என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • குமரகுருபரர் மீனாட்சி அம்மன் சன்னதியில் ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலை பாடி அரங்கேற்றினார்.
    • காசியில் கருடன் வட்டமிட்ட அதிசயம் பலராலும் வியந்து பேசப்பட்டது.

    திருச்செந்தூர் முருகனின் அருள் வாக்கைப் பெற்ற நிறைவுடன் அங்கிருந்து குமரகுருபரர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மதுரை திருத்தலத்தை அடைந்தார். மீனாட்சி அம்மையை தரிசனம் செய்தார். குமரகுருபரரது புகழைக் கேள்விப்பட்ட திருமலை நாயக்க மன்னர், அவரை அரசவைக்கு அழைத்து கவுரவித்தார். அன்னை மீது பாடல் பாடுமாறு வேண்டினார்.

    குமரகுருபரர் மீனாட்சி அம்மன் சன்னதியில் 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' என்னும் நூலை பாடி அரங்கேற்றினார். அதனை மீனாட்சி அன்னையே, ஆலய அர்ச்சகரின் குழந்தை வடிவில் வந்து மன்னன் மடியில் அமர்ந்து கேட்டாள்.

    ஒரு கட்டத்தில் குமரகுருபரர் பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்த அன்னை, மன்னனின் கழுத்தில் இருந்த மணிமாலையைக் கழற்றி அதனைக் குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்து விட்டு மறைந்தாள். அது கண்டு அனை வரும் வியந்தனர். குமரகுருபரரைப் பணிந்து தொழுதனர்.

    தொடர்ந்து அன்னை மீனாட்சி மீது மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை போன்ற நூல்களை இயற்றினார் குமரகுருபரர், மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசனுக்கும் மக்களுக்கும் எது நீதி என்பதைப் போதிக்கும் வகையில் 'நீதிநெறி விளக்கம்' என்ற நூலையும் இயற்றியருளினார்.

    பின் மன்னரிடம் விடைபெற்று தனது திருத்தல யாத்திரையைத் தொடர்ந்தார்.

    திருச்சிராப்பள்ளியை அடைந்தார் குமரகுருபரர் அப்பகுதியை அப்போது ஆண்டு வந்த நாயக்க மன்னர் இவரைப் பணிந்து வரவேற்றார். அங்கு சில நாட்கள் தங்கினார். பின் ஸ்ரீரங்கத்தில் அஷ்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். சமயவாதிகள் பலரது வேண்டுகோளுக்கிணங்க, பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடன் சமய வாதம் நிகழ்த்தி வென்றார்.

    பல தலங்களைத் தரிசித்துவிட்டுத் தருமபுரம் சென்றார். அத்தலத்தின் ஆதினகர்த்தர் மாசிலாமணி தேசிகரால் வரவேற்கப்பட்டார். ஆதீனகர்த்தர் இவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குருபரரும் தகுந்த விடைகளை அளித்து அவரை மகிழ்வித்தார் இறுதியில் தேசிகர், பெரியபுராணப் பாடலைக் கூறி, அதன் அனுபவப் பொருளை விளக்குமாறு கேட்டுக் கொண்டார். திகைத்துப் போனார் குமரகுருபரர். அது தில்லையில் உறையும் அம்பலக் கூத்தனின் ஆனந்த நாட்டியத்தைக் கண்டு வார்த்தையற்று மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும்.

    அந்த அனுபவத்தை எப்படி அதனைப் பெறாத குமரகுருபரரால் சொல்ல இயலும்? அனுபவித்து அறியவேண்டியதை அவ்வாறு அறியாத அவரால் எப்படி விளக்கிச் சொல்ல இயலும்? அதனால் பதில் கூறமுடியாமல் குமரகுருபரர் மவுனமாகிப் போனார்.

    அதே சமயம், "உனது குருவை நீ காணும்போது உன்னால் அவரது கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலை ஏற்பட்டு மவுனமாவாய்" என்ற திருச்செந்தூர் முருகனின் வாக்கு அவருக்கு நினைவுக்கு வந்தது. மாசிலாமணி தேசிகரே தனது குரு என்பதை அடையாளம் கண்டுகொண்டவர், ஆதீனகர்த்தரைப் பணிந்து வீழ்ந்து வணங்கி, தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.

    ஆதீனகர்த்தர், இவரைச் சிதம்பரத்துக்குச் சென்று அம்பலவாணரைத் தரிசித்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே சிதம்பரத்துக்குப் புறப்பட்டார் குமரகுருபரர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் எனப் பல தவங்களுக்கும் சென்றார். வைத்தீஸ்வரன் கோவிலில் முருகப்பெருமானை வழிபடச் சென்றபோது, அர்ச்சகர் உருவில் அந்தச் சன்னதிக்கு வந்த ஒருவர், இவருக்குத் திருநீறு அளித்து 'அம்மையைப் பாடியதுபோல் எம்மீதும் ஒரு பிள்ளைத் தமிழ் பாடுவாயாக" என்று கூறினார்.

    இவர் புரியாது திகைத்து நிற்கும்போது, புன்னகைத்தவாறே அவர் மறைந்துவிட்டார். வந்தது முருகன்தான் என்பதை அறிந்த குமரகுருபரர், ஆலயத்திலேயே தங்கியிருந்து 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' என்னும் சொற்சுவை, பொருட்சுவை மிக்க நூலை அரங்கேற்றினார். பின் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் தலத்தை அடைந்தார் அங்கு இறைவனைப் புகழ்ந்து, 'திருவாரூர் நான்மணி மாலை' நூலைப் பாடியருளினார் பின்னர் இறுதியாகச் சிதம்பரம் திருத்தவம் சென்றார்.

    சிதம்பரம் தலத்து இறைவனைப் புகழ்ந்து சிதம்பர மும்மணிக் கோவை" என்ற நூலை இயற்றித் தொழுதார்.

    சைவ சித்தாந்தம் பற்றி சந்தேகம் கொண்டி ருந்தவர்களுக்கு அதுபற்றி விளக்கி அவர்களுக்கு உண்மையைப் புரியவைத்தார். சிவகாமியம்மை மீது 'சிவகாமி இரட்டை மணிமாலை' என்ற நூலையும் இயற்றியருளினார்.

    பின்னர் மீண்டும் தருமபுரம் சென்றார், ஆதீனகர்த்தர் ஸ்ரீ மாசிலாமணி தேசிகரை அணுகி, அவரது ஆசி மற்றும் அனுமதி பெற்றுத் துறவு பூண்டார். தம்முடைய ஞானாசிரியரின் பெருமையை விளக்கும் பொருட்டு 'பண்டார மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றினார். பின்னர் தன் குருநாதரான மாசிலாமணி தேசிகரின் கட்டளைப்படி வடக்கே காசித் திருத்தலம் நோக்கிப் பயணமானார்.

     

    புனித பூமியான காசி நகர் குமரகுருபரரை வரவேற்றது. அங்கு ஒரு சத்திரத்தில் அவர் தங்கினார். அவர் கனவில் காட்சி தந்த கேதாரீஸ்வரர் தாம் பல இடிபாடுகளுக்கிடையே புதைந்திருப்பதாகத் தெரிவித்தார். அதோடு மலைப் பகுதியில் அந்த இடத்தையும் காட்டியருளினார். குமரகுருபரர் மறுநாள் காலை தனது அடியவர்களுடன் தேடிச்சென்று அந்த இடத்தைக் கண்டார். அதனைச் சீர் செய்தவதற்கான வழிமுறைகளில் இறங்கினார்.

    அப்போது காசியில் இந்துஸ்தானி மொழி ஆதிக்கம் செலுத்தியது. தாரா ஷூகோ என்ற இஸ்லாமிய மன்னர் ஆண்டு வந்ததால் உருது மொழிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் மட்டுமே அறிந்திருந்த குமரகுருபரர் மன்னரின் உதவியைப் பெற்று காசியில் ஒரு மடம் அமைக்க எண்ணினார். அதற்காக மன்னனைச் சந்திக்க அரண்மனைக்குச் சென்றார்.

    ஆனால், குமரகுருபரரின் பெருமை அறியாத மன்னன், அவரது எளிய தோற்றத்தைக் கண்டு ஏளனத்துடன் உதாசீனம் செய்தான். அமர்வதற்கு ஆசனமும் கொடுக்கவில்லை. குமரகுருபரர் தனது வேண்டுகோளை முன்வைத்தபோது மிக அலட்சியமாக "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என் மொழியில் பேசினால்தான் நான் உங்களுக்குப் பதில் கூறமுடியும் அதுவும் நான் மதிக்கத்தக்க வகையில் நீங்கள் வந்தால் தான் உங்களுடன் உரையாட முடியும்" என்று ஆணவத்துடன் பதில் அளித்தான்.

    மறுநாள் வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினார் குமரகுருபரர்.

    மறுநாள் பொழுது புலர்ந்ததும் எழுந்து கங்கையில் நீராடி வந்தார் குமரகுருபரர். பின் கலைவாணியை தியானம் செய்தார். தொடர்ந்து கலைமகளைத் துதித்துப் பாட ஆரம்பித்தார். அந்த வகையில் சரஸ்வதியைப் போற்றும் 'சகலகலாவல்லி மாலை' நூலைப் பாடி முடித்தார். கலைமகளின் அருளால் உடனடியாக அவருள் ஞானம் பொங்கியது. இந்துஸ்தானி மொழியின் வார்த்தைகளும் இலக்கணங்களும் முழுமையாக அறியப் பெற்றார்.

    'உன் வாகனத்தைச் சிறிது நேரம் எனக்கு இரவலாகத் தரவேண்டும்' என்று அம்பிகையை வேண்டித் துதித்தார். உடன் அங்கே கர்ஜனை ஒலி கேட்டது. அம்பிகையின் வாகனமான சிங்கம் தோன்றியது. துணையாகச் சில சிங்கங்களும் அங்கே வந்தன. சிங்கம் ஒன்றின்மீது தாவி அமர்ந்து மன்னனைக் காணப் புறப்பட்டார் குமரகுருபரர்.

    அரண்மனைக்குள் சிங்கம் நுழைந்ததும் அங்குள்ளோர் அச்சத்தில் சிதறி ஓடினர். சிம்ம கர்ஜனையால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது. குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து வருவதைக் கண்ட மன்னன் தாரா ஷூகோ அதிர்ச்சி அடைந்தான். குமர குருபரரை அலட்சியப்படுத்தி சாதாரணமாக நினைத்து விட்டோமே என்று வருந்தி பயப்பட்டான். பிறகு சிங்கம் மீது ஏறி வந்த தமிழ் முனியைக் கண்டு வியந்தான். அதோடு குமரகுருபரர் மிகப்பெரிய மகாஞானி என்பது புரிந்து பணிந்தான்.

    மன்னனிடம் குமரகுருபரர் இந்துஸ்தானி மொழியிலேயே தன் வேண்டுகோளை முன் வைத்தார். மன்னனும் அதனை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். குமரகுருபரர், காசியில் தான் தங்குவதற்கும் திருமடம் அமைப்பதற்குத் தேவையான நிலம் வேண்டும் என்று கேட்டார். மன்னன் அதற்கு, 'காசியில் கருடன் பறப்பதில்லை. கருடன் வட்டமிட்டால் அது வட்டமிடும் இடம் முழுவதையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று வாக்களித்தான்.

    மறுநாள் காலை தான் தங்கியிருந்த இடத்திற்கு வருமாறு மன்னனைக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார் குமரகுருபரர். அதுபோல மறுநாள் குமரகுருபரர் இருக்கும் இடத்திற்குப் பரிவாரங்களுடன் சென்றான்.

    குமரகுருபரர் அவனை வரவேற்றார் தியானத்தில் அமர்ந்து சிவபெருமானைத் துதித்தார் உடன் குரலெழுப்பியவாறு வானில் கருடன் தோன்றியது. மன்னன் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலே வட்டமிடத் தொடங்கியது. மூன்று முறை அவ்வாறு வட்டமிட்டுப் பின் விரைந்து பறந்து காணாமல் போனது.

    காசியில் கருடன் வட்டமிட்ட அதிசயம் பலராலும் வியந்து பேசப்பட்டது. மன்னனும் தான் கூறியவாறே கருடன் வட்டமிட்ட அந்த நிலப்பகுதியை குமரகுருபரருக்கு தானமாக அளித்தான். அந்த இடம்தான் 'கேதார் காட் பகுதியில் இருக்கும் காசி குமாரசுவாமி மடம் ஆகும். அந்த திருமடத்தில் நாள்தோறும் இந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் சொற்பொழிவாற்றித் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவை புரிந்தார் குமரகுருபரர். கம்ப ராமாயணம் குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் துளசிதாசர் தினந்தோறும் வந்து கேட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு.

    காடுகளாலும், கட்டிடங்களாலும் குழப்பட்டிருந்த கேதாரேஸ்வரர் ஆலயத்தைப் புதுப்பித்து தினந்தோறும் பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தார். பல ஆண்டுக் காலம் காசியில் வாழ்ந்த குமரகுருபரர் தனது குருவைத் தரிசிக்கும் ஆசையில் மீண்டும் தமிழகம் திரும்பினார். குருவைத் தரிசித்தார்.

    குருவுடனேயே இறுதிவரை வாழ வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். குருவோ காசியிலேயே இருந்து தொண்டாற்றி வரும்படிச் சீடரைப் பணித்தார். அதனை ஏற்று மீண்டும் காசிக்குத் திரும்பி தன் இலக்கிய, ஆன்மீக சேவைகளைத் தொடர்ந்தார் குமரகுருபரர்.

    காசியில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திச் சைவத்தின் பெருமையைப் பரப்பினார். மாற்று மதத்தவரும் மதிக்கத்தக்க மகாஞானியாய் அவர் விளங்கினார். அத்தலத்தின் முக்கியத் தெய்வமான துண்டி விநாயகர் மீது 'காசி துண்டி விநாயகர் பதிகம் பாடினார்.

    காசியின் புகழைக் கூறும் 'காசிக் கலம்பகம்' என்னும் நூலை இயற்றியருளினார். நேபாள நாட்டின் 'மோரங்கி' என்ற ஊரிலும் தன் காலத்தில் கிளை மடம் ஒன்றை ஸ்தாபித்தார் குமரகுருபரர்.

    காசியில் மகாஞானியாக வாழ்ந்த குமரகுருபரர். 1668-ம் ஆண்டு வைகாசி மாதம் பவுர்ணமியை அடுத்த மூன்றாம் நாள், திருதியை திதியில் மகா சமாதி அடைந்தார். ஆண்டுதோறும் அவரது குருபூஜை குமாரசாமி மடத்தினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    குமரகுருபரர் காசி சென்று ஆன்மிக சேவை செய்ததற்கு அடித்தளமாக இருந்தது திருச்செந்தூர் முருகனின் அருளே என்பது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் முருகனின் மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம். 

    • திருமணத்துக்கு முன்பு இந்த பொறுப்புகள் எதையும் நான் கவனித்தது கிடையாது.
    • டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வெடுத்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிந்தது.

    திரிஷ்யம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் அந்த வெற்றியை ருசிப்பதற்காக நான் தாங்கிக் கொண்ட சிரமங்களும் நிறையவே உண்டு. அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்ற போது பொறுப்புகளும் அதிகமாகவே என் தலையில் இறங்கி இருந்தது.

    அதாவது குடும்ப பொறுப்பு, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது எல்லாமே என்னிடம் வந்து சேர்ந்தது. திருமணத்துக்கு முன்பு இந்த பொறுப்புகள் எதையும் நான் கவனித்தது கிடையாது.

    அந்த காலகட்டத்தில் தான் ஜி.எஸ்.டி.வரியும் அமலுக்கு வந்திருந்தது. பகலில் ஷூட்டிங், அதை தொடர்ந்து குழந்தையை கவனித்து கொள்வது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக இரவில் கண் விழித்து கணக்கு வழக்குகளை பார்க்க வேண்டும். இப்படி ஓய்வில்லாமல் வேலை இருந்ததால் மன அழுத்தம் அதிகமானது. சமாளிக்க முடியாமல் திணறினேன்.

    இதனாலேயே என் உடல் நிலையும் பாதித்தது. ஒரு நாள் காலையில் ரெடியாகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். தொடுபுழா என்ற இடத்தில் தான் ஷூட்டிங் நடந்தது.

    படப்பிடிப்பு தொடங்குவதற்கு கேமரா ரெடியானது. டெக்னீசியன்கள் தயாராகி விட்டார்கள். டைரக்டர் 'ரெடி, ஸ்டார்ட் கேமரா' என்று சொல்ல வேண்டியது தான் தாமதம். அதற்குள் உடல் நிலை மோசமாகி தடுமாறி விழுந்தேன்.

    படக்குழுவினர் அனைவரும் பதட்டத்தில் அருகில் இருந்த ஒரு சிறிய ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார்கள். அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிந்துரைப்படி பின்னர் அங்கிருந்து பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பும் நின்று போனது.

     

    ஆஸ்பத்திரியில் நான் தங்கி இருந்தாலும் உடனிருந்து கவனித்து கொள்ள அம்மாவால் வர முடியவில்லை. ஏனெனில் குழந்தை நைனிகாவை கவனிக்க வேண்டியிருந்தது.

    நிலைமையை பார்த்து தயாரிப்பாளரின் மனைவி வந்து என்னோடு தங்கியிருந்து என்னை கவனித்துக் கொண்டார். டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வெடுத்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிந்தது.

    அங்கிருந்து சென்னை திரும்புவதற்கும் கார் மற்றும் விமானப் பயணம் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து விட்டார்கள். இதனால் அனைவரும் கொச்சியில் இருந்து ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டோம்.

    அந்த கால கட்டத்தில் மிகவும் பிசியாக இருந்ததால் பெரும்பாலும் விமானப் பயணமாகத்தான் இருக்கும். கார் பயணமும் இருக்கும். நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் மேற்கொண்ட ரெயில் பயணம் அது.

    மலையாளத்தில் 'திரிஷ்யம்' சூப்பர் டூப்பர் வெற்றிப்படமாக அமைந்த மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் தெலுங்கிலும் திரிஷ்யத்தை தயாரிக்க இருப்பதாகவும் வெங்கடேஷ் ஜோடியாக நான் தான் நடிக்க வேண்டும் என்றும் கேட்டு என்னை அணுகினார்கள்.

    ஏற்கனவே தமிழில் ரஜினி ஜோடியாகவும், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாகவும், தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாகவும் நடித்ததை பார்த்து திவ்யமான ஜோடி, கோல்டன் ஜோடி என்றெல்லாம் ரசிகர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் ஜோடியாக நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

     

    அந்த வகையில் தெலுங்கில் வெங்கடேசுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் வேண்டாம் என்று சொல்வேனா? அதுவும் மலையாளத்தில் சக்கை போடு போட்ட படம். உடனே ஒத்துக் கொண்டேன்.

    இன்னொரு விசேஷம் தெலுங்கில் ஸ்ரீபிரியாம்மா டைரக்ஷன். ஒரு பெண் டைரக்டரின் படத்தில் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. பெண் டைரக்டர்கள் என்றால் பல விசயங்களை தயங்காமல் கூற முடியும்.

    நான் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீபிரியாம்மாவுடன் நடித்து இருக்கிறேன். அவரது வீட்டுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். உணவு அருந்தியிருக்கிறேன். கதாநாயகி ஆன பிறகும் எத்தனையோ முறை அவர்களோடு பேசி பழகி இருக்கிறேன்.

    முதல் முறையாக டைரக்டராக அவரிடம் நடித்த படம் அது. ஒவ்வொரு அணுவையும் எவ்வளவு உன்னிப்பாக அவர் கவனிக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்...

    படப்பிடிப்புக்கு முன்பு ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒரு போன் கால் வந்தது. ஆனால் அந்த அழைப்பை நான் ஏற்க வில்லை. அப்புறம் பேசுவதாக சொல்லுங்கள் என்று உதவியாளரிடம் கூறி விட்டு தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன்.

    அதை குறிப்பிட்டு ஸ்ரீபிரியாம்மா என்னிடம் சொன்னார்,

    'மீனா, பெரிய நடிகர், நடிகைகள் போன் வந்தால் நடிப்பதை நிறுத்தி போன் பேசி விட்டு தான் வருவார்கள். நீ இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் போனில் யார் கூப்பிடுகிறார்கள் என்பதை கூட கண்டு கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. உனது தொழில் பக்தியை பாராட்டுகிறேன்' என்று பாராட்டினார். இதில் கூட இவ்வளவு விசயம் இருக்கா என்று நான் யோசித்தேன். அதே நேரம் ஸ்ரீபிரியாம்மாவிடம் பாராட்டு பெற்றதும் மகிழ்ச்சியை கொடுத்தது.

    பொட்டு வைத்த முகம்!

    பெண்கள் முகத்துக்கு பொட்டு வைப்பது கூடுதல் அழகை கொடுக்கும் என்பது என்னவோ உண்மை தான். குங்குமம் தான் என்பதில்லை சிறிய அளவிலான ஸ்டிக்கர் பொட்டையாவது பெண்கள் அணிவார்கள். நான் திருமணம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு சேலை அணிந்து செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறேன். அப்போது பொட்டும் வைத்துக்கொள்வேன். அந்த முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கே அவ்வளவு அழகாக தெரியும்.

    மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் 'ராணி ஜார்ஜ்' என்ற கிறிஸ்தவ பெண் கதாபாத்திரத்தில் நடித்தேன். எனவே பொட்டு வைக்க முடிய வில்லை. ஆனால் தெலுங்கில் திரிஷ்யத்தில் நடித்த போது 'ஜோதி' என்ற இந்து பெண் கதா பாத்திரம் எனக்கு. அந்த கதாபாத்தி ரத்தில் பொட்டு வைக்க கூறினார்கள். அதுவும் பெரிய பொட்டாக வைத்து பார்க்கலாமே என்று ஸ்ரீபிரியாம்மா கூறினார்கள். அதேபோல் பெரிய பொட்டு வைத்திருந்தும் கூடுதல் அழகையே கொடுத்தது.

    மற்றொரு மகிழ்ச்சியான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • வெயிலில் செல்லும்போது குடை எடுத்து செல்லுங்கள்.
    • அன்றாடம் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் வாழ்நாளில் 4½ கிலோ வரை லிப்ஸ்டிக் சாப்பிடுகின்றார்கள்.

    தோற்றம் என்பது அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் படாதபாடுபடுகின்றனர். வெறும் மேக்கப் போட்டு இருக்கும் குறைகளை மறைக்க முயலும்போது அது அவரை பற்றி நன்கு சொல்லி விடும். ஆரோக்கிய குறைபாடு தெரியும். முறையாய் பராமரிக்காத சோம்பறித்தனமும் தெரியும். போதிய அளவு நம் தோற்ற பராமரிப்பினை நன்கு அறியவில்லை என்று காட்டி விடும். இங்கு கூறப்படுபவை 60 வயது இளம் வயது போல் தன்னைக் காட்டிக் கொள்வது அல்ல. 60 வயது தோற்றத்திலும் ஆரோக்கியமாக இருப்பதனைப் பற்றியதுதான்.

    ஒருவருக்கு முகம் என்பது மிக முக்கியம். தலை என்பது மிக முக்கியம். எண்ணை வடியும் தலையும், முகமுமாக இருந்தால் அவர்கள் சொல்லும் நல்ல கருத்துகள் கூட வரவேற்கப்படாமல் போகலாம். ஆக அன்றாடம் முகத்தினை பராமரிப்பு என்ற வகையில் சில நிமிடங்கள் கொடுத்தால் தான் முகம் 'பளிச்'சென்று இருக்கும். கோடை காலமும் ஆரம்பித்து விட்டது. நம்ம ஊர் கோடையைப் பற்றி சொல்லவா வேண்டும். எனவே தினம் இருமுறை முகத்தினை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    இதற்கான உபயோகப் பொருட்கள் தனிப்பட்ட நபரின் சரும நிலைக்கேற்ப மாறும். அலர்ஜி, சரும பாதிப்பு, பருக்கள் என சில பாதிப்புகள் நம் முகத்தினை உண்டு, இல்லை என ஆக்கி விடும். தலையில் தீராத பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் முகத்தில் ஏதோ பாதிப்புடன் இருப்பார்கள். இது ஒருவரின் தன்னம்பிக்கையினை குறைத்து விடும். எனவே முதலில் இதற்கான சரும சிகிச்சை சரும நிபுணர் மூலம் செய்வது அவசியம். இதற்கான சில உணவு முறை மாற்றங்களும் தேவைப்படலாம். குடல் சுத்தம், குடல் ஆேராக்கியம் மிக அவசியம் ஆகின்றது. பொதுவில் மாலையில் வீடு திரும்பிய பின் முகத்தினை கழுவுவது என்பது தூசுகள் அடையாமல் பாதுகாக்கும்.

    முகத்திற்கு என தனி பராமரிப்பு முறைகள் வந்துள்ளன. அதற்கான முறைகளை அனைவருமே ஒரு சரும நிபுணரிடம் கேட்டு பயன்படுத்த வேண்டும். மாஸ்ட்சரைஸர், சன் ஸ்கீரின் இவை இன்று அவசியம்தான். பொதுவில் நான் பார்த்த வரையில் சிலர் அன்றாடம் முகத்தில் தேங்காய் எண்ணை அல்லது நல்ல எண்ணை அல்லது பாதாம் எண்ணை தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்து கடலை மாவு, ப.மாவு கொண்டு முகத்தினை சுத்தம் செய்கின்றனர். கேரளாவிலும், வடஇந்தியாவிலும் இம்முறை அதிகம் பின்பற்றப்படு கின்றது. அது போல் வெயிலில் சென்று வந்தவுடன் இரண்டு விலை வெள்ளரிக்காயினை முகம், கைகளில் தேய்த்து கழுவி விடுகின்றனர். யதார்த்தமான இயற்கை முறையில் ரசாயன கலப்பு இன்றி இருப்பதால 'பளிச்'சென இருக்கின்றனர். செலவும் வெகு குறைவு. இது அவரவரர் வசதி, விருப்பத்தினை பொறுத்தது. அதிக வெயில், தூசு கொண்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாய் சிறப்பு கவனிப்பு தேவைப்படும். இதனையெல்லாம் விட்டு வெறும் மேல் பூச்சு மட்டும் பலன் தராது.

    போதுமான, தேவையான அளவு நீர் குடித்தாலே முகம் பொலிவாக இருக்கும். உடல் வறட்சி இன்றி இருக்கும்.

    இரவில் ரெடினல் கிரீம் உபயோகிப்பது, பகலில் வைட்டமின் 'சி' சீரம் உபயோகிப்பது போன்ற நவீன முறைகள் பிரபலமாய் உள்ளன. ஆனால் இவையெல்லாம் சரும நிபுணரின் முறையான பரிந்துரை இன்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.

    சிலர் முகத்தினை விரல்களால் அடிக்கடி தொடுவார்கள். முரட்டு தனமாக தேய்த்து கொள்வார்கள். இது பல கிருமிகள் தாக்குதலை உருவாக்கும். மென்மையான தசைகள் என்பதால் பொலிவு இறங்கி விடும்.

    பலருக்கு குப்புறப்படுத்தே தூங்கும் பழக்கம் உண்டு. இது ஆரோக்கியத்தினை பாதிப்பதுடன் முகத்தில் அதிக சுருக்கங்களை ஏற்படுத்தும். தலையணை உறை மென்மையான பட்டில் இருப்பது முகத்திற்கு பலம்.

    தலைமுடி- வகை வகையான ஷாம்புக்களை தினமும் உபயோகிப்பது இன்றைய தலைமுறையின் வழக்கமாகி விட்டது. இது முடியின் இயற்கை வளத்தினை நீக்கி வறட்சி ஆக்கி விடுகின்றது.

     

    வாரம் இரு முறை எண்ணை மசாஜ், ஆயுர்வேத சீயக்காய் அல்லது தரமான ஷாம்பு போதும். தலைக்கு மூலிகை பொடி கொண்டு வாரம் ஒருமுறை மாஸ்க் போட்டாலே முடி வலுப்பெறும். தலைமுடி சிறப்பாய் இருக்க சத்தான உணவு அவசியம்.

    வெயிலில் செல்லும்போது குடை எடுத்து செல்லுங்கள். வெள்ளை நிற குடைகளை உபயோகிக்க வேண்டும். சூடு உள்ளே இறங்காது வெள்ளை நிறம் காக்கும். தினமும் விதம் விதமான தலைமுடி அலங்காரம் அதற்கு ஸ்பிரே என வேண்டாமே. ஆரோக்கியமான கூந்தல் தரும் அழகினை எந்த ஸ்டைலும் தராது. நாம் இருப்பது உஷ்ணம் மிகுந்த பூமி. குளிர்ச்சியான பொருட்கள் போதும். நெல்லி, எலுமிச்சை, வெந்தயம், அரிசி கஞ்சி இவைதான் நம்ம ஊர் பொக்கிஷங்கள்.

     

    மேக்கப்- மிக அளவான மேக்கப் கம்பீரமான தோற்றத்தினைத் தரும். மேக்கப் என்பதே அவசியப்படும்போது மட்டுமே என வைத்துக் கொள்ள வேண்டும். திருத்திய புருவம், கண் மை, எளிதான முகப்பவுடர் இவை வீட்டில் இருக்கிறது. இது போதுமே. மற்றபடி மேக்கப் சில குறைபாடுகளை தவிர்க்க இருக்கலாம். ஆளே அடையாளம் தெரியாத அளவு மேக்கப் என்பது தேவைதானா? வெளியில் செல்லும்போது, வேலைக்குச் செல்லும்போது அளவாக உபயோகிப்பதும் பின்னர் அதனை முறையாய் சுத்தம் செய்து சருமத்தினை பாது காப்பதும் இன்றைக்கு தேவையான ஒன்றாகி விட்டது. எதுவும் இயற்கை யோடு ஒத்து இருப்பதே அழகு.

    நகம் பராமரிப்பு- இது கண்டிப்பாய் கவனம் கொடுக்க வேண்டிய ஒன்று தான். இங்கு நான் விதவித மான நிறங்கள், டிசைன்களில் நகம், பூச்சினைப் பற்றி குறிப்பிடவில்லை. நகம் பாதுகாப்பு, நகம் ஆரோக்கியம் பற்றி மட்டுமே எழுதுகின்றேன்.

    * வேலை செய்யும்போது அதாவது சுத்தம் செய்யும்போது, தோட்ட வேலை செய்யும்போது கையுறை அணிந்து கொள்ளுங்கள். கால்களில் சாக்ஸ் போட்டு காலணி அணியுங்கள்.

    * நகங்களை மிக மிக நீளமாக வளர்ப்பது பல பிரச்சினைகளையே தரும். முறையாய் வெட்டி விடுங்கள்.

    * நகங்களுக்கு மாஸ்ட்ரைசர் கண்டிப்பாய் தடவ வேண்டும்.

    * எப்போதும் நகப்பூச்சு என்பது நகரங்களை பொலிவிழக்கச் செய்து விடும்.

    * மருதாணி வைத்துக் கொள்ளலாம். நகப்பூச்சினை விட மேலானது. இயற்கையான, சுத்தமான, பளிச்சென்ற நகரங்களே உண்மையான அழகு.

    * நகம் கடிக்கும் பழக்கத்தினை நிறுத்துங்கள்.

    உடல்- முகம் வரை அக்கறை கொடுக்கும் சிலர் கழுத்தினை கூட உரிய கவனம் கொடுக்க மாட்டார்கள். உடலினைப் பற்றி கவனம் சிறிதும் இருக்காது.

    * அன்றாடம் ஏதோ ஒரு சோப்பினைக் கொண்டு குளிப்பது மட்டும் குளியல் ஆகாது.

    * உடல் சருமம் வறண்டு விடாமல் இருக்க தரமான 'பாடி வாஷ்' பல கம்பெனிகள் அறிமுகப்படுத்தி உள்ளன. சரும வாகிற்கேற்ப ஆய்ந்து அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * குளிப்பதற்கு முன்பு ஒரு துண்டு முடிந்தால் பூதுவாலை கொண்டு உடலில் மென்மையாக தேய்க்கவும். இது நல்ல ரத்த ஓட்டத்தினை ஏற்படுத்தும். ருணநீர் மண்டலமும் சீராய் இயங்க முடியும்.

    * குளிக்கும்போது உலர் பீர்க்கங்காய் நாரினை நன்கு நீரினில் நனைத்து மென்மையாகத் தேய்க்கலாம்.

    * மாஸ்ட்ரைசர், சன்ஸ்கிரீம் இரண்டுமே அவசியத் தேவை ஆகின்றது.

    * பாதத்தினையும் மாஸ்ட்ரைஸ் செய்ய வேண்டும்.

    * வீட்டில் இருக்கும்போது சத்தான எண்ணை சிறிது உடலுக்கு தடவலாம்.

    * தோற்றப் பொலிவு பராமரிப்பு என்பது குறைந்தது 6000 வருடங்களுக்கு முற்பட்டது. ஆனால் இதற்கும் மிக மிக அதிகமாகவே குறிப்பிடுகின்றனர்.

    * சிகப்பு நிற 'லிப்ஸ்டிக்' மேலை நாடுகளில் அதிகம் பயன்படுத்துவதன் காரணம். இந்நிறம் ஒருவரை இளமையானவராகக் காட்டுமாம்.

    * கடலில் இருந்து எடுக்கப்படும் சில பொருட்களைக் கொண்டு செய்யும் அழகு சாதனங்கள் சருமத்திற்கு சிறந்தனவையாக இருக்கின்றனவாம்.

     

    கமலி ஸ்ரீபால்

    * வைட்டமின் 'எ' கொண்ட கிரீம்கள் சருமத்தினை பாதுகாக்கின்றன.

    * சீரம் என்பது சருமத்தால் உடனடி உறிஞ்சப்படும். வைட்ட மின் 'சீ' சீரம் மிகவும் அழகு நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

    * வைட்டமின் டி கொண்ட பவுடர் சரும பராமரிப்பில் இடம் பெற்று உள்ளது.

    * வைட்டமின் 'ஈ' கொண்ட கிரீம்கள் மூப்பு தோற்றத்தினை குறைக்கும் தன்மை கொண்டது.

    * எஸ்.பி.எப். என்றெல்லாம் சன் ஸ்கிரீம் பார்க்கின்றோம். வெயிலில் இருந்து சருமத்தினை பாதுகாத்து இளமையாய் வைக்கின்றது.

    * சாட்டின், பட்டு தலையணை பயன்படுத்துங்கள்.

    * சருமத்தில் தடவும் எதுவும் 60 சதவீதம் வரை உள்ளே உறிஞ்சப்படுகின்றதாம்.

    * அன்றாடம் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் வாழ்நாளில் 4½ கிலோ வரை லிப்ஸ்டிக் சாப்பிடுகின்றார்கள்.

     

    * நாள் ஒன்றுக்கு 5 இமை முடிகளாவது உதிரும்.

    * வெதுவெதுப்பான நீர் குளிப்பதற்கு ஏற்றது.

    * குளித்து முடித்தவுடன் மாஸ்ட்ரைஸ் செய்வது நல்லது.

    * நல்ல தூக்கம் அழகின் அடிப்படை.

    • சிலர் வாழ்நாளின் எல்லாப் பொழுதுகளையும் சிறப்பாகத் திட்டமிடுவதிலேயே சிந்தனைப் புலிகளாக இருப்பார்கள்.
    • வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு பொழுதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காகவே வரமாக வந்திருக்கின்றன.

    வாழ்க்கையில் 'எப்' பொழுது இனிக்கும் என்று எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கும் இனிய நண்பர்களே! வணக்கம்.

    எப்பொழுதையும் விட இப்பொழுதே இன்பப் பொழுது என்பதை எப்பொழுதும் உணர்ந்து வைத்திருப்பதே காலம் நமக்குக் கற்றுத்தருகிற பாடமாக இருக்கட்டும். கைநிறைய நாள்களையும் வாய்ப்புகளை அள்ளி வழங்கும் பொழுதுகளையும் வைத்துக்கொண்டு, 'அப்பொழுது பார்த்துக் கொள்வோம்!' 'அந்த நாளில் செய்து கொள்ளலாம்!; என்று நாளையும் பொழுதுகளையும் தள்ளிக் கொடுப்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தும் சோம்பேறிகளாகச் சிலர் இருப்பர். இவர்களால் எந்தப் பொழுதையும் இன்பப் பொழுதாகக் கழிக்க முடியாது.

    சிலர் வாழ்நாளின் எல்லாப் பொழுதுகளையும் சிறப்பாகத் திட்டமிடுவதிலேயே சிந்தனைப் புலிகளாக இருப்பார்கள். ஆனால் செயல்படுத்துவது என்று வந்துவிடும்போது செயலற்ற சோம்பேறிகளாய்த் தேங்கிப் போவார்கள். நாளை பார்த்துக் கொள்வோம்!; அடுத்தாண்டில் அவசியம் நிறைவேற்றிக் கொள்வோம்!; இப்போதைக்கு இளமையில்தானே இருக்கிறோம்!, நடுத்தர வயதில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; முதுமை வரும்போது செயல்படுத்திக் கொள்வோம்! என்று தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். மாயாத கவலைகள், தீராத சோம்பல்கள், விலகாத அச்சங்கள் ஆகியவை இப்படிச் செயல்களை ஒத்திபோட்டுக் கொண்டே போவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

    ஓர் எண்ணம் நம்மில் தோன்றும்போதே, அது அப்பொழுதே செயல்வடிவம் பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தோடேயே தோற்றம் பெற வேண்டும். திட்டமிடுதலின் முடிவு செலாற்றுதலின் தொடக்கமாக அமைந்தால் மட்டுமே வள்ளுவர் குறிப்பிடும், 'நெடுநீர்' (தள்ளிப்போடுதல்) 'மறவி' (மறதி) ' மடி' (சோம்பல்) 'துயில்' (தூக்கம்) ஆகிய நான்குவகைக் கேடுகளுக்கும் மனித ஆற்றல் ஆட்படாமல் இருக்கும். தீராத கவலைகளும், ஆறாத ஆசைகளும், குறையாத எதிர்பார்ப்புகளும் நம்மைக் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடைநில்லாப் பேருந்தாய் அலைக்கழித்து, நிகழ்காலத்தில் காலூன்றி இறங்க முடியாத அவல நிலைக்குத் தள்ளி விடுகின்றன.

    மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், நாளின் ஒவ்வொரு பொழுதும் வாழ்ந்தே கழிக்கப்படுவதற்காகவே வழங்கப் பட்டிருக்கின்றன. வாழ்தல் என்றால் செயல்படுதல்; அறத்தின் வழியிலும் அன்பின் வழியிலும் செயல்படுதல். நேர்மையான நெறியில், தனக்காகவும், தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும், தான் வாழும் சமூகத்திற்காகவும், சக உயிரினங்களுக்காகவும், ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு மகிழ்ச்சியாகச் செயல்படுதலே உண்மையான வாழ்தல். அந்தச் செயல்படுதலில் சுணக்கமில்லாமல், வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல், வாய்த்த பொழுதிலேயே முழு ஈடுபாட்டோடு ஆழ்ந்துவிடுதலே நிலைத்த இன்பம் நிலையாகத் தொடர இனிய வழி.

    'நாளை' 'நாளை' என்று நாளைக் கடத்துவதால் பல 'நாளைகள்' நம்மைக் கடந்து போகலாம். ஆனால் ஒரு 'நாளை' கூட நமக்கானதாக அமையால் போய்விடலாம்; காரணம், 'இன்று' 'இப்பொழுது' என்கிற உடன்நிகழ் தாரக மந்திரம் நமக்கு எட்டாக்கனியாய் எட்டிப்போய் விடுவதே ஆகும். நாளை என்ன நடக்குமோ என்று அஞ்சி, இன்று வாய்த்திருக்கிற பொழுதையும் அச்சத்திலேயே கழித்துவிட்டால் பிறகு திட்டமிட்ட செயலை எப்போது எட்டிப்பிடிப்பது?. நாளை வரப்போகும் துன்பத்திற்காக இன்றே வருத்தப்படத் தொடங்கிவிட்டால், இன்றைய பொழுது முழுவதும் வருத்தப் பொழுதாகவே மாறிவிடும். மேலும் இன்றே நாம் வருந்திவிட்டதால், நாளை வருகிற துன்பப் பொழுது, நமக்காக இன்பப் பொழுதாகவும் மாறாது. அதற்காக நாளை வரப்போகிற துன்பத்திற்காக எதற்காக இன்றே வருந்தத் தொடங்கி இன்றைய பொழுதையும் கண்ணீர்ப் பொழுதாகத் தத்தளிக்கச் செய்ய வேண்டும்?.

    மேல்நாட்டில் ஒரு தம்பதியினர், அவர்களுக்குத் திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தேன்நிலவுச் சுற்றுலா சென்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். செல்வது தேன்நிலவாக இருப்பதால், பிள்ளைகள் இருவரையும் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சுற்றுலா புறப்பட்டனர். பத்து நாட்கள் கப்பலிலேயே சென்று சில நாடுகளைப் பார்த்துவரத் திட்டம்.

    புறப்பட்ட ஐந்து நாட்கள் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமாகவே கழிந்தன. குடும்பம், பிள்ளைகள், வீடு எல்லாவற்றையும் மறந்து தேன்நிலவுச் சுற்றுலாவை நன்கு அனுபவித்தனர். ஆறாவது நாள் அதிகாலையில்தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

    திடீரெனத் தாக்கிய கடல்புயலால் கப்பல் உடைந்து ஒருபக்கமாக மூழ்கத் தொடங்கியது; ' உயிர்காக்கும் படகுகள் இருக்கின்ற பக்கத்திற்குச் சென்று, கப்பலிலிருந்து, படகுக்கு மாறித் தப்பித்துக்கொள்ளுங்கள்' என்று கப்பலின் கேப்டன் அறிவிப்புச் செய்தார். உயிர்காக்கும் படகு இருக்கும் திசைநோக்கி எல்லாருடனும் இந்தத் தம்பதியரும் ஓடினர். படகில் நெருக்கியடித்துக்கொண்டு எல்லாரும் ஏறிவிட்டனர். படகில் இனி ஒரே ஒருவருக்கு மட்டும் இடம் காலியாக இருந்தது. ஆனால் கப்பலில் காத்திருந்ததோ அந்தக் கணவன் மனைவி இரண்டு பேர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். எதுவும் பேசிக்கொள்ள நேரமில்லை; கணவன் மளாரென்று படகுக்குள் குதித்து அந்த காலியிடத்தில் அமர்ந்து கொண்டான்.

    படகு கிளம்பி விட்டது; மூழ்கிக்கொண்டிருந்த கப்பலின் மேலே தனித்து நின்றிருந்த மனைவி ஏதோ சத்தம்போட்டுக் கணவனைப் பார்த்துச் சொன்னாள். இந்தக் கதையை ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த இடம் வந்ததும் கதை சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வியை ஆசிரியர் கேட்டார். ' படகில் தனித்து ஏறிக்கொண்டு தன்னை விட்டுப் பிரியும் கணவனைப் பார்த்து, அந்த மனைவி கப்பலிலிருந்து சத்தம்போட்டு என்ன சொல்லியிருப்பாள்?' என்பதே கேள்வி. ஏறத்தாழ எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி பதிலைத்தான் சொன்னார்கள், " நான் உன்னை வெறுக்கிறேன்! உன்னை நம்பி தேன்நிலவுக்கு வந்தேனே! என்னை நீ ஏமாற்றிவிடாய்!" என்று மனைவி கணவனைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சொல்லியிருப்பாள் என்றனர்.

     

    சுந்தர ஆவுடையப்பன்

    அந்த வகுப்பறையில் ஒரே ஒரு மாணவன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான். 'நீ மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறாய்?. அந்தக் கணவனைப் பார்த்து, அந்த மனைவி என்ன சொல்லியிருப்பாள்?' ஆசிரியர் அவனிடம் கேட்டார். அந்த மாணவன் அமைதியாக எழுந்து சொன்னான், "நமது குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று கூறியிருப்பார்" என்று. ஆசிரியருக்கு ஆச்சரியம். பதில் வித்தியாசமாக இருக்கிறதே! என்பதற்காக அல்ல; உண்மையான பதிலும் அதுவாகவே இருக்கிறது என்பதனால் ஆச்சரியம்.

    "இதற்குமுன் இந்தக் கதையை வேறு எங்காவது கேட்டிருக்கிறாயா? அல்லது படித்திருக்கிறாயா?" ஆசிரியர் கேட்டார். 'இல்லை! நேரில் உணர்ந்திருக்கிறேன்; கடந்த ஆண்டு எனது தாயார் மருத்துவமனையில், மரணத்தறுவாயில் இருந்தபோது, எனது தந்தையிடம் கடைசியாகக் கூறிய வார்த்தை இதுதான்,"நமது குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!"- கண்ணீர் மல்கச் சொல்லி முடித்தான் அந்த மாணவன்.

    கப்பல்தாயின் கூற்றும், மாணவனின் தாயின் கூற்றும் ஏறத்தாழ ஒரேவிதமான சூழலை எப்படி ஏற்றுக்கொண்டு எதிர்கொள்வது என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. கடந்த காலம் குறித்த கவலையில்லை; எதிர்காலம் குறித்த அச்சமுமில்லை; காய்ச்சல் தலைவலிபோல மரணமும் ஒரு தற்காலிக நிகழ்வே! என்பதை உணர்ந்துகொண்டால், எல்லாப் பிறவிகளிலும் எத்தனைவிதமான துன்பம் வந்தாலும் அவற்றைத் தூசாக மதிக்கும் மனோபாவம் நமக்கு மனோவலிமையைத் தந்துவிடும்.

    நேரம் வாய்க்கும்போது, வாய்ப்பு கனிந்து வரும்போது, செலவழிக்காமல் சேமித்துவைத்தால், பிறகு பயன்படுமே! சொத்தோ, செல்வமோ நன்றாகச் சேர்ந்த பிறகு தருமம் செய்வதுபற்றி யோசிக்கலாமே! என்று காலம் தாழ்த்தக்கூடாது. "அன்றறிவாம் என்னாது அறம் செய்க!" என்பதே வள்ளுவக்கட்டளை. தருமம் செய்வது மட்டுமல்ல, அடுத்தவர் ஓர் உதவி என்று கேட்டு வந்தால், அவருக்கு உதவக்கூடிய வாய்ப்பும் வசதியும் நமக்கு அப்போது வாய்த்திருந்தால், மறுசிந்தனை இல்லாமல் உடனே உதவிட வேண்டும். பிறகு ஏதுமற்ற சூழலில் மிகவும் வேண்டியவருக்குக்கூட உதவ முடியவில்லையே என்று வருந்திட நேரிடும்.

    முக்காலமும் உணர்ந்தவர்களை ஞானிகள் என்று முன்னோர்கள் கூறுவர். நாமெல்லாம் நமது சாதாரணக் கண்களால் நமக்கு எதிரே நடக்கக்கூடிய நிகழ்காலத்தை மட்டுமே பார்க்கக் கூடியவர்கள். ஆனால் ஞானியரோ தங்களது ஞானக் கண்களால் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் துல்லியமாகக் கணிக்க வல்லவர்கள் என்பர். ஆனால் உண்மையில் காலம் அறிந்து, காலம் உணர்ந்து, வாய்த்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் செயல்படக்கூடிய அனைவருமே திரிகால ஞானியர்தாம்.

    எப்போதோ நடக்கும்! என்று திட்டமிட்டிருக்கிற ஒன்றிற்காக நிகழ்கால இன்பதுன்பம் அனைத்தையும் இழந்து பித்துப்பிடித்ததுபோல வாழ்கிற வாழ்க்கை நரக வாழ்க்கையே தவிர வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால் அந்தத் திட்டமிடுதலை நோக்கிய நகர்வாக ஒவ்வொரு நிகழ்நாளின் நகர்வையும் சுவையுள்ளதாக மாற்றிக்கொண்டால் அதுவும் நிகழில் வாழும் சுகமான நகர்வாக இருக்கும்.

    ஒவ்வொரு நாளிலும் நாம், நேற்று என்ன நடந்தது? என்கிற ஆராய்ச்சியில் பாதி நாளையும், நாளை என்ன நடக்குமோ? என்கிற அச்சத்தில் மீதி நாளையும் கடந்து விடுகிறோம். உண்லையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளையும் நாம் உணர்வுபூர்வமாக அனுபவிக்கவே இல்லை என்றுதான் பொருள். ஆம்! நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழ்வதில் அக்கறையோடு கவனம் செலுத்துவது, நொடிக்கு நொடி நாம் ஈடுபடும் செயல்களில் அக்கறை காட்டுவது, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறங்கும் உறக்கம், விழித்திருக்கும் விழிப்பு. என அனைத்திலும் விழிப்புணர்வோடு செயல்படுவது ஆகிய இவையே நாம் நிகழில் வாழ்வதற்கான மகிழ்ச்சி அடையாளங்கள்.

    வாழ்ந்துகொண்டிருக்கிற இந்தப் பொழுதே இன்பப் பொழுது என்று நம்பிவாழத் தொடங்கிவிட்டால் வாழ்வின் சோகத் தருணங்கள்கூட சுகமான சுமைகளின் தருணங்களாக மாறிப்போகும் மாய வித்தை நிகழும். நமது கற்பனைகளும் கனவுகளும் நமது வாழ்க்கையை அலங்காரப்படுத்தும் தோரணங்கள் ஆகட்டும்; அவை நம்மை எந்த நிலையிலும் அச்சம், கவலை, பரபரப்பு என்னும் துன்பக்குழிகளுக்குள் தள்ளிவிடாமல் பார்த்துக் கொள்வோம். வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு பொழுதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காகவே வரமாக வந்திருக்கின்றன. இந்தப்பொழுதே இன்பப்பொழுது என நம்பி அனுகத் தொடங்கினால் துன்பப் பொழுதும் தேன்பொழுதே!

    தொடர்புக்கு 9443190098

    • வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காப்பி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
    • சூரியன் தோன்றுவதை முதல் ஒரு நிமிடத்திற்குப் பார்க்கும்போது நம் மூளையில் உள்ள பீனியல் சுரப்பி தூண்டப்படுகிறது.

    காலைப் பொழுதில் நேரமாக எழுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது நல்ல பழக்க வழக்கமாகும். இது இயற்கையாகவே அதிக விழிப்புடனும், ஆற்றலுடனும் இருக்க வைப்பதுடன் உற்பத்தி திறனுடன் இருக்க வைக்கிறது. மேலும் உற்சாகத்துடன் அதிகாலையில் எழுந்திருப்பது புத்துணர்ச்சியைத் தருவதுடன், அன்றைய பணிகளைச் சமாளிக்க எளிதாக அமைகிறது.

    தினசரி வாழ்க்கையில் கவனச் சிதறல்கள் ஏதும் இல்லாமல் பணிகளில் கவனம் செலுத்துவதற்கு அமைதியான மற்றும் இடைவிடாத நேரம் வழங்குகிறது. அதிகாலையில் எழுந்திருப்பதன் மூலம் முக்கிய திட்டங்களைச் சமாளிக்கவும், அந்த நாளுக்கான இலக்குகளை அமைக்கவும் முடியும். மேலும், நாள் முழுவதும் தேவையான உற்பத்தி வேகத்தை அதிகரிக்கலாம். இது அதிக நேரம் சுறுசுறுப்பாகவும், நேர மேலாண்மைத் திறன்களைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

    காலையில் எழுந்தவுடன் உள்ள முதல் மூன்று நிமிடங்களே நம்முடைய அன்றைய 24 மணிநேர மனநிலையில் 80 விழுக்காட்டை உறுதி செய்கிறது, என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? சற்றே சிந்தித்துப் பார்த்தால் இது உண்மையென்று புரியும். மிகவும் பதற்றத்துடன் எழுந்தோம் என்றால், அன்று முழுவதும் மனம் படபடப்பாய் உள்ளது போன்றே இருக்கும்.

     

    பெரும்பாலானோர் இரவில் சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவழித்துவிட்டு, காலம் தாழ்த்தி அலைபேசியில் இத்தனை மணிக்கு எழவேண்டும் என்று நேரத்தைப் பதிவுசெய்துவிட்டு, படுக்கைக்குச் செல்வார்கள். அதிக நேரம் வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே இருந்ததால், படுத்தவுடன் உறக்கம் வருவதில்லை.

    உருண்டு புரண்டு எப்படியோ தூங்கிக் காலையில் தாமதமாக எழுந்து மிகவும் பதற்றத்துடன் வீட்டிலுள்ள அனைவரையும், ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு, வீட்டை விட்டுக் கிளம்புவார்கள். இதையே வழக்கமாகவும் வைத்திருப்பார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் எப்போதுமே சிந்திப்பதில்லை. இப்படிச் செய்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் காலை வேலையை எப்படித் தொடங்கலாம் என்பதற்கு இப்பகுதி உங்களுக்கு வழிகாட்டும்.

    அதிகாலை விரைவிலே எழுந்து அமைதியாக வேலையைத் தொடங்கும்போது, அன்று முழுவதுமே நிறைய நேரம் இருப்பது போன்று, மனம் அமைதியாக இருக்கும். எனவே வாழ்க்கை நலமாய் இருக்க, காலைப் பொழுதை எப்படி நாம் தொடங்குகிறோம் என்பது நம் நலனை உறுதிசெய்கிறது என்றே கூறலாம். எனவே காலையில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை இங்கே பார்ப்போம்.

     

    காலையில் எழுந்து பல் துலக்குவதற்கு முன், ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் இப்பகுதியில் கீழே பார்க்கலாம். (குறிப்பு: சிறுநீரகம் மற்றும் இதயம் செயலிழப்பு உள்ளவர்கள் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது).

    வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காப்பி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    நாம் உயிர் வாழ்வதற்குக் காரணமான ஐம்பூதங்களின் பகுதியான இயற்கைக்கு நன்றி கூறுவதை, வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    இளங்காலைச் சூரியன் எழுவதைப் பார்ப்பது, வானின் அழகைக் கண்டு இன்புறுவது இவை நம் மனத்திற்குப் புத்துணர்ச்சியையும், அமைதியையும் நல்கும். சூரியனின் வெப்பத்தால்தான் இவ்வுலக உயிர்கள் அனைத்தும் உயிர்வாழ்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    நாளும் கண்ணாடி பார்த்து, ஒரு சிறிய புன்னகை பூத்து, இந்த நாளை நான் மனஅமைதியுடனும், மனமகிழ்ச்சியுடனும் எதிர்கொள்கிறேன் என்று உங்களுக்குள் நீங்களே கூறிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களுக்குள் புத்துணர்ச்சி ஏற்படுவதை உணர்வீர்கள்.

     

    நாளும் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். எண்ணங்களே நம் வாழ்க்கையை உறுதி செய்கின்றன என்பதால், நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளக் காலைப் பொழுதைப் பயன்படுத்த வேண்டும். நேர்மறையான சொற்களோடுதான் பேசுவேன் என்று மனத்திற்குள் கூறிக்கொள்ள வேண்டும்.

    இப்படிக் காலை எழுந்தது முதல் மூன்று நிமிடங்களைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டோமேயானால், அன்றைய நாளை மகிழ்ச்சியுடன் தொடங்கலாம்.

    காலையில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?

    "நீர்இன்றி அமையாது உலகு" ஆம்! நம் உடல் 80 விழுக்காடு நீரினால் ஆனது. நாம், நம் வீட்டிலுள்ள தூய்மையற்ற பகுதியைத் தண்ணீர் ஊற்றி எப்படிக் கழுவித் தூய்மை செய்கிறோமோ, அதேபோல் நம் உடலில் உள்ள கழிவுகளை நீர் தான் அகற்றுகிறது. நலமாய் இருக்கும் ஒருவர், ஒரு நாளைக்கு 3 லிட்டருக்குமேல் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள். நம் பண்பாட்டுச் சிதைவினால், காலையில் எழுந்தவுடன் காப்பி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. இதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் விதை. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கி எழும்போது நம் உடலில் தேங்கி இருக்கும் பல கழிவுகள் அகற்றப்படுகின்றன.

    இதற்கு உறுதுணையாகக் காலை எழுந்தவுடன் நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீர் செயல்படுகிறது. முதல் நாள் இரவே பற்களைத் துலக்கிவிட்டுப் படுக்க வேண்டும். அப்போதுதான் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வாய்ப்பாக இருக்கும். காலையில் எழுந்ததும் என் தந்தை ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பார். அதன் மருத்துவப் பயனை மருத்துவரான பின்தான் நான் உணர்ந்தேன். அதனை யாவரும் தெரிந்து கொள்வது நல்லது என்பதால்தான் இப்பகுதி உருவானது.

     

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

    இந்தக் கேள்வி அனைவரின் மனத்திலும் இருக்கும், 1 முதல் 1.5 லிட்டர் வரை குடிக்க வேண்டும், அதுவும் பல் துலக்குவதற்கு முன்பே குடித்துவிட வேண்டும். இப்படிச் செய்வதால், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றின் உள்படலம் புத்துணர்ச்சி பெறுகிறது. ரத்தம் தூய்மையாகிறது. இதனால் குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தண்ணீர் அருந்திய பின் அடுத்த ஒரு மணிநேரத்திற்கு, வேறேதும் உட்கொள்ளக் கூடாது. வியர்வை வெளியாகாத சிலநேரங்களில் நான்கு முதல் ஆறு முறை சிறுநீர் கழிக்க வேண்டி வரும். நம் உடல் தூய்மையாகிறது என்ற மனநிறைவுடன் இதைச் செய்யுங்கள். உடல் எடையற்றது போன்ற ஓர் உணர்வு எழும், இது உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியைத் தரும். எனவே காலையில் எழுந்து தேநீர் அருந்தி நோயை விலைக்கு வாங்காமல், தண்ணீரைப் பருகி வாழ்வியல் முறை மாற்றங்களினால் வரும் நோய்களில் இருந்து விலகி இருக்கலாமே. சூரியன் தோன்றுவதை முதல் ஒரு நிமிடத்திற்குப் பார்க்கும்போது நம் மூளையில் உள்ள பீனியல் சுரப்பி தூண்டப்படுகிறது. மனிதனின் மூன்றாவது கண் என்று கூறப்படும் இந்தச் சுரப்பி காலைபொழுதில் தூண்டப்படுவது நம் நாளமில்லா சுரப்பிகளின் நலனுக்கு மிகவும் தேவையான ஒன்று.

    காலையில் எழுந்து கண்ணாடி பார்த்து நமக்கு நாமே பேசிப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்போது, நம்முள் இருக்கும் தன்னம்பிக்கை மேலும் மேன்மையுறும். வாழ்வின் வெற்றிப் படிகளில் நம்மை இட்டுச் செல்வதற்கு, இப்பழக்கம் துணை நிற்கும். வாழ்க்கையின் வெற்றி என்பது, நாம் செய்யும் இதுபோன்ற சிறிய செயல்களில்தான் உள்ளது. சிறிய செயல்களைச் சரிவரச் செய்யும்போது, வாழ்க்கையில் பெரிய செயல்களினால் கிடைக்கும் வெற்றி தானாகவே நம்மை வந்து சேரும். எனவே காலைப்பொழுதை இனிதே தொடங்கி வாழ்க்கையை இன்புறச்செய்வோம்.

    • தினமும் புதிது புதிதாக மாடும் கன்றுக்குட்டியும் வந்து கொண்டே இருந்தன.
    • வீட்டை விற்று வந்த பத்தாயிரம் ரூபாயை உண்டியலில் போட்டார்.

    நாரதர் தனது பக்தருக்கு உதவுமாறு இந்திரனிடம் வேண்டினார்.

    இந்திரனும், "ஒரு பசுமாட்டையும் கன்றுக் குட்டியையும் வைத்துதான் அவன் பிழைப்பு நடத்தியாக வேண்டும். உமக்காகக் கூட உமது பக்தனுக்கு அவனுடைய விதியை மீறி எதனையும் செய்து கொடுக்க முடியாது!" என்று கூறிவிட்டார்.

    இந்திரனை அதற்கு மேலும் வற்புறுத்தாமல் நாரதரும் அமைதியாகி விட்டார்.

    அவர் தனது பக்தனிடம் வந்து, "உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?" என்று கேட்டார்.

    "நாள் ஒன்றுக்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும். அதில் மாட்டை பராமரிப்பதில் முந்நூறு ரூபாய் செலவாகிவிடும். மீதமுள்ள இருநூறு ரூபாயைக் கொண்டுதான் வீட்டுச் செலவுகள் அத்தனையையும் பார்க்க வேண்டும்" என்று அந்த பக்தர் கூறினார்.

    நாரதர் கேட்டார்: "இந்த மாட்டை விற்றால் எவ்வளவு கிடைக்கும்?"

    "மிகச் சுலபமாக பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும்."

    "ஐநூறு பெரிதா, பத்தாயிரம் பெரிதா? மாட்டை ஓட்டிக்கொண்டு வா! பத்தாயிரத்துக்கு விற்று விடலாம்!" எனக் கூறியவாறே நாரதர் புறப்பட்டார்.

    வேறு வழி தெரியாத பக்தரும் மாட்டை ஓட்டிச் சென்றார்.

    மாட்டை விற்றதில் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது.

    "ஐநூறு ரூபாய் கிடைத்தால் சிக்கனமாக தான் செலவழித்தாக வேண்டும். இப்போது உனக்கு பத்தாயிரம் கிடைத்துள்ளது. உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடு! எல்லோருக்கும் தாராளமாக விருந்து வைக்கலாம்!" என்று நாரதர் கூறினார்.

    தடபுடலாக விருந்து நடைபெற்றது. ரூபாய் பத்தாயிரமும் காலி.

    நாளைய செலவை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையில் அந்த பக்தருக்கு இரவுத் தூக்கம் வரவில்லை.

    அதிகாலையில் எழுந்து பார்த்தால், மாட்டுத் தொழுவத்தில் புதியதாக ஒரு மாடும் கன்றுக்குட்டியும் நின்று கொண்டிருந்தன.

    பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை.

    "ஏன் யோசித்துக் கொண்டிருக்கிறாய் ? இன்றைய செலவுக்கு இவை போதும். மாட்டையும் கன்றுக்குட்டியையும் என் பின்னால் ஓட்டிக் கொண்டு வா!" என்று நாரதர் கூறவும் இருவரும் அந்த மாட்டை விற்று பணத்தைக் கொண்டு வந்தார்கள்.

    அன்றும் தடபுடலான விருந்து நடைபெற்றது.

    இதே கதை ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்றது.

    தினமும் புதிது புதிதாக மாடும் கன்றுக்குட்டியும் வந்து கொண்டே இருந்தன. இவர்களும் அவற்றை விற்று விட்டு தடபுடலான விருந்துகளையும் நடத்தி வந்தனர்.

    எட்டாவது நாள் நாரதரைத் தேடி இந்திரன் ஓடிவந்து விட்டார்.

    "உமது பக்தனுடைய தலைவிதிப்படி அவன் ஒரு மாட்டையும் கன்றுக்குட்டியையும் வைத்து பிழைப்பை நடத்தியாக வேண்டியதுள்ளது.

    ஒவ்வொரு நாளும் அவற்றை நீங்கள் இருவரும் விற்று விடுவதால், நான் தினமும் புதிது புதிதாக மாட்டையும் கன்றுக்குட்டியையும் கொண்டு வந்து கட்டவேண்டியதுள்ளது. உமது பக்தனுக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். என்னை விட்டு விடுங்கள்!" என்று நாரதரிடம் மன்றாடினார்.

    இதுதான் விதியை வெல்லக் கூடிய அணுகு முறையா?

    இது போல் இன்னும் ஒரு சம்பவம்.

    இதுவும் அந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதை.

    அவர் ஒரு பெரிய வியாபாரி. அவருக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தன.

    வியாபாரம் சம்பந்தமாக அவர் ஒரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்து.

    துரதிர்ஷ்டவசமாக அந்தக் கப்பல் ஒரு பெரிய புயலில் மாட்டிக் கொண்டது.

    கப்பலைக் காப்பாற்ற, கப்பல் தலைவர் கடுமையாகப் போராடினார். அவரால் கட்டுப்படுத்த முடியாமல் கப்பல் தடுமாறியது.

    கடைசியில் அவர் தனது இயலாமையை அறிவித்தார்: "கப்பலைக் காப்பாற்ற என்னால் முடிந்த வரைக்கும் போராடி விட்டேன். என்னால் வெற்றி பெற இயலவில்லை. எந்த நிமிடத்திலும் கப்பல் கவிழ்ந்து விடலாம். நீங்கள் அனைவரும் உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்!"

    அந்த வியாபாரியும் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி பிரார்த்தனை செய்தார்.

    "இறைவா! என்னை இந்த புயலில் இருந்து காப்பாற்றி விடு. நகரத்திலுள்ள வீடுகளில் ஒன்றை விற்று பணத்தை உண்டியலில் போட்டு விடுகிறேன்" என்று அவர் கோரிக்கை வைத்தார்.

    அவர் மரணமடைந்தால் எந்தவொரு சொத்துமே அவருக்குக் கிடைக்காமல் போய்விடும். பிரார்த்தனையின் படி அவர் காப்பாற்றப்பட்டால், ஒரேயொரு வீட்டை மட்டுமேதான் இழக்க வேண்டியது வரும்.

    அதனால் அவர் அப்படி பிரார்த்தனை செய்தார்.

    ஆனால் என்ன ஆச்சரியம், அவர் பிரார்த்தனை செய்த ஐந்து நிமிடங்களில், கொடூரமாகத் தாக்கிய அந்தப் புயல், சுத்தமாக நின்று போய் விட்டது.

    இப்போது அந்த வியாபாரிக்கு ஒரே வருத்தம்.

    "அடடா! அவசரப்பட்டு விட்டோமே! பிரார்த்தனை செய்யாமலிருந்தால் கூட இந்தப் புயல் தானாகவே நின்றிருந்திருக்கும். அவசரப்பட்டு ஒரு கோடி ரூபாய் வீட்டை இழந்து விட்டோமே!" - இப்படி சிந்தித்த அவர் நிம்மதி இல்லாமல் தவித்தார்.

    அவரிடமிருந்த ஒவ்வொரு வீடும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறும்.

    அவர் கப்பலில் இருந்து கரையிறங்கும் முன்பு ஒரு வழியாக சுதாரித்துக் கொண்டார்.

    அவர் கரைக்கு வந்ததும் அவருடைய ஒரு வீட்டை மட்டும் விலை பேச ஆரம்பித்தார்.

    அந்த வீட்டை வாங்குபவர்கள் மீது மட்டும் ஒரு நிபந்தனையை விதித்தார்.

    "இந்த வீட்டை வாங்குபவர்கள் இந்த வீட்டோடு சேர்த்து, நான் வளர்த்து வரும் நாய்க்குட்டியையும் வாங்க வேண்டும்...

    "நாய்க்குட்டியின் விலை ஒரு கோடி ரூபாய். ஆனால் வீட்டின் விலை வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டும் தான்!"

    ஒருவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்து நாய்க்குட்டியையும், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வீட்டையும் வாங்கிக் கொண்டார்.

    இப்போது அந்த வியாபாரி, உண்டியலில் எவ்வளவு பணம் போடவேண்டும்?

    வீட்டை விற்று வந்த பத்தாயிரம் ரூபாயை உண்டியலில் போட்டார். நாய்க்குட்டியை விற்று வந்த ஒரு கோடி ரூபாயை தனக்கு எடுத்துக் கொண்டார்.

    விதியை எப்படி வென்றுவிட்டார் பார்த்தீர்களா?

    இப்படிதான் விதியை வெல்ல வேண்டுமா?

    ஓர் உதாரணம்.

    நீங்கள் ஒரு நீதிபதி. கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நான் உங்கள் முன்னால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறேன்.

    நான் பொருளாதார வசதி மிகுந்தவன்; அரசியல் செல்வாக்கு நிறைந்தவன்.

    நான் உங்களிடம் பேரம் பேசுகிறேன்.

    "சாட்சியங்கள் யாவும் நம்பும்படியாகவே உள்ளன. தீர்ப்பு உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் நினைத்தால் தண்டிக்கவும் செய்யலாம்; விடுதலையும் செய்யலாம்...

    "என்னை நீங்கள் விடுதலை செய்வீர்களேயானால், எனது சொத்துகளில் பாதியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொடுத்து விடுகிறேன். உங்களுக்கு உயர் பதவியையும் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்." - இப்படி நான் கூறவும்,

    நீங்களும் அதனை ஏற்றுக்கொண்டு, "நான் உன்னை விடுதலை செய்து விடுகிறேன். நீயும் நீ வாக்கு கொடுத்தபடி நடந்துகொள்!" என்று கூறுவதாக வைத்துக்கொள்வோம்.

    இந்த அணுகுமுறை சரியானதாக இருக்க முடியுமா? - நியாயமானதாக இருக்க முடியுமா?

    பாவ கர்மாவை செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், பரிகார பூஜைகள் எல்லாம் செய்வதற்கும், நீதிபதியிடம் பேரம் பேசுவதற்கும் வித்தியாசம் ஏதாவது உண்டா?

    கர்ம வினை என்றால் என்ன?

    பாவ கர்மா, புண்ணிய கர்மா என்றால் என்ன?

    புண்ணிய கர்மாக்கள் செய்தால் வெகுமதிகள் கிடைக்குமா?

    பாவ கர்மாக்கள் செய்தால் தண்டனை கிடைக்குமா?

    நமக்கு நாமே செய்து கொள்ளும் செயல்கள் ஒரு போதும் கர்மாவாக கணக்கிடப்படுவதில்லை. அடுத்தவர்களுக்கு நல்லது செய்கிறோமா அல்லது கேடு விளைவிக்கிறோமா என்பதைப் பொருத்துதான் நற்கர்மா அல்லது மோசமான கர்மா ஏற்படுகிறது.

    நற்செயல் என்பது எது?

    அதற்கு மாறான செயல் என்பது எது?

    இதற்கு ஏசுநாதர் சுலபமான ஒரு சூத்திரத்தைக் கூறி விட்டார்.

    அதென்ன சூத்திரம்?

    பிறர் உனக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அவற்றை நீ அவர்களுக்கு செய்.

    அது போல் என்னவெல்லாம் பிறர் உனக்கு செய்யக்கூடாது என்று விரும்புகின்றாயோ அவற்றை நீ அவர்களுக்குச் செய்யாதே.

    நல்லது எது தவறானது எது என்பது நம் அனைவருக்கும் நம்மை அறியாமலேயே தெரிந்து விடும்.

    நாம் செய்யும் தவறான செயல்கள் அனைத்தும் நமது கணக்கில் பாவ கர்மாவாக இணைந்து விடுகின்றன.

    அது போல் நாம் செய்யும் நற்செயல்கள் யாவும் நமது கணக்கில் புண்ணிய கர்மாக்களாக இணைந்து விடுகின்றன.

    பாவ கணக்குக்கு தண்டனை கொடுக்கப்படுமா?

    பாவத்தின் காரணமாக கஷ்டங்கள் நிச்சயம் ஏற்படும். ஆனால் அவை எவையும் தண்டனையாக இருக்காது. ஏன் அப்படி?

    நீங்கள் ஒரு பத்திரிகைக்காக சிறையில் உள்ள கைதிகளை பேட்டி எடுப்பதாக வைத்துக் கொள்வோம்.

    "உன்னை ஏன் ஜெயிலில் அடைத்தனர்?"

    என்று ஒரு கைதியிடம் கேட்கிறோம்.

     

    ஸ்ரீ பகவத்

    "ஒரு பெண்ணிடம் நகையைத் திருடும்போது மாட்டிக் கொண்டேன். எனக்கு தண்டனை கொடுத்து சிறையில் போட்டு விட்டார்கள்" என்று அவனும் கூறுகிறான்.

    நாமும் ஒரு பேச்சுக்காக, "நகையைத் திருடியதற்காக உன்னை ஏன் ஜெயிலில் போடவேண்டும்?" என்று கேட்கிறோம்.

    அதற்கு அவனும், "நகையைத் திருடியதற்காக விருந்தா வைப்பார்கள்? ஜெயிலில் தான் போடுவார்கள்" என்று கூறுகிறான்.

    "அப்படி ஜெயிலில் போடவேண்டிய நோக்கம் என்ன?" என்று அவனிடமே கேட்கிறோம்.

    "இத்தகைய குற்றங்களை நான் திரும்பவும் செய்யக்கூடாது என்பதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்துள்ளார்கள்" என்று அவனும் கூறி விடுவான்.

    இவ்வாறுதான் நமது பாவகர்மாக்களுக்கு தண்டனையாக கஷ்டங்கள் நமக்குக் கொடுக்கப்படுகின்றனவா?

    என்ன தவறு செய்ததற்காக இந்த தண்டனை - கஷ்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது எவருக்காவது தெரியுமா?

    அது எவருக்குமே தெரியாது.

    முற்பிறவியில் செய்த தவறு என்ன?

    இந்த பிறவியில் நாம் என்ன தவறை மீண்டும் செய்யக்கூடாது? - இந்த விபரங்கள் நம் எவருக்குமே தெரியாது.

    ஆகவே கர்மாவின் காரணமாக நாம் அனுபவிக்கக் கூடிய எந்த ஒரு கஷ்டமும், தண்டனையாக நமக்கு கொடுக்கப்படவில்லை.

    கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அந்த கஷ்டங்களுக்குக் காரணம் நமது கர்மாவாக இருந்த போதிலும், அவை தண்டனையாக வழங்கப்படாமல், நமக்கு வழிகாட்டும் அம்சமாகவே நமக்கு வழங்கப்படுகின்றன.

    இன்பங்கள் அனைத்தும் நம்மை முடக்கிப் போட்டு விடும்.

    துன்பங்கள் மட்டுமே உந்துசக்தியாக இருந்து நமக்கு வழியைக் காட்டும்.

    நம்மை வழிநடத்தும் இறை அம்சமே நமக்கு இத்தகைய துன்பங்களைக் கொடுத்து நம்மை வழிநடத்துகின்றது.

    நம்முடைய கர்மாவை மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு உண்டா?

    அதனையும் பார்த்திடுவோம்...

    தொடர்புக்கு,

    வாட்ஸப் - 8608680532

    • சரியான அரிசியில் சரியான முறையில் நொதிக்க வைக்கப்பட்ட நீராகாரம் உடலுக்கு அளப்பரிய ஆற்றலை வழங்க வல்லது.
    • செரிமானத்திற்கு உதவிகரமான நுண்ணுயிரிகள் நீராகாரத்தில் மிகுதியாக உள்ளன.

    இளவேனிற் காலம் இது. காலை வெயிலே உரத்து அடிக்கத் தொடங்கி விட்டது. நமது வாழ்க்கைத் தேவைக்கு உரிய அன்றாடப் பணிகளைக் கூட துவங்குவதற்குள் ஆயாசமாகி விடுகிறது. அடிக்கிற வெயிலையும், சாலை நெரிசலையும் முண்டி மோதிக் கடந்து, வேலையில் கை வைப்பதற்குள் "இப்பவே கண்ணக் கட்டுதே" என்றாகி விடுகிறது. காரணம் என்ன?

    வெளியேறும் வியர்வையால் உடலின் நீர் வற்றி விடுகிறது. உண்ட உணவும் சூடான இட்லி, தோசை, பூரி அல்லது காலையில் வடித்த சுடுசோறு. ஆக உள்ளுக்குள் போன உணவும் உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. போக புறச்சூழலும் வெப்பதைக் கொடுக்கிறது. எனவே சோர்வு தட்டுகிறது. சோர்வை நீக்க என்ன செய்யலாம். "சூடா ஒரு டீ போடுப்பா" அதானே நாமெல்லோரும் பரவலாகச் செய்வது.

     

    டீயைக் குடித்தால் என்ன நடக்கும்? காய்ச்சிய பால், காய்ச்சிய நீரில் வடித்த தேநீர், சர்க்கரை ஆகிய அனைத்தும் நம் ரத்தத்தில் ஏறி ரத்தவோட்டத்தை விரைவுபடுத்தும். சுறுசுறுப்பு அடைவதென்னவோ உண்மை தான். ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை நம்மில் பலரும் உணர்வது இல்லை. தற்காலிக சுறுசுறுப்பிற்குப் பின்னர் மந்தத்தன்மை உண்டாகும்.

    நமக்கு குறிப்பாக மித வெப்பமண்டல வாசிகளாகிய நமக்கு வேண்டியது உடலில் மேலும் மேலும் வெப்பமூட்டும் உணவல்ல. மாறாக ஆற்றல் தரக்கூடிய குளிர்ச்சியான உணவு. இதனை முன்னோர்கள் அறிவுப்பூர்வமாக அல்லாது உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள். உணர்ந்ததையே காலங்காலமாகப் பின்பற்றி வந்தார்கள். ஆம் அந்த வகையில் நமது உடலின் ஆற்றலுக்கு ஆதாரமாக அமைந்தவற்றில் மிகவும் முதன்மையான உணவு நீராகாரம்.

    நீர் எப்படி ஆகாரமாகும் என்ற கேள்வி நம்மில் சிலருக்கு எழலாம். அது வெறும் நீர் மட்டுமேயல்ல. சோற்றின் சாரத்தைச் சுமந்த நீர். அதனால் தான் நீர் கூட்டல் ஆகாரம், நீராகாரம் என்றனர்.

    புதிய நுகர்வு உற்பத்தி சார்ந்த வாழ்க்கை முறையில் இன்றைய இளம் தலைமுறையினர் நீராகாரத்தை அறிந்திருப்பது அரிதுதான். அவர்களுக்காகச் சிறு விளக்கம். முன்னாள் மாலை (இரவல்ல) சோற்றை வடித்து எடுத்த நீரினை ஆறிய சோற்றில் ஊற்றி வைத்தால் காலையில் சோறும் வடி நீரும் இணைந்து வினைபுரிந்து நொதித்து வேறுவொரு தன்மையை அடைகிறது. அது நீர் வடிக்கப்பட்ட சோற்றின் சத்துக்கூறுகளையும் கொண்டிருக்காது, சோற்றில் இருந்து வடிக்கப்பட்ட வடிநீரின் தன்மையையும் கொண்டிருக்காது. இரண்டிற்கும் மாறாக ஒன்றுக்கொன்று இயைந்து நுண்ணுயிரிகள் (நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்) பல்கிப் பெருகி புதிய ஆற்றலை, அதாவது செரிமான மண்டலம் முழுமைக்கும் உடலில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொள்ளாமல் அதேநேரத்தில் வேறெந்த உணவும் அளிக்காத, அளிக்க முடியாத ஊக்கத்தைச் சட்டென்று அளிக்கும். அதுவே நீராகாரத்தின் சிறப்பு.

    அதாவது சோறுண்ணும்போது அரிசியின் அடிப்படைச் சுவையான இனிப்பும், துவர்ப்பும் கலந்த எரிமச் சத்தாகிய கார்போஹைடிரேட்டினை அளிக்கிறது. அதேநேரத்தில் அரிசியின் மாவுப்பண்பு இரவு முழுதும் ஊறிப் புளித்திருப்பதால், தசைநார்களுக்கு ஊட்டம் அளிக்கும் புரதச் சத்தையும் அளிக்கிறது. அரிசியின் மேலோடு ஊறலில் பிரிந்து நார்ச்சத்தும் (மென்காரம்) இழையோடி உள்ளது. ஆக இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய ஆதாரச் சத்துக்கள் உடனடியாக ரத்தத்தில் ஏற்றப்படுகிறது.

    நீராகாரம் நீர்த்த தன்மையில் இருப்பதால் வழக்கமான செரிமான முறைப்படி இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் எனப் பல்வேறு கட்டங்களாக சத்துக்கள் பிரிக்கப்பட்டு ரத்தத்தில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. மாறாக முதல் மிடறு நீராகாரத்தை வாயில் வைத்த நிமிடத்திலேயே ரத்தத்தின் செல்கள் (உயிரணுக்கள்) மட்டுமல்லாது சத்துக்கள் தேவைப்படும் உடலின் செல்கள் அனைத்தும் வீரியமிகுந்த நீராகாரத்தின் சத்துக்களை உள்வாங்கிக் கொள்கின்றன.

    அதிலும் ஆறின சோற்றையும், சோற்றின் வடிநீரையும் மண்பாத்திரத்தில் கலந்து வைத்தால் வினையாதலின் போது அதற்குத் தேவையான காற்றினை மண்பாண்டத்தின் நுண்துளைகள் வாயிலாக ஈர்த்துக் கொள்ளும். நொதித்த நீராகாரத்தில் காற்றுக்குமிழ்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தக் குமிழ்கள் வினைபுரிதலின் போது மண் ஓட்டின் வாயிலாக நீர் ஈர்த்துக் கொண்ட காற்றின் வெளிப்பாடே ஆகும்.

    நாம் சமைப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரங்களின் கனிமச் சத்துக்கள் சமைத்த உணவில் ஊடுறுவுவது தவிர்க்க முடியாததே. அந்த வகையில் அவ்வுலோகத்தின் பண்பு உணவோடு சேர்ந்து நமது உடலில் மிகுந்து அதுவே உடலியக்கத்திற்கு மைக்ரான் அளவிலேனும் தீங்கு விளைவிக்கும். ஆனால் மண்பாண்டம் பயன்படுத்தும்போது அத்தீவிளைவுகள் ஏற்படாது.

    சரியான அரிசியில் சரியான முறையில் நொதிக்க வைக்கப்பட்ட நீராகாரம் உடலுக்கு அளப்பரிய ஆற்றலை வழங்க வல்லது. முப்பது வருடங்களுக்கு முன்னர் வரை பெரும்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு நிலத்தையும், வேளாண்மையையும் சார்ந்திருந்தனர். இன்றளவிற்கு இயந்திரப் பயன்பாடு அதிகமில்லாத அக்காலத்தில் உடலுழைப்பே முதன்மையான ஆதார ஆற்றல் ஆகும். மாட்டுக்கு நிகராக மனிதர்கள் கலப்பையை அழுத்தி நிலத்தை உழுது பயிரிட்டார்கள். காலையில் எழுந்து காபியோ டீயோ குடித்து விட்டு உழச் சென்றால் காட்டினைச் சென்றடையும் முன்னரே சோர்ந்து போயிருப்பார்கள். இன்று அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்த உடனே டீயும் பிஸ்கோத்தும் கொண்டு வந்து வைப்பது போல அன்றைக்கு யார் காட்டில் அவற்றைக் கொண்டு வந்து பரிமாறினார்கள்.

    உழவர் காலையில் எழுந்து வாய் கொப்புளித்ததும் மாட்டைப் பூட்டினால் கலயத்தின் அடியாழத்தில் நான்கைந்து கைப்பிடி பழஞ்சோறு பருக்கைகளாகக் கிடக்கும். முக்கால் கலயத்திற்கு உப்புச்சுவை கூடிய நீராகாரம் தளும்பிக் கொண்டிருக்கும். அதில் உரித்த சின்ன வெங்காயங்கள் ஐந்தாறு சங்கரா மீன் குட்டிகளைப் போல நீந்திக் கொண்டிருக்கும். துண்டினை சும்மாடாகச் சுருட்டி கலயத்தைத் தலையில் ஏற்றினால் ஒருமைலோ இரண்டு மைலோ நடந்து, கரகாட்டக்கார ராமராஜனை விட சாதுர்யமாக நளினமாக கலயத்தைக் காட்டில் கொண்டு வந்து சேர்ப்பார் உழவர்.

    வேலையில் கால் பதிக்காமல் உணவில் கை வைப்பது இயற்கை அறத்திற்கு எதிரான ஒன்று என்ற எண்ணம், அவரது மரபணுவோடு கலந்தவொன்று. எனவே ஏரைப் பூட்டி ஆறுசால்கள் ஓட்டிய பின்னர், கதிரொளி கண்களைக் கூசச்செய்யும் காலை ஒன்பது மணிசுமாருக்கு கலயத்தைத் தூக்கி வாயில் அருவி போல நீரைச் சரிப்பார். நீரின் குளுமை உடலெங்கும் பரவிய பின்னர் சோற்றுருண்டையை நையப் பிசைந்து சோறும் நீருமாக வாயில் வைத்து வெங்காயத்தைக் கடிப்பார். இப்படி ஒரு நான்கு வாய் போதும், உடலும், மனசும், உயிரும் நிறைவு கொள்ளும். அதே வேகத்தில் எழுந்து உச்சிப் பொழுது சரியத் துவங்கும் வேளையில் மீண்டும் மீதமுள்ள சோற்றையும் நீரையும் பருகி, உச்சியைத் தைக்கும்படிக்கு வெங்காயத்தைக் கடித்துண்ண மாடுகள் இளைப்பாறி இருக்கும். மீண்டும் மேழியைப் பிடித்தால் அந்திக்குச் சற்று முன் கலப்பை நுகத்தடியில் ஏறும். அதற்குள் இரண்டு மாடுகளும், ஒரு மனிதரும் சுமார் கால் ஏக்கரையாவது உழுது மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்திற்குப் புத்துயிர் கூட்டி இருப்பார்கள்.

     

    போப்பு, 96293 45938

    நிலத்தை உழுது போடுவதற்காக சக்தியைக் கொடுத்தது எது என்றால் நான்கு லிட்டர் பெட்ரோலோ, மின் சக்தியோ, அவற்றிற்கு நிகரான மின் இயந்திர விசையோ அல்ல. மாறாக ஒரு கலய நீராகாரமும் ஐந்தாறு சின்ன வெங்காயங்களுமே ஆகும். அவ்வுழவரினுடையது அடுத்த தலைமுறையினரின் கற்பனைக்கும் எட்டாத உழைப்பு ஆகும்.

    உழைப்பதற்காக ஆற்றல் இன்றைய தலைமுறைக்கு இல்லாதது மட்டுமல்ல, வழக்கமாக உண்ணும் உணவை செரிக்கும் தன்மையையும் முற்றாக இழந்து விட்டிருக்கின்றனர்.

    நாம் உண்ணும் உணவில் உடலுக்கு மிகையான கூறுகளை உள்வாங்கவும், செரிமானத்தை எளிதாக்கவும், மிகைப்புளிப்பினை (அசிடிடி) முறிக்கச் செய்யவுமான நுண்ணுயிரிகள் நமது உடலில் இயற்கையாகவே இருக்கும். குறிப்பாகத் தாயின் பிறப்புறுப்பு வழியாகக் குழந்தை வெளியேறும் பொழுது தோலில் மேற்பூச்சாக பூசப்படும். பசைத் தன்மையுடைய இப்பூச்சு உலர தோலின் வழியாகப் பாக்டீரியாக்கள் உள்ளீர்க்கப்பட்டு இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய செரிமானப் பகுதிகளில் நிலைபெற்றிருக்கும். அறுவைச் சிகிச்சையில் பிறந்த குழந்தைகளுக்கு இயல்பில் கிடைப்பது குறைவாகவே இருக்கும்.

    தவறான வறள் தன்மையுடை அல்லது அதீத ரசாயனக் கலப்பு உணவுகளை நாம் உட்கொள்ளும்போது இந்த நுண்ணுயிரிகள் அவற்றை உள்வாங்கி இறந்து விடும். பின் மலத்தின் வழியாக வெளியேறி விடும். இவ்வாறு வெளியான பாக்டீரியாக்களை உள்ளே இருக்கும் பாக்டீரியாக்கள் உடனடியாகப் பல்கிப் பெருகி ஈடுசெய்து கொள்ளும். இந்தப் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் கோடி என்கிறார்கள் உடலியளார்கள். ஆனால் தவறான உணவுப்பழக்கமே ஒருவரிடம் தொடர்ந்து இருக்குமானால் இப்பாக்டீரியாக்கள் தம்மை நிலைப்படுத்திக் கொள்வது கடினமாகி விடும்.

    இரவு தூக்கம் கெடுக்கிறவர்கள், கடும் உழைப்பிற்கு உள்ளாக்கிக் கொள்வோர், மருந்து, மதுபானம் எடுத்துக் கொள்வோர்க்கு இந்த எண்ணிக்கை குறையும். அப்பொழுது மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினை, வயிறு உப்புதல், நெஞ்செரிச்சல், உமட்டுதல் போன்ற உபாதைகள் நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கும்.

    செரிமானத்திற்கு உதவிகரமான நுண்ணுயிரிகள் நீராகாரத்தில் மிகுதியாக உள்ளன. காலையில் காபி, டீ போன்ற ஊக்க பானங்கள் அருந்துவதை விட, நீராகாரம் குடிப்பது நமது உடல்நலனுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக பித்தப்பைக் கல், சிறுநீரகக்கல் போன்றவை மிக இளம் வயதிலேயே தோன்றுகிறது. இதற்குக் காரணம் தற்கால உணவுமுறையே ஆகும். இதனைத் தவிர்க்க நீராகாரம் அருந்துதல் மிகவும் நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் சிறுகுடலில் மிகுந்திருப்பதைப் பொறுத்தே உடலின் நோய் எதிர்ப்புத் திறன் நிலைத்துள்ளது.

     

    பிரசர் குக்கரில் அவிக்கும் சோறு, நீராகாரம் தயாரிக்க ஏற்றதல்ல. சன்னமான அரைவேக்காட்டு வெள்ளை அரிசிச் சோற்றில் நீரூற்றி வைத்தால் அது ஈளை ஈளையாகவே வரும். முழுப் புழுங்கலரிசி, நல்ல பழுப்பு நிறத்திலான கொட்டை அரிசி, அரசு வழங்கும் பருமனான அரிசியை மாலை நேரத்தில் நிதானமாக வேக விட்டு வடித்து சோற்றினை ஆற விட வேண்டும். வடித்த சோற்றுடன் வடித்த நீரையும் போட்டு சிறிதளவு கல் உப்புப் போட்டுத் (காற்றுப்புக) துணியால் மூடிவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும். கையைச் சோப்புப் போடாமல் கழுவி விட்டு பழைய சோற்றினுள் கையை விட்டு நன்றாகப் பிசைந்து விட வேண்டும். கையில் உள்ள நுண்ணுயிரிகள் கலவையுடன் சேர நொதித்தல் முன்னிலும் விரைவாக நடக்கும். ஒருமணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை பிசைந்தால் கிட்டத்தட்ட கூழ் பதத்தில் இருக்கும். இப்பொழுது இந்த நீரை நிதானமாகப் பருக வேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில் வயிற்றில் தேக்கமுற்ற மலமும் சரி, வெப்ப மிகுதியால், சிறுநீரகத்தின் வடிப்பானின் திறன் குறைவால் சரிவர வெளியேறாத சிறுநீரும் சரி வேகமாகப் பிரிவதை நன்கு உணர முடியும்.

    இதற்குப் பின்னான பசி ஆழமாக, உடலுக்கு உகந்த விதத்தில் இருக்கும். அகவெப்பம் தணிந்திருக்க நீராகாரக் குளுமையால் உடல் தன்னியல்பாகவே குளிர்வுச் சூழலில் (ஏசியில்) இருப்பது போல இருக்கும். 

    • ஓலைச் சுவடிகளிலேயே நெடுங்காலமாக உறங்கிக் கொண்டிருந்த சில நூல்கள் வ.உ.சி.யால் தான் அச்சேறிக் காகிதங்களுக்கு வந்து சேர்ந்தன.
    • ஜேம்ஸ் ஆலனின் மூன்று நூல்களை முழுமையாக மொழிபெயர்த்துள்ளார்.

    மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராய் அறியப்பட்டிருக்கும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மிகச் சிறந்த தமிழ் அறிஞரும் கூட. அவர் பழந்தமிழ் நூல்கள் பலவற்றிற்கு உரை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

    திருக்குறளின் புகழ்பெற்ற உரையாசிரியர்கள் வரிசையில் வ.உ.சி.க்கும் ஒரு நிரந்தர இடம் உண்டு.

    மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் என்ற மெய்ப்பொருள் நூலுக்கு முதன்முதலாக உரை எழுதியவர் சிவஞான முனிவர். வ.உ.சி., தாமும் அதற்கு ஓர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்.

    ஏற்கெனவே சிவஞான போதத்திற்கு இருந்த உரை கடின நடையில் இருந்ததால் மக்கள் அஞ்சி அதைப் பயிலாது விட்டுவிடுவர் எனக் கருதிய வ.உ.சி., அதன் காரணமாகவே அந்நூலுக்குத் தாம் எளிய உரை எழுத முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார். பழைய உரையில் இருந்து தம் உரை எப்படி வேறு பட்டதென அவர் விளக்கும் இடம் இதோ...

    `மத வேற்றுமையைக் காண்பவர்களும் பேசுபவர்களும் யான் எனது என்னும் மதவெறி பிடித்த மக்களே என்றும், நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலைமையில் மதவேற்றுமைகளையோ சாதி வேற்றுமைகளையோ வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும் பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களே என்றும் யான் கருதுகிறேன். அதனாலும் இவ்வுரையில் யான் பல மதக் கோட்பாடுகளையும் அவற்றின் பொய்யான உயர்வு தாழ்வுகளையும் பற்றி ஒன்றும் பேசவில்லை!`

    ஜாதி மத வேறுபாடுகளைப் புறந்தள்ளிய ஒற்றுமைமிகு பாரதம் உருவாக வேண்டும் என்பதே வ.உ.சி.யின் கனவு என்பதை இந்தப் பகுதி தெளிவாக விளக்குகிறது.

    வ.உ.சி.யின் இலக்கியப் பணிகளைப் பற்றிச் சொல்லும்போது கட்டாயம் அவரது பதிப்புப் பணிகள் பற்றியும் சொல்லவேண்டும். அண்மைக்காலத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. உள்ளிட்ட பலர் தமிழ்ப் பதிப்புப் பணிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர். அத்தகைய மேலான வரிசையில் இடம்பெற வேண்டிய இன்னொரு முக்கியமான பெயர் வ.உ.சி. என்பது.

    ஓலைச் சுவடிகளிலேயே நெடுங்காலமாக உறங்கிக் கொண்டிருந்த சில நூல்கள் வ.உ.சி.யால் தான் அச்சேறிக் காகிதங்களுக்கு வந்து சேர்ந்தன. திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய அறத்துப் பாலுக்கான உரையை முதலில் பதிப்பித்தவர் வ.உ.சி. தான்.

    அருஞ்சொற்பொருள் தருதல். தேவைப்படும் இடங்களில் விளக்கம் தருதல், ஆங்காங்கே தெளிவின் பொருட்டு இலக்கணக் குறிப்பு வழங்குதல் எனப் பல வகைகளில் தம் பதிப்புப் பணியை மேன்மைப்படுத்தியிருக்கிறார் வ.உ.சி. அவர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று.

    கட்டுரைகள் மூலம் அவர் செய்த இலக்கியப் பணி அளப்பரியது. சிற்பம் செதுக்கியதுபோல் சிறந்த கட்டுரைகளை எழுத்தில் வடிப்பதென்பது ஒரு தனிச் செய்நேர்த்தி. அந்தச் செய்நேர்த்தி தமிழில் அறிஞர் வ.ரா.வுக்கு மிகச் சிறப்பாகக் கைவந்திருந்தது. அச்செய்நேர்த்தி கைவரப் பெற்றிருந்த மேலும் சிலரில் வ.உ.சி. பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வ.உ.சி. எழுதிய முதல் கட்டுரை விவேகபானு என்னும் ஆன்மிக இதழில் வெளிவந்துள்ளது. வ.உ.சி. ஆன்மிக நம்பிக்கை கொண்டவராகவே இறுதிவரை வாழ்ந்தவர். அவர் எழுதிய கட்டுரைகளில் அதிகம் இடம் பிடித்தது ஆன்மிகமே.

    அவர் எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பு `கடவுளும் பக்தியும்` என்பது. `கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், வினையும் விதியும்` போன்ற அவரது ஆன்மிகக் கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டுபவை.

    அரசியல், இலக்கியம் உள்ளிட்ட தனக்கு ஆர்வமுள்ள எல்லாத் துறைகள் குறித்தும் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார். தேசிய ஒருமைப்பாடு அவரது பல அரசியல் கட்டுரைகளில் அடிநாதமாய்க் காணப்படுகிறது. திலகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். தாம் குருவாகப் போற்றிய திலகர் வாழ்வைப் பற்றித் தாம் எழுத வேண்டியதைத் தம் கடமையாகக் கருதினார் அவர். `திலகர் என் அரசியல் குரு ஆவார். எனது 21-வது வயதில் இருந்து அரசியலைப் பற்றிய அவருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கவனித்து வந்தேன். இந்தியா எனது நாடு, அன்னியமான நாட்டை அவர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று அவை எனக்கு உணர்த்தின.`

    எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவிக்கிறார் வ.உ.சி...

    திலகரின் மறைவுக்குப் பின் அவரது நண்பர்களால் `திலகர் நினைவுகள்` என்றொரு தொகுதி கொண்டுவரப்பட்டது. அதிலும் ஒரு கட்டுரையில் தம் நினைவலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

    `பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் வாழ்க்கை வரலாறு` என்னும் தலைப்பில் இலங்கையில் இருந்து வெளிவந்த வீரகேசரி பத்திரிகையில் அவர் தொடர் எழுதினார் என்பது ஆய்வாளர் மா.ரா. அரசு தரும் செய்தி. ஆனால் அவ்வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி.

    வ.உ.சி.யின் இலக்கியப் பணிகளில் அவரது மொழிபெயர்ப்புப் பணியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்குப் பெரிய அளவில் வளம் சேர்த்தது அவரது மொழிபெயர்ப்புப் பணி. மேலை நாட்டுத் தத்துவ அறிஞர்களுள் வ.உ.சி.யின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் ஜேம்ஸ் ஆலன். ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளில் தம்மைப் பறிகொடுத்த வ.உ.சி. `ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் பலவற்றைப் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது` என்றே குறிப்பிடுகிறார்.

    ஆங்கில மொழி மூலம் தாம் பெற்ற பாக்கியத்தை மற்றவர்களின் பாக்கியமாகவும் மாற்ற எண்ணிய அவர், அந்தத் தத்துவச் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலானார்.

    அரசியல் பணிகளால் வ.உ.சி.க்கு ஜேம்ஸ் ஆலன் எழுத்துக்களை மொழிபெயர்க்க நேரம் கிட்டாமல் இருந்தது. பிரிட்டிஷாரால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட து அந்நிலைமையே அவருக்கு வாய்ப்பாயிற்று. சிறைக் காலத்தை ஜேம்ஸ் ஆலன் நூல்களை மொழிபெயர்க்கக் கிடைத்த கால அவகாசமாக அவர் கருதினார்.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஜேம்ஸ் ஆலனின் மூன்று நூல்களை முழுமையாக மொழிபெயர்த்துள்ளார். `மனம்போல வாழ்வு, அகமே புறம், மெய்யறிவு` முதலிய நூல்களை இன்றைய இளைஞர்கள் அவசியம் பயிலவேண்டும். மனத்தை அடக்குவது எப்படி, வாழ்க்கையை வெல்வது எப்படி என்பன போன்ற கருத்துக்கள் விவாத பூர்வமாக அந்நூல்களில் பேசப்படுகின்றன.

    `துன்பம் எப்பொழுதும் எவ்வழியிலாவது சென்ற பிசகான நினைப்பின் காரியம்`, சரீரம் மனத்தின் வேலைக்காரன், சரீரத்தின் வியாதிகளை நீக்குதற்கு மனோ உற்சாகமுள்ள நினைப்புக்குச் சமமான வைத்தியனில்லை` என்பனபோல அந்நூல்களில் தென்படும் வரிகள் படித்தபின் நெடுநேரம் நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகின்றன.

    `மனம்போல வாழ்வு` என்ற நூலின் ஆதாரமே மனத்தைச் செம்மைப்படுத்தினால் நல்ல வாழ்க்கை கிட்டும் என்ற சிந்தனைதான்.

    `செயல்கள் நினைப்பின் மலர்கள். இன்பமும் துன்பமும் அதன் கனிகள். இவ்வாறாக மனிதன் இவைகளை விளைவித்துக் கொள்கிறான்` என, மனிதன் தன் வாழ்வைத் தானே நிர்மாணித்துக் கொள்வது குறித்து அழகிய நடையில் எழுதி நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகிறார் வ.உ.சி.

    `மேம்பாடும் தெய்வத்தன்மையும் வாய்ந்த ஒழுக்கம் கடவுளின் கிருபையாலாவது, தற்செயலாவது உண்டானதன்று. அது நேர்மையான நினைப்புகளை இடைவிடாது நினைந்து வந்ததன் நேரான பயனாகவும் தெய்வத் தன்மை வாய்ந்த நினைப்புகளோடு நீடித்த காலம் விருப்பத்தோடு பழகிவந்த பழக்கத்தின் நேரான காரியமாகவும் உண்டானதே!`

    `மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமையாகிய வஸ்திரத்தை நெய்து கொண்டிருக்கிறது. நினைப்பு நூல், நல்ல செயல்களும் தீய செயல்களும் பாவும் ஊடும், ஒழுக்கம் வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம்தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்திக் கொள்கிறது`

    ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளால் எவ்வளவு தூரம் வ.உ.சி. கவரப்பட்டிருக்கிறார் என்பதை இந்த அழகிய நடையே நமக்கு உணர்த்தி விடுகின்றது.

    படைப்பிலக்கியத் துறையிலும் வ.உ.சி. முயன்றிருக்கிறார். மெய்யறம், மெய்யறிவு, பாடல திரட்டு, சுயசரிதை ஆகிய நான்கும் அவரது கவிதைப் படைப்புக்கள். மெய்யறம் மெய்யறிவு இரண்டும் திருக்குறளில் தோய்ந்த மனத்தில் இருந்து எழுந்தவை. அவையிரண்டும் அறம் பேசுகின்றன.

    வ.உ.சி.யின் பல்வேறு அனுபவங்களின் திரட்டாக அமைந்ததுதான் பாடல் திரட்டு என்ற நூல்.

    வ.உ.சி.யின் சிறைவாழ்வு எத்தகைய அரிய இலக்கியங்களைத் தமிழ் வாசகர்கள் பெற உதவியிருக்கிறது என்றெண்ணும்போது வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.

    பாடல் திரட்டு என்னும் நூல் அவரது தனிப்பாடல்கள் பலவற்றின் தொகுப்பாகும். சிறை செல்வதற்கு முன் அவர் எழுதிய பாடல்களும் சிறையில் அவர் எழுதிய பாடல்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. ஒரு காலத்தில் வள்ளலாகத் திகழ்ந்த வ.உ.சி., பிற்காலத்தில் வறுமையில் வாடுகிறார். அப்போது அவர் எழுதிய ஒரு வெண்பா இந்தப் பாடல் திரட்டில் இடம்பெற்றுப் படிப்பவர் நெஞ்சை உருக்குகிறது.

    `வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப்

    பல்பொருளும்

    தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று -

    செந்தமிழ்வெண்

    பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம்

    ஓடுகிறான்

    நாச்சொல்லும் தோலும் நலிந்து!`

    உணர்ச்சிபூர்வமாகப் படிப்பவர் நெஞ்சை அசைக்கக்கூடிய கவிதைகளைப் படைப்பதில் வ.உ.சி. வல்லவர் என்பதற்கு இந்த வெண்பா ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோற்றுப் பதம்.

    வ.உ.சி.யின் சுயசரிதை நூல் கவிதையில் எழுதப்பட்டுள்ளது. அது அவரது வாழ்க்கைச் சம்பவங்களை விவரிப்பதோடு அவரது குருநாதரான திலகரின் வாழ்க்கைச் சம்பவங்களால் தான் பாதிக்கபட்டதையும் சேர்த்தே விவரிக்கிறது. வ.உ.சி. தம் சிந்தனை வளத்தாலும் நடை நலத்தாலும் தமது படைப்புக்களின் மூலம் தமிழை வளப்படுத்தினார். தமிழ் உள்ளவரை அவரது படைப்புக்கள் நிரந்தரமாய்த் தமிழை அலங்கரித்துக் கொண்டிருக்கும்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.
    • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.

    உலக கிட்னி விழிப்புணர்வு தினம் இன்று. சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.

    இதில் இருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்து கொள்ள என் னென்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பிரபல கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்திரராஜன் விளக்கினார். 

    அவர் கூறியதாவது:-

    அறிகுறி தெரியாது:

    எனக்கு கிட்னி பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. சிறுநீர் கழிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீர் நிறையவும் செல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறு.

    சிறுநீரக பாதிப்பு என்பது வெளியே எளிதாக தெரிவதில்லை. 90 சதவீதம் சிறுநீரகம் செயலிழக்கும் வரை எந்தவிதமான அறிகுறிகளும் வெளியே தெரியாமல் கூட இருக்கும்.

    அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதும் சிறுநீரக பாதிப்பின் காரணமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இதயம் ஒன்றே ஒன்று தான். அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெரும் பாலும் அறிகுறி தென்பட்டு விடும். அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று ஏதாவது பிரச்சினை இருக்கும்.

    ஆனால், கிட்னி இரண்டு இருப்பதால் 90 சதவீதம் பாதிக்கும் வரை அது தனது வேலையை செய்து கொண்டே இருக்கும். நமக்கு வெளியே தெரியாது. கிட்னி செயலிழப்பு என்பது 'சைலன்ட் கில்லர்' போன்றது.

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.

    சிறுநீரக பாதிப்பு:

    தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு தான் கிட்னி பாதிப்பு, டயாலிசிஸ் என்பது பிரபலமானது.

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்.

    அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த தஞ்சை மருத்துவ குழுவில் நானும் இருந்தேன். சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக முடிவு செய்து குளுகோஸ் ஏற்றப்பட்டதும் அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்.

    ஆனால், அவரது ரத்த மாதிரியை நான் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு அறிகுறி இருப்பதாக மருத்துவ வல்லுனர் டீன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அடுத்த சில நாளில்

    எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது சிறுநீரகம் செயலிழந்து இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி சென்னை திரும்பினார்.

    டயாலிசிஸ்

    அந்த கால கட்டத்தில் டயாலிசிஸ்சும் பிரபலமாக வில்லை. எனது மனைவி தமிழிசை இரண்டு டயா லிசிஸ் கருவியை வைத்து 200 ரூபாய் கட்டணத்தில் வீட்டில் வைத்தே சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலி சிஸ் செய்து வந்தார்.

    அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஹர்ஷவர்தன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார். அந்த நேரத்தில் டயாலிசிஸ் அவசிய தேவை பற்றி அவரிடம் பேசி கொண்டு இருந்தோம். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து டயாலிசிஸ் திட்டம் தொடர்பாக புள்ளி விபரங்களை மத்திய அரசு கேட்டு பெற்றது.

    தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது சிறுநீரக பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

    டாலிசிஸ் சென்டர்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அடுத்த இரண்டே மாதத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலும், பெரம்பூர் ரெயில் நிலையம் அருகிலும் டயாலிசிஸ் மையங்களை திறந்தார்.

    அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து கவுரவப்படுத்தினார். இந்தியாவிலேயே முதல் முதலாக மாநகராட்சி சார்பில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது சென்னையில்தான்.

    அந்த பெருமை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சேரும். இப்போது எல்லா மாவட்டங்களிலும் டயாலிசிஸ் வசதி கிடைக்கிறது.

    இதயமும், சிறுநீரகமும் மாமன் மைத்துனன் மாதிரி. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன் என்று ஒன்றை தொடர்ந்து இன்னொன்றும் பாதிக்கும்.

    கிட்னியின் நிலையை அறிந்து கொள்ள 'ஆல்புமின், கிரியேட்டின் அளவு, அடிவயிற்றுக்கு ஒரு ஸ்கேன் ஆகிய 3 பரி சோதனை மேற்கொண்டால் போதும்.

    பொதுவாக 32 வயதை கடந்தவர்கள் ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

    குடும்பத்தில் யாராவது கிட்னி பாதிப்புக்கு ஆளாகி இருந்தால் மற்றவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம். பெற்றோரிடம் இருந்து சொத்து மட்டுமல்ல.

    இந்த மாதிரி வியாதிகளும் கிடைக்கலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நம் உடலில் இருந்து நச்சுப் பொருள்களை வெளியேற்றுவது முதல் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது வரை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காப்பதில் சிறுநீரகங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

    ஆனால், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு நம் சிறுநீரகங்களை நாம் கவனித்துக் கொள்கிறோமா?

    சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகப்படியான மருந்துகள், வலி நிவாரணி களைத் தவிர்ப்பது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கும். முக்கியமாக சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    உடலை நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும். ரத்த அழுத்தத்தை அன்றாடம் சரிபார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, உடல் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனசுக்குள் அவர்கள் பெயரை பதிய வைத்துக் கொண்டார் திவ்யாவின் அப்பா ரங்கராஜன்.
    • திவ்யா தப்பிக்க போட்ட திட்டம் என்பது தெரியாது.

    மெதுவாக, இலையை கூர்ந்து கவனித்தான். பிரியாணி எண்ணெயின் மினுமினுப்பில், திவ்யா நகக்கீறலில் குறுக்குத் துறை கோவில் என எழுதியிருந்த எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய ஆரம்பித்தது. ஏதோ ஒன்றை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் "டேய்..." என டேவிட் கத்தினான்.

    அவனை சூழ்ந்து நின்ற செந்தில், தியாகு, நெல்சனிடம் அதை காட்ட அவர்கள் முதலில் குழம்பி, பின் நிதானமாய் வாய் விட்டு படித்தார்கள். "கு... று...க்... குத்துறை கோவில்..." அவர்கள் படித்து முடித்ததும், டேவிட் கேட்டான்.

    "புரியுதுதாடா. திவ்யாவுக்கு சாப்பிட வெச்ச பிரியாணி பார்சல் இலையில... அவளை கடத்துனவங்களுக்கு போக்கு காட்டிட்டு... அவளை தேடி யாராவது இங்க வந்தா... அவங்களுக்கு தெரியட்டும்னு இப்படி எழுதி இருக்கா... சோ... அந்த நல்லவன் திவ்யாவ இப்ப குறுக்குத்துறை கோவிலுக்கு கூட்டிட்டு போறான்னு நமக்குசொல்லியிருக்கா திவ்யா...!"

    "அந்த நல்லவன் திவ்யாவை எதுக்கு இங்க இருந்து குறுக்குத்துறை கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்... திருநெல்வேலி குறுக்குத்துறையில முருகன் கோவில்தான் பேமஸ்...! அந்த கோயிலுக்கும், கடத்தல்காரன் நல்லவனுக்கும் என்ன சம்பந்தம்..."

    செந்தில் கேட்டது, எல்லோருக் கும் "ஆமாம்ல..." என்பது போல் தோண, தலையை ஆட்ட, டேவிட் இப்படி சொன்னான்.

    "கடத்துன நல்லவனுக்கு குறுக்குத்துறை சம்பந்தம் கிடையாது... ஆனா திவ்யாவுக்கு குறுக்குத்துறை முருகன் கோவில் ரொம்ப பிடிக்கும்..."

    "அதனால..." - நெல்சன் குழம்பி போய் கேட்டான்.

    "குறுக்குத்துறைக்கு திவ்யாவ அந்த நல்லவன் எதுக்கு கூட்டிட்டு போகணும்?" - இப்படி கேட்ட, டேவிட்டின் கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் எனில் சில மணித்துளிகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

    சில மணி துளிகளுக்கு முன்னால்...

    அதே வேட்டையன் பங்களா...

    "உன் தாலிய கட் பண்ணிட்டேன்னு அழுதது போதும். இப்ப நான் சொல்லப் போறத கேட்டு நீ ஷாக் ஆகக்கூடாது. ஆனா இனிமே நான் சொல்றபடி நீ கேட்க மறுக்கறேன்னு வையி... அடுத்த செகண்ட் அங்க பெரிசுங்கள்ல ஒரு உயிர் போயிடும்..."

    திவ்யா கண்கலங்க, முகமூடி அணிந்த அந்த நல்லவனையே பார்த்தாள்.

    "உன் கழுத்துல புதுசா ஒரு தாலி ஏறப்போகுது அது நான் கட்டப்போற தாலி... இனிமே நீ டேவிட்டோட பொண்டாட்டி இல்ல... என் பொண்டாட்டி..."

    திவ்யா அதிர்ந்தாள்.

    "உனக்கும், எனக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது எங்க தெரியுமா? உனக்குப் பிடிச்ச குறுக்குத் துறை முருகன் கோவில்ல. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்."

    வாயில் போட்டிருந்த பிளாஸ்டரால் திவ்யாவால் தன் தலையை ஆட்டி மறுப்பு தெரிவிக்க மட்டுமே முடிந்தது.

    "இப்ப கொஞ்ச நேரத்துல பிரியாணி வரும். எல்லாரும் சாப்பிடுறோம். உடனே, கிளம்புறோம். இங்க இருந்து திருநெல்வேலி போற வரை யோசி திவ்யா! பெரிசுங்க உயிரு முக்கியமா. இல்லை... சம்மதிச்சு பேசாம என்னை புருஷனா ஏத்துகிறது சரியான்னு..!"

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

     

    அவன் பேசிக் கொண்டு இருக்கும்போதே, ஒருவன் பிரியாணி பொட்டலங்களோடு வந்தான்,

    "எல்லாருக்கும் கொடு. திவ்யாவுக்கு வலதுக் கையை மட்டும் அவிழ்த்து விடு. சாப்பிடுற வரைக்கும் வாயில் இருக்கும் பிளாஸ்டர எடுத்துவிடு..."

    திவ்யா பக்கம் திரும்பினான். "இங்க பார் திவ்யா... சாப்பிட மட்டும் செய்யணும்... ஒரு வார்த்தை பேசக்கூடாது. கத்தக்கூடாது. சாப்பிட்டு முடிச்சதும் மறுபடியும் பிளாஸ்டர் ஒட்டி கார் டிக்கியில சமத்தா படுத்துகிட்டு திருநெல்வேலி வரை வந்தா போதும். அங்க போய் குறுக்குத்துறை முருகன் கோவிலில் நமக்கு கல்யாணம் முடிஞ்சதும் இனிமே உனக்கு ராஜ வாழ்க்கை தான். சாரி... ராணி வாழ்க்கை!"

    திவ்யா முன் பிரியாணி பிரித்து வைக்கப்பட்டது.

    "ம்... சாப்பிடு!"

    அப்போது சாப்பிடும்போது, திவ்யா இலையில் நகத்தால் குறுக்குத்துறை கோவில் என எழுதினாள்.

    வேட்டையன் பங்களா..

    "இப்ப நாம் குறுக்குத்துறைக்கு உடனே கிளம்புவோம்... இது பத்தின தகவலை மேரிக்கு சொல்லி பெரியவங்களை கூட்டிட்டு அங்க வரச் சொல்லுவோம்!"

    "வேண்டாம்..." - ஒற்றை வார்த்தையில் மறுத்தான் டேவிட். மற்றவர்கள் குழப்பமாய் பார்த்தனர்.

    "மேரி... ஸ்டேஷனுக்கு போயி அங்கேயே பெரியவங்களோட இருக்கட்டும்... நாம எங்க போறோம்னு, இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்."

    "ஏண்டா..." - நெல்சன்

    "நாம வேட்டையன் பங்களாவுக்கு வரோம்கிறது யார் மூலமாவோ, திவ்யாவ கடத்தி வெச்சு இருக்கிற நல்லவனுக்கு தகவல் போயிருக்கு.. அதனால இப்போதைக்கு நாம குறுக்குத்துறை போறோம்கிறது, நம்மளை தவிர யாருக்கும் தெரிய வேண்டாம்... ம்... கிளம்புங்க...!"

    அவர்கள் வேட்டையன் பங்களாவை விட்டு வெளியே வந்து காரில் ஏற செல்லவும் தன் ஆட்களுடன் வேட்டையன் பங்களாவுக்கு பெருமாள் வந்து சேரவும் சரியாய் இருந்தது. காரைவிட்டு இறங்காமலேயே பெருமாள் இப்படி கேட்டான். "டேவிட்டும் அவன் பிரண்சுங்க எங்க இவ்வளவு வேகமா கிளம்பி போறாங்க..."

    "ஒருவேளை திவ்யாவ தேடி வந்து அவ இருக்கிற இடம் தெரிஞ்சு போறாங்களோ..." பெருமாள் அமர்ந்திருந்த காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வழுக்கை தலையன் சரியாய் கணித்தான்.

    "டேய்... அந்த வண்டியை பாலோ பண்ணு... ஆனா, நாம பாலோ பண்றோம்கிறது தெரியாம... டிஸ்டன்ஸ் விட்டே போ..."

    அவர்கள் பாலோ பண்ண ஆரம்பித்தார்கள். பின்னால் பெருமாளின் கார்கள் தங்களை தொடர்வது தெரியாமல் குறுக்குத்துறை நோக்கி சென்று கொண்டிருந்தான் டேவிட்.

    அதே நேரம்..

    போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திவ்யாவின் அம்மா, அப்பா மற்றும் டேவிட்டின் அம்மா லிசா, அப்பா தேவசகாயம் ஆகியோருடன் ஹைவேயில் சென்று கொண்டிருந்த அந்த காரை ஓட்டுபவனை பார்த்து டிரைவர் சீட்டிக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருந்தவன் கேட்டான். "ஸ்டீபன்... இவங்களை தலைவரு சொன்ன இடத்துக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள இருட்டிடும் போலியே..."

    "இல்ல பாண்டி... வானம் கறுக்கறுதுகுள்ள போயிடலாம்..." - வண்டி ஓட்டுபவன் பதில் சொன்னான். "ஓ... நம்பளை இவ்வளவு நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு மிரட்டி, இப்போ கார்ல கடத்திட்டு போற, இவன்க பேரு ஸ்டீபன், பாண்டியா?"

    மனசுக்குள் அவர்கள் பெயரை பதிய வைத்துக் கொண்டார் திவ்யாவின் அப்பா ரங்கராஜன். கூடவே, "ஏம்பா... இந்த வயசான காலத்துல எங்கள எங்கப்பா கூட்டிட்டு போறீங்க... நாங்க ஒத்துழைச் சாலும் எங்க உடம்பு ஒத்துழைக்கணுமேப்பா... கொஞ்சம் கருணை காட்டுங்க... எங்கேயாவது பாத்ரூம் இருக்கிற இடமா பார்த்து நிப்பாட்டுங்க..." பவ்யமாய் கேட்டார்.

    "பெரிசு... போற வழில வர்ற ஓட்டல் மாதிரி இடத்துல எல்லாம் நிப்பாட்ட மாட்டோம். வேணும்னா... ஹைவேஸ்ல ஏதாவது இடத்துல நிறுத்துறோம்.. இறங்கி காட்டுக்குள்ள போயிட்டு வாங்க... அது நீயா இருந்தாலும் சரி, உன் வீட்டு பொம்பளைங்கனாலும் சரி..."

    இரக்கமே இல்லாமல் சொன்னான் வண்டியை ஓட்டுன ஸ்டீபன். "சரிப்பா..." ஈனஸ்வரத்தில் பதில் சொன்னார் ரங்கராஜன்.

    பண்ணையார்பட்டி..

    பெருமாள் வந்து போன பிறகும், பண்ணையார்பட்டியை விட்டு அகலாமல் அங்கேயே விசாரணையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அழகர்.

    "ஐயா... இனிமே இந்த ஊர்ல நாம விசாரணை பண்ணிகிட்டே இருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லீங்க ஐயா... ஒண்ணு முருகநந்தம் ஷிப்ட் ஆகணும்... இல்ல ஸ்டேஷனுக்கு போயி, பெரிய அதிகாரிங்களுக்கு தகவல் தெரிவிக்கணும் ஐயா..."

    "டேய்... மணியா... நீ கான்ஸ்டபிள் டூட்டிய மட்டும் பாரு... ஐயா, நொய்யான்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாத... என்ன கிழிக்கணும்... எப்படி எதை கிழிக்கணும்னு எங்களுக்கு தெரியும்..."

    நக்கலாய் இப்படி இன்ஸ்பெக்டர் அழகர் மணியை கிண்டல் அடிக்கும்போது அவரது செல்போனின் "ப்ளீங்..." என்ற ஓசையுடன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. போனை எடுத்து, வாட்ஸ்அப் மெசேஜ், பார்த்த அழகரின் முகம் மாறியது. உடனே தனது கூட வந்திருந்த அனைத்து கான்ஸ்டபிளுக்கும் உத்தரவு போட்டார். "யோவ்... இந்த ஊர்ல விசாரணை ஓவர்... உடனே வண்டியில ஏறுங்க... நாம வேற இடத்துக்கு ஷிப்ட் ஆகிறோம்..."

    அடுத்த நிமிடம் போலீஸ் ஜீப் அங்கிருந்து கிளம்பியது. வண்டியில் அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் மணி மனசு மட்டும் அடித்துக் கொண்டது. இந்தாளுக்கு யாரு மெசேஜ் அனுப்பினா... இப்போ எங்க போயிட்டிருக்காரு...குழப்பமாய் யோசித்தபடி மணி ரோட்டை பார்க்க அது திருநெல்வலி ஹைவே! ஜீப் திருநெல்வேலி ஹைவேசில் திரும்பியது. "நம்ம லிமிட் மேலூர்... இவரு திருநெல்வேலி ரூட்ல போறாரு..." - கான்ஸ்டபிள் மணி ஏகத்துக்கும் குழம்பி, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

    "தொம்! தொம்!!"

    திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த நல்லவனின் காரின் டிக்கியில் இருந்து அந்த சப்தம் கேட்டது.

    "தொம்! தொம்!! தொம்!!!"

    மீண்டும் டிக்கியின் சப்தம் கேட்க, பின் சீட்டில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி சொன்னாள்.

    "ஏய் ராஜேசு... டிக்கியில் இருந்து திவ்யா தட்டுறா!" கோபமாய் திரும்பினான் அந்த நல்லவன்.

    "ஏய்... பேர சொல்லாத... குறுக்குத்துறை போயி காரியம் முடியுற வரை, என் பேரு வெளியே தெரியக்கூடாது. யாரு கேட்டாலும் என் பேரு நல்லவன்... தெரியுதா?"

    அவன் கத்திய கத்தலில் சப்த நாடியும் ஒடுங்கி, பயத்தில் முகம் வெளிற தலையாட்டினாள் அவள்.

    "டேய்... வண்டிய ஓரம் கட்டுரா...!" வண்டி ரோடு ஓரமாய் நின்றது. வெயில் சுர்ரென்று ரோட்டில் விழுந்து ரோடு சூடு நல்லா தெரிந்தது.

    "போ... இறங்கி டிக்கிய திறந்து என்னான்னு கேளு..."

    ஒருத்தி இறங்கி, டிக்கியை திறந்தாள்.

    சூரிய ஒளி பட்டதும் கண்களை கூச்சமாய் மூடி திறந்தாள் திவ்யா.

    "ஏண்டி டிக்கிய தட்டுன?... என்ன வேணும்?" பிளாஸ்டர் வாயில் ஒட்டி இருந்தபடியால் திவ்யாவால் பேச இயலவில்லை. அந்தப் பெண் அவள் வாயில் இருந்த பிளாஸ்டரை பிரித்து விட்டாள். "பாத்ரூம் போகணும்..." திவ்யா கூற, முன் சீட்டில் எட்டிப் பார்த்து, அந்தப் பெண் கத்தினாள்.

    "ஹலோ... இவ பாத்ரூம் போகணுமாம்..."

    "சரி... அந்த காட்டுப்பக்கம் கூட்டிப் போயிட்டு வா... ஜாக்கிரதை"

    கூறிவிட்டு முகமூடியை சரியாய் மாட்டிக் கொண்டான். இருவரும் காட்டுக்குள் மறைய காத்திருந்தனர் அந்த ராஜேஷ் என்கிற நல்லவனும், மற்றவர்களும்.

    அவர்களுக்கு, இது திவ்யா தப்பிக்க போட்ட திட்டம் என்பது தெரியாது. அதே ரோட்டில் 25 கி.மீ. தள்ளி டேவிட் காரும், அதை தொடர்ந்து பெருமாள் காரும் வந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அங்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் வெயில் வெளுத்துக் கொண்டிருந்தது. (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத தம்பதிகள் பலர் உள்ளனர்.
    • முறையான சிகிச்சை பெற்றால், 100 சதவீதம் தாம்பத்திய உறவு இல்லாமையை சரி செய்ய முடியும்.

    குழந்தை பாக்கியத்துக்கு அடிப்படையே தாம்பத்திய உறவுதான். ஆனால் கணவன், மனைவி பலர் தாம்பத்திய உறவு கொள்வதில்லை. இதனால் அவர்கள் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகளை கடந்த காலங்களில் இருந்தே நாங்கள் பார்த்து வருகிறோம். ஆனால் இப்போது இதுபோன்ற பிரச்சினைகள் இன்னும் அதிகமாக காணப்படுகிறது.

    ஆனால் அவர்கள் அனைவருக்கும் நான் சொல்கிற ஒரு விஷயம், ஒவ்வொரு தம்பதியரும், தாம்பத்திய உறவு இல்லாமையை முழுமையாக சரி செய்து குழந்தை பாக்கியம் பெற முடியும். தாம்பத்திய உறவு இல்லாமையை 100 சதவீதம் சரிப்படுத்த முடியும்.

     

    தாம்பத்திய உறவு பற்றி புரிதல் இல்லை:

    நிறைய நேரங்களில் இதைப்பற்றி பேச கவலையாக இருப்பதாகவும், இது ஒரு கூச்சமான விஷயமாக இருப்பதாகவும் நிறைய தம்பதிகள் சொல்கிறார்கள். தாம்பத்திய உறவு ஏன் செய்கிறோம், இது எதனால் நடக்கிறது, இது சரியா தவறா என்று அவர்களுக்கே தெளிவான புரிதல் இல்லை. பல நேரங்களில் ஆண், பெண் உறவுகள் பற்றி பல தம்பதிகளுக்கு எதுவுமே தெரிவதில்லை. பெண்ணின் வஜினா (யோனி) என்றால் என்ன என்று தெரியாது. வஜினாவில் எது நுழைவு புள்ளி என்பது கூட நிறைய தம்பதிகளுக்கு தெரிவதில்லை.

    அதற்கடுத்து பலர் இதை சமூக விஷயங்களாகவும் பார்க்கிறார்கள். ஆண், பெண் உறவு என்பது தவறானது, இதைப்பற்றி பேசுவது தப்பு, எனவே தாம்பத்திய உறவு இல்லாமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தவறான எண்ணங்கள் உள்ளது. அது தவிர பல நேரங்களில் சிறு வயதில் ஏற்படுகிற பாலியல் வன்கொடுமை காரணமாக பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு அதனால் தாம்பத்திய உறவு கொள்வதை பிரச்சினையாக கருதுகிறார்கள்.

    அதேபோல் ஆண்களையும் எடுத்துக்கொண்டால், தாம்பத்திய உறவு என்றால் நிறைய நேரங்களில் பெண்களை கஷ்டப்படுத்தும் விஷயம் என்ற தவறான கண்ணோட்டத்துடன் உள்ளனர். இது ஒரு தவறான விஷயம் என்கிற மனநிலையும் பல ஆண்களிடம் உள்ளது. இவை அனைத்தும் தான் இவர்கள் தாம்பத்திய உறவு கொள்வதில் தடையாக இருக்கிற விஷயம். இதனால் தாம்பத்திய உறவு கொள்ள மாட்டார்கள்.

    ஆண்களை பாதிக்கும் 3 முக்கிய விஷயங்கள்:

    இன்றைக்கும் பல ஆய்வுகள் தெரிவிக்கும் தகவலின்படி, ஆண்களை பொருத்தவரைக்கும், 3 முக்கியமான விஷயங்களால் பாதிக்கப்படுகிறார்கள். முதலாவது போதிய விறைப்புத்தன்மை இல்லாதது, இரண்டாவது தாம்பத்திய உறவு கொள்ளும் முன்பே உயிரணு வெளியாகி விடுவது, அதனால் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது.

    மூன்றாவதாக, ஆண்களை பொருத்தவரை மன ரீதியான பிரச்சினைகள் ஆகும். அது குறிப்பாக அவர்களுடைய சமூகம் மற்றும் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை, அதனை பாதிக்கிற மருந்துகள், உடல் ரீதியிலான பிரச்சினைகள் ஆகியவை அனைத்தும் காரணமாக இருக்கலாம்.

    எனவே தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகள் வந்தால் கண்டிப்பாக இருவருக்கும் முறையாக கவுன்சிலிங் செய்ய வேண்டும். இது சரிப்படுத்தக்கூடிய விஷயம் என்று அவர்கள் இருவருக்கும் நம்பிக்கையை கொடுக்க வேண்டும். ஏனென்றால் பல நேரங்களில் அவர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 'தாம்பத்திய உறவு சரியாக இல்லையென்றால் கூட பரவாயில்லை டாக்டர், எங்களுக்கு குழந்தைபேறு மட்டும் உருவாக்கி கொடுங்கள்' என்று சொல்வார்கள்.

    ஆனால் அவர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயம், இதை 100 சதவீதம் கண்டிப்பாக சரி செய்ய முடியும் என்பது தான். இதை எப்படி சரி செய்யலாம்? ஆண்களுக்கு முதலில் என்ன காரணத்தினால் விறைப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.

    நாங்கள் எடுத்த ஆய்வின் படி விறைப்புத் தன்மை இல்லாமைக்கு, 22 முதல் 30 சதவீதம் நீரிழிவு தான் காரணமாக இருக்கும். அதுவும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. சிகிச்சைக்கு வரும்போதுதான் அவர்களுக்கே அது தெரியவரும். அவர்களுக்கு வயது 29 தான் இருக்கும். திருமணமாகி 3 முதல் 4 வருடம் ஆன நிலையிலேயே ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலே அவர்களின் விறைப்புத்தன்மை சரியாகும். அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

    தாம்பத்திய உறவு பற்றி தவறான கருத்து:

    மேலும் மன ரீதியான பிரச்சினைகளை பார்க்கையில், தாம்பத்திய உறவு கொள்ளும்போது அவர்களது செயல்முறையில் மன அழுத்தம் வரும். ஏனென்றால் ஆண்களை பொருத்தவரைக்கும் தாம்பத்திய உறவு என்பது ஒரு செயல் முறை. அதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களை பொருத்தவரை அது செயலற்ற முறை. அவர்களுக்கு ஆற்றல் தேவையில்லை. எனவே தன்னால் முடியுமா என்கிற எண்ணமே ஆண்களை நம்பிக்கை இழக்க செய்யும். அதுவே அவர்களுக்கு ஒரு பயத்தை கொடுக்கும். இதனால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத தம்பதிகள் பலர் உள்ளனர்.

    இன்றைக்கும் பல ஆய்வுகளில் நாங்கள் பார்த்த விஷயம் என்னவென்றால், திருமணமானவுடன் முதலிரவில் தாம்பத்திய உறவு செய்ய வேண்டும், ஒரு வாரத்துக்குள் செய்து விட வேண்டும் என்கிற தவறான கருத்து உள்ளது. முதல் முறை தாம்பத்திய உறவு வைப்பது என்பது ஒரே நாளில் சாத்தியம் அல்ல. பலருக்கு இது ஒரு வாரம் ஆகலாம், சிலருக்கு ஒரு மாதம் கூட ஆகலாம். தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபடும்போதுதான் முழுமையாக செய்ய முடியும்.

    ஆனால் இதைப்பற்றி தவறான எண்ணம் கொண்டு, முதலிரவில் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதால் மனநிலை பாதிப்பாகி, அதில் ஈடுபடாமல் நிறுத்துகிற தம்பதியினர் எண்ணிக்கையும் மிக மிக அதிகம். அவர்களை கேட்கும்போது இது தெரிய வரும். ஆமா டாக்டர், 'எனது நண்பர்கள் சொன்னார்கள், திருமணமான முதலிரவிலேயே தாம்பத்திய உறவு வைக்க வேண்டும் என்றார்கள். என்னால் முடியவில்லை. அதனால் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று நினைத்து நான் நிறுத்தி விட்டேன்' என்பார்கள்.

    பெண்களை பொருத்தவரைக்கும் இது ஒரு வலி நிறைந்த விஷயம், எனவே தாம்பத்திய உறவே வேண்டாம், நாங்கள் நண்பர்களாக இருந்து கொள்கிறோம் என்று சொல்வார்கள். இந்த மாதிரியான தவறான கணிப்புகள், புரிதல் இல்லாத விஷயங்கள் அவர்களிடம் இருக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    100 சதவீதம் முழுமையாக சரி செய்ய முடியும்:

    எனவே இதுபோன்ற தம்பதிகளை முறையாக பரிசோதித்து, முறையான கவுன்சிலிங் கொடுத்து அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். தற்காலத்தில் இருக்கிற சில மாத்திரைகள் மருத்துவ ரீதியாக விறைப்புத்தன்மை செயலிழப்பை 100 சதவீதம் முழுமையாக சரி செய்யும். உயிரணுக்கள் முன்கூட்டியே வெளியாவதையும் தடுக்கும். அதன் மூலம் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும். எனவே முறையான நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற்றால், அவர் அதை சரிசெய்து விடுவார்.

     

    பெண்களை பொருத்தவரை 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வஜினிஸ்மஸ் (பெண்ணுறுப்பில் ஏற்படும் இறுக்கம்) என்பது தாம்பத்திய உறவு இல்லாமைக்கு அடிப்படை காரணமாக உள்ளது. அதற்கு பய உணர்வு தான் முக்கிய காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட பெண்களுக்கு முறையாக பரிசோதித்து முறையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இன்றும் வஜினிஸ்மஸ் பிரச்சினை வருவதற்கு இயற்கையிலேயே உள்ள பய உணர்வு மற்றும் சிறு வயதில் ஏற்படுகிற பாலியல் வன்கொடுமை ஆகியவை தான் காரணமாகும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அவர்களின் பிரச்சினைகளை சரிசெய்ய சில தெரபிகள் இருக்கிறது. அவர்கள் அதற்கான சரியான சிகிச்சையை பெற வேண்டும். அவர்களை முறையாக பரிசோதித்து, முறையாக கவுன்சிலிங் செய்து, சரியான சிகிச்சை அளிக்கும்போது, அவர்களுக்கான பாதிப்புகள் முழுமையாக சீராகி கண்டிப்பாக தாம்பத்திய உறவு கொள்ள முடியும். எனவே முறையான சிகிச்சை பெற்றால், 100 சதவீதம் தாம்பத்திய உறவு இல்லாமையை சரி செய்ய முடியும். இதன் மூலமாக அந்த தம்பதிகள், ஆய்வகத்தில் கருத்தரிக்காமல், தாம்பத்திய உறவின் மூலம் வீட்டிலேயே இயற்கையாக கருத்தரித்து குழந்தை பேறு பெற முடியும்.

    • எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.
    • மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும்.

    27 நட்சத்திரங்களில் 21-வது நட்சத்திரம் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம். இதன் சமஸ்கிருத பொருள் பிந்தைய வெற்றி. இதன் தமிழ் பெயர் கடைகுலம் என்பதாகும். இதன் உருவம் கட்டில்கால், விரிந்த நிலையில் உள்ள வில். யானைத் தந்தம்.

    உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும் 2, 3, 4-ம் பகுதி மகர ராசியில் அமைந்துள்ளது கால புருஷ லக்னம் மேஷம். தனுசு ஒன்பதாம் வீடாகும். மகரம் பத்தாம் வீடாகும். தனுசு ராசி அதிபதி குரு மகர ராசியின் அதிபதி சனி. கால புருஷ தத்துவப்படி இந்த அமைப்பு தர்மகர்மாதிபதி யோகமாகும்.

    உத்திரட்டாதி நட்சத்திர பொதுவான பலன்கள்:

    ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர்.

    புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளும் திறமையும் உண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும். சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அழகிய தோற்றப் பொழிவு நிறைந்தவர். தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கை உண்டு. அதிகார பதவிகள் தேடி வரும். பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்குவதில் வல்லவர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயல் ஆற்றுவார்கள்.

    மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள்.

    பார்ப்பதற்கு கடுமையானவர்களாகத் தோன்றினாலும் கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சளைக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சனைகளை சந்திப்பார்கள். சிவ வழிபாட்டில் ஆர்வம் அதிகம்.

    கண் அளவு, கை அளவு என பார்த்த மாத்திரத்தில் எதையும் கணிக்கும் நிபுணத்துவம் உண்டு. தண்ணீர் இல்லாத காட்டையும் விலை பேசும் தந்திரவாதிகள். பல பிரபலங்கள் உத்திராடமத்தில் பிறந்துள்ளனர். அவர்கள் இந்த நட்சத்திரத்துடன் தொடர்புடைய உறுதியான மற்றும் லட்சிய குணங்களை வெளிப்படுத்தி, அந்தந்த துறைகளில் பெரும் வெற்றியையும் அங்கீகாரத்தையும் அடைந்துள்ளனர்.

    கல்வி

    நல்ல கல்வி அறிவு உண்டு. கற்ற கல்வியால் பயன் உண்டு. இதில் பிறந்தவர்கள் நிர்வாகம், கல்வி, மருத்துவம் தொடர்பான படிப்புகள், அரசியல் , வனம் காடு இயற்கை தொடர்பான கல்விகள், பி.பி.எம்., பி.பி.ஏ., எம்.பி.ஏ., ஐ.ஏ.எஸ். படிப்புகள், வக்கீல், நீதிபதி, புரோகிதர், குரு குல கல்வி, மத போதகர், வங்கி பணி, ஆச்சாரியர்கள் போன்ற கல்வி கற்கலாம். உயிரியல் கல்வி, மருத்துவம், குழந்தை மருத்துவம் தொடர்பான கல்வி மைக்ரோபயாலஜி , பொருளாதார நிபுணர், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படிப்புகள் படிக்கலாம்.

    தொழில்

    அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும். கதை, கவிதை கட்டுரை எழுதுவதில் அதிக ஈடுபாடு இருக்கும். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த் தலைமை போன்றவற்றில் கவுரவப் பதவி உண்டு.

    பெரும்பாலும் ஆசிரியர், வங்கிபணி, கல்வி நிறுவனம், ஜோதிடத்தில் புகழ் அடைவார்கள்.

    நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகளை வகிப்பவர்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் கூட்டுத் தொழில், ஆதாயம் உண்டு. சிலர் அரசு அலுவலகங்களில் புரோக்கர் வேலை செய்வார்கள். பொருளாதார நிபுணர், வனத்துறை, நூலகர், விளையாட்டு துறை, பாதுகாப்பு பணி, உடற்பயிற்சி, நீதிபதி, ராணுவதுறை, ஊடகத்துறை, அரசு ஒப்பந்தம், கட்டுமானம், நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் போன்றவற்றில் மிளிர்கின்றனர்.

    தனம், வாக்கு, குடும்பஸ்தானம்

    சுய ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள்.

    பேரதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். ராஜபோக வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் உண்டு. சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். கவுரவமான காதல் பின்னணி உள்ளவர்கள். சுருக்கமாக எந்த சூழ்நிலையிலும் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள்.

    மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு.

    சுய ஜாதகத்தில் சூரியன் அசுபத் தன்மையுடன் நின்றால் குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள். இளமையில் வறுமையுடன் வாழ்கிறார்கள்.

    மத்திம வயதிற்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. இந்த அமைப்பை பெற்ற பலர் குழந்தையின்மையால் அவதிப்படுகிறார்கள்.

    பலர் ஆன்ம பலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்கிறார்கள். பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைகிறார்கள்.

    எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். பிறர் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டுகலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாகஎடுத்துக் கொள்வார்கள்.

    தசா புத்தி பலன்கள்:

    சூரிய தசா:

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தவுடன் சூரிய தசா நடக்கும். இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 6 ஆண்டுகள்.

    ஜாதகர் பிறக்கும் போது தாய், தந்தை சுமாரான நிலையில் இருந்தாலும் உயர்வான நிலையை அடைவார்கள்.

    பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் வாழும் பாக்கியம் பெற்றவர்கள்.

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப கல்வி கற்கும் ஆர்வம் ஆரோக்கியமான தேகம் உண்டு.

    சந்திர தசா: இது இரண்டாவதாக வரக்கூடிய தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 10 ஆண்டுகள். ஜாதகருக்கு தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு. அனைவராலும் விரும்பப்படக்கூடிய நபராக இருப்பர். விரும்பிய உணவும், நல்ல வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை, அணிகலங்களை அணிந்து அனுபவிக்கக்கூடியவராக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சியுடன், உடன் பிறப்புகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

    செவ்வாய் தசா:

    இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் வருடம் 7 ஆண்டுகள். பலர் கல்லூரி வாழ்க்கையை கடக்கும் காலகட்டம். புகழ் பெற்றவர்களாகவும் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.

    எல்லாம் எனக்குத் தெரியும் என்ற கர்வம் உண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று எந்த விசயத்திலும் தனித்து செயல்படுவார்கள். தங்கள் முயற்சியில் அடுத்தவர் தலையீட்டை விரும்ப மாட்டார்கள்.

    தன்னம்பிக்கையுடன் சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் ஈடுபட்டு லாபம் அடைவார்கள்.

    ராகு தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேஷம தாரையின் தசாவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். விலகிச் சென்ற உறவுகள் இணைவார்கள். சொந்த வீடு, வாகனம் என ஸ்திர சொத்துக்கள் சேர்ந்து வாழ்வில் செட்டிலாகும் காலம். திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும்.

    சுய ஜாதகம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஒழுக்கம் சார்ந்த, காதல் சார்ந்த பிரச்சனைகளால் ஜாதகருக்கு அவமானம் உண்டு.

    குரு தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 16 ஆண்டுகள். தந்தைக்கு முன்னேற்றம் குறையும். அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். பூர்வீகச் சொத்து விரயமாகும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். சிலர் கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமான செலவு செய்வார்கள்.

    சனி தசா: இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19 ஆண்டுகள்.

    இது வயோதிக காலத்தில் வரக் கூடிய தசாவாகும். தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தாலும் திருமண வாழ்க்கை மன நிறைவு தருவதில்லை. வாழ்வின் பிற்பகுதியில் தம்பதிகளுக்குள் கவுரவ பிரச்சனையால் அன்யோன்யம் குறையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. எனினும் எதையும் வெளிப்படுத்தாமல் தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள்.

    உத்திரட்டாதி நட்சத்திர சிறப்புகள்.

    இது குரு மற்றும் சனியின் வீட்டை இணைக்கும் நட்சத்திரம்.

    ஒருவருடைய ஜாதகத்தில் குரு சனி சேர்க்கை இருந்தால் நல்ல உத்தியோகம் கிடைக்கும். எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கை அமையும். இந்த நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து ஐயப்பனை சங்கரநாராயணனை வழிபட நல்ல உத்தியோகம் தொழில் அமையும். குருவின் வீட்டையும் சனியின் வீட்டையும் இணைக்கும் இணைப்பு பாலமாக அமைந்த நட்சத்திரம். இதன் அதிபதி சூரியன் என்பதால் அரசாங்க பதவி ஏற்க, அரசு உதவிகளை நாட, முடிசூட்ட, பட்டாபிஷேகம் செய்ய, மதச் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய, ஆலய திருப்பணிகளை செய்ய, வீடுகளில் சங்கு ஸ்தாபனம், வாஸ்து சாந்தி, நவகிரக சாந்தி, பித்ரு சாந்திகள் செய்யலாம். கர்ப்பதானம், நிகேஷம் நடத்த, வீட்டிற்கு தேவையான மெத்தை, ஷோபா போன்ற ஆடம்பரப் பொருள்கள் வாங்கலாம். கிணறு வெட்ட உகந்த நாள்.

    நட்சத்திர பட்சி: வலியன்

    யோகம்: சித்தம்

    நவரத்தினம். மாணிக்கம்

    உடல் உறுப்பு: இடுப்பு

    திசை : வடக்கு

    பஞ்சபூதம் :காற்று

    அதிதேவதை: ஈஸ்வரன்

    நட்சத்திர மிருகம்: மலட்டுபசு

    நட்சத்திர வடிவம்: கட்டில்கால், மெத்தை

    சம்பத்து தாரை: திருவோணம், ரோகிணி, அஸ்தம்

    சேம தாரை : சதயம், திருவாதிரை, சுவாதி

    சாதக தாரை: உத்திரட்டாதி, பூசம், அனுஷம்

    பரம மிக்ர தாரை : பூராடம், பரணி, பூரம்.

    பொதுவான பரிகாரங்கள்:

    சரியான தொழிலோ அல்லது உத்தியோகமோ அமையாதவர்கள் கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலை போட்டு அம்மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டால் நிச்சயமாக நல்ல உத்தியோகம் கிடைக்கும். சபரிமலைக்கு செல்ல.. முடியாதவர்கள் இந்த நட்சத்திரத்தன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வழிபட வேண்டும்..

    தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    சூரியனின் ரத்தினமான மாணிக்கம் அணியலாம்.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் அல்லது பவுர்ணமி திதியில் சித்தர்களை ஜீவ சமாதியில் சென்று வழிபடலாம்.

    சாதக தாரையான உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்வதால் சுப பலன்களை அதிகரிக்க முடியும்.

    ×