என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: தமிழ் திரையுலகம் கண்ணீர் துடைத்த ஆண்டு - நம்மை விட்டு பிரிந்த நடிகர்கள்
    X

    2025 REWIND: தமிழ் திரையுலகம் கண்ணீர் துடைத்த ஆண்டு - நம்மை விட்டு பிரிந்த நடிகர்கள்

    • ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார்.
    • நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத ஒரு வலி கலந்த ஆண்டு. திரையில் நம்மை சிரிக்க வைத்தவர்கள், கண்களில் கண்ணீர் வர வைத்தவர்கள், ஒரே ஒரு வசனத்தில் மனதில் இடம் பிடித்தவர்கள் இந்த ஆண்டு நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்றனர். இவர்கள் சென்றாலும், அவர்களின் திரைப்பயணம், கதாபாத்திரங்கள், வசனங்கள் எப்போதும் நம்மோடு வாழ்ந்துகொண்டே இருக்கும்.

    அவ்வகையில் இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்து சென்ற தமிழ் நடிகர்களின் சோக தொகுப்பை தான் இந்த பட்டியலில் பார்க்கவுள்ளோம்

    1. ரோபோ சங்கர்

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

    இந்தநிலையில் ரோபோ சங்கர் ஒரு படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2. மதன் பாப்

    பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் மதன் பாப் சினிமாவில் அறிமுகமானார். இவர் கடைசியாக நடித்த படம் எமன் கட்டளை.

    மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர். இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

    புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தாண்டு தனது 71 ஆவது வயதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதன் பாப் மறைந்த தகவல் அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    3. கோட்டா சீனிவாச ராவ்

    கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.

    2015 இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.

    இந்தாண்டு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    4. சரோஜா தேவி

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) இந்தாண்டு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

    சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கினர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    5. ராஜேஷ்

    1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

    பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ், அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார்.

    நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக இந்தாண்டு காலமானார். ராஜேஷ் அவர்களது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    6. சூப்பர்குட் சுப்பிரமணி

    தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்றுதான் அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.

    அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டவர். இவர், கடைசியாக நடித்த பரமன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    இந்தாண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூப்பர் குட் சுப்பிரமணி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர்.

    7. மனோஜ்

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

    ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

    இந்தாண்டு மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் இன்று மாலை காலமானார். இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.

    8. ஹூசைனி

    1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.

    கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.

    புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ஷிஹான் ஹுசைனி இந்தாண்டு காலமானார்.

    9. பிந்து கோஷ்

    1980-களில் ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ்.

    இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. தொடர்ந்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 76 வயதான நடிகை பிந்து கோஷ், இந்தாண்டு உடல்நல குறைவால் காலமானார்.

    Next Story
    ×