என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழாவில் பங்கேற்று தமிழக அரசின் திட்டங்களை பாராட்டிய தெலுங்கானா முதல்வர்
- தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
- அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழகம் கல்வியில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. தொடர்ந்து கல்வித் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி கடந்த செப். 25-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த விழாவின்போது பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தை கல்வித் தந்தை காமராஜரின் மண் என்று குறிப்பிட்ட ரேவந்த் ரெட்டி, தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மு.க. ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி வருவதாகவும், அவர் ஒரு சிறந்த முதலமைச்சராகத் திகழ்கிறார் என்றும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி, ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்வதாக ரேவந்த் ரெட்டி புகழாரம் சூட்டினார். குறிப்பாக, தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது தமிழகம்தான் என்றும், தமிழகத்தைத் தொடர்ந்தே மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு மனதை தொடும் திட்டம் என்று குறிப்பிட்டு அவர் பாராட்டினார். தமிழகத்தின் சிறப்பான கல்வித் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தெலுங்கானா அரசு, அவற்றை தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன்' உள்ளிட்ட முக்கிய கல்வித் திட்டங்களும் வரும் கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை உற்றுநோக்குகின்றனர் என்றும், தெலுங்கு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே நூற்றாண்டு கால நட்புறவு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமது மாநிலமான தெலுங்கானாவிலும் கல்விக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதற்காகப் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் முதலீடு செய்வது என்பது வெறுமன சேவை இல்லை.. அது நீதி மற்றும் உரிமை என்ற தமிழ்நாட்டின் கொள்கையை தெலுங்கானாவும் நம்புவதாக அவர் கூறினார்.






