என் மலர்
இந்தியா

பெங்களூருவில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது
- பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, 2 மர்ம நபர்களும் பணம் கேட்டு மிரட்டினார்கள்.
- பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அந்த பெண்ணின் நண்பருக்கு நன்கு அறிமுகமானவர்கள்.
பெங்களூரு:
பெங்களூருவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவர் அறிமுகமானார். இதையடுத்து 3 நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் தான் எலக்ட்ரானிக் சிட்டியில் தங்கி இருப்பதாகவும், தங்கியுள்ள இடத்தின் முகவரியை அனுப்பி அங்கு வர சொன்னார். இதனால் அந்த பெண் அங்கு சென்றார். அந்த பெண்ணின் தோழி வீடு தொட்ட நகரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் உள்ளது. அப்பெண் தனது தோழியின் வீட்டிற்கு அந்த வாலிபரை அழைத்துச் சென்றார்.
அந்த பெண் தனது தோழியின் வீட்டில் இருந்தபோது திடீரென 2 ஆண்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்கள் காவல்துறையை அணுக வேண்டாம் என மிரட்டி அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, 2 மர்ம நபர்களும் பணம் கேட்டு மிரட்டினார்கள். பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தோழியின் கணக்கிலிருந்து ரூ.12,000 மற்றும் அவரது சொந்த கணக்கிலிருந்து ரூ.8,000 என ரூ.20 ஆயிரம் பணத்தை மர்மநபர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார். மர்மநபர்கள் அந்த பணத்தை ஒரு பந்தய செயலி கணக்கில் டெபாசிட் செய்தனர்.
மேலும் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் 2 செல்போன்கள், வாஷிங் மெஷின், டி.வி. மற்றும் குளிர்சாதன பெட்டியை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் 4 பேரை பரப்பன அக்ரஹாரா போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரகு என்கிற அப்பு (24), கெஞ்சே கவுடா (26), மாதேஷ் (27) மற்றும் சஷிகுமார் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அந்த பெண்ணின் நண்பருக்கு நன்கு அறிமுகமானவர்கள். இந்த செயல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.






