இயற்றியுள்ளார். அவரது தமிழ் நூல்கள் `தேசிகப் பிரபந்தங்கள்` என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.

    திருப்பதியில் வெள்ளிக்கிழமை தோறும் வேங்கடவனுக்குத் திருமஞ்சனம் (நீராட்டல்) செய்வதற்கு முன் வேதாந்த தேசிகர் அருளிய `அடைக்கலப் பத்து` பாடப்பட்டு வருகிறது. வேதாந்த தேசிகரின் இனிய தமிழைக் கேட்டவாறே தான் வேங்கடவன் நீராடுகிறார்.

     

    திருப்பாணாழ்வார் பாடிய `அமலனாதி பிரான்` என்னும் பதிகத்திற்கு இவர் `அமலனாதி பிரான் வியாக்கியானம்` என்ற தலைப்பில் விளக்க நூல் எழுதியுள்ளார்.

    தேசிகரின் நூல்களைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படும். காரணம் அவரது மிரட்டும் பல்துறை அறிவு. சகலகலா வல்லவர் என்று அவரைச் சொல்வதுபோல் இன்னொருவரை நாம் சொல்ல முடியாது. வானவியல், உயிரியல், மருத்துவம், கட்டடக் கலை, இசை, சட்டம், தர்க்கம், வேதாந்தம், இலக்கணம், இலக்கியம் என இன்னும் எண்ணற்ற துறைகளில் எழுதிக் குவித்திருக்கிறார் அவர். அவரது ஒவ்வொரு நூலும் பல்துறை அறிவு சார்ந்த ஒரு பொக்கிஷம். இவ்வளவு பேரறிவை அவர் எங்கிருந்து கற்றார், எப்படிப் பெற்றார் என்ற கேள்விகளுக்கு இறையருள் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை. ஆழமான கருத்துக்களைக் கொண்ட நூல்களைப் படைத்த அவருக்கு ஆழமான கிணறையும் கட்டத் தெரிந்திருந்தது என்பதுதான் ஆச்சரியம்! `சர்வ தந்திர ஸ்வதந்திரர்` என்று அவரைச் சொல்வது வழக்கமாம். எல்லாம் வல்லவர் என்று அதற்குப் பொருள்.

    `எல்லாம் வல்லவராமே நீங்கள்? ஆனால் உங்களால் நான் கட்டுவதுபோல், மக்கள் தண்ணீர் இறைத்துக் கொள்ளும் வகையில் ஒரு கிணறு கட்ட முடியுமா?` என்று மேஸ்திரி ஒருவர் இவரிடம் சவால் விட்டாராம்.

    எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்த தேசிகர், யார் உதவியையும் கோராமல், தன்னந்தனி ஆளாக நின்று தாமே ஒரே நாளில் கிணறு கட்டி முடித்தாராம்.

    அவரது சாதனையைப் பார்த்து மேஸ்திரி உள்பட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். அவரைத் தெய்வம் என்றே கருதி வணங்கினார்கள்.

    திருவேந்திபுரத்தில் உள்ள அந்தக் கிணற்றை இன்றும் மக்கள், தெய்வம் கட்டிய கிணறு என்றெண்ணி வழிபட்டு வருகிறார்கள்.

    அவர் வாழ்வில் வரும் இந்தச் சம்பவத்தைப் பற்றி நினைக்கும்போது வனவாச காலத்தில் இலக்குவன் கட்டித் தந்த குடிலைப் பார்த்து வியந்த ராமபிரான், `எப்போது எப்படி இந்தக் கலையைக் கற்றாய்?` என ஆச்சரியத்துடன் வினவிய நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    பல கலைகளில் வல்லவராக இருந்த தேசிகர், அதிகம் வல்லமை காட்டியது எழுத்துக் கலை.

    தொழில் நுட்ப நூல்கள், கற்பனைப் படைப்புகள், இசை, தத்துவம் சார்ந்த நூல்கள், பக்தி சார்ந்த நூல்கள் என இவரது நூல்களில் ஒன்றைப் போல் இன்னொன்றின் உள்ளடக்கம் இராது. ஒவ்வொன்றுக்கும் தனி நடை. தனிச் சொல்லாட்சி.

    அவரை அவதாரம் என்றே பலரும் கருதக் காரணம் மனித முயற்சியால் இத்தனை அறிவுச் செல்வத்தை ஒருவரே அடைந்துவிட இயலுமா என அவரது நூல்களைப் படித்தவர்களுக்கு ஏற்படும் சந்தேகம்தான்.

    இதோ அவரின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று:

    `கண்ணனடி இணையெமக்குக் காட்டும் வெற்பு!

    கடுவினையர் இருவினை யுங் கடியும் வெற்பு!

    திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு!

    தெளிந்த பெருந் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!

    புண்ணியத்தின் புகலிதெனப் புகழும் வெற்பு!

    பொன்னுலகில் போகமெலாம் புணர்க்கும் வெற்பு!

    விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!

    வேங்கடவெற் பென விளங்கும் வேத வெற்பே!'

    தேசிகரின் இந்த அழகிய பாடல் வேங்கடவன் உறையும் திருமலையின் பெருமைகளைப் பேசுகிறது.

    `குறையாது மில்லாத கோவிந்தா நின் குரைகழற்கீழ் அடைக்கலமாம் குறிப்புத் தந்தாய்` என `அமிருத சுவாதினி` என்ற செய்யுள் நூலில் தேசிகர் குறையில்லாதவன் கோவிந்தன் என்று சொல்லிக் கண்ணனைப் போற்றுகிறார்.

    இந்தச் செய்யுளடி மூதறிஞர் ராஜாஜியைக் கவர்ந்திருக்கலாம். `கோவிந்தனுக்கு மட்டுமா குறையில்லை, கோவிந்தன் அருளால் எனக்கும் குறையேதுமில்லை` என அவர் சிந்தித்திருக்கலாம்.

    `குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!` என எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிப் புகழ்பெற்ற ராஜாஜியின் பாடலுக்கான பல்லவிக் கொடை, தேசிகர் அருளால் கிடைத்ததாகவும் இருக்கலாம்.

    மூதறிஞர் ராஜாஜி, தேசிகரின் பிரபந்தங்கள் உள்பட அனைத்து வைணவ பக்தி இலக்கியத்திலும் தோய்ந்து வாழ்ந்தவர் தானே?

    ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள் வடமொழி வேதத்திற்கு இணையானவை என இன்று நாம் கொண்டாடுகிறோம். அவ்விதம் ஆழ்வார்கள் பெருமை நிலைநாட்டப் பட்டதில் வேதாந்த தேசிகரின் பங்கு அதிகம்.

    வடமொழியில் பெரும் புலமை பெற்றிருந்த இவர், வடமொழி போலவே தமிழும் தெய்வத் தன்மை உடைய மொழி என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கோவில்களில் வடமொழியோடு தமிழும் இடம்பெறும்படிச் செய்தவர் இவரே.

    ஆழ்வார் பாசுரங்கள் இன்று வைணவக் கோவில்களில் முன்னிலைப் படுத்தப்படக் காரணம் வேதாந்த தேசிகர்தான்.

    ராமானுஜரின் தத்துவங்களைப் பரப்பியவர்க ளில் முக்கியமானவர் தேசிகர். திருப்பதி, மேல்கோட்டை, காஞ்சிபுரம், பிருந்தாவனம், பத்ரிநாத், அயோத்யா உள்ளிட்ட பல தலங்களுக்கு யாத்திரை செய்து தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் ராமானுஜரின் புகழைப் பரப்பினார்.

    பின்னர் தன் மகன் குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்து தங்கி திருவரங்கத்தில் வாழ்ந்து இறைவன் திருவடியை அடைந்தார்.

    வைணவத்திற்குப் பெருந்தொண்டு புரிந்த இந்தப் பெருமகனார் நூறாண்டும் மேலும் ஓராண்டும் வாழ்ந்து வாழ்நாள் முழுதும் பக்தி இலக்கியத்திற்குப் பெருந்தொண்டு புரிந்தார். ஆனால் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், அவர் ஆயிரம் ஆண்டுக்கும் மேல் வாழ்ந்தவரோ என்ற ஐயம் ஏற்படும். மகான் வேதாந்த தேசிகரது தமிழ் மற்றும் சமஸ்கிருத பக்தி இலக்கிய நூல்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் மிக உயர்ந்தவை என்பது விமர்சகர்களின் கணிப்பு.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது.
    • அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது.

    "சோறு கண்ட இடம் சொர்க்கம்" ன்னு ஒரு பழமொழி உண்டு.

    சோற்றை கண்டதும் சொர்க்கம் கிடைக்குமா...

    சோறு பரிமாற படும் இடம் சொர்க்கம் போன்றதா என நிறைய கேள்விகள் மனதில்.

    சோறு கண்டதும் சொர்க்கம் என சொல்லும் சொலவடையின் அர்த்தத்தைத் தேடும்போது தான் உலகிற்கே படியளக்கும் பரம சிவனாரின் மகிமை புரிய ஆரம்பித்தது.

    நம்மில் நிறைய பேர் ஆலயத்திற்கு செல்லும்போது சுவாமிக்கு நடைபெறும் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தைல அபிஷேகம் மற்றும் சந்தனம், விபூதி,மஞ்சள், போன்ற பிற வாசனை பொருட்களால் நடைபெறும் அபிஷேகத்தை பார்த்திருப்போம்.

    சோற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதை நம்மில் வெகு சிலரே பார்த்திருப்போம்.

    ஐப்பசி மாத பவுர்ணமி திதியின்போது சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும்.

    மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது.

    அதனால் தானும் சிவனுக்கு நிகரானவர் என பிரம்மன் நினைத்தார்

    பிரம்மனின் அகந்தையை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஓர் தலையை சிவபெருமான் கொய்து பிரம்மனை நான்முகன் ஆக ஆக்கினார்.

    சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட பிரம்ம தேவரின் தலையானது சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டு சிவனாருக்கு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.

    சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்ட பிரம்மனின் கபாலம் ஆனது எப்போதும் பசியால் அனத்திக் கொண்டிருந்தது.

    பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்டார் சிவபெருமான்.

    தனக்கு போதும் என்ற அளவுக்கு உணவு கிடைக்கும்போது சிவபெருமானை விட்டு நீங்கி விடுவதாக பிரம்ம தேவரின் கபாலம் சிவனாரிடம் கூறியது.

    சிவபெருமான் கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு பிச்சாடனார் ஆக உருமாறி பூலோகம் வந்தார்.

    அன்னமிட்டு நிறையும்போது மட்டுமே அந்த கபாலம் சிவபெருமானின் கையை விட்டு பிரியும் என்பது சிவனாருக்கு பிரம்மனால் கொடுக்கப்பட்ட சாபம் ஆகும்.

    சிவபெருமான் காசிக்கு செல்லும்போது அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள்.

    அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது.

    இதை அடுத்து சிவபெருமான் கையில் ஒட்டி கொண்டு அவரை படாத பாடுபடுத்திய பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது.

    சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.

    அன்னபூரணி அன்னை சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி மாதம் பவுர்ணமி திதி.

    சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்கள் அனைத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் நீங்கி முழு பொலிவுடன் பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று முழு பொலிவுடன் உதித்து வருவார்.

    அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர்.

    இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார்.

    இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்கிறாள். ரோஹிணியின் தந்தை உன் உடல் தேயட்டும்' என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

    சாபம் பெற்றதும் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார்.

    சந்திரன் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார்.

    சிவபெருமான் அருளால் சாபம் நீங்க பெற்று சந்திரன் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று முழுமையாக பிரகாசித்தார்.

     

    சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும்.

    சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானுக்கு அந்த சந்திரன் முழு பொலிவுடன் இருக்கும் நாளான ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடு ஆக பிறை சூடிய பெருமான் ஆன சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை தரிசித்தவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அன்னத்திற்கு குறைவு ஏற்படாது.

    நெல், அரிசி ஆகிறது.

    அரிசி, சோறாகிறது.

    சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது.

     

    இது போலவே ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம்.

    அரிசி என்ற வார்த்தையிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர்.

    சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் பொருள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்திற்கு சமம்.

    நன்றாக சோற்றுப் பருக்கையை உற்று நோக்கினால் சோற்றுப் பருக்கையானது சிவலிங்க வடிவில் இருப்பதை காணலாம்

    ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு சாற்றியிருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் நம்மால் சிவலிங்கத்தைக் காண முடியும்.

     

    சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

    ஒரே சமயத்தில் கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவத்தை போக்கும்.

    அன்னாபிஷேகம் நடைபெறும் அன்று ஒவ்வொரு சோற்றிலும் ஒரு சிவலிங்கத்தை காணலாம் என ஈஸ்வரன் வரம் கொடுத்து இருப்பதால் அந்த வரத்தின் பயனாக நாம் அன்று கோடி கோடி லிங்கத்தை பார்த்த பலனைப் பெறலாம்.

    சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட அபிஷேக சோற்றை யார் கண்ணார காண்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதன் விளைவாகவே சோறு கண்ட இடமே சொர்க்கம் என கூறப்பட்டது.

    தொடர்புக்கு,

    isuresh669@gmail.com

    • அன்று முதல் இன்றுவரை எல்லோராலும், “தந்தை பெரியார்” என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.
    • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏராளமான மகளிர் பங்கேற்க இம்மாநாடு பெரும் உந்து சக்தியாக விளங்கியது.

    1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச்சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களை ஈடுபட வைத்ததிலும், ஈ.வெ.ரா பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டதும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள். மீனாம்பாள் சிவராஜ், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகைதிருவரங்க நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தியது.

    ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் ஈ.வெ. ராமசாமி "பெரியார்" என்று அழைக்கப்பட காரணம். "இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் "பெரியார்" என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது." என்பதே அந்த தீர்மானம். அன்று முதல் இன்றுவரை எல்லோராலும், "தந்தை பெரியார்" என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.

    இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏராளமான மகளிர் பங்கேற்க இம்மாநாடு பெரும் உந்து சக்தியாக விளங்கியது. இந்த மாநாட்டில் ஆற்றிய உரையை குற்றச்சாட்டாக கொண்டுதான் தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • நான்கரை மாத காலம் 12 ராசியினருக்கும் ஏற்படப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.
    • ஒரு காலகட்டம் பிரச்சனைக்குரியதாக இருந்தால் வெகு விரைவில் பொற்காலத்தை தர இறைவன் உங்களை சோதிக்கிறான் என்று பொருள்.

    கோட்சாரத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 15.11.2024 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். 29.3.2025 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த நான்கரை மாத காலம் 12 ராசியினருக்கும் ஏற்படப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.

    மேஷம்

    கடன்கள் குறையும். மேஷ ராசிக்கு 10, 11-ம் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தியாகி தனது 3-ம் பார்வையால் ராசியை பார்க்கிறார். உப ஜெயஸ்தானமான 11-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் சனி பகவான் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி லாபத்தில் திளைக்க செய்யப் போகிறார். பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். கடனால் பட்ட கவலைகள், அவமானம் அகலும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் ரீதியாகவும் உறவுகள் ரீதியாகவும் அனுபவித்த மன சங்கடங்கள் விலகும். எல்லைத் தகராறு நீங்கும், பாகப்பிரிவினை சுமூகமாகும்.

    குல தெய்வ அருள் கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.

    29.3.2025ல் ஏழரைச் சனி துவங்க உள்ளதால் சுய ஜாதக ரீதியான பலன்களைத் தெரிந்து கொண்டு முக்கிய பணிகளை நடத்துவது நல்லது. ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

    ரிஷபம்

    தொழில் முன்னேற்றம். ரிஷப ராசிக்கு 9, 10-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 10-ம் இடத்தில் வக்ர நிவர்த்தியாகிறார். 29.3.2025 முதல் மீன ராசிக்கு சென்று லாபச் சனியாக பலன் தருவார். இந்த காலகட்டத்தில் மகா லஷ்மியின் கனிவுப் பார்வை உங்கள் மேல் உள்ளதால் புதிய தொழில் துவங்க, தொழில் கிளைகள் திறக்க, தொழிலை விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை கிடைக்கும். குழந்தைகளுக்கு திருமணம், கல்வி, புத்திரப் பேறு, உத்தியோகம், தொழில் போன்ற சுப பலன்கள் அதிகரிக்கும். அதற்கான சுப விரயங்களும் உண்டாகும். சிறு சிறு உட்பூசலுக்காக வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். பிறருக்கு ஜாமீன் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும். நம்பியவர்களே முதுகில் குத்தும் நேரம் என்பதால் உறவுகளிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும் பொன்னான காலம். ஸ்ரீ வாராகியை வழிபடவும்.

    மிதுனம்

    பாக்கிய பலன்கள் கூடும். மிதுன ராசிக்கு 8, 9-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தியாகிறார். இச்சமயங்களில் சுப விரயச் செலவுகளான திருமணம் வீடு கட்டுதல், வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுதல் முதலீடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டு குடியுரிமை சாத்தியமாகும். பதவி உயர்வு கிடைத்து பொறுப்புகள் அதிகரிக்கும். திருமணம், ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகப் பிரச்சனைகள் சாதகமாகும். தந்தையின் அன்பும் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும். சொந்த தொழில் ஆரம்பிக்கும் விருப்பம் நிறைவேறும். உயர்கல்வி, மருத்துவ கல்விகள், ஆராய்ச்சி சார்ந்த கல்விகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பி.எச்.டி. போன்ற கல்வி பயில சிறப்பான காலம். ஸ்ரீ வீரபத்திரரை வழிபடவும்.


    கடகம்

    அதிர்ஷ்டமான காலம். கடக ராசிக்கு 7,8-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 8-ல் வக்ர நிவர்த்தியாகிறார். தகவல் தொடர்பு மீடியா மூலம் பெயர் புகழ் பரவலாம்.

    29.3.2025 அன்று அஷ்டமச் சனியில் இருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும். மறைமுக வழிகளில் லாபங்கள் பெருகி உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை, லாட்டரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து கைக்கு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிட்டும். சிலருக்கு சிறிய முயற்சியில் கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். உடல் நிலை தேறும். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    சிம்மம்

    வேலைப்பளு கூடும். சிம்ம ராசிக்கு 6, 7-ம் அதிபதியான சனிபகவான் ராசிக்கு 7ல் வக்ர நிவர்த்தியாகிறார். இதுவரை ஜாதகர் காட்டி வந்த வீரம், வேகம், விவேகம் மட்டுப்படும். சிந்தனை தடுமாற்றம் , மன சஞ்சலம் அதிகமாகும். இளைய சகோதர வழியில் பொருள் உதவி வந்து சேரும். சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லிணக்கம் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். அதிக அலைச்சல் மிக்க பயணங்கள் செய்ய நேரும். சிலருக்கு தலைவலி, ஞாபக மறதி அல்லது காது, மூக்கு தொண்டை, நரம்பு தொடர்பான பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. அதேபோல் 29.3.2025 அன்று அஷ்டமச் சனி துவங்குவதால் திருமணத்தை விரைந்து முடிப்பது நல்லது. தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். சரபேஸ்வரரை வழிபடவும்.

    கன்னி

    கடன் தொல்லை விலகும். கன்னி ராசிக்கு 5, 6-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 6ல் வக்ர நிவர்த்தியாகிறார்.பொருத்தமில்லாத, தகுதி குறைவான வேலையில் இருந்தவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும், படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். நல்ல வேலை கிடைக்காமல் மனம் நொந்து போன இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள், ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கும். ஆயுள் தீர்க்கம். உடல் அசதி உருவாகும். உங்களின் நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்து வத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. ஜாமீன் கையெழுத்து போடுதல், வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி




    துலாம்

    சொத்துக்கள் சேரும். துலாம் ராசிக்கு 4, 5-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 5-ல் வக்ர நிவர்த்தியாகிறார். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். சொத்து தொடர்பான வழக்குகள் முடிவிற்கு வரும். வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். காதல் திருமணம் நடக்கும். எந்த செயலிலும் உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுக்க வேண்டிய நேரம். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். குல தெய்வத்தை வழிபடவும்.

    விருச்சிகம்

    காரிய சித்தி. விருச்சிக ராசிக்கு 3,4-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 4-ல் வக்ர நிவர்த்தியாகிறார். 29.3.2025-ல் அர்தாஷ்டமச் சனியில் இருந்து முழுமையாக விடுதலை கிடைக்கப் போகிறது. இது நாள் வரை தடை தாமதமான உங்களின் முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இரவு பகல் பாராமல் அல்லும் பகலும் உழைத்த உழைப்பு பணமாக காய்க்கப்போகிறது. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். அஷ்ட ஐஸ்வரியமும் தேடி வரும். குருவின் பார்வை பட்ட இடம் பெருகும். சனியின் பார்வை பட்ட இடம் பாழ். அந்த வகையில் ராசியை சனி பார்வை இடுவதால் கடன், நோய், எதிரி தொல்லையில் இருந்து முழுமையாக விடுபடக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ துர்க்கையை வழிபடவும்.

    தனுசு

    மனக்கவலை அகலும். தனுசு ராசிக்கு 2,3-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 3ல் வக்ர நிவர்த்தியாகிறார். பதறாத காரியம் சிதறாது. திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம் என்பதால் இறை நம்பிக்கையுடன் பொறுமையாக நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க முடியும். இறையருள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை , தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை உண்டாகும். டிரேடிங் துறை, ரியல் எஸ்டேட், மார்கெட்டிங் ஆடம்பர பொருள் விற்பனையில் உள்ளவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், மருத்துவ துறையில் உள்ளவர்களும் மறுவாழ்வு கிடைக்கப் பெற்று முன்னேற்றப் பாதையில் செல்லுவார்கள். இதுவரை இருந்த வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பும் உள்ளது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    மகரம்

    திறமைகள் வெளிப்படும். மகர ராசிக்கு ராசி அதிபதி மற்றும் தன அதிபதியான சனி பகவான் ராசிக்கு 2-ல் வக்ர நிவர்த்தியாகிறார். அபரிமிதமான வாழ்வியல் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கே தெரியாமல் முடங்கி கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

    தொழிலில் நல்ல முன்னேற்றம் வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்களுடன் உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சனைகள் சுமூகமாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். 29.3.2025ல் ஏழரைச் சனி முழுமையாக முடிவடைகிறது. ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபடவும்.

    கும்பம்

    நிம்மதி கூடும். ராசி அதிபதி, விரய அதிபதியான சனி பகவான் ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இனம் புரியாத மன சஞ்சலம் விலகும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான காலம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படும். தொழில்துறையில், வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாம் நிறைவாக நிறைவேறும். பிரச்சி னைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புக்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் சங்கடங்களும் விலகும். சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும்.

    குடும்பத்தில் சுப மங்கள நிகழ்வுகளும், சுபமங்கள விரயச் செலவுகளும் ஏற்படும்.ஸ்ரீ ராமரை வழிபடவும்.

    மீனம்

    கனிவு அவசியம். மீன ராசிக்கு லாப அதிபதி மற்றும் விரய அதிபதியான சனி பகவான் ராசிக்கு 12-ல் வக்ர நிவர்த்தியாகிறார். புதிய தொழில் ஒப்பந்தம் , முதலீட்டை தவிர்க்க வேண்டும். புதிய முதலீடு செய்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய தொழில் தொடங்க கூடாது. தொழில் போட்டி கடுமையாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கோபம் காட்டினால் வேறு நபரிடம் சென்று விடுவார்கள் என்பதால் கனிவாக பழக வேண்டும். இது வரை விரயச் சனியாக பலன் கொடுத்த சனி பகவான் 29.3.2025 முதல் ஜென்மச் சனியாக பலன் வழங்குவார்.

    ஒரு காலகட்டம் பிரச்சனைக்குரியதாக இருந்தால் வெகு விரைவில் பொற்காலத்தை தர இறைவன் உங்களை சோதிக்கிறான் என்று பொருள். சிலருக்கு முக்கிய தேவைகளுக்காக கடன் வாங்கும் தேவை உண்டாகும். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். முருகன் வழிபாடு நல்லது.

    போன்: 98652 20406

    • துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
    • துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    புனிதமான செடிகளின் வரிசையில் முதலிடம் பிடிக்கக்கூடிய செடியாக திகழ்வது துளசி செடி. இந்த துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடந்த நாளை தான் துளசி கல்யாணம் என்று கூறுகிறார்கள். அந்த நாளில் வீட்டிலேயே துளசி கல்யாணத்தை செய்து பார்த்தால் அனைத்து விதமான மங்களங்களையும் பெற முடியும்.

    ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாளிலிருந்து 12-வது நாள் வரக்கூடிய துவாதசி அன்றுதான் துளசி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இந்த வருடம் நாளை புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடிக்கு நாம் பூஜை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும்.

    இந்த திருமணத்தை விடியற்காலை 3 மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி போதுமானது தான். துளசி செடி இல்லாதவர்கள் துளசி இலைகளை பறித்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்யலாம்.

    முதலில் ஒரு வெற்றிலையில் சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து மலர்கள் மற்றும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட வேண்டும். பிறகு துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து மாக்கோலம் போட வேண்டும். அடுத்ததாக துளசி செடி வைத்திருக்கும் தொட்டிக்கு அல்லது மாடத்திற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு ஒரு சுத்தமான செம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சிறுதுளி அளவு கலந்து துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.


    வீட்டில் மகாவிஷ்ணுவின் சிலையோ அல்லது புகைப்படமும் இருந்தால் அதை எடுத்து வந்து துளசி செடிக்கு அருகில் வைத்துவிட்டு அந்த சிலைக்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு மலர்களால் துளசி செடியையும், மகாவிஷ்ணுவின் புகைப்படத்தையும் அலங்காரம் செய்ய வேண்டும். துளசி செடிக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் உச்சரித்த வண்ணம் துளசி செடிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நெய்வேத்தியமாக கற்கண்டு உலர் திராட்சை பேரிச்சம்பழம் போன்றவற்றை வைத்து, வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து, ஊதுபத்தி தூபம் காட்டி ஐந்து பெரிய நெல்லிக்காய்களை எடுத்து அதில் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மகாவிஷ்ணுவின் சிலையோ புகைப்படமோ இல்லாதவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமான பெரிய நெல்லிக்காய் மரத்திலிருந்து ஒரு சிறிய கிளையை எடுத்து வந்து துளசி செடியுடன் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    வைணவ வழிபாட்டில் மிகவும் முக்கியமான பொருள் துளசியாகும். மலர்கள் அணிவிக்காவிட்டாலும் இரண்டு துளசி இலைகளை மகாவிஷ்ணுவிற்கு படைத்து வழிபட்டாலே அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். துளசி இலைகளை பறிப்பதற்கும் கூட பல கட்டுப்பாடுகள் உள்ளன. மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் நிறைந்த துளசியை வருடத்திற்கு ஒரு முறையாவது பூஜை செய்து வழிபட வேண்டும்.

    "ஓம் துளசியை வித்மஹி; விஷ்ணு பரியை தீமஹி; தன்னோ விருந்தா ப்ரசோதயாத்" என்ற துளசி மந்திரத்தை தினமும் உச்சரித்து, தண்ணீர் ஊற்றி வழிபடுவதால் செல்வ வளம் பெருகும். துளசி மாடத்திற்கு பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபட்டால் சகல விதமான துன்பங்களும் விலகி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    செடிகளில் துளசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? தெய்வங்களுக்கு இணையாக வணங்கப்படுவது ஏன் என பலரும் நினைக்கலாம். இதற்கு இந்து புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    அசுர அரசனின் மகளான விருந்தா, தீவிர விஷ்ணு பக்தை. இவள் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து தோன்றிய ஜலந்தரை மணந்தாள். பக்தியில் சிறந்தவளும், தீவிர பதிவிரதையுமான விருந்தாவை மணம் முடிந்ததால் ஜலந்தர் மிகவும் பலம் மிகுந்தவனாக மாறினான். இதனால் அவனின் சக்தி பல மடங்காக அதிகரித்து சிவபெருமானால் கூட வெல்ல முடியாதவன் ஆனான். இதன் காரணமாக தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக விளங்க வேண்டும் என்ற ஆசை ஜலந்தருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்சிய தேவர்கள் அனைவரும் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். ஆனால் விருந்தா தனது பக்தை என்பதால், அவளது கணவரை அழிப்பதா என குழப்பத்தில் ஆழ்ந்தார் மகா விஷ்ணு.

    இதனால் சிவனுக்கும், ஜலந்தருக்கும் போர் நடைபெற்ற சமயத்தில் ஜலந்தரின் உருவத்தில் துளசியை காண சென்றார் மகா விஷ்ணு. வந்திருப்பது தனது கணவன் என நினைத்து அவருடன் அமர்ந்து, பூஜை செய்தாள் விருந்தா. பிறகு தனது கணவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக தனது கணவரின் உருவில் வந்த மகாவிஷ்ணுவின் காலை தொட்டு வணங்கினாள். அப்போது வந்திருப்பது தனது கணவன் இல்லை என தெரிந்து கொண்டாள். தனது கடவுளே தன்னை ஏமாற்றி விட்டதால் வேதனையடைந்த விருந்தா, மகா விஷ்ணுவை கல்லாக மாற சாபம் அளித்தாள். இதனால் மகா விஷ்ணு சாளகிராம கல்லாக மாறினார். அதே சமயம், விருந்தாவின் தூய்மை தன்மை குறைந்ததால் ஜலந்தரின் பலம் குறைந்தது. போரில் அவனை வென்றார் சிவபெருமான்.

    தனது தூய்மை தன்மை குறைந்ததால் உயிரை விட துணிந்தாள் விருந்தா, அந்த சமயத்தில் விருந்தா இனி துளசி என அழைக்கப்படுவாள் என வரமளித்தார் மகா விஷ்ணு. துளசி இல்லாமல் மகா விஷ்ணுவிற்கு செய்யும் பூஜைகள் முழுமை பெறாது. துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட அது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.

    துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு வழிபடும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியும், செல்வ வளமும் பெருகும்.

    இளம் வயதினர் துளசி பூஜை செய்தால் தங்களின் மனத்திற்கு பிடித்தது போல் விரைவில் திருமண வாழ்க்கை அல்லது வாழ்க்கை துணை அமைவார்கள். திருமண தடை, திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்பவர்கள் இன்று துளசி மாதாவிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளும் துர் தேவதைகளும் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எந்தவித தங்கு தடைகளும் இன்றி நடைபெறும். செல்வ செழிப்பு மேலோங்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.

    துளசி பூஜை செய்யும் முறை

    திருமணமாகாத ஆண்கள் துளசி செடிக்கு பூஜைகள் செய்து, வஸ்திரம் படைத்து, துளசி செடியை 7 முறை வலம் வந்து வணங்க வேண்டும். திருமணமாகாத பெண்கள், மனத்திற்கு பிடித்த கணவர் அமைய வேண்டும் என விரும்பும் பெண்கள் வீட்டில் துளசி கல்யாணம் நடத்தி, துளசி மாதாவிற்கு பூஜை செய்து வழிபட வேண்டும். துளசி மாதா முன் விழுந்து வணங்கி, பூக்கள் படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொள்ளலாம்.

    ×