என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உன்னிப்பாக கவனித்த ஸ்ரீபிரியா.... மீனா மலரும் நினைவுகள்
    X

    உன்னிப்பாக கவனித்த ஸ்ரீபிரியா.... மீனா மலரும் நினைவுகள்

    • திருமணத்துக்கு முன்பு இந்த பொறுப்புகள் எதையும் நான் கவனித்தது கிடையாது.
    • டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வெடுத்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிந்தது.

    திரிஷ்யம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் அந்த வெற்றியை ருசிப்பதற்காக நான் தாங்கிக் கொண்ட சிரமங்களும் நிறையவே உண்டு. அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்ற போது பொறுப்புகளும் அதிகமாகவே என் தலையில் இறங்கி இருந்தது.

    அதாவது குடும்ப பொறுப்பு, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது எல்லாமே என்னிடம் வந்து சேர்ந்தது. திருமணத்துக்கு முன்பு இந்த பொறுப்புகள் எதையும் நான் கவனித்தது கிடையாது.

    அந்த காலகட்டத்தில் தான் ஜி.எஸ்.டி.வரியும் அமலுக்கு வந்திருந்தது. பகலில் ஷூட்டிங், அதை தொடர்ந்து குழந்தையை கவனித்து கொள்வது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக இரவில் கண் விழித்து கணக்கு வழக்குகளை பார்க்க வேண்டும். இப்படி ஓய்வில்லாமல் வேலை இருந்ததால் மன அழுத்தம் அதிகமானது. சமாளிக்க முடியாமல் திணறினேன்.

    இதனாலேயே என் உடல் நிலையும் பாதித்தது. ஒரு நாள் காலையில் ரெடியாகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். தொடுபுழா என்ற இடத்தில் தான் ஷூட்டிங் நடந்தது.

    படப்பிடிப்பு தொடங்குவதற்கு கேமரா ரெடியானது. டெக்னீசியன்கள் தயாராகி விட்டார்கள். டைரக்டர் 'ரெடி, ஸ்டார்ட் கேமரா' என்று சொல்ல வேண்டியது தான் தாமதம். அதற்குள் உடல் நிலை மோசமாகி தடுமாறி விழுந்தேன்.

    படக்குழுவினர் அனைவரும் பதட்டத்தில் அருகில் இருந்த ஒரு சிறிய ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார்கள். அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிந்துரைப்படி பின்னர் அங்கிருந்து பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பும் நின்று போனது.

    ஆஸ்பத்திரியில் நான் தங்கி இருந்தாலும் உடனிருந்து கவனித்து கொள்ள அம்மாவால் வர முடியவில்லை. ஏனெனில் குழந்தை நைனிகாவை கவனிக்க வேண்டியிருந்தது.

    நிலைமையை பார்த்து தயாரிப்பாளரின் மனைவி வந்து என்னோடு தங்கியிருந்து என்னை கவனித்துக் கொண்டார். டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வெடுத்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிந்தது.

    அங்கிருந்து சென்னை திரும்புவதற்கும் கார் மற்றும் விமானப் பயணம் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து விட்டார்கள். இதனால் அனைவரும் கொச்சியில் இருந்து ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டோம்.

    அந்த கால கட்டத்தில் மிகவும் பிசியாக இருந்ததால் பெரும்பாலும் விமானப் பயணமாகத்தான் இருக்கும். கார் பயணமும் இருக்கும். நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் மேற்கொண்ட ரெயில் பயணம் அது.

    மலையாளத்தில் 'திரிஷ்யம்' சூப்பர் டூப்பர் வெற்றிப்படமாக அமைந்த மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் தெலுங்கிலும் திரிஷ்யத்தை தயாரிக்க இருப்பதாகவும் வெங்கடேஷ் ஜோடியாக நான் தான் நடிக்க வேண்டும் என்றும் கேட்டு என்னை அணுகினார்கள்.

    ஏற்கனவே தமிழில் ரஜினி ஜோடியாகவும், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாகவும், தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாகவும் நடித்ததை பார்த்து திவ்யமான ஜோடி, கோல்டன் ஜோடி என்றெல்லாம் ரசிகர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் ஜோடியாக நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

    அந்த வகையில் தெலுங்கில் வெங்கடேசுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் வேண்டாம் என்று சொல்வேனா? அதுவும் மலையாளத்தில் சக்கை போடு போட்ட படம். உடனே ஒத்துக் கொண்டேன்.

    இன்னொரு விசேஷம் தெலுங்கில் ஸ்ரீபிரியாம்மா டைரக்ஷன். ஒரு பெண் டைரக்டரின் படத்தில் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. பெண் டைரக்டர்கள் என்றால் பல விசயங்களை தயங்காமல் கூற முடியும்.

    நான் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீபிரியாம்மாவுடன் நடித்து இருக்கிறேன். அவரது வீட்டுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். உணவு அருந்தியிருக்கிறேன். கதாநாயகி ஆன பிறகும் எத்தனையோ முறை அவர்களோடு பேசி பழகி இருக்கிறேன்.

    முதல் முறையாக டைரக்டராக அவரிடம் நடித்த படம் அது. ஒவ்வொரு அணுவையும் எவ்வளவு உன்னிப்பாக அவர் கவனிக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்...

    படப்பிடிப்புக்கு முன்பு ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒரு போன் கால் வந்தது. ஆனால் அந்த அழைப்பை நான் ஏற்க வில்லை. அப்புறம் பேசுவதாக சொல்லுங்கள் என்று உதவியாளரிடம் கூறி விட்டு தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன்.

    அதை குறிப்பிட்டு ஸ்ரீபிரியாம்மா என்னிடம் சொன்னார்,

    'மீனா, பெரிய நடிகர், நடிகைகள் போன் வந்தால் நடிப்பதை நிறுத்தி போன் பேசி விட்டு தான் வருவார்கள். நீ இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் போனில் யார் கூப்பிடுகிறார்கள் என்பதை கூட கண்டு கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. உனது தொழில் பக்தியை பாராட்டுகிறேன்' என்று பாராட்டினார். இதில் கூட இவ்வளவு விசயம் இருக்கா என்று நான் யோசித்தேன். அதே நேரம் ஸ்ரீபிரியாம்மாவிடம் பாராட்டு பெற்றதும் மகிழ்ச்சியை கொடுத்தது.

    பொட்டு வைத்த முகம்!

    பெண்கள் முகத்துக்கு பொட்டு வைப்பது கூடுதல் அழகை கொடுக்கும் என்பது என்னவோ உண்மை தான். குங்குமம் தான் என்பதில்லை சிறிய அளவிலான ஸ்டிக்கர் பொட்டையாவது பெண்கள் அணிவார்கள். நான் திருமணம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு சேலை அணிந்து செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறேன். அப்போது பொட்டும் வைத்துக்கொள்வேன். அந்த முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கே அவ்வளவு அழகாக தெரியும்.

    மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் 'ராணி ஜார்ஜ்' என்ற கிறிஸ்தவ பெண் கதாபாத்திரத்தில் நடித்தேன். எனவே பொட்டு வைக்க முடிய வில்லை. ஆனால் தெலுங்கில் திரிஷ்யத்தில் நடித்த போது 'ஜோதி' என்ற இந்து பெண் கதா பாத்திரம் எனக்கு. அந்த கதாபாத்தி ரத்தில் பொட்டு வைக்க கூறினார்கள். அதுவும் பெரிய பொட்டாக வைத்து பார்க்கலாமே என்று ஸ்ரீபிரியாம்மா கூறினார்கள். அதேபோல் பெரிய பொட்டு வைத்திருந்தும் கூடுதல் அழகையே கொடுத்தது.

    மற்றொரு மகிழ்ச்சியான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×